தீமையை சுட்டிக் காட்ட தடுப்பதும் இஸ்லாமியக் கடமையல்லவா?
தொடர்:3
Er. H. அப்தஸ்ஸமது, Bsc.,Msc,(Eng)
இன்னொரு நபிமொழியில் இதே உண்மை கீழ் வருமாறு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது:-
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ், நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:- நீங்கள் உமி போன்று (சுரணை அற்ற) மக்களோடு வாழவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானால் உங்கள் செயல் எங்ஙனம் இருக்கும்? (பொது மக்கள்) அவர்கள் வாக்கைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் நம்பகமும் அற்றவர்களாக இருப்பர்; அவர்களிடையே கருத்து வேற்றுமையும் சச்சரவுகளும் தலைதூக்கி இவ்விதம் ஆகிவிடுவார்கள் (என்று கூறி, நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டு நின்று, மற்றவர்களிடம் எவ்வித சம்மந்தமுமின்றி விரல்களை போன்று இருப்பார்கள் என்று தன் கையைக் காட்டினார்கள்.)
அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி) அவர்கள் ‘இத்தகைய நிலை ஏற்படும் போது நீங்கள் எனக்கு (மேற்கொள்ளும்படி) இடும் கட்டளைகள் யாவை” என வினவினார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் “இத்தகைய ஒரு நிலையை நீங்கள் அடைய நேரிட்டால், நன்மையை மட்டும் செய்யும்படியும், தீமைகளில் இருந்து தவிர்ந்து கொண்டு, உங்களை பாதுகாத்து, (பிற) மக்களை அவர்களின் விருப்பத்திற்கு விட்டு விடும்படியும் ஏவப்பட்டுள்ளார்கள்” என மறுமொழி பகர்ந்தார்கள். (திர்மிதீ)
இக்கருத்துக்களை, சுருக்கமாகவும், விரிவாகவும் எடுத்துரைக்கும் நபிமொழிகள் ஏராளமாகவுள்ளன. மக்கள் நேர்மையான, பரிவான ஆலோசனைகளை ஏற்கும் மனநிலையை இழந்தவர்களாகி, அவர்களைச் சீர்திருத்தும் முயற்சியில் தன்னையே இழக்கும் அச்சம் உண்மையிலேயே ஏற்படுமாயின் மாத்திரமே ஒருவர் தன்னைச் சூழவுள்ளவர்களைப் பற்றி அக்கறை(கரிசனம்) இன்றி இருக்கலாம் என்பது இந்நபிமொழிகள் மூலம் தெளிவாகிறது.
(மேலேக் கண்ட நபிமொழியில் பிரயோகப்படுத்தப்பட்டுள்ள அரபிப்பதம் ஹிஸாலா’ ஆகும். இவ்வார்த்தை, உமி, குப்பைக்கூளம், வைக்கோர்பதர் போன்ற-அவைகளிலிருந்து வேறு உபயோகமானப் பொருட்களைப் பெற முடியாத -பொருட்களைக் குறிப்பதாகும். மக்கள் அறவே சுரணை அற்றவர்களாகவும் பயனற்றவர்களாகவும் ஆகிவிட்டதைக் குறிப்பிடவே இவ்வார்த்தை பிரயோகிக்கப்பட்டுள்ளது:)
உண்மையை உள்ளவாறு சொல்லிவிடாமல் தடைசெய்யும் காரணங்களில் மற்றொன்று பேரவா அல்லது பயம் ஆகும். உலக ஆதாயங்களுக்காகத் தாம் தொடர்புள்ளவர்களிடம், உலக விவகாரங்களில் தாம் அச்சத்தோடும் பணிவோடும் பழகுபவர்களிடமும், அவர்களின் மனதிற்குகந்தவையல்லாத உண்மைகளை எடுத்துரைக்கத் தயங்குபவர்கள் ஈமானில் உறுதியற்றவர்களே. அவர்களின் விருப்பத்திற்கெதிராக ஒரு வார்த்தை கூறினாலும் அவர்களிடமிருந்து பெறும் உபகாரங்களையும் உதவிகளையும் இழக்க நேரிடும் அல்லது அவர்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்ற பயம் இவர்களின் வாய்களை அடைத்து விடும்.
