அவ்லியாக்களை அவமதிக்காதீர்!
பரங்கிப்பேட்டை, கு. நிஜாமுத்தீன், பொட்டல் புதூர் M.A. ஹனீபா.
இஸ்லாத்தின் இனிய சகோதர சகோதரிகளே….!
தமிழகத்தில் சத்தியப் பிரச்சாரம் துவங்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகிவிட்டன. இந்த குறுகிய காலத்தில் ஆயிரம் வருடங்களாக ஆழக் குழிதோண்டி புதைக்கப்பட்ட எத்தனையோ உண்மைகள், நியாயங்கள், வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டு விட்டன. கற்றுவிட்டோம் என்று தம்மை தாமே விளம்பரப் படுத்திக் கொண்ட மெளலவி கும்பலிடம் மார்க்கத்தை அடமானம் வைத்து, மாதாமாதம் பாத்திஹா, கந்தூரி, உரூஸ் என்று வட்டிக்கட்டிக் கொண்டு தான் இருந்தோம்.
அரபி மாதத்தின் பெயர்களைக் கூட அறியாது நம் மாதர்கள் முஹையத்தீன் ஆண்டகை(?) மாதம், ஷாஹுல் ஹமீத் பாதுஷா மாதம், ஹஸனபலடஈ ஹுஸைனார் மாதம், பராத்(செத்துபோனவர்களுக்கு நன்மை செய்கின்றோம் என்ற பெயரில் புரோகிதர்களை அழைத்து பூஜை பண்ணும்) மாதம் என்று நூதனமான பெயர்களைச் சூட்டிக் கொண்டு அம்மாதங்களுக்கு புனிதம் என்ற முத்திரை குத்தி முஸ்லிம் பெயர் தாங்கி வாழும் ஐயர்களைக் கூப்பிட்டு இஸ்லாத்தைக் கறைபடுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். உழைக்கத் தெரியாத புரோகிதச் சோம்பேறிகளுக்கு மேற்கண்ட பாத்தியாக்கள் வயிறு வளர்க்கப் பாதைப் போட்டுவிட்டன.
அல்லாஹ்வின் கட்டளைகளை அலட்சியம் செய்த இந்த அரை வேக்காடுகளின் முகத்திரைகள் வெகு வேகமாகக் கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த முல்லாக்கள் இவ்வளவு காலமாக இதமாக வயிறு வளர்த்ததற்கு யார் காரணம் என்றால் நாம் யாரிடம் மார்க்கத்தை ஒப்படைத்தோமோ அதே மெளலவிகள் தான் காரணம்.
திருமறை வழியும், இறை நபிமொழியும் எடுத்து இயம்பப்படாததால்தான் இந்தச் சமுதாயம் பச்சை ஷிர்க்கை கூட ஈமானோடு ஒட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. நுண்ணறிவுமிக்க அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சத்தியப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்ட சிறிது காலத்திற்குள் உள்ளம் திறந்து உண்மையை உணர்ந்து பெரும்பாலான மக்கள் நேர்வழியின் பால் வந்து தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்க்ள. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அவர்களுக்கு எதிர்ப்புகளைச் சமாளிக்கும் மன உறுதியை தந்தருள்வானாக.
இது காலம் வரை புராணக்கதைகளையும், மந்திரங்களையும் ஓதி வயிறு வளர்த்த விஷக்கும்பல் புதைக்கப்பட்ட உண்மைகள் துளிர்விட்டு வெளி வருவதைக் கண்டு ஆத்திரத்தின் மேம்பாட்டினால் அலறுகிறார்கள். பஞ்சாங்கத்தையும் பால் கிதாபையும் வைத்து சத்திய சமுதாயத்தை பாழ்படுத்திய பட்டதாரிகளிடம் அழகிய ஆதாரங்கள் கேட்டால் ஆத்திரங் கொண்டு அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.
அதில் ஒரு வீச்சுதான்…
வஹ்ஹாபிகள் அவ்லியாக்களை அவமதிக்கிறார்கள். அவ்லியாக்களின் அடக்கஸ்தலங்களில், மேடைபோட்டு சினிமாப் பாடல்களை உளறி கூத்தடிக்கும் கூறுகெட்ட கும்பல்களை இவர்கள் கண்டிக்கவில்லை.
மேலைநாட்டு நிர்வாண நாகரீக(?)த்தைப் போன்று அரை நிர்வாணமாக ஆணையும், பெண்ணையும் ஆடவிட்டு அவ்லியாக்களை கண்ணியப்படுத்தும் கேடுகெட்ட இனத்தை இந்த உலமாக்கள் கண்டிக்கவில்லை.
அல்லாஹ்வுடைய நேசர்களின் கப்ர்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் அடைக்கலாம் கொடுத்து ஆபாசங்களை அரங்கேற்றும் அடாவடிக் கும்பலை இந்த ஜமாஅத்துல் உலமா சபையினர் கண்டிக்கவில்லை.
உழைக்க வக்கற்று உண்டியல் மூலம் வயிறு வளர்க்கும் உருப்படாத கும்பலை இவர்கள் கண்டிக்கவில்லை. கொடிகளுக்கும், மரங்களுக்கும் பூச்சுற்றி (சில இடங்களில் உண்டியல்களுக்கும் தரிசிக்க வரும் பக்த கோடிகளின் காதுகளுக்கும் பூச்சுற்றப்படுவதை நினைவில் கொள்க) பூஜை செய்யும் பண்டாரங்களை இவர்கள் கண்டிக்கவில்லை.
புனித(?) தர்காக்களில் நோய் நிவாரணம் என்ற பெயரில் தனிமையில் பெண்களின் அங்கங்களை ஆராய்ச்சி நடத்தும் சதிகாரக் கும்பலை இந்த ஜமாஅத்துல் உலமா மேதாவிகள் கண்டிக்கவில்லை.
கராமாத் என்ற பெயரில் கண்கட்டிவித்தை நடத்தி காசு பணத்தைக் கொள்ளையடிக்கும் முகமூடிக் கும்பலை இந்த உலமாக்கள் கண்டிக்கவில்லை. ஏன் கண்டுகொள்ளக் கூட இல்லை (மேற்கண்ட விசயங்களில் இவர்களும் பங்கெடுக்கிறார்களோ…. என்னவோ….?)
மாறாக,…..
இவர்கள் யாரைக் கண்டிக்கின்றார்கள் தெரியுமா..?
அல்லாஹ்வும், அவன் தூதரும் காட்டித்தந்த தூய வழிமுறைகளை முழு மனதோடு ஏற்று அந்த வழியில் மக்களை அழைக்கும் நம்மைக் கண்டிக்கிறார்கள். அவ்லியாக்களை மதிக்கின்றோம் என்ற பெயரில் அசிங்கத்தனமாக நடந்து கொண்டிருக்கும் கும்பல்களை அடையாளங் காட்டும் நம்மைக் கண்டிக்கிறார்கள்.
அல்லாஹ்வையும், அவன் தூதரையும் ஏற்றுக்கொண்ட ஒரு சமுதாயம் பலவாராகப் பிளவுபட்டுக் கிடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் உன்னத முயற்சியில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நம்மைக் கண்டிக்கிறார்கள். அல்லாஹ்வின் பள்ளியில் அவனை மட்டும்தான் வணங்க வேண்டும். கவிதை பாடவோ கதைகள் சொல்லவோ அது இடமில்லை என்று கூறும் நம்மைத் தான் பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறிக்கை விடுகிறார்கள். இப்படி தூய இஸ்லாத்திற்கு முரண்பட்டு ஃபத்வாக்கள் வழங்குவது இந்த உலமாக்களின் தனிச் சிறப்பு.
இனி,..
அவ்லியாக்களை அவமதிப்போர் யார்? என்பதை அலசுவோம்.
எவர்கள் தங்கள் இறைவனுடைய அழைப்பை ஏற்றுக் கொள்கிறார்களோ (அது) அவர்களுக்கு முற்றிலும் நன்மையாகும். அன்றி எவர்கள்(தன் இறைவனாகிய) அவன் அழைப்புக்கு பதில் கூறவில்லையோ அது அ(ந்த தீய)வர்களுக்கு (பெரும் தீங்காகும்) (13:18)
ஒரு மனிதன் இறை அடியாராக ஆகவேண்டுமெனில் அந்த மனிதர் நிச்சயமாக அல்லாஹ்வின் அழைப்பை ஏற்கவேண்டும் அப்படி ஏற்றுக்கொண்ட மனிதர், இறைவனும், இறைத்தூதரும் எதையெல்லாம் கட்டளையிட்டுள்ளார்களோ அதையெல்லாம் பின்பற்றி நடப்பது மட்டுமல்லாமல் எதையெல்லாம் விட்டு விலக கட்டளையிடப்பட்டிருந்ததோ அதையெல்லாம் விட்டு விலகிக் கொள்ளவேண்டும். இதை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தால் அந்த மனிதர் இறை நேசராக ஆகின்றார்.
அப்படி இறைவனுக்கு அடிப்பணிந்த நல்லடியார்கள் இந்த பூமியில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அந்த அல்லாஹ்வே கூறுகிறான்.
ரஹ்மானுடைய அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். மூடர்களி அவர்களுடன் தர்கிக்க முற்பட்டால் “ஸலாமுன்” என்று கூறிவிடுவார்கள். 25:63 மேலும் 64,65,67,68,…77 வரை நோட்டமிடுக.
இப்படி இறைக்கட்டளை ஏற்று தன் வாழ்வை சீர்படுத்திக் கொண்ட அந்த இறை நேசர்களுக்கு எவ்வித பயமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். துயரடையவும் மாட்டார்கள் (10:62) என்று இறைவன் கூறுகிறான். இப்படி வாழ்ந்த நல்லடியார்கள் மரணித்து விட்டதும் மலக்குகளின் “னன்க நவ்மதில் அரூஸ்”(புகாரீ) என்ற கட்டளை ஏற்று இறுதி நாள் வரை மீளா உறக்கத்திலிருப்பார்கள். இறைவன் அவர்களுக்கு எதை எதை நாடியுள்ளானோ அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு நல்லடியாரின் நன்மை இவ்வளவுதான் என்று குர்ஆன், ஹதீஸ் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால் இவைகளை அப்படியே நம்புகிறோம்.
இனி,
முப்பது உலமாக்கள் சரிகண்டு வெளியிட்ட “அவ்லியாக்களின் அந்தரங்க அகமிய விளக்கம்” என்ற தலைப்பில் வந்துள்ள குர்ஆன், ஸஹீஹான ஹதீஸுக்கு முரண்படும் கருத்துக்களைக் காண்போம். அதற்கு முன் இந்தப் புத்தகத்துக்கு முப்பது உலமாக்களின் அங்கீகாரம் எப்படிக் கிடைத்தது என்று மிக்க வியப்பாக உள்ளது. கொடுமையான ஷிர்கால் நிரப்பப்பட்டுள்ள இந்தக் குப்பைக் கிதாபுக்கு முன்னுரை, மதிப்புரை, வாழ்த்துரை வழங்கி ஆசீர்வதித்தவர்களைப் பற்றி என்ன சொல்வது? “அவ்லியாக்களை அவமதிப்பது யார்?” என்று இனங்காட்ட இந்த ஒரு குப்பையே போதும். இந்த நூலுக்கு மதிப்புரை கொடுத்துள்ள ஒரு மெளலவியார் இந் நூலை விருப்ப வெருப்பு இன்றி நோட்டமிட்டதாகக் கூறி உரை வழங்கிய லட்சணத்தைப் பாரீர்.
“யாரும் கண்டு வியந்து போற்றும் அளவுக்கு அபூர்வமான ஆதாரங்களைக் கொண்டு அழகுற இந்நூலாசிரியர் எடுத்துரைத்து அதற்குரிய புண்ணியத்தைப் பெற்றுக் கொண்டார்.
நூலாசிரியர் தனது முன்னுரையில்,
நபிமார்களின் உடல்களை மண்திண்ணாது என்ற நபி(ஸல்) அவர்களின் வாக்கையும் ஆதாரமாகக் கொண்டு அவ்லியாக்களின் உடல்களை மண்திண்ணாது என்று திரித்து எழுதி தன் அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
குர்ஆன் ஹதீஸைக் கொண்டு வாழ்க்கையை சீர்படுத்தச் சக்தியற்றவர்கள் புராணக்கதைகளையும் புளுகு மூட்டைகளையும் அவிழ்த்து விடுகிறார்கள்.
மஃரிபத்துமாலை, ஞானக்குறவஞ்சி, உலக உருளை(ப்போன்ற தீயிட்டுக் கொளுத்தப் படவேண்டிய குப்பைக்) கிதாபுகளை எழுதிய தக்கலை பீர் முஹம்மது ஸாஹிபு திருவனந்தபுரத்தை ஆண்டு வந்த முத்துசாமி தம்பிரானின் இறந்து விட்ட இளவரசனை தன் சக்தி கொண்டு உயிர்ப்பிக்க வைத்தார்கள். எவர்களை நாம் (மரணிக்கச் செய்து) அழித்துவிட்டோமோ அவர்கள் மீண்டும் இவ்வுலகிற்கு (திரும்பி) வரமாட்டார்கள். (21:95) என்ற இறைக் கட்டளைக்கு முரணாக மேற்காணும் கதையை அரங்கேற்றியுள்ளார்.
மேலும் தனது முன்னுரையில்
வர்த்தக கூட்டமொன்று வியாபாரத்தை முன்னிட்டு ஷைகு அபுல் ஹஸன் கிர்கானி(ரஹ்) இடம் சென்று நாங்கள் செல்லும் பாதைப் பயங்கரமானதால் பத்திரமாக போய்வர துஆ செய்யச் சொன்னார்கள். அதற்கு அவர்கள் உங்களுக்கு ஆபத்து நேரின் அபுல் ஹஸனை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி வழி அனுப்பிவைத்தார். பிரயாணத்தின் வழியில் வர்த்தகர்களின் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஒருவர் மட்டும் ஷைகு அபுல் ஹஸன் கிர்கானியை அழைத்து உதவி தேடினார். விளைவு அவர் தன் பொருளுடன் கொள்ளைக் கூட்டத்தின் பார்வையை விட்டும் தப்பினார். மற்றவர்கள் இறைவனை விழித்து உதவி தேடினார்கள் விளைவு அவர்களுடைய பொருள்கள் அனைத்தும் சூரையாடப்பட்டன.
இதைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டபோது, நீங்கள் அல்லாஹ்வை அறியாது அவன்பால் உதவி தேடினீர்கள், ஆனால் நானோ (சம்பந்தப்பட்டவர்) அல்லாஹ்வை அறிந்து அவனிடம் உதவி பெற்று தங்களை காப்பாற்றினேன். (மிர்அத்துல் கவுனைன். பக்கம் 244)
அல்லாஹ்வின் அந்தஸ்திற்கு ஒரு மனிதனை உயர்துவதன் மூலம் அவுலியாக்களை அமைதிப்பது நாங்களா அல்லது அவர்களா? என்பதை எல்லோரும் உணரலாம்.
மேலும்…
அத்வைத சமாச்சாரத்தை இந்த உம்மத்தில் புகுத்திப் பாழ்படுத்திய வழிகேடன் இப்னு அரபியின் கருத்தை எடுத்து எழுதி அல்லாஹ்வின் ஆட்சிக்கு இணையாக்குவதைப் பாரீர்.
ஒவ்வொரு காலத்திலும் நபி(ஸல்) அவர்களுக்கு முன்னும் சரி, பின்னும் சரி, கெளது அல்லது குத்புல் அக்தாப் உண்டு. அல்லாஹ்வின் பார்வை அவர்களை நோக்கியே உள்ளது. அவர்களிருக்கும் வரை இப்பிரபஞ்சம் அழிவதில்லை. அவர்களைக் கொண்டே அல்லாஹுத்தஆலா இவ்வுலகத்தையும் சிருஷ்டிகளையும் பாதுகாத்து வருகிறான் என்று ஷைகுல் அக்பர் முஹையத்தீன் இப்னு அரபியின் புஸுஸுல்ஹிகமின்ஷரஹில் வருகின்றது.
அரபி மொழியை வைத்து தலைக்கணம் கொண்டுள்ள இந்த உல(க) மாக்களின் பார்வையில் குர்ஆனும், ஹதீஸும் தீட்டுகின்ற வாழ்க்கை நெறிகள் தென்படாமல் போனதற்கு ஆச்சரியப்படவேண்டியதில்லை. ஏனெனில் இவர்கள் ஐந்தாவது இமாமாக ஏற்றுக்கொண்ட இமாம் கஸ்ஸாலி அரபியில் பாண்டித்தியம் பெற்றிருந்தும்கூட அந்த அரபி மொழியை வைத்து குர்ஆனையும் ஹதீஸையும் ஆராயாமல் கிரேக்கத்துவங்களுக்குத் தன் மனதைப் பறிகொடுத்து அதன் கவர்ச்சியில் கட்டுண்டதன் விளைவால்தான் அந்த இமாம் எழுதிய சட்ட(?) நூல்களும் குர்ஆன், ஹதீஸை விடுத்து கிரேக்க தத்துவங்களுக்கே வக்காலத்து வாங்குகின்றன.
அதே வழியில் அந்த இமாமின் வழி உதித்த இப்னு அரபி அதே சரக்கை மேலும் சாயம் பூசி அரங்கேற்றினார். இப்படி இஸ்லாத்திற்கு உதவாத போதனைகளைப் போதித்தவர்களைத்தான் நமது மெளலவிகள் தங்கள் இமாமாக ஏற்றுக் கொண்டு அவர்களின் வாக்கை வேதவாக்காக எடுத்துச் செயல்படுகிறார்கள். குர்ஆன் ஹதீஸோடு நேரடியாக போர் புரிகின்ற கருத்துக்களைக் கூட இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படி புரிந்து கொண்டவர்கள் (மெளலவி அல்லாதோர்) தக்க ஆதாரத்தோடு எடுத்துச் சொல்லும்போது அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இந்த மெளலவிகள் அடையவில்லை என்பதுதான் உண்மை.
இனி மேற்காணும் இப்னு அரபியின் கருத்தை குர்ஆன் வசனத்தோடு ஒப்பிடுவோம்.
(நபியே) நீர் கூறும்! நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவன்தான். (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வை தவிர வேறு நாயன் எவனுமில்லை. (அவன் தான்)வானங்கள், பூமி இவைகளுக்கும், இவற்றின் மத்தியிலுள்ளவற்றிற்கும் இறைவன். (அவன்) மிகைத்தோன். (38:6, 5:67)
மேற்கண்ட இறைவசனங்களையும் இபுனு அரபியின் கருத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இப்னு அரபியின் கருத்து எந்த அளவு வழிகேட்டில் இருக்கின்றது என்பதை உணரலாம். கொளதையும், குத்பையும் கொண்டு அல்லாஹ்வை தேவையுள்ளவனாக இயலாதவனாக ஆக்கி குர்ஆன் 112:1-4 வசனத்துக்கும் நேர் முரண்பட்டு நிற்கின்றர். இந்த அண்டப் புளுகு விஷயத்திற்கு நான் ஆதரவு தந்து 30 மெளலவியர்கள் கையொப்பமிட்டு இருக்கின்றார்கள்.
என்னே இவர்களின் மதியீனம்!
மேலும் சில விசயங்களை அலசுவதற்கு முன் சகோதர சகோதரிகளின் சிந்தனைக்கு ஓர் உண்மையைக் கொண்டு வருகிறோம். மேலே நாம் எடுத்து எழுதிய விஷயங்களை உள்ளடக்கிய “ஹிதாயத்துல்அனாம்இலாஜியாரத்தில் அவுலியாஇல்கிராம்” என்ற இந்த மெஞ்ஞானம்(?) பொருந்திய நூலில் மூலப்பிரதி 1950ல் அச்சிடப்பட்டுள்ளது. நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட புத்தகத்திற்கு இப்போது மறுப்பு தருவதின் காரணம் என்னவெனில், அந்த நூல் இப்பொழுதுதான் நம் கண்ணில் பட்டது என்பதை ஒரு புறம் தூக்கிவைத்து விட்டாலும், தமிழகத்தில் சத்தியப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு பின் இந்த நூல் 5ம் பதிப்பு அச்சிடப்பட்டுள்ளது.
சத்தியப் பிரச்சாரம் செய்வோரால் “பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்” என்று தக்க ஆதாரத்தோடு ஒதுக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் இந்நூலில் “ஸஹீஹான ஹதீஸ்” என்று மீண்டும் பிரசவித்துள்ளதைதான் நம்மால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.”பலவீனமான ஹதீஸ்” என்று மிகத் தெளிவாக அறிவிக்கப்பட்ட இந்த காலத்திலேயே அந்தச் செய்திகளை ஸஹீஹ் என்ற நிலைக்கு உயர்த்தி அதற்கு வக்காலத்து வாங்கும் மெளலவிகள் பலவீனமானவை என்று அறிவிக்கப்படாத காலத்தில் இந்த உம்மத்தை எந்த அளவிற்கு வழிகெடுத்து இருப்பார்கள் என்பதை உணர்வதற்கு மேற்கண்ட சாட்சியம் தக்க சான்று.
அந்நஜாத் ஆசிரியரின் “முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு” என்ற நூலை பார்வையிட்ட ஒரு பெரியவர் மேற்கண்ட நூலை நமக்கு அனுப்பி வைத்து நம்மை தெளிவுபெறுமாறு எழுதி இருந்தார். அவரின் இவ்வாசகத்திலிருந்து, அந்த நூலை எந்த அளவிற்கு அந்தப் பெரியவர் நம்பியுள்ளார் என்பது புலப்படுகின்றது.
“கதை கேட்பதில் நம் சமுதாயம் காதைப் பறிகொடுத்துவிடும்” என்ற சொல்லுக்கு ஏற்றார்போல் தான் மேற்கண்ட நூலைக் காண்போர்தம் இதயத்தை பறிகொடுத்து விடுகிறார்கள். அதில் வரும் விஷயங்களை குர்ஆன், ஹதீஸோ:டு ஒப்பிட்டு திறனாய்வ செய்யும் சக்தி நம் மக்களிடம் வளர்க்கப்படாததால்தான் இன்றுவரை இது போன்ற கிரந்தங்கள் உயிரோடு உலவுகின்றன.
குர்ஆன், ஹதீஸோடு எவ்விஷயத்தையும் ஒப்பிட்டு நோக்கும் ஆற்றல் நம் சமுதாயத்திற்கு வந்துவிட்டால் அன்றைய தினமே இதுபோன்ற கிரந்தங்கள் தீக்கிரையாகிவிடும். அதனால்தான் முல்லாக்கள் பொதுமக்கள் குர்ஆனையும், ஹதீஸையும் நெருங்கவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதை எதிர்த்து நாங்களும் அயராது அல்லாஹ்வின் பாதையில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
இனி விஷயத்திற்கு வருவோம்.
அந்தரங்க ஆபத்துக்களில் நின்றும், குத்புமார்களைக் கொண்டே இறைவன் அகிலத்தைப் பாதுகாத்துக் கொள்கிறான். ரூஹுல்பயான், பாகம் 9, பக்கம் 102. இதை குர்ஆனின் 38:65-67, 36:83 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுங்கள்.
அடுத்து,
மையத்து செவியேற்காது என்று கூறுகிறவன் மடையனும் (ஜாஹில்) வழிகெட்டவனும் (முல்ஹிக்) ஆவான் என்பதாய் நான்கு மத்ஹப்களுடைய சுன்னத்-வல்-ஜமாஅத்து உல(க)மாக்கள் ஏகோபித்து கூறியுள்ளார்கள்.
குர்ஆன்-ஸஹீஹான ஹதீஸுக்கு மாற்றமாக உலக உலமாக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தீர்ப்புவழங்கினாலும் அந்த தீர்ப்பைத் துக்கிக் குப்பையில் போடுவது தான் உண்மையான ஈமானின் அடையாளம். அதே வழியில் மேற்கண்ட உலமாக்களின் கருத்துக் குப்பையும் ஓரங்கட்ட வேண்டும். ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில்,
உயிருள்ளவரும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். (நபியே!) சமாதிகளில் உள்ளவர்களை செவியுற செய்ய உம்மால் முடியாது. (35:22)
என்றும்
(நபியே) இறந்து விட்டோரை செவியுற செய்ய உம்மால் முடியாது. (27:80) என்றும் கூறுகிறான். உலக மக்களுக்கெல்லாம் ஓர் அருட்பிழம்பாக அனுப்பப்பட்ட ஒரு தூதராலேயே முடியாத காரியம் என்று இறைவன் திட்டவட்டமாகக் கூறிவிட்ட பிறகு அதை அப்படியே எடுத்துச் சொல்வோரை மடையன், வழிக்கெட்டவன் என்று உலமாக்கள் ஃபத்வா கொடுக்கும்போது மேற்கண்ட மடையன், வழிகெட்டவன் என்ற வார்த்தை யாருக்குப் பொருந்தும் என்பதை புரிந்து கொள்ள சிரமமேற்படாது என்று நம்புகிறோம்.
அடுத்து,
மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக இறைவன் சில நல்லடியார்களை சொந்தமாக்கியுள்ளான். அவர்கள்பால் மக்கள் விரைந்தோடுவார்கள். இப்னு உமர்(ரழி) நூல்: தப்ரானி,
இந்த ஹதீஸை எடுத்து எழுதி மக்களை ஷிர்க் எனும் இணைவைத்தலின் பக்கம் துணிந்து அழைத்துள்ளார்கள். இனி அந்த செய்தியின் நிலையைப் பார்ப்போம்.
இதன் அறிவிப்பாளர்களில் “அப்துர் ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம். என்பவர் இடம் பெறுகிறார். இமாம் அஹ்மத், புகாரீ, இப்னு முயீன், அபூதாவூத் உட்பட சுமார் 17 ஹதீஸ் கலாவல்லுநர்கள் இவரை “பலவீனமானவர், இட்டுகட்டும் சுபாவமுடையவர், மோசமானவர்” என்று விமர்சனத்தைக் கடுமைப்படுத்தியுள்ளார்கள். (தஹ்தீப்) இதன் நான்காவது நபராகிய “அஹ்மத் இப்னு தாரிக் அல் வாபிஷீ ” என்பவர் யாரென்றே அறியப்படாதவர் என்று “ஹாபிழ் ஹைஸமி” தமது “மஜ்மஃ” என்னும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
இத்துணை கோளாறுகள் கொண்ட ஒரு செய்திக்கு 30 உலமாக்கள் அங்கீகாரம் அளித்துள்ளதால் இந்த உலமாக்களின் நிலையைப் புரிந்துக் கொள்ளுங்கள். இதே போன்று அவ்லியாக்களிடம் உதவி தேடும்படி அவர் எடுத்து எழுதிய அத்துணை செய்திகளுமே பலவீனமானவையாகவே இருக்கின்றன. (தேவைப்பட்டால் அவைகளையும் அடையாளம் காட்டுவோம்)
மேலும் அவர்கள் உதவி செய்வதில் தங்களுடைய இறைவனாக ஏற்றுக் கொண்ட முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களைப் பற்றி மிகவும் கீழ்தரமாக எழுதியுள்ளது தனி மனித வழிபாட்டை தரைமட்டமாக்கிய அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்)யை இந்த அளவிற்கு தரம் தாழ்த்தி எழுதி இருப்பது கண்டிக்கத் தக்கதாகும். உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிடுகிறோம்.
யா முஹையத்தீன்! யா கெளதல் அஃலாமே நீங்கள் அல்லாஹ்வின் பிரதிநிதியாகவும் அவனில் நின்றும் தத்துவத்தைப் பொற்றவர்களாகவும் இருக்கின்றீர்கள். தாங்களன்றி எனக்கு வேறு கதியில்லை. (கவனிக்கவும்) என் பிணியை தாங்களே நிவர்த்திக்க வேண்டும். இவ்வாறு கேட்பது மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டுள்ளது. நூல்: ஷீபாஉஸ்லிகாம். பக்.134.
தவ்ஹீதையே தனது உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு இறை நேசர் மீது எப்படியெல்லாம் அவதூறு சுமத்துகிறார்கள் என்பதை பாரீர். அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) எழுதிய கிரதங்களில் இப்படிப்பட்ட ஒரு வரியைக் கூட காட்ட முடியாது என்பதுதான் உண்மை. வழிகேட்டை இந்த உம்மத்தில் புகுத்த அடுத்த மதத்தை சார்ந்தவர்கள் வேண்டாம். நமது மெளலவிக் கூட்டமே போதும் என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா?
கப்ரை முத்தமிடுதல், கொடிக்கு மரியாதை செலுத்துதல் கப்ரை கட்டிக் கொண்டு அழுதல், நேர்ச்சை செய்தல், சந்தனம் பூசுதல், விளக்கெரித்தல் இவை அனைத்தும் மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டுள்ளது என்று உளறி வைத்துள்ளார்கள். இவர்களின் அங்கீகாரங்களை ஏற்றுக்கொண்ட மக்களால் தான் சமுதாயம் சீரழிந்து நிற்கின்றது. மதவெறிபிடித்த ஓநாய்களெல்லாம் தனது பத்திரிகையில் “தர்காவில் விபச்சாரம்” என்று செய்தி வெளியிடுகின்றது.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எப்பணிக்காக என்னை அனுப்பினார்களோ அதே வேலையை செய்ய நான் உன்னை அனுப்புகிறேன். உருவச் சிலைகளை அழிக்காமல் விட்டுவிடாதோரை மட்டத்திற்கு மேல் இருக்கும் எந்த கப்ராக இருந்தபோதிலும் அதைத் தரைமட்டமாக்காமல் விடாதே என்று அலி(ரழி) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள். அபுல் ஹய்யாஜ்(ரழி) புகாரீ, முஸ்லிம்.
ஸஹீஹான இந்த ஹதீஸின் கட்டளைப்படி கப்ர்கள் இடிக்கப்பட்டிருந்தால் ஓநாய்களின் ஊளைச் சப்தத்தை கேட்க வேண்டியதில்லை.
மத்ஹப்களின் சட்டங்கள் அனைத்தும் புனிதமானவையே என்று வாய் கிழிய கத்தும் மத்ஹப் பித்தர்களுக்கு இமாம் ஷாபி(ரஹ்)யின் “உம்மு” கிரந்தம் அறிவிக்கும் கப்ர் இடித்தலைப் பற்றிய செய்தி கண்ணில் படவில்லையா? அவர்கள் கண்ணிருந்தும் குருடர்களாக சாட்சியளிப்பது வேதனைக்குரியதே.
நபி(ஸல்) அவர்களிடம் மிகச்சிறந்த செயல் எது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும், நம்புவது, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது. (இப்படி பலதை கூறி) தொழிலாளிக்கு உதவி செய்வது அல்லது தொழிலற்றவனுக்கு தொழிலை ஏற்படுத்துவது என்று கூறினார்கள். அபுதர் கிபாரி(ரழி) முஸ்லிம்.
இந்த ஹதீஸின் அடிப்படையில் தொழிலற்றவனுக்கு தொழில் ஏற்படுத்துவது சிறந்த செயல் என்பதை அறிகிறோம். நமது இஸ்லாமிய சகோதரர்கள் எவ்வளவோ பேர் தொழில் இல்லாமல் திண்டாடுகிறார்கள். (ஒரு யோசனை)
அல்லாஹ்வின் தூதர் இட்ட கப்ர் இடிக்கும் கட்டளையை ஏற்றுக் கொண்டு நாட்டிலுள்ள தர்காக்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கி விட்டு வசதியுள்ளவர்கள் அங்கு பயன்தரும் தொழிற்சாலைகளை நிறுவினால் அவை மூலம் பல சகோதரர்களுக்கு வேலை கிடைக்கும். அது மட்டுமல்லாமல் அல்லாஹ்விடத்தில் அது சிறந்த அமலாகவும் ஏற்றுக் கொள்ளப்படும் முன் வருவார்களா?
கப்ர் இடிப்பது அவ்லியாக்களை அவமதிப்பதல்ல, மாறாக அவர்கள் விரும்பக் கூடிய செயல் அது. அவ்லியாக்களை அவமதிப்பது என்பதெல்லாம் அவர்களிடம் இல்லாத செயல்களையெல்லாம் அவர்களின் பெயரில் இட்டுக்கட்டி கூறியும், எழுதியும் வருவதுதான்.
அவ்லியாக்களுக்கு சிறந்த பதவி அல்லாஹ்விடத்தில் உண்டு என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது. அவர்களுக்கு கிடைக்கும் பதவி எது என்று யாராலும் சொல்லவும் முடியாது. (அவைகளை அல்லாஹ் ஒருவன் தான் மிக்க அறிந்தவன்).
மேற்கண்ட கிரந்தத்தில் கண்ணிய மிக்க நான்கு இமாம்களை எப்படியெல்லாம் அவமதிக்கின்றார்கள் என்பதை தக்க ஆதாரத்தோடு அடுத்த கட்டுரையில் காண்போம்.