முல்லாக்களின் கிஸ்ஸா :
மீண்டும் புரசை மவ்லவி நிஜாமுத்தீனின் கப்ஸாக்கள்
அபூஹாமிது – சென்னை
(பல தடவைகள் நாம் புரசை மவ்லவி K.A.நிஜாமுத்தீனின் கூற்றுக்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் விமர்சித்திருக் கிறொம். இதுவரை மெளனம் சாதித்த மேற்படி மவ்லவியை. சென்ற இதழில் நாம் வெளியிட்ட ‘இமாம்களை அவமதிப்பதும். மக்களைக் குழப்புவதும் யார்?” என்ற ஆக்கம் தட்டி எழுப்பியுள்ளது. அந்நஜாத், மீது என்ன அவதூறு கூறினாலும், பொதுமக்களை படிக்க வேண்டாம் என்று வேண்டினாலும் நிஜாமுத்தீன் அந்நஜாத்தை படித்து வருகிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. அவர் நமக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் எங்களைக் குறை கூறியும், ஒருமையில் விழித்தும், வசைபாடியும் சபித்துமே எழுதியுள்ளார். எனினும் எமக்கு கடிதம் எழுத முன் வந்தமைக்கு அவருக்கு எங்கள் நன்றி உரித்தாகுக!
மார்க்கம், இமாம், மத்ஹப், ஹாவீஸ் முதலானவை பற்றி குர்ஆன், ஹதீது ஆதாரமின்றி நிஜாமுத்தீனும் அவர் வர்க்கமும் எழுதுபவைகளையும், பேசுபவைகளையும் விமர்சிக்கின்றோம்; கண்டிக்கின்றோம். எமது கூற்றில் தவறகள் காணப்படுமாயின், அவைகளை ஆதாரபூர்வமாக நிரூபித்து தாம் கூறியது உண்மையே என நிலைநாட்ட முன்வர வேண்டும். அதுவே அறிவுடையோர் செயலாகும்.
அப்படி அவர் ஆதாரபூர்வமாக நிரூபித்தால் காய்தல் உவத்தலின்றி அதனை ஏற்கவும், நாம் கூறியவற்றை வாபஸ் பெறவும். அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோரவும் நாம் என்றென்றும் தயாராக இருக்கிறோம். அதனை விட்டு ‘குழப்பவாதி” என்றும் ‘புரட்டுபவர்” என்றும் எங்கள்மீது அபாண்டமாக பழி சுமத்தி உண்மையை மறைக்க முயற்சிக்கிறார் நிஜாமுத்தீன், ‘அந்நஜாத் ஆசிரியரின் அறியாமை” என்று தலைப்பட்டு அவர் எமக்கு எழுதிய கடிதத்தை வாசகர்கள் வாசிக்க இதோ தருகிறோம். அதோடு சென்ற இதழில் மேலே குறிப்பிட்ட ஆக்கத்தை எழுதிய சென்னை சகோதரர்: அபூ ஹாமிது எழுதிய விளக்கத்தையும் தருகிறோம்- ஆசிரியர்.
புரசை மவ்லவி நிஜாமுத்தீன் ஒரிஜினல் கடிதத்தில் அடிகோடிட்டிருப்பது நாம் – ஆசிரியர்)
அந்நஜாத் ஆசிரியரின் அறியாமை!
அந்நஜாத் ஆசிரியருக்கு சென்னை. புரசைவாக்கம் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் K.A. நிஜாமுத்தீன் எழுதிக் கொள்வது:
உம்முடைய ஜூன் மாத நஜாத்தில் என்னைப் பற்றியும் ஒரு விமர்சனம் எழுதி, அதனைப் போட்டுக் குழப்பி நீர் குழப்பவாதி என்பதை நிரூபித்து, என்னைப் பற்றிக் கூறுவதாக நினைத்து உம்மைப் பற்றி விளம்பரம் படுத்தியுள்ளீர். அதன் மூலம் உம்முடைய குழப்பத்தை மக்கள் நன்கு விளங்கிக் கொண்டதற்காக உமக்கு மிக்க நன்றி!
இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களைப் பற்றி, ‘தம் கையில் வைத்திருக்கும் கல்லை தன் பேச்சை – செவிமடுப்பவர்கள் தங்கம் என நம்பும்படி செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் என்ற நான் கூறாத செய்தியினை நான் கூறியதாக – கற்பனையாக – நீர் எழுதியிருப்பது பொய்யும் புரட்டுமாகும். எனவெ பொய்பேசி, புரட்டுத் தனம் செய்திட்ட நீர்தான் நீர் எழுதியுள்ளபடி பொய்யின் தண்டனைக்குரியவர். அதற்காக மன்னிப்புக் கேட்டு தவ்பா செய்து திருந்தாவிட்டால் நிச்சயம் அதற்குரிய தண்டனையைப் பெற்றே தீருவீர்!
நான் சொன்னதாக யாரோ ஒருவர் சொன்னதைக் கேட்டு, அத்துடன் உம்முடைய சரக்கையும் சேர்த்து பொய்யான தகவலை எழுதியதின் மூலம் உம்மைக் குழப்பவாதி என்று நீரே அறிவித்து விட்டீர்! அதற்காக நான் பகீரதப் பிரயத்தனம் செய்து வருவதாகவும் ஒரு டூப் விட்டிருக்கிறது. உருப்படியில்லாத குழப்பவாதியான உம்மையும் உம்முடைய சகாக்களையும் மக்கள் நன்றாக விளங்கியுள்ளார்கள். அதற்காக நான் பகீரதப் பிரயத்தனம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஏதோ அறியாத்தனமுள்ள ஒரு சிலர் உம்முடைய கட்சியில் சேர்ந்திருப்பதால் முஸ்லிம்களெல்லாம் உம்முடைய கொள்கையின் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்களென்று கனவு கண்டு கொன்றிருக்கிறீர்!
இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களைப் பற்றி நான் கூறியது வரலாற்று உண்மையாகும். நீர் அதனை நம்பாவிட்டால் அது பொய்யாகிவிடாது. இமாம் அவர்களுடைய சிறப்பையும் சொல்வன்மையையும் தம் தோழர்களுக்கு எடுத்துக் கூறமுனைந்த இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள், இவர் யார் தெரியுமா? இதோ, இந்தத் தூணைத் தங்கம்தான் என்று நிரூபிக்க வேண்டுமானால் அவ்வாறே நிரூபித்துவிடுவார்” என்று புகழ்ந்து கூறினார்கள்.
இதுதான் நான் எடுத்துக் கூறிய வாசகம். இதனைப் பல நூல்களில் மேதைகள் பலரும் எழுதியுள்ளனர். இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறியது. இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் அறிவுக் கூர்மையையும் ஆதாரத்துடன் தான் எதையும் கூறுவார்கள் என்பதையும் எடுத்துக்காட்டுவதற்காக மிகைப்படுத்திக் கூறிய உதாரணமாகும். இமாமவர்கள் அவ்வாறு நிரூபிக்கவுமில்லை; அங்கிருந்தோர் யாரையும் ஏமாற்றவுமில்லை. நீர் என்னைப் பற்றி எழுதியது இமாம் மாலிக்(ரஹ்) அவர்களையே சாடியதாகும். இமாம்களை நீர் அவமதித்து எழுதியுள்ளீரா? நான் அவமதிக்கிறேனா? தடுமாறாமல் சிந்தித்துப் பாரும்!
இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் கூறிய அந்தப் புகழ்ந்துரையையும் மாற்றி எழுதி, அதனை நான் கூறியதாகவும் ஒரு கப்ஸா விட்டிருக்கிறீர்! இவ்வாறே ஒவ்வொரு தடவை “மெளலவி நிஜாமுத்தீனின் கப்ஸா” என்று எழுதி உம்முடைய அறியாமையை வெளிப்படுத்தியிருந்தீர்! அதன்பிறது என்னுடைய “தராவீஹ் 20 ரக்அத்துகளா?” என்ற நூலிலுள்ள விஷயங்கள், தராவீஹ் எட்டு ரக்அத்துகள் என்பதற்குத்தான் ஆதாரமானவை என்பதாக மாபெரும் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருந்தீர். எப்படியாவது டூப் அடித்து மக்களை ஏமாற்றி உம்பக்கம் சேர்த்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறீர். அதுதான் முடியாது. சிலரைச் சில நேரங்களில் மட்டுமே ஏமாற்றலாம் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியாது. சத்தியமே வெல்லும்! அசத்தியம் தோல்வியுறவே செய்யும்!
இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் கூறிய அந்த உதாரணத்தைக் கூட உம்மால் ஜீரணிக்க முடியாதுதான் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களும் பொய் சொல்லிவிட்டார். அபூஹனீபா(ரஹ்) அவர்களை அவமதித்துவிட்டார் என்று சொன்னாலும் சொல்லுவீர்! அல்லது, இந்தச் சம்பவமே கற்பனையானது; மாலிக்(ரஹ்) அவர்கள் இவ்வாறு சொல்லி யிருக்கவே முடியாது. இதற்கு ஆதாரமே கிடையாது;
இதனை அறிவிப்பவர்களெல்லாம் நம்பிக்கைக்குரியவர்களல்லர்; எழுதி வைத்திருப்பவர்களெல்லாம் சிந்திக்காமல் எழுதிவிட்டார் கள் என்றெல்லாம் எழுதித் தள்ளுவீர். ஏனெனில், நீர்தான் அவர்களையெல்லாம் விட பெரி..ய்….ய இமாம் என்பதாக உம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீரே! எழுதித் தள்ளும்! உம்முடைய எழுத்தின் மூலம் வழிகெடுபவர்கள் கெட்டுப்போகட்டும்! அதற்குரிய தண்டனை உமக்கே கிடைக்கட்டும்!
ஒருவரை மிகைப்படுத்திப் புகழுதல் கூடாது என்ற கருத்துள்ள ஹதீஸுக்குரிய கருத்தென்ன – விளக்கமென்ன என்பதே தெரியாமல், இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களைப் பற்றி மிகைப்படுத்டதிக் கூறியிருப்பது ஹதீஸுக்கு மாற்றமாகும் என்று வியாதியிருக்கிறீர். இது உமக்கு அரபிமொழியின் ஞானம் இல்லாததாலும் ஆலிம்களிடம் கேட்காததாலும் வளைந்த தவறு! நீரும் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறீர். ம்… இதுவும் கியாமத்து நானுடைய அடையாளங்களில் ஒன்று. (ஹதீஸில் கூறப்பட்டுள்ள அடையாளந்தான்)
ஒரு விஷயத்தை மிகைப்படுத்திக் கூறுதல் என்பது குர்ஆனிலும் ஹதீஸிலும் ஏராளமாக இருக்கிறது. ரசூலுல்லாஹி(ஸல்)அவர்களை மிகைப்பற்றிப் புகழ்ந்து எத்தனையோ வாசகங்களையும் கவிதைகளையும் ஸஹாபாக்களும் ஆஷின்களும் ஞானவான்களும் கூறியுள்ளனர். அவற்றில் எதுவுமே உமக்குத் தெரியாது போலும்! அவற்றையெல்லாம் நான் உமக்கு எழுதவேண்டிய அவசியமுமில்லை. நாங்கள் அவற்றைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். நீர் அவற்றைத் தெரிந்து கொள்ள விரும்பினால் ஆலிம்களிடம் மண்டியிட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வீராக! அல்லது என்னிடம் வாரும்; சொல்லித் தருகிறேன். தேவையில்லையானால் கண்டதை யெல்லாம் எழதி குழப்பம் செய்து கொண்டே இருப்பீராக! உம்முடைய குழப்பங்களை விட்டும் மக்களை அல்லாஹ் காப்பாற்றுவானாக!
உம்முடைய கூற்றுப்படி, பல விஷயங்களை மிகைப்படுத்துதல் என்ற முறையில் கூறியுள்ள அல்லாஹ்வும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் அண்ணாரை மிகைப்படுத்திப் புகழ்ந்துள்ள ஸஹாபாக்களும் மேதைகளும் பொய் கூறுபவர்களாகவும் அல்லாஹ்வையும் ரசூலையும் அவமதித்தவர்களாகவம் ஆகிவிடுகிறார் களல்லவா? அவர்களுடைய முகங்களிலெல்லாம் புழுதியை வாரி இறைக்க வேண்டுமல்லவா? அப்படித்தான் நீர் எழுதியிருக்கிறீர்! (நஹூது பில்லாஹி மின்ஹாவமின் ஷர்ரிக்க) இத்தகைய தவறான கருத்தைக் கொண்டுள்ள உம்முடைய ஷைத்தானியத்தான தீங்கை விட்டும் நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பத் தேடுகிறோம்.
இப்பொழுது சொல்லும்; இமாம்களை அவமதிப்பது யார்? மக்களைக் குழப்புவது யார்? அல்லாஹ்வின் மீது சத்திய மிட்டுச் சொல்லும் பார்ப்போம்! நீர் சீர்திருத்தவாதியா? குழப்பவாதியா? இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் வகுத்தளித்த பிக்ஹுச் சட்டங்களை ஆபாசங்கள், அசிங்கங்கள் என்பதாக, மிகக் கேவலமாக எழுதியும், பேசியும் வருகின்ற நீரா அவர்களை கண்ணியப்படுத்துவதாக கூறுகிறீர்!
அவர்களுடைய மத்ஹபை உவந்து பின்பற்றி அவ்வாறு நான்க மத்ஹபுகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுவதுதான் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றியதாக – பற்றிப் பிடித்ததாக – ஆகுமென்று நம்பிச் செயல்பட்டு வரும் நான், இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களை அவமதித்ததாக மக்கள் நம்பவேண்டுமென்று கப்ஸா விடுகின்ற நீர் ஆலிம்களை மட்டுமின்றி, அல்லாஹ்வையும் ரசூலையும் அல்லவா அவமதித்து விட்டீர்! நீர் செய்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதைச் சிந்தித்துப் பாரும்! நேரான சிந்தனை இருந்தால் திருந்துகின்ற வாய்ப்பு ஏற்படும்.
ஆலிம்களை ஏசிப் பேசி அவர்களுடைய சாபங்களை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் உமக்கு இவையெல்லாம் எங்கே ஏறப்போகிறது? உம்முடைய குழப்பமான கொள்கையால் எத்தனை நபர்கள் வழிகெட்டு, பாதிக்கப்பட்டு, எத்தனை குடும்பங்களில் சண்டையும் சச்சரவும் பிரிவினையும் ஏற்பட்டுள்ளனவென்று உமக்குத் தெரியுமா? தெரியாமலிருக்க முடியாது. தெரிந்து கொண்டேதான் இந்த வழிகேட்டை உண்டாக்கிக் கொண்டிருக்கிறீர். அத்தனைக்கும் உரிய தண்டனைகள் உம்மையே சேரும்! சிந்தித்துத் திருந்தாவிட்டால் அனபவிக்க வேண்டியதுதான். எனினும், அல்லாஹ் யாரை வழிதவறச் செய்ய நாடுகிறானோ அவரை நேர்வழிப்படுத்திட ஏவராலும் முடியாது. அத்தகைய மனிதனாக நீர் ஆகிவிட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
அடுத்து, இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் ஒரு தடவை அவசித்தினிமித்தம்-இடக்கரத்தால் தருமம் செய்தார்கள் என்று ஒர வரலாறு இருக்கிறது. அதனுடைய விளக்கம் உமக்கு விளங்கவில்லை; அதனால் அவனை மறுக்கிறீர். நீர் அதனை நம்ப வேண்டுமென்று உம்மை யாரும் கட்டாயப்படுத்தவில்லையே! நல்லிதயம் உள்ளவர்கள் நம்புகிறார்கள்; அதன் கருத்தை வாங்கிக் கொள்கிறார்கள். உமக்கு ஏன் வயிற்றெரிச்சல்? இமாமவர்கள் இடக்கதரத்தால் கொடுக்குமளவுக்கு சபலபுத்தியுள்ளவரா? திடச்சித்தம் இல்லாதவரா? என்று கேட்டு எழுதி உம்முடைய சபலபுத்தியுள்ள வரா? திடச்சித்தம் இல்லாதவரா? என்ற கேட்டு எழுதி உம்முடைய சபலபுத்தியைக் காட்டியிருக்கிறீர்!
நன்மை செய்ய வேண்டுமென எண்ணம் ஏற்பட்ட நேரத்தில் உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டுமெனச் செயல்பட்ட இதுபோன்ற பல சம்பவங்கள் நல்லடியார்களின் வாழ்வில் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றில் குற்றங் கண்டுபிடிக்க நமக்கு எவ்விதத் தகுதியுமில்லை. குறிப்பாக உமக்கு எந்தத் தகுதியுமில்லை. ஆனால், அச்சம்பவத்தையும் நான் கூறியதாக ஒரு பெரிய கப்ஸா விட்டிருக்கிறீர்! அதுவே உமக்கு வழக்கமாக ஆகிவிட்டது.
அடுத்ததாக, வமன்யுதிஇல்லாஹ… என்ற ஆயத்தை நான் விட்டுவிட்டு ஒதி தவறாகப் பொருள் கூறியதாக நீர் எழுதியிருப்பது அண்டப்புளுகு! ஆகாசப்புளுகு! என்னிடம் வாரும்! அந்த ஆயத்திற்குப் பொருளையும் கருத்தையும் பல தினங்களுக்கு உமக்குப் பாடம் செல்லித் தருகிறேன்.
கடைசியாக நீர் எழுதியிருக்கும் இரண்டு ஆயத்துகளுக்குரிய கருத்தென்ன என்பதைப் புரியாமலேயே எழுதிவிட்டீர். முதல் ஆயத்து தக்லீது கூடும்; இமாம்களைப் பின்பற்றலாம் என்பதற்கத் தெளிவான ஆதாரமாகும். தப்ஸீர்களைப் புரட்டிப் பாரும்; விபரம் புரியும். ஓ! உமக்குத்தான் அரபி ஞானம் இல்லையே! சரி சரி தெரிந்தவர்களிடமாவது கேட்டுப்பாரும். அப்பொழுது அந்த ஆயத்துடைய விளக்கம் தெரியும். இரண்டாவது ஆயத்தை நீர் எழதி இருப்பது உமக்கே வெட்கமாக இல்லை? அசத்தியத்திலேயே புரண்டு கொண்டிருக்கும் நீரா அந்த ஆயத்தை எனக்குச் சொல்வது? இன்ஷா அல்லாஹ் வெகு விரைவிலேயே நம்முடைய சத்தியம் வெல்லும், உம்முடைய அசத்தியம் அழிந்தே தீரும்!
இப்படியே எழுதிக் கொண்டே இருக்கலாம். எனினும் வேறு வேலைகள் இருப்பதால் இத்துடன் முடிக்கிறேன். இதனை நம்முடைய நஜாத்தில் உடனெ வெளியிடுவீரென பெரிதும் நம்பகிறேன். அப்பொழுதுதான் காய்தல், உவத்தல் இன்றி காரியம் ஆற்றுகிறீர் என்பது மட்டுமாவது மக்களுக்குப் புரியும். வேறு வகையில் இதற்கு நீர் எனக்கு பதில் எழுதிக் கொண்டிருக்க வேண்டாம். உம்முடைய நேரம் வீணாகி விடும். நீர் என்ன எழுதினாலும் நஷ்டம் உமக்கே! உம்முடைய அசத்தியம் எங்களுடைய சத்தியத்தை வென்றுவிடாது. அறிந்து கொள்ளவும்!
இறுதியாக ஓர் உபதேசம்: அல்லாஹுதஆலாவை பயந்து கொள்வீராக! தவ்பாச் செய்து திருந்துவீராக! அல்லாஹ் உம்மை நேர்வழியில் செலுத்தப் போதுமானவன். வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். இப்படிக்கு, K.A.நிஜாமுத்தீன்.
புரசை மவ்லவி K.A.நிஜாமுத்தீன் பற்பல வேளைகளுக்கிடையில் கடிதத்தை கைப்பட எழுதியுள்ளார். ஒரிஜினலை தான் வைத்துக் கொண்டு போட்டோ காப்பியை நமக்கு அனுப்பியுள்ளார். அதனை நஜாத்தில் வெளியிடவும். அதன் மூலம், எமது காய்தல், உவத்தமின்றி காரியமாற்றம் பணியைக் காணவும் ஆசைப்பட்டுள்ளார். அவருக்கு நாம் பதில் எழுதிக் கொண்டிருக்க வேண்டாமெனவும் வேண்டியுள்ளார். எனவே அவருக்கான பதிலை மக்களுக்கு முன் நாம் சமர்ப்பிக்கிறோம். பகுத்தறிவு இஸ்லாத்தை ஏற்றுள்ளவர்கள் காய்தல், உவத்தலின்றி இவ்விமர்சனத்தை படித்து அவரை அடையாளம் கண்டு கொள்வார்களென நினைக்கிறோம்.
சென்ற இதழில், புரசைமவ்லவி K.A.N.னின் கூற்றை, நாம் ஏறத்தாழ பன்னிரெண்டு நபிமொழிகள், மூன்று அல்லாஹுவின் அருள்மொழிகளின் அடிப்படையில் விமர்சித்தோம். அவைகளை ஆதாரங்களாக எடுத்து வைத்தோம் என்பதை வாசகர்கள் அறிவாளர்கள். அதற்கு பதில் அளித்திருக்கும் மவ்லவி தனது வாதத்திற்கு ஒரே ஒரு ஆதாரமாவது கொடுத்திருக்கிறாரா? என்பதைப் பாருங்கள்.
குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து ஆதாரம் தரவில்லை. தனது கூற்றுக்கள் வரலாற்று உண்மை. சரித்திர சான்றுகள் என உரைக்கும் இவர் அதில் ஒன்றையாவது ஆதாரமாகத் தந்துள்ளாரா? வெள்ளை பேப்பரில், கருப்பு மையில் அரபியில் எழுதி வைக்கப்பட்டுள்ள அனைத்து கதைகளும் இவருக்கு வரலாற்று உண்மைகளாகவும், சரித்திர சான்றுகளாகி விட்டனவோ! என்னவோ? மெளலவி, மன்பஈ, பள்ளி இமாம் என்ற புரோகிதப் போர்வையில் தான் கூறுவது அனைத்தும் உண்மையானவை என இன்னும் மக்கள் நம்புவார்கள் என்ற நப்பாசையில் ஆதாரங்கள் தரவில்லையோ? என்னவோ?
ஜூன் மாத இதழில் நாம் எழுதியது நிஜாமுத்தீனைப் பற்றிய விமர்சனம் மாத்திரமல்ல; எங்களை “குழப்பவாதி” என்று நிரூபிக்க தாம் பகீரதப் பிரயத்தனம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறும் நிஜாமுத்தீன், பாளையங்கோட்டையில் நடந்த முஸ்லிம் கல்வி மாநாட்டில் ஜூன் 2ந் தேதி பேசியது என்ன? சென்னை இஷாஅத்துல் இஸ்லாம் சபையினரால் அன்று இளைஞர் அரங்கத்தில் சொற்பொழிவாற்ற அழைத்து வரப்பட்ட இவர் எம்மையே சாடினார். வசைபாடினார். நாம் நஜாத் பெறமாட்டோம் என்று கூறி முடித்தார். எம்மைப் பற்றிய உண்மையை மக்கள் அறிய விடாமல் தடுக்க இவர் எடுக்கும் பகீரதப் பிரயத்தனம் அல்லவா இது?
ஏதோ அறியாத்தனமுள்ள ஒரு சிலர் உம்முடைய கட்சியில் சேர்ந்திருப்பதால்,…” என்று குறிப்பிட்டுள்ளார் நிஜாமுத்தீன், அந்நஜாத்திற்கு என்று கட்சி இருந்தால் இதுவரை ஒரு பெருங்கூட்டமே சேர்ந்து இருக்கும். அப்படிப்பட்ட கட்சி அமைப்பை அந்நஜாத் சரி காண்பதாலேயே ஒரு கூட்டத்தினர் அந்நஜாத்தை விட்டு வெளியேறி தனிக்கட்சி அமைத்துக் கொண்டார்கள் என்பதே உண்மையாகும். கட்சி மயக்கத்தை விட்டு தெளிவு பெற்றவர்கள் மட்டுமே அந்நஜாத்தில் இருக்கிறார்கள் என்பதை நிஜாமுத்தீன் அறிந்து கொள்வாராக.
மேலும் அந்நஜாத் எடுத்து வைக்கும் குர்ஆன், ஹதீஸ் கொள்கையை ஆதரிக்கும் சகோதரர்கள் அறியாத்தனம் உள்ளவர்களா? தீர்க்கமான அறிவுடையவர்களா? என்பதனை ஒரு பொது மேடை அமைத்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிஜாமுத்தீன் அன் கம்பெனியினர் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் பதிலளிப்பது கொண்டு சோதித்துப் பார்த்து விடலாமே. நிஜாமுத்தீன் அன் கம்பெனியினர் தயாரா? இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களைப் பற்றி தாம் கையில் வைத்திருக்கும் கல்லை தன் பேச்சை செவி மடுப்பவர்கள் தங்கம் என நம்பும்படிச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள்” என்று நாம் கூறவில்லை என்கிற மவ்லவி சாகிப் சென்ற இதழின் கட்டுரையையும் இவ்விதழில் இவ்வாக்கத்தையும் எழுதும் நாமே, அவர் பேசும்போது அவர் முன் அமர்ந்து நாம் எழுதியபடியே அவர் கூறியதை நேரில் கேட்டோம்
முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார் மவ்லவி நிஜாமுத்தீன் அவர் மழுப்புகிறார் என்பதற்கு அவரது கடிதத்தின் ஐந்தாவது பாராவிலுள்ள முதல் வாக்கியமே சான்றாகும். நான் கூறாத செய்தியினை நான் கூறியதாக – கற்பனையாக – நீர் எழுதி இருப்பது பொய்யும் புரட்டும் ஆகும் என மூன்றாவது பாராவில் எம்மை வசைபாடி விட்டு ஐந்தாவது பாராவில் “இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களைப் பற்றி நான் கூறியது வரலாற்று உண்மையாகும்” என்கிறார். ஆறாவது பாராவின் ஆரம்பத்தில் இது தான் நான் எடுத்துக்கூறிய (கல்லுக்கு பதிலாக தூண் என்ற மாற்றம் கொண்ட) வாசகம் எனவும் ஒப்புக் கொள்கிறார்.
16.02.90 அன்று, புதுக்கல்லூரியில் மவ்லவி நிஜாமுத்தீன் நான் குறிப்பிட்டபடியே அபூஹனீபா(ரஹ்) அவர்களைப் பற்றி கூறினார் என்பதை நான் அறுதியிட்டு உறுதி கூறுகிறேன். தாம் கூறுபவைகளுக்கு ஆதாரமோ சரித்திரச் சான்றோ இருக்க வேண்டும் என்று கவலைப்படாமல் தம் கருத்துக்களை நிலைநாட்ட கட்டுக்கதைகளில் தஞ்சம் புகும் மவ்லவி வர்க்கத்தைச் சார்ந்த நிஜாமுத்தீன் செய்துள்ளது என்ன தெரியுமா?
புதுக்கல்லூரியில் பேசும்போது தாம் என்றோ எதிலோ வாசித்தது நினைவில் வந்ததை கூறிவிட்டார். நாம் சென்ற இதழில் அதை விமர்சித்து எழுதியதும், மாலிக்(ரஹ்) அவர்கள் அவ்விதம் கூறியிருப்பதாக தாம் பல நூல்களில் வாசித்துள்ளதாக எழுதி தம் பொறுப்பைக் களைகிறார். நிஜாமுத்தீன், அவர் புதுக்கல்லூரியில் சொன்னதாக நாம் குறிப்பிட்டதற்கும், மாலிக்(ரஹ்) அவர்கள் கூறியதாக அவர் தம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதற்கும் கருத்தில் வேற்றுமை உண்டா, இல்லவே இல்லை.
இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களை உண்மையை மறைக்கும் ஆற்றலுள்ளவர் என்று கூறி அவமதித்ததுமல்லாமல் இப்போது இமாம் மாலிக்(ரஹ்) அவர்களே அதைக் கூறியதாக எழுதி இமாம் மாலிக்(ரஹ்) அவர்களையும் அவமதிக்கத் துணிந்து விட்டார் நிஜாமுத்தீன். இமாம் மாலிக்(ரஹ்) இவர் கூறுவது போல எழுதியுள்ளதை எந்த நூலில் கண்டார்? நூலின் பெயரையாவது தரமுடியுமா? மாலிக்(ரஹ்) அவர்கள் வரை சென்றடையும் உண்மை அறிவிப்பாளர் வரிசையை கொடுக்க முடியுமா? (சரித்திர ஏடுகளில்… என்ற கட்டுரையை பார்க்கவும்) இதனைப் பல நூல்களில் பலமேதைகள் எழுதியுள்ளார் என்று கூறும் நிஜாமுத்தீன் அப்பல நூல்களில் ஒன்றையும், மேதைகள் பலரில் ஒருவரின் பெயரையும் தரமுடியுமா? தருவாராயின் அது பற்றிய உண்மையை துல்லியமாக ஆய்ந்து நாம் ஆதாரங்களுடன் வாசகர்கள் அறியத் தருவோம். உண்மையெனில் ஏற்றுக் கொண்டு பகிரங்கமாக தாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவோம்.
தம் கடிதத்தில் முதல் பக்கம் ஐந்தாவது பாராவில், “நான் கூறியது வரலாற்று உண்மையாகும்: நீர் நம்பாவிட்டால் அது பொய்யாகிவிடாது” என்கிறார் மேதை(?) நிஜாமுத்தீன், ஆறாவது பாராவில் “இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறியது இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்களின் அறிவுக் கூர்மையையும் ஆதாரத்துடன் தான் எதையும் கூறுவார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுவதற்காக மிகைப்படுத்திக் கூறிய உதாரணமாகும்” என்கிறார்.
இது ஆதாரம் அல்ல: தம் நாவன்மையால் உண்மையைத் திரிக்க மேற்கொள்ளும் பிரயத்தனம் அல்லாமல் வேறில்லை. மிகைப்படுத்திக் கூறுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதற்கு, சென்ற இதழில் நாம் எழுதிய கட்டுரையில் பல நபிமொழி(ஹதீஸ்)களை ஆதாரங்களாக எடுத்து வைத்தோம்.நபிமொழி(ஹதீஸ்)கள்படி தனது வாழ்வை அமைத்து, மார்க்க தீர்ப்பு வழங்கி வந்த மாலிக்(ரஹ்) அவர்கள் இந்த நபிமொழிகளுக்கு மாறாக மிகைப்படுத்திக் கூறினார்கள் என வாய் கூசாமல் புரசை மெளலவி கூறுவது, மாலிக்(ரஹ்) அவர்களை அவமதித்தும், அவர்கள் மீது அவதூறு கூறுவதும் ஆகாதா?
மிகைப்படுத்தி கூறல் என்பது குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமாக இருக்கிறது என்று தனது பொய்க் கூற்றை உறுதிப்படுத்த முன்வந்துள்ளார். ஏராளமான குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் இருப்பதாக கூறும் இவர் ஒன்றிரண்டையாவது குறிப்பிடக் கூடாதா? அல்லது முடியவில்லையா? ஒரு பொய்யை மறைக்க பொய்க்கு மேல் பொய் கூறிக் கொண்டு செல்கிறார் புரசை மெளலவி நிஜாமுத்தீன்! இதன் மூலம் யார் தடுமாறுகிறார்கள். தகிடுதத்தம் செய்கிறார்கள் என்பதை வாசகர்கள் முடிவு செய்யுங்கள்.
அவற்றையெல்லாம் நான் உமக்கு எழுத வேண்டிய அவசியமில்லை என்று எதைப் பற்றி முக்கியமாக எழுத வேண்டுமோ அதைப் பற்றி எழுதாமல் நழுவுகிறார் நிஜாமுத்தீன், மிகைப்படுத்திக் கூறுதலுக்கு ஆதாரம் இருந்தால் எடுத்து வைக்க வேண்டியது தானே! “நான் உமக்கு எழுத வேண்டிய அவசியமில்லை” என்று கூறுபவர் வீண் வேலையாக ஐந்து பக்கங்களை கிறுக்கி தள்ளி இருக்கிறாரே? வேடிக்கையாக இல்லை!
தனது கூற்றுக்களை நிலைநாட்ட தக்க ஆதாரங்கள் இல்லாததால் நிலை தடுமாறி ஆத்திரப்பட்டு நம்மை ஏசியும், பேசியும், சபித்தும் எழுதியுள்ளார் என்பதே தெளிவாகின்றது.
ஆலிம்களை ஏசிப்பேசி அவர்களுடைய சாபங்களை வாங்கிக் கொண்டிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் படித்தவுடன் பலர் ஒதுங்கி விடுவோம் என கனவு காண்கிறாரா? குர்ஆனும், ஹதீஸும் வெள்ளை வெளேரென தெள்ளத் தெளிவாக இருக்கும் நிலையில் அவற்றிற்கு முரணாக இமாம்களின் பெயராலும், ஷெய்குகளின் பெயராலும் கப்ஸாக்களையும், கட்டுக்கதைகளையும் கூறி மக்களை வழிகெடுத்து வரும் மவ்லவி நிஜாமுத்தீனும், அவரது வர்க்கத்தினரும் ஆலிம்களாக இருக்க முடியாது என்று எவன் கைவசம் எமது உயிர் இருக்கிறதோ அல்லாஹுவின் மீது ஆணையிட்டு உறுதியாகச் சொல்லுகிறோம்.
அல்லாஹுவுக்கு உண்மையில் அஞ்சி நடப்பவரே ஆலிம்கள் என்று (35:28) வசனத்தை நிஜாமுத்தீன் சிந்திப்பாராக.
முஸ்லிம்களை மத்ஹபுகளின் பெயராலும், தரீக்காக்களின் பெயராலும் கூறுபோட்டு சுரண்டும் கூட்டத்தினர் தான் K.A.N. அன் கம்பெனியினர் என்பதனையும் உறுதிபட நம்மால் சொல்ல முடியும். வானத்தின் கீழ் உள்ளவர்களில் மிகவும் கெட்டவர்கள் இந்த முல்லா வர்க்கமே உறுதிபடக் கூறமுடியும். இதனை மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
நாம் காதால் கேட்டு எழுதியது முற்றிலும் உண்மையையே என்பதில் அணு அளவும் சந்தேகமில்லை, தவறை தவறு என ஏற்கும் தன்னலம் அறவே இல்லாத நிஜாமுத்தீனும் அவரது முல்லா வர்க்கமும், தவறைச் சுட்டிக் காட்டுபவரை குழப்பவாதி என்று பறைசாட்டாவிட்டால் அவர்களது கப்ஸாக்கள் விலை போகுமா? நாங்கள் கப்ஸாவை கப்ஸாவென்று ஆதாரபூர்வமாக எங்கும் எச்சமயத்திலும் நிரூபிக்கத் தயாராகவுள்ளோம்.
மவ்லவி நிஜாமுத்தீனின் கப்ஸா” என்ற தலைப்பில் அவர் அளந்த ஆபாச (மன்மதலீலை)க் கதையை நாம் முன்பு எழுதினோம். மாதங்கள் கடந்து வருடமாகியும் தாம் கூறிய அந்த “கிஸ்ஸா” இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் கொள்கைகளுக்கும் உகந்ததுதான் என்று இதுவரை நிரூபித்தாரா? நிஜாமுத்தீன் இல்லையே! இனியேனும் நிரூபிக்க முன்வருவாரா?
“டூப்” அடிப்பது எமது நோக்கமும், வேலையும் அல்ல. அதற்காகவேயின்று தேறி வந்தவர்கள் நிஜாமுத்தீனும் அவரது மவ்லவி வர்க்கமுமே! தங்களின் கூற்றில் எது டூப்?எது கப்ஸா? ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா நிஜாமுத்தீன்? பலதை சதாசர்வ காலமும் ஏமாற்றி வருவதுதான் பேஷ்(!) இமாம் நிஜாமுத்தீன் சர்வ சாதாரணமாக தம் பயான்கள் மூலம் நிறைவேற்றும் பணி! இருந்தும், உண்மையான உள்ளது உள்ளபடி ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கும் எம்மை ஏமாற்றுபவர் என்றும் பொய்யர் என்றும் பொய்யுரைக்கும் நிஜாமுத்தீனின் நெஞ்சழுத்தம் சாமானியமானதல்ல!
உண்மையாளரும், பண்பும் உடையவராயின் குர்ஆன் ஹதீது அடிப்படையில் எங்கள் கூற்றை பொய்யென நிரூபித்துக் காட்ட சவால் விடுகிறோம். நிஜாமுத்தீனுக்கு! எவ்வித ஆதாரங்களுமற்ற இவரது கடிதத்தையே பிரசுரித்துள்ள நாம், தனது கூற்றுக்களை, கப்ஸாக்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் நிரூபித்து எழுதினால் அந்நஜாத்தில் பிரசுரிக்கத் தயாராகவுள்ளோம். சத்தியம் யாரிடம் உள்ளது என்று மக்கள் தீர்வு செய்யட்டும்!
இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் பொய்க் கூறியதாகவோ, அன்னார் அபூ ஹனீபா(ரஹ்) அவர்களை அவமதித்து விட்டார் என்றோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றும் எந்நிலையிலும் நாம் கூறமாட்டோம். இதுவரை கூறியதுமில்லை. இமாம்களை அவர்களுக்குரிய கண்ணியத்துடனும், மாண்புடனம் கவுரவிப்போம்ட. அவர்களின் தரமும் தன்மையும் அறிந்த நாங்கள் அவர்கள் பேரில் சரடுகளை கூறமாட்டோம். பிறர் கூறும் சரடுகளையும் நம்ப மாட்டோம். கட்டுக்கதைகளைக் கூறி அவர்களுக்கு இழிவைக் கற்பிப்பதற்கென்றே பயிற்சியும் தேர்ச்சியும் கற்றவர்கள் நிஜாமுத்தீன் & Co., தான். ஆதாரம் இல்லாமல் பெரியவர் சொன்னார்,
ஷெய்க் சொன்னார் என்று கட்டுக்கதைகளை அளக்கும் நிஜாமுத்தீன் போன்றவர்களின் கூற்றை கண்டிக்காமல் இருக்க மாட்டோம். மன்பஈகள், கீரனூரிகள், பாக்கவிகள் கூறினாலும் பொய்யை பொய்யென்றும், புரட்டை புரட்டென்றும் மக்களுக்கு எடுத்துரைப்பதே அந்நஜாத்தின் பணி, அந்நஜாத்தின் மூலம் அறிவு பெற்றவரும், உண்மையை உணர்ந்தவரும் தமிழ் கூறும் முஸ்லிம்களில் ஆயிரமாயிரம் பேர்கள் உண்டு. அதற்குரிய நற்பலனை இன்ஷா அல்லாஹ் நாங்கள் அல்லாஹ்விடமிருந்து பெறுவோம் என்ற திட நம்பிக்கையுடனேயே செயல்படுகிறோம் நாங்கள்.
மனிதரில் சிலர் இருக்கின்றனர்: அவர்கள் (பொய்யான கட்டுக்கதை முதலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி (அவற்றை ஜனங்களுக்குக் கூறி) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து அறிவின்றி (ஜனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்ளுகின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (31:6)
இந்த இறைவசனம் யஹூதிகளுக்கு இறங்கியது, முஸ்லிம்களாகிய நமக்கல்ல என புரசை மெளலவி புரட்டி பேசலாம். குர்ஆனை ஒவ்வொருவருக்கு தனித்தனி வசனங்கள் எனப் பிரிக்கலாமா? யஹூதிகள் செய்த செயலை பேஷ்(?) இமாம் தொழில் செய்யும் மன்பஈ மவ்லவி செய்தால் ஆகுமானதாகி விடுமா? என்ற கேள்வியை வைக்கிறோம். பதில் சொல்லட்டும்.
“ஒருவரை மிகைப்படுத்திப் புகழுதல் கூடாது என்ற கருத்துள்ள ஹதீஸுக்குரிய கருத்தென்ன – விளக்கமென்ன என்பதே தெரியாமல், இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களைப் பற்றி மிகைப்படுத்திக் கூறியிருப்பது ஹதீஸுக்கு மாற்றமாகும் என்று விளாசியிருக்கிறீர். இது உமக்கு அரபி மொழியின் ஞானம் இல்லாததாலும் ஆலிம்களிடம் கேட்காததாலும் விளைந்த தவறு! நீரும் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்…ம் இதுவும் கியாமத்து நாளுடைய அடையாளங்களில் ஒன்று” என அழுகை வேதாந்தம் எழுதி, அரபிமொழி ஞானம் படைத்தவர் என்றும் தம்மை ஆலிம் என்றும் கோரும் நிஜாமுத்தீன் அந்த ஹதீஸின் கருத்தையும் விளக்கத்தையும் தராமல் ஓடி ஒளிவது எங்கே? ஞானம் உள்ளவர், கருத்தை அறிந்தவர், விளக்கத்தை புரிந்தவர்,
கருத்தையும் விளக்கத்தையும் எழுதிவிட்டல்லவா எம்மைக் குறை கூற வேண்டும்? தம்மை காக்கமுடியாமல், தம் கூற்றை நிலைநாட்ட முடியாமல் அரபிமொழி ஞானம் பற்றி பிதற்றி தப்பித்து ஓடுகிறார் நிஜாமுத்தீன்! இது மவ்லவி வர்க்கத்தின் வழக்கமான சூழ்ச்சியே என்பது உலகறிந்த உண்மை! மூன்றரை ஆண்டுகளுக்கு முன் ரஹ்மத் இதழ் அந்நாள் ஆசிரியர் எங்களுடன் இவ்வாறே வாதிட முனைந்தார். திருமறையையும் நபிமொழியையுமே சார்ந்து நின்று உண்மையைக் கூறிய எங்களோடு தகுந்த ஆதாரங்களைக் காட்டி வாதிட திராணியற்று நாம் அரபி ஞானம் இல்லாதவர், மதரஸாவில் ஓதாதவர் என்று நொண்டிச் சாக்குகளைச் சொல்லி ஒதுங்கினார். அதே பாணியை தான் நிஜாமுத்தீனும் கையாளுகிறார் என்பதை வாசக நேயர்கள் கவனித்துக் கொண்டார்களாக.
இதேபோல நபி(ஸல்) காலத்தில் தங்களது அரபி ஞானம், கல்வி திறமைகளைப் பேசி நபி(ஸல்) அவர்களை வசைப்பாடியும், சாடியும் வாழ்ந்த அபுல்-ஹக்கம் (அறிவின் தந்தை) என்பவனின் கூற்றுடன் இவரது இக்கூற்றை ஒத்திட்டுப் பார்த்தால் இவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட அபுல்-ஹக்கம் (அறிவின் தந்தை) என சிறப்புப் பெற்றவனுக்கு நபி(ஸல்) வைத்த பெயர் என்ன? அதுபே இவருக்கு பொருந்துமா? இல்லையா? என்பதை வாசகர்களே முடிவு செய்யட்டும்.
“ரசூல்(ஸல்) அவர்களை மிகைப்படுத்திப் புகழ்ந்து எத்தனையோ வாசகங்களையும், கவிதைகளையும் ஸஹாபாக்களும், ஆஷிகீன்களும் ஞானவான்களும் கூறியுள்ளனர். அவற்றில் எதுவும் உமக:குத் தெரியாது போலும்”! என்று ஆச்சரியடைகிறார் நிஜாமுத்தீன்! அவை எல்லாம் தெரிந்த மேதை உதாரணத்திற்கேனும் ஒன்றைத் தந்துள்ளாரா என்றால் இல்லை. தரத்தான் இயலுமா? இது வேறு ஒருவகைச் சூழ்ச்சி (Tactics). ஸஹாபாக்கள் ரசூலுல்லாஹி(ஸல்) அவர்களைப் பற்றி மிகைப்படுத்திக் கூறிய ஒரு வாசகத்தையேனும் தரமுடியுமா நிஜாமுத்தீனால்? ஆனால் உண்மையில் ஆஷிகீன்களும்(!) ஞானவான்களும்(!) மிகைப்படப் புகழ்ந்து எழுதியவைகளை நாங்கள் அறிவோம்.
ஆம் அது தான் “மவ்லூது, ராதீபு” என இம்மவ்லவிகளால் அரங்கேற்றப்பட்டு நடந்து வருகிறது. அதைக் கண்டித்து பக்க பக்கங்களாக அந்நஜாத்திலும், அதுபோன்ற இதழ்களிலும் எழுதியதையும், எழுதி வருவதையும் பாவம் நிஜாமுத்தீன் அறியமாட்டார் போலும்! அதை அறிந்து ஆய்ந்து அதன் தரமும் தன்மையையும் உணராமலா கண்டித்தோம்! பல விஷயங்களை மிகைப்படுத்துதல் என்ற முறையில் கூறியுள்ள அல்லாஹ்வும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் அன்னாரைப் புகழ்ந்துள்ள ஸஹபாக்களும், மேதைகளும் என்று அடுக்கிக் கொண்டுபோகும் நிஜாமுத்தீன் எழுதியவை வாரி இறைக்க நாங்கள் இணங்குவோம்:
நிரூபிக்க முடியாவிட்டால் அவர் முகத்தில் அவரே புழுதியை வாரி இறைத்துக் கொள்ளத் தயாரா? கவிதை எழுதும் கவிஞர் ஆதரிக்காவிட்டால் அவரால் கவிதை எழுத முடியுமா? கவிஞர்களையும் வழிகெட்டவர்கள் தாம் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள் (26:224-226)
நாங்கள் எழுதியவைகளைத் திரித்துக் கூறி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது நிஜாமுத்தீன் தான் என்பது சென்ற இதழில் நாம் எழுதியதையும் இவ்விதழில் பிரசுரமாகியுள்ள அவரது கடிதத்தையும் ஊன்றி வாசிப்பவர் எளிதில் அறியமுடியும். ஆதாரமற்ற கதைகளை நாம் நம்புவதில்லை என்பதோடு அவைகளைக் கூறுபவர்களை கண்டிக்கவும் தயங்கமாட்டோம். இவ்வுண்மையை ஏற்க மறுக்கும் நிஜாமுத்தீன் தமக்கும் தம் வர்க்கத்திற்கும் உரிய “அழுகை வேதாந்தப்” பாணியில் ஏதேதோ பிதற்றியுள்ளார்.
இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் வகுத்தறித்த பிக்ஹுச் சட்டங்களை, அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தான் எழுதியதாக ஆதாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏதாவது நூல் ஒன்றில் காட்டமுடியுமா? வீராப்பு பேசும் நிஜாமுத்தீனால்? அபூஹனீபா(ரஹ்) அவர்கள் எழுதியதாக நிஜாமுத்தீனும் அவரது வர்க்கமும் கூறும் நூல்களில் ஏதேனும் ஒன்று உண்மையில் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் எழுதியதாக நிரூபிக்க முடியுமா? அபூஹனீபா(ரஹ்) எழுதிய ஏதாவது நூல் உள்ளதா? அவ்வித நூல் ஏதும் இல்லை என்பது தான் உண்மை.
நாங்கள் ஆபாசங்கள், அசிங்கங்கள் என்று கூறியது, விளக்கியது யாவும், சுமார் முந்நூறு, நாநூறு ஆண்டுகளுக்கு முன் நிஜாமுத்தீன் போன்ற ஹனபி ரசிகர்களான முகல்லிது முல்லாக்களால் உருவாக்கப்பட்டு அபூஹனீபா(ரஹ்) அவர்களின் பெயரால் அரங்கேற்றப்பட்ட கற்பனைச் சரடுகளையே, இதை நன்கு அறிந்த நிஜாமுத்தீன் தமக்கே உரிய சூழ்ச்சி (Tactics) முறைப்படி மக்களை இங்கும் ஏமாற்றுகிறார். நிஜாமுத்தீன் தம் கடிதத்தில் மத்ஹபு ஒன்றை பின்பற்றுவது தான் குர்ஆனையும் ஹதீஸையும் பற்றி பிடித்ததாக – ஆகும் என்று நம்பிச் செயல்பட்டு வருபவன் நான்” என்று கூறுவதே இமாம்களின் கூற்றுக்கு முரணான செயலல்லவா?
இமாம்களில் யாரேனும் தம் பெயரால் ஒரு மத்ஹபை உருவாக்கி அதைப் பின்பற்றுமாறு கூறியதாக நிஜாமுத்தீன் ஆதாரபூர்வமாக நிரூபிப்பாரா? நிரூபித்தால் நாம் எழுதியவைகளை வாபஸ் வாங்கி விடுகிறோம். அவரிடம் மன்னிப்புக் கோருவோம். தவ்பாவும் செய்வோம். குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் நேரான சீரான சிந்தனை இல்லாதவர் நிஜாமுத்தீனே அல்லாமல் நாங்களல்ல, சிந்திக்கின்றோம், சொல்லுகின்றோம், செயல்படுகின்றோம், அவைகளுக்கு ஆதாரம் குர்ஆன் ஹதீஸுகளிலிருந்து தர தவறுவதும் இல்லை. சென்ற இதழில் நாம் ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறோமா அல்லவா என்பதை வாசக நேயர்கள் ஊன்றிப் படித்து தீர்ப்பளிப்பார்களாக!
உண்மை ஆலிம்களை நாங்கள் ஏசுவதும் இல்லை, பேசுவதுமில்லை. நாங்கள் விமர்சிப்பது உலகறிவும், மார்க்க அறிவும் அற்ற அறிவிலிகளாக இருந்தும் மதரஸாவில் ஏழு வருடங்கள் தங்கி உண்டு உறங்கிய ஒரே காரணத்தால் “ஆலிம்சா” என்ற பட்டத்ததை தம் பெயரோடு ஒட்டிக் கொள்ளும் மெளட்டீக வாதிகளைத்தான் அல்லாஹ்வே அவர்களைப் பற்றி கூறுவதை கவனிக்க.
(நபியே! இந்த குர்ஆனைக் குறிப்பிட்டு அதில்) “உங்களுடைய இறைவன் என்ன அருளினான் என்று” அவர்களிடம் கேட்கப்பட்டால், (இது) முன்னுள்ளோரின் கட்டுக் கதைகள் தாம்” என்று கூறுகின்றனர். மறுமை நாளில் தங்கள் பாவச் சுமையை இவர்கள் பூரணமாகச் சுமப்பதுடன் அறிவின்றி இவர்கள் வழிகெடுத்து மற்றவர்களின் பாவச் சுமையையும் இவர்கள் சுமப்பார்கள். (இவ்வாறு) இருவரின் பாவச் சுமையை இவர்கள் சுமப்பது மிகக் கெட்டதல்லவா? (16:24,25)
திருக்குர்துனை பொருள் அறிந்து வாசிக்க மக்களைத் தூண்டாமல் இறந்தவர்கள் மீது ஓதும் கிரந்தம் என்று நம்பிச் செயல்படச் செய்து, கட்டுக்கதைகளைக் கூறி அவைகளே குர்ஆனில் உள்ளவை என்று நம்பச் செய்துள்ளவர்கள் நிஜாமுத்தீனும் அவரது வர்க்கத்தினரும் அல்லவா? மேலே கண்ட இறை வசனப்படி அவரும் அவரது வர்க்கமும் நிச்சயமாகப் பெறவிருக்கும் தண்டனையை நம்மீது சாட்டுகிறார் இவர்.
உண்மை அறிவால் ஆலிம்களை நாங்கள் செவிமடுக்கின்றோம்: கண்ணியப்படுத்துகிறோம், கவுரவிக்கின்றோம், ஆனால் அறிவிலிகளை ஆலிம்கள் என்று வாய் தவறியும் கூறிவிடமாட்டோம், “அஜ்ரத்” என்று கூறி அவர் பின் நடக்கவும் மாட்டோம். “ஆலிம்களை ஏசிப்பேசி அவர்களுடைய சாபங்களை வாங்கிக் கொண்டிருக்கும் உமக்கு இவை எங்கே ஏறப்போகிறது” என்கிறார் நிஜாமுத்தீன் இவ்விதம் கூறியே மக்களை காலம் காலமாக பயமுறுத்தி ஏமாற்றி பிழைப்பை நடத்தும் நிஜாமுத்தீன் & Coவின் பயமுறுத்தல் எங்களிடம் பழிக்காது.
“இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் ஒரு தடவை: அவசியத்தினிமித்தம்-இடக்கரத்தால் தருமம் செய்தவர்கள் என்று ஒரு வரலாறு இருக்கிறது என்று எழுதிவிட்டு அதைச் சீரான உண்மை வரலாறு என்று காட்ட சப்புக்கட்டி ஏதோ உளறியதுமல்லாமல் தாம் அதைக் கூறவில்லை என்கிறார். புரசைவாக்கம் பள்ளிவாசலில் ஜும்ஆ பயானில் ஒரு தடவையேனும் வரலாறு என அவர் கருதும் இச்சரடை அவர் கூறவில்லை என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்வாரா நிஜாமுத்தீன் கூறியதை கூறவில்லை என்று துணிந்து பொய் சொல்லவே இக் கடிதத்தை எழுதியுள்ளார் போலும்.
“நன்மை செய்யவேண்டும் என எண்ணம் ஏற்பட்ட நேரத்தில் உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டுமெனச் செயல்பட்ட இதுபோன்ற பல சம்பவங்கள்(?) நல்லடியார்களின் வாழ்வில் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றில் குற்றங்கண்டுபிடிக்க நமக்கு எவ்வித தகுதியும் இல்லை. குறிப்பாக உமக்கு எவ்வித தகுதியும் இல்லை” என்பது நிஜாமுத்தீன் “அழுகை வேதாந்தம்” நாம் வரலாற்று உண்மையில் குற்றம் காணவில்லை “கப்ஸாவை வரலாறு என்று நம்பி அதை எழுத்துக்கூறி வழிகெடுப்பதோடு கண்ணியத்திற்குரிய இமாம் அவர்களை சபல புத்தியுள்ளவர்களாகச் சித்தரிக்கின்றீர் என்கிறோம். புரிகிறதா?
கட்டுக்கதைகளை நாவு கூசாமல் கூறுவது; அதை யாரும் சுட்டிக்காட்டினால் கூறவில்லை என மறுப்பது இதுவே நிஜாமுத்தீன் போன்றவர்களின் வழக்கமும் பிழைப்புமாகிவிட்டது. அவரையும் அவரைப் போன்ற மவ்லவி வர்க்கத்தினரையும் திருத்துவதில் நம்பிக்கை இழந்த பின்பே மக்கள் அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் வரையில் வீழாமல் இருக்க வேண்டுமென்பதற்காகவே இவைகளை எழுதுகிறோம்.
“வமன் யுதி இல்லாஹ்…. என்று தொடங்கும் 4:69 இறை வசனத்தை நிஜாமுத்தீன் 16:2:90 அன்று புதுக் கல்லூரியில் தமது உறையில், முன்னோரைப் பின்பற்றுவோர் பஃஉலாயிக்க மஅல்லதீன…. என்றே ஆரம்பித்தார் என்பது முற்றிலும் உண்மை. நாமோ காதால் கேட்டோம். இங்கும் அதை மறுத்து பொய்யே கூறுகிறார். நாம் சென்ற இதழில் கடைசியாக எழுதி இருக்கும் இரண்டு ஆயத்துக்களில் முதல் ஆயத்து தக்லீது கூடும். இமாம்களைப் பின்பற்றலாம் என்பதற்கு தெளிவான ஆதாரமாகும் என்கிறார் வாய்மை என்னவென்பதையே அறியாத நிஜாமுத்தீன். அந்த முதல் ஆயத்தை அப்படியே மீண்டும் தருகிறோம்.
“அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் அதற்கு அவர்கள் “அன்று எங்கள் மூதாதையர்கள் எதன் மீது இருக்கக் கண்டோமோ அதனையே பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டு எரியும் வேதனையின் பால் அழைத்தாலுமா?” (31:21)
இதில் எங்காவது தக்லீதுக்கு ஆதாரம் உள்ளதா? மாறாக உள்ளதா? என்பதை வாசகர்களே முடிவு செய்யுங்கள். உண்மையாளராயின் தக்க ஹதீஸ்கள் ஆதாரத்துடன் இதை நிரூபிப்பாரா அவர்? இவரிடம் சென்று மண்டியிட்டு நாம் கற்ற வேண்டுமாம். தம் குர்ஆன் விளக்க பிரசங்கத்திலும் ஜும்ஆ பயான்களிலும் மக்களை வழிகெடுப்பது போதாது என்று எம்மையும் அக்கூட்டத்தோடு சேர்த்து தம் ஷைத்தானிய வலையில் விழக் கோருகிறார் போலும், அல்லாஹ் நம்மைக் காத்தருள்வானாக!
“அரபி மொழியின் ஞானம் இல்லாததாலும், ஆலிம்களிடம் கேட்காததாலும் விளைந்த தவறு! ஆலிம்களிடம் மண்டியிட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வீராக! அல்லது என்னிடம் வாரும்; சொல்லித் தருகிறேன். ஆயத்திற்குரிய பொருளையும், கருத்தையும் பல தினங்களுக்கு உமக்குப் பாடம் சொல்லித் தருகிறேன்” போன்ற புரசை மவ்லவியின் சொற்றுடர்களைக் கவனியுங்கள்.
குர்ஆனும், ஹதீஸும் எல்லோருக்கும் விளங்காது; அரபி படித்தவர்களுக்கு மட்டும் தான் விளங்கும் என்பதாக தெரிவிக்கிறார். அல்லாஹ் குர்ஆனை எளிதாக்கி வைத்திருப்பதாக கூறுகிறான். (4:17,22,32,40) புரசை மவ்லவி எல்லோருக்கும் புரியாது. அரபி படித்த இவரைப் போன்ற மவ்லவிகளுக்கு தான் புரியும், விளங்கும், இவர்களிடம் மண்டியிட்டு கற்க வேண்டுமெனப் பிரியப்படுகிறார்.
இவ்விதமாக அல்லாஹ் அவனது தூதர்(ஸல்) கூற்றுக்களை மறுத்தது மட்டுமின்றி தற்பெருமையும் அடித்துள்ளார். இவரது கடிதத்தைப் படித்தவர்கள் இதனை நன்கு உணரலாம். இப்படி அல்லாஹுவின் ஆணையை மறுத்து பெருமையடித்த ஒருவனைப் பற்றி, குர்ஆன் விமர்சிப்பதைப் பற்றி இங்கு ஒரு குறிப்பு கொடுத்து அதனையே புரசை மவ்லவி நிஜாமுத்தீனுக்கு அறிவுரையாக தருகிறோம். இது நாங்கள் கூறும் அறிவுரை அல்ல. அல்லாஹ் அவனது அருள் மறையில் வழங்கும் அறிவுரையாகும். அதனை எடுத்து தருவது மட்டுமே எமது பொறுப்பு.
அல்லாஹுவின் அடியான் ஒருவன் ஒரே ஒரு தடவை அல்லாஹுவின் ஆணையை மறுத்தான். அதனால் கோபமடைந்த அல்லாஹ் ஏன் மறுத்தாய்? என கேள்வி கேட்டான். அதற்கு அவன் தனது பெருமைகளைக் கூறி (புரசை மெளலவி போல) தான் மறுத்ததற்கு நீதி கற்பித்தான். இது அல்லாஹுவின் கோபத்தை மேலும் அதிகப்படுத்திறது. எனவே அவனை அல்லாஹ் சபித்தான். இதனை அல்லாஹ் 2:34, 20:116, 15:31, 38:74, வசனங்களில் உரைப்பதைப் பாரீர்.
ஒரே ஒரு தடவை அல்லாஹுவின் ஆணையை மீறியவனுக்கும், அதற்கு காரணமாக தற்பெருமையடித்தவனுக்கும் அல்லாஹுவின் பற்பல ஆணைகளையும், நபி(ஸல்) வழிமுறைகளையும் மறுத்து, தான் அரபி பண்டிதன் என பெருமையடித்து, கப்ஸாக்களை வரலாற்று உண்மைகள் என அரங்கேற்றும் நிஜாமுத்தீன் போன்றோரும் என்ன நிலையோ? அல்லாஹ் காப்பானாக!
வாய் கூசாமல் பொய்யுரைத்து, கை நடுங்காமல் பொய் எழுதி உண்மையை மறைக்க வேண்டாம் என்று நிஜாமுத்தீனை எச்சரிக்கின்றொம். குர்ஆன் ஹதீஸை எடுத்துக் கூறாமல், கட்டுக்கதைகளையும் ஆதாரமற்ற சம்பவங்களையும் நிஜாமுத்தீன் கூறிக்கொண்டு இருக்கும் காலமெல்லாம் நாமும் அதைச் சுட்டிக் காட்டி எழுதிக் கொண்டே இருப்போம். ஏனெனில் அவர் குர்ஆன், ஹதீஸ் வழி வரவேண்டுமென்ற ஒரு பேராவாதான்! அல்லாஹ் கபூலாக்கி வைப்பானாக! ஆமீன்.
“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)