பொது மேடைகளில் வீராவேசமாக சொற்பொழிவாற்றும் நாவன்மையும் சொல்லாதிக்கமும் பெற்றவர்களும், பள்ளிவாசல்களில் ‘மிம்பர்களில் ஏறி போதனை செய்பவர்களும் தாம் கூறுவதை செவியுற கூடியிருப்பவர்கள் விரும்பாதவற்றைக் கூற முன் வருவதில்லை.
அவசியமானவை நன்மை பயக்குபவை ஈமானை உறுதிப் படுத்துபவை ஆயினும் சரியே. அவைகளைக் கூறி மக்களின் அதிருப்திக்கு ஆளாகத் தயாரில்லை;
மக்கள் நற்செயல் எனக் கருதி வழக்கமாகவும் கடமையுணர்வோடும் செய்து வரும் அனாச்சாரங்களை விட்டொழிக்க, தக்க ஆதாரங்களுடன் உண்மையை எடுத்துரைப்பதில்லை.
மார்க்கத்திற்கு முரணானவையும் ஈமானையே அரித்து விடக்கூடியவையும் ஆகிய செயல்களில் மக்கள் ஈடுபடுவதை நேரிடையாகக் கண்டும், அம்மக்களின் கோபத்திற்கு பயந்து அச்செயல்களை விமர்சிப்பதில்லை, கண்டிப்பதில்லை.
மார்க்க கோட்பாடுகளையும் அடிப்படைத் தத்துவங்களையும் கற்று அறிந்தவர்களில் பெரும்பாலோர் நிலை இது. பெயரளவில் மார்க்க அறிவைப் புகட்ட உருவாக்கப்பட்ட மார்க்கக் கல்வி நிலையங்கள் (மதரஸாக்கள்), அந்நிலையங்களை உருவாக்கியவர்களுடையவும் நிதி உதவியளிப்பவர்களுடையவும் திருப்தியை நாடியே இயங்குகின்றன.
எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், நூல் தொகுப்பாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள் இவர்களில் பெரும்பாலோர் நிலையும் இது தான். மக்களை நாம் சீர்த்திருத்துவதாகவும், தூய்மைப்படுத்துவதாகவும் விளம்பும் சீர்த்திருத்தவாதிகளும்(முர்ஸிதுகளும்) ஷெய்கு மார்களும் இதே நிலையில் தான் காணப்படுகிறார்கள். இவர்களும் தங்களை நாடிவரும் “ஆத்மீக நோயாளிகளை” (இறை வழிபாட்டிற்கு ஷெய்குகளின் துணையை நாடுபவர்கள்) சீர்த்திருத்துவதாகவும், தூய்மைப் படுத்துவதாகவும் கூறி மேற்க்கொள்ளும் நடவடிக்கைகள் யாவும் தங்களின் வாடிக்கையாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு உகந்த வகையிலேயே மேற்க்கொள்ளப்படுகின்றன. மார்க்கத்திற்கு முரணானவைகளும் இவைகளில் உட்படுவன. பணச் செறிவும் செல்வாக்கும் மிக்க வாடிக்கையாளர்களின் செயல்பாடுகளை மறைக் கோட்பாடுகளின் அடிப்படையில் முறையானவையா அல்லவா என்று நிர்ணயிக்க முனையாமலேயே அவைகளை முறையானவை என்று கூறி ஊக்குவிக்கின்றனர். வாடிக்கையாளர்கள் ‘ஹதியா’வாகத் தரும் பணம் மற்றும் பொருட்கள் மீதுக் கொண்ட பேரவா இம்மார்க்க மேதைகளை உண்மையை மறைக்கத் தூண்டுகின்றன.
