ஹதீஸ்களில் இடைச்செருகளானவையும், பலகீனமானவையும்
தொடர் : 4
அபூ ரஜீன்
(40) “நிச்சயமாக அல்லாஹ் மக்காவின் மஸ்ஜிதாகிய இந்த பள்ளியையுடையவர்கள் மீது ஒவ்வொரு நாளும் 120 ரஹ்மத்துகளை – அனுகிரகங்களை இறக்கி வைக்கிறான். (அவற்றில்) 80 கஃபாவை தவாஃபு செய்வோர்-வலம் கற்றுவோருக்கும், 40 அதில் தொழுவோருக்கும், 20 அதைப் பார்த்துக் கொண்டிருப்போருக்கும் உள்ளன” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவ்வறிவிப்பு தப்ரானீ, இப்னு அஸாக்கீ’? அல்ஜாமிஉஸ் ஸகீர் ஆகிய நூல்களில் யூசுபு ப்னுஸ் ஸஃபர் என்பவரின் வாயிலாக இடம் பெற்றுள்ளது. இவரைப் பற்றி இமாம் தாருகுத்னீ, நஸயீ ஆகியோர் இவர் ஹதீஸ் கலாவல்லுநர்களால் ஒதுக்கப்படடவர் என்றும், இவர் இடைச்செருகலான அறிவிப்புகளை எடுத்துக் கூறுபவர் என்பதாக இமாம் புகாரீ அவர்களும் விமர்சித்துள்ளார்கள். ஆகவே இவ்வறிவிப்பு முறையானது அல்ல என்பது தெளிவு. (41) “ஜும்ஆவானது ஏழைகளுக்கு ஹஜ்ஜாயிருக்கும்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவ்வறிவிப்பை இப்னு அஸாக்கீர், ஸுயூத்தி ஆகியோர் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் வாயிலாக தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் “மகாத்தில்” என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் பலகீனமானவர் என்பதாக இமாம் “ஸகாவீ” கூறுவதோடு இவரிடமிருந்து இவ்வறிவிப்பை எடுத்துக் கூறும் ஈஸப்னு இப்றாஹீம் என்பவரோ மிகவும் மோசமானவர் பேச்சு எடுபடாதவர் என்று இமாம் புகாரீ, நஸயீ ஆகியோர் விமர்சித்துள்ளார்கள் ஆகவே இவ்வறிவிப்பு தவறானதாகும்.
(42) “உங்களில் ஒருவர் தமது மனைவியுடன் சேரும்போது, அவளது மர்ம ஸலத்தைப் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அதனால் கண் குருடாகிவிடும். மேலும் அதிகமாக அது சமயம் பேசவேண்டாம். நிச்சயமாக அதனால் (பிறக்கும் குழந்தை) ஊமையாகிவிடும்ட” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதை இப்னு ஜவ்ஜீ அவர்கள் “அல்அஜ்தீ” என்பவர் வாயிலாக நமது நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் “முஹம்மது பின் அப்திர் ரஹ்மான் துஸ்தரீ எனும் பொய்யர் இடம் பெற்றுள்ளார். இவர் பல ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரண்படும் வகையில் பல அறிவிப்புகளை எடுத்துக் கூறியுள்ளார். மேற்காணப்படும் “அல் அஜ்தீ என்பவரும் மிக மோசமான பொய்யர் என்பதாக இமாம் தாருகுத்னீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
அல்குர்ஆன் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் இவ்விஷயத்தை அலசிப் பார்க்கும்போது, அல்குர்ஆன் கூறுகிறது.
“மேலும் அவர்கள் தங்களுடைய வெட்கத்தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ, அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டுள்ள(அடிமைப்) பெண்களிடமோ தவிர, நிச்சயமாக இவர்கள் நிந்திக்கப்படமாட்டார்கள். (23:5,6)
“உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்களாவார்கள். எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்” (2:223)
அல்லாஹ் ஓர் ஆடவர் தமது மனைவியுடன் தமது விருப்பம் போல் சேர்ந்துறவாடுவதை அனுமதித்து விட்டு, பின்னர் அவர்கள் கலந்துறவாடுவதற்குப் பீடிகையாயுள்ளவற்றை எவ்வாறு அவன் தடை செய்திருக்க முடியும்?
ஒரு முறை “சுலைமான் பின் மூஸா” என்பவரிடம் ஒருவர் தமது மனைவியின் வெட்கத்தைப் பார்ப்பது கூடுமா? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் நான் இது விஷயமாக அதாஃ(ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் இது நான் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் “நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளித்துக் கொண்டிருந்தோம். எனக்கும் அவர்களுக்கிடையில் அது ஒன்றுதான் இருந்தது. அவர்கள் என்னை விட துரிதமாக தம்மீது தண்ணீரை அள்ளி ஊற்றினார்கள். நான் எனக்குக் கொஞ்சம் வையுங்கள்!” எனக்குக் கொஞ்சம் வையுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். (ஆயிஷா(ரழி) புகாரீ, முஸ்லிம், இப்னு ஹிப்பான்)
மேற்காணும் அறிவிப்பு புகாரீ, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம்பெற்றிருப்பினும், மேற்காணும் கேள்விக்கு அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் பதிலாகக் கூறினார்கள் என்ற விஷயம் இப்னு ஹிