கதிரவனை கையால் மறைப்பவர்கள்!
புலவர் செ. ஜஃபர்அலி, பி.லிட்., நாகபட்டினம்.
“(நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தோர் மீது, முன்னர் நாம் (வேதனை) இறக்கியவாறே, இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்) ஆகவே உம் இறைவன் மீது சத்தியமாக, (அவர்கள் யாவரையும் நம்மிடம் ஒன்று சேர்த்து) நிச்சயமாக அவர்களிடம் கேள்விக்கணக்குக்) கேட்போம். அவர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்? ஆகவே உமக்கு ஏவப்பட்டதை (த்தயக்கமின்றி) நீர் அவர்களுக்கு விவரித்து விட்டு இணைவைத்து வணங்கும் இவர்களை நீர் புறக்கணித்து விடும்.”
(அல்குர்ஆன் 15:90-94)
என்று மிகத் தெள்ளத் தெளிவாக அல்லாஹ் திருமறையில் கூறியிருப்பதை அறிந்துக் கொள்ளுங்கள். இவ்வைந்து திருமறைவசனங்கள் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் கூறியிருப்பதாக நாம் எண்ணி விடக் கூடாது. அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டம் கூறியிருப்பதாகவும் கொள்ளுதல் கூடாது.
“குர்ஆன்” என்னும் சொல்லுக்கு “ஓதப்பட்டது” – “ஓதக்கூடியது” – “ஓதவேண்டியது” என்று முக்காலத்தையும் உணர்த்தும் பொருள் உண்டு அல்லவா? எக்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் தேவையான செய்திகளைத் தானே அல்லாஹ் திருமறையில் சுட்டிக் காட்டுகிறான்.
ஒரு நாட்டரசன், போர்ப்படைத் தளபதியைப் பார்த்து சிலக் கட்டளைகளை அறிவிக்கின்றான் என்றால், அனைத்துப் படைவீரர்களுக்கும் தானே இந்தக் கட்டளைகள்?
அல்லாஹ் தன் தூதரைப் பார்த்துக் கூறுகிறான் என்றால் அகில உலக மக்களுக்கும் தானே அச்செய்திகள்? இச்சிறு உண்மையைக் கூட உணராத மக்கள், மாக்களன்றோ? ஏனெனில் ஜின், மனித குலத்துக்கு மட்டும் அல்லாஹ் வேதத்தை வழங்கியுள்ளான்! மிருக இனத்துக்கு வேதங்களும் இல்லை! போதனைகளும் இல்லை. அதற்கு தேவையுமில்லை. “பகுத்தறிவு” அற்ற இனங்கள் அவை!
மனிதன் சுயநலத்தோடு எதையும் சிந்திக்கக் கூடியவன்; சுயநலமின்றி-விருப்போ-வெறுப்போ இன்றி சிந்தித்து உண்மையை உணரும் மனப்பக்குவம் மனிதனுக்கு ஏற்படுகின்றதோ அன்றுதான் அவன் “மனிதன்” என்ற தனக்குள்ள தகுதியை தக்கவைத்துக் கொண்டவனாவான்.
ஆழ்ந்த இறையச்சத்துடன் “குர்ஆனை” ஓதி, பொருள் உணர்ந்து செயல்பட வேண்டிய மனிதகுலம், பலவாறாக குர்ஆனின் பொருளைப் பிரித்து-திரித்துத் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள முனைகின்றது! என்னே கைசேதம்!
தற்குறிகளாக வாழ எப்போது மனிதன் ஆசைப்பட்டு விட்டானோ சுயநலத்துக்காக மனோ இச்சையின்படி, அல்லாஹ் இறக்கிவைத்த குர்ஆனின் பொருளையே திரிப்பவர்கள், வேறு எந்தக் கொடுமையை செய்ய தயங்கப் போகிறார்கள்?
சாதாரணமானவர்களும் விழிப்புணர்வு பெற்று வருகின்ற இக்காலக்கட்டத்தில் குர்ஆனின் வசனங்களை உணராத-ஓதாத-விழிப்புணர்வுப் பெறாதவர்களை, அவர்கள் எக்காலமும் உணராமல் ஓதாமல் விழிப்புணர்வு பெறாதவர்களை, அவர்கள் எக்காலமும் உணராமல்-ஓதாமல்-வழிப்புணர்வு பெறாமலேயே ஆக்கிவிட கங்கணம் கட்டிக்கொண்டு – விடாப்பிடியான முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்ற முல்லாக்களையும் காணுகின்றோம்.
ஆங்காங்கே ஒரு சில மெளலவிகள் “தர்ஜுமத்துல் குர்ஆனை (குர்ஆன் மொழிப்பெயர்ப்பை)ப் பார்க்காதீர்கள்! உங்களுக்குப் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் இல்லை! உங்களால் புரியவும் இயலாது. என்று மக்களுக்கு ஆணை பிறப்பிக்கின்றனர். ஏன் இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்? குர்ஆனின் மொழிப்பெயர்ப்பைப் பார்த்துவிட்டு, என்ன ஹஜ்ரத்! குர்ஆனுக்கு முரணாக உங்கள் பயான் இருக்கின்றதே!” என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்பதற்காகவே குர்ஆனின் மொழிப்பெயர்ப்பைப் படிக்காதே என்று இவர்கள் ஆணையிடுகின்றனர்!
அன்றைக்கு பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன், இறைத்தூதர்களை மக்கள் பொய்யாக்கினர், இன்றைக்கு மக்களை மார்க்கம் கற்ற மாமேதைகள்(?) பொய்யர்களாகவுதம்-மடையர்களாகவும் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்!
அன்று இறை விசுவாசிகளாக இறைத்தூதர்கள் திகழ்ந்தார்கள்! இன்று நபிமார்களின் வாரிசுதாரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஆலிம்கள் இறைநம்பிக்கையும்-இறையச்சமும் இன்றிப் பேசியும் செயல்பட்டும் வருகின்றனர்.
இறை மறையையும் நபிமுறையையும் பேணி நடப்பவர்களை “அதி பயங்கரவாதிகளாக” மக்கள் முன்னால் காட்டத் துணிகின்றார்கள்! இவர்களின் துணிச்சல் இதற்குத் தான் பயன்படவேண்டுமா?
புரியாத-அறிந்துக் கொள்ள இயலாத வேதத்தை எல்லாம்வல்ல அல்லாஹ்(ஜல்) மனித குலத்துக்கு வழங்கியிருப்பானா?
“(மனிதர்கள் சிந்தித்து ஆராய்ந்து) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இ(ந்)த் திருக்குர்ஆனை நிச்சயமாக நாம் மிக்க எளிதாக்கியிருக்கிறோம். ஆகவே (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டோ?”(54:17)
என்று அல்லாஹ் தெளிவாக்கி, நம்மைப் பார்த்து வினாவும் எழுப்புகின்றான்.
“(நபியே) நாம் உம்மீது அருளியிருக்கும் இவ்வேதம் மிக்க பாக்கியம் உடையதாகும். அறிவுடையோர் இதன் வசனங்களை சிந்தித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக” (38:29)
என்று அல்லாஹ் அருள்மறையைப் பற்றித் தெளிவாக்கி விட்டான்.
இன்றைக்கு உலகில் உள்ள மக்கள் தொகை நானூறு கோடிக்கு மேல்! இமாமாமறை மனித குலம் முழுமைக்கும் உரித்தானதே! தனிப்பட்ட ஓரினத்தார்க்கோ ஒரு வகுப்பார்க்கோ அருளப்பபெற்றதாக நாம் கொள்ளல் இயலாது. உலகின் மக்கள் தொகையில், நான்கில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார்கள். இதில் உளப்பூர்வமாகக் குர்ஆனை ஏற்று-தம் வாழ்வாக்கிக் கொள்பவர்கள் எத்தனைப் பேர் என்பதை வல்ல அல்லாஹ் ஒருவனே அறிவான்!
பலவீனமான-நம்பகமற்ற ஹதீஸ்களையெல்லாம் மக்கள் மத்தியிலே மிகச் சரியான நபிமொழிகளாகக் கூறிய – கூறிவருபவர்கள் தாமே இம்முல்லாக்கள், குவலயமக்களுக்கான பொதுமறையை தங்களின் சுய வேலைக்கு சொந்த வாழ்வுக்குப் பயன்படுத்தி அதன் தெளிவான பொருளை மக்களுக்குச் சொல்லாமல் மறைத்த – மறைத்துக் கொண்டிருப்பவர்கள் தாமே இவர்கள்!
இன்றைய நம் பணி என்ன? நாம் உணர முயற்சி செய்து – பிறரையும் உணர வைக்க வேண்டும் என்பது தானே?
அயர்ந்து உறங்குபவனைக் கூடத் தட்டி எழுப்பிவிடலாம்; ஆனால் தூங்குபவனைப் போல பாசாங்கு செய்பவனை எழுப்ப முயற்ச்சிப்பது வீண் வேலையாகும். பழக்கத்தால், மார்க்கம் அறிவிக்காத அமல்களைச் செய்து வருபவர்களிலேயே சிந்தனைத் திறன் உடையவர்களுக்கு, எது உண்மை? எது பொய்? என்பதைத் தெளிவாக்கி, நல்லறத்தின் வழியே நடைபோடச் செய்யலாம். மார்க்கத்தைப் புரிந்தும் மக்களின் நடைமுறைக்கேற்ப மார்க்கத்தைத் திரித்து ‘பிழைப்பு’ ஒன்றை குறியாக்கிக் கொள்கிறவர்களை ஒருகாலும் நேர்வழிப் பெறச் செய்ய இயலாது என்பதே உண்மை!
ஓர் ஊரில் பத்து விழுக்காடு மக்கள் ஏஇறைவழிப்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முன்வந்து, மீதமுள்ள தொண்ணூறு சதவீத மக்கள் ஷிர்க் பித்அத்துக்களிலேயே மூழ்கி இருப்பார்களேயானால், அவர்கள் தயவில் வாழ வேண்டிய ‘ஹஜ்ரத்” என்ன செய்வார்? இந்த பத்து சதவீதத்தை தொண்ணூறு சதவீதத்துக்கு இப்படித் தானே அறிமுகப்படுத்த இயலும். இவர்கள் வஹ்ஹாபி……..நஜாத்தி……” என்று!
இன்ஷா அல்லாஹ் மிகக் குறுகிய காலத்தில் உண்மை இறை விசுவாசிகளாக, மக்களில் பாதிக்கு மேல் மாறிவிட்டார்கள் என்றாலும் மீதமுள்ளவர்களை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தத்தான் இந்தப் பாராங்கல் (ஹஜ்ரத்) எண்ணும்! ஏனென்றால், உண்மை விசுவாசிகளை இவர்கள் ஏய்த்து பிழைப்பு நடத்த முடியாததே காரணமாகும்!
உழைப்பின் மீது நம்பிக்கையிழந்து பிழைப்புக்கு வழித்தேடிக் கொண்டவர்களின் நிலை, உண்மையை ஏற்று நடவாமலேயே தங்கள் கவுரவத்தைத் தக்க வைத்துக் கொள்ளப்படாத பாடுபட்டுக் கொண்டிருப்பதுதான்.
மனிதகுல வளர்ச்சிக்கு தடையாயிருப்பது மக்களின் அறியாமை-உழைப்பின்மை-பலர் உழைக்க சிலர் வாழ்வதால்-கொலை-கொள்ளை-கற்ப்பழிப்பு-பொருள் கலப்படம் இன்ன பிற மட்டுமல்ல! மக்களின் அறியாமையையும்-மூடநம்பிக்கையையும்-முரட்டுபிடிவாதத்தையும்-பலவீனத்தையும் மையமாக வைத்து ஏய்த்துப் பிழைக்கும் தரகர்களும் தான் காரணம். ஒவ்வொரு இணத்துக்கும் ஒரு தரகர் உண்டு! மார்க்கத்தின் புரோகிதர்-தரகர் இந்த ஆலிம்சாக்கள் என்று சொன்னால் மிகையான கூற்றன்று!
படைத்தவனுக்கும்-படைப்பினங்களுக்கும் மத்தியில் எந்த தரகர்களும் கிடையா! மாறாக, படைப்பினங்களில் சிறந்த படைப்பான மானிட வர்க்கத்தை வழிநடத்திச் செல்ல முன் மாதிரியாக திகழ அவ்வக் காலத்தில் இறைத்தூதர்கள் திகழ்ந்தனர். இறுதியாக திகழ்ந்த முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் மட்டுமே நமக்கு முன்மாதிரி! இறைக்கட்டளையையும் இறைத்தூதரையும் பின்பற்றி நடப்பவனே உண்மையான விசுவாசி! உண்மை விசுவாசிகளிடையே ஏற்ற தாழ்வு இல்லை! இறையச்சத்துடன் நடப்பவரே இறைவிசுவாசி! இதில், “ஆலிம் -அவாம்” என வேறுபடுத்த இவண் நமக்கு அனுமதி இல்லை! இறையச்சமுள்ளவனே ஆலிம்!
“மெய்யான விசுவாசிகள் யாரென்றால்; அல்லாஹ்வுடைய திருப்பெயர் (அவர்கள் முன்) கூறப்பெற்றால் அவருடைய நெஞ்சங்கள் அஞ்சி நடுங்கிவிடும். அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பெற்றால், விசுவாசம் அவர்களுக்கு மேலும் அதிகரிக்கும். அவர்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்.” (8:2)
என்று மிகத் தெளிவாக விசுவாசிகளைப்பற்றி அல்லாஹ் அறிவிக்கின்றான். அந்த உண்மை விசுவாசிகள் என்ன செய்ய வேண்டும்? என்பதையும் பின்வருமாறு அல்லாஹ் தெளிவுப்படுத்துகின்றான்:
எவர்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருப்பதுடன், நற்காரியங்களையும் செய்துவருகிறார்களோ அவர்களுக்கே நற்பாக்கியமும் நல்ல இருப்பிடமும் உண்டு.” (13:29)
“(நபியே!) விசுவாசங்கொண்ட என் அடியார்களுக்கு நீர் கூறும்: தொழுகையைக் கடைப்பிடித்து ஒழுகவும், நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும்- வெளிப்படையாகவும் தானம் செய்யவும். கொடுக்கல்-வாங்கலும், நட்பும் இராதநாள் வருவதற்கு முன்னதாகவே (இவ்வாறு செய்யவும்) (14:31)
“எவர்கள் விசுவாசம் கொண்டு, நற்கருமங்களை செய்து வருகின்றார்களோ, அவர்களை உறுதியாக நாம் எல்லோருடன் சேர்த்து விடுவோம்.”
இவ்வாறாக விசுவாசிகளுக்கு இறைவன் வாக்களிக்கின்றான். இதனை உணர்ந்துக் கொள்ள வழிகாணாமல், இன்னும் வெளிச்சமும் பயணளிக்காத குருடனுக்கு ஒப்பாக, அருள்மறை இருந்தும் ஆராய்ந்து பார்க்க மனமின்றி அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றோம். அரபிமொழியிலே உள்ள குர்ஆனை பட்டுறையில் இட்டுக் கைக்கெட்டாத உயரத்தில் வைத்து விட்டு “நாங்கள் குர்ஆனை பின்பற்றுகிறவர்கள்; எங்கள் வேதம் திருக்குர்ஆன்” என்று கூறி இறுமாந்து இருப்பவர்களாக உள்ளோம். குர்ஆனின் மொழிப்பெயர்ப்பு பரவலாக வந்து விட்ட இக்காலத்தில்க்கூட, அதையும் விலைக் கொடுத்து வாங்கி பத்திரமாக ஸ்டீல் பீரோக்களில் மேல் தட்டில் வைத்துவிட்டு, எங்களிடம் குர்ஆன் மொழிப்பெயர்ப்பு உண்டு” என்ற அளவில் அதை ஒரு நாளேனும் ஒரு பொழுதேனும் விரித்துப் பார்க்க மனமின்றி பற்பல அலுவல்களில் மூழ்கி சில சந்தர்ப்பங்களில் சில சந்தர்ப்பங்களில் “ஹஜ்ரத்” சொல்வதை செவிமடுத்தோ, செவிவழி கட்டுக் கதைகளையும் கற்பனைக் கதைகளையும் மார்க்கமாக எண்ணித் திரியும் மனித குலம் என்றைக்கு உண்மையை உணருமோ? அல்லாஹ், அனைவருடைய உள்ளங்களிலும் உண்மையைப் போட்டு, உணரச் செய்ய வைப்பானாக! (ஆமின்).