உமர்(ரழி) அவர்கள் மார்க்க அறிஞராகிய கஃஅப்(ரழி) அவர்களிடம் “அறிஞரின் இதயத்திலிருந்து (குர்ஆன்) அறிவை நீக்கியது எது? என வினவினார்கள், கஃஅப்(ரழி) அவர்கள், அவாவே அதை நீக்கியது என மறுமொழி பகர்ந்தார்கள். (திர்மிதீ)
அறிவை மறைப்பதற்குரிய காரணங்களில் ஒன்று சூழ்நிலை என்றும் கூறப்படுகிறது. (மார்க்க) அறிவை முழுமையாக எடுத்துரைத்தால் மக்கள் புரிந்து (தாங்கிக்) கொள்ள மாட்டார்கள் என்று வாதிடுகின்றனர். மேலும் உண்மையை எடுத்தியம்புவதால் மக்கள் சாதாரணமாக மேற்க்கொண்டுள்ள அமல்களையும் விட்டு விடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர். சமுதாயத்தில் செல்வாக்கர்களால் ஆதரிக்கப்படாத மார்க்கத்தின் மூலக்கொள்கைகளை எடுத்துக் கூறுவதால் அவர்களின் வெறுப்பையும் பகையையும் சம்பாதிக்க நேரிடுமே என்றும் அஞ்சுகின்றனர். இது திட்டவட்டமாக காரிஜியாக்களின் மனப்பான்மையும் வழிமுறையும் ஆவன.
மக்களிடையே கொள்கை ரீதியாகவும், செயல்முறையாகவும் நிலைபெற்றுவிட்ட சம்பிரதாயங்களும் சடங்குகளும் அவை மார்க்கத்திற்கு முரணானவைகளாவிருந்தும் அவைகளை கண்டிப்பதாலும் களையும்படி கூறுவதாலும் மக்கள் குழப்பமே அடைவர் என்கின்றனர். சுருங்கக் கூறின், உண்மையை (அறிவை) மக்களிடம் இருந்து மறைப்பதற்கு சந்தர்ப்ப சூழ்நிலையின் நிர்ப்பந்தமேகாரணம் என்று காட்டுகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலையை அலட்சியப்படுத்தும்படி நாம் கோரவில்லை. ஆனால் கற்பனை செய்துக் கொண்ட சந்தர்ப்ப சூழ்நிலையையே காரணமாகக் காட்டுகின்றனர் என்கின்றோம்.
மார்க்க அறிவு சம்பந்தமான விஷயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலையை பொருட்படுத்துவதற்கும் சொந்த விவகாரத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் உண்டு. மக்களில் மார்க்க உணர்வும் செயல்பாடும் உண்மையை எடுத்துரைக்க நிர்ப்பந்திப்பதை உணர்ந்துள்ள அறிஞர்கள், அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை மக்களுக்கு எவ்வாறேனும் எடுத்துரைத்தே ஆக வேண்டும் என்று கருதுகின்றனர். சூழ்நிலைக்கேற்ப தகுந்த நேரத்தில் உரியவர்களிடம் சீரிய முறையில் கூற முன்வருகின்றனர்.
ஆனால் தன் தேவைகளிலும் வசதிகளிலும் மாத்திரம் கண்ணும் கருத்துமாயிருப்பவர்களின் நிலையோ! மார்க்க விஷயங்களில் எத்தகைய அறிவைக் கற்ப்பித்தால், கொள்கைகளைப் பரப்பினால் தம் சொந்த நலனுக்கும் லாபத்திற்கும் சாதகமாக இருப்பன என்றும் எவை பாதகமாக அமைவன என்றும் கணித்து சூழ்நிலையை ஆய்ந்தும் செயல்படுகின்றனர். இறை மார்க்கத்தை பொருத்தவரையில் இரண்டாவது வகையினரின் செயல் மார்க்க விதியினரின் செயல் என்பது தெளிவு. சந்தர்ப்ப சூழ்நிலையாலேயே இவர்கள் இவ்விதம் செயல்பட நிர்பந்திக்கப்படுகிறார்கள். என்று யாரேனும் கூறுவார்களே ஆயின், நயவஞ்சகத்தையே (உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் தன்மையையே), அவர்கள் இவ்விதம் (சந்தர்ப்ப சூழ்நிலை நிர்ப்பந்தம்) கூறுகிறார்கள் என்றே கொள்ள வேண்டும். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)
***************************
அல்லாஹ் கூறுகிறான்
மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான். ஆனால் ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்ப்படுத்துகிறான்-அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனைப் பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். அல்குர்ஆன்(16:61)
நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஃபாவுக்குள் பிரவேசித்தபோது அங்கே இப்றாஹீம் நபி, இஸ்மாயீல் நபி ஆகியோரின் உருவச் சிலைகளைக் கண்டார்கள். அவற்றை அப்புறப்படுத்திய பிறகே உள்ளே நுழைந்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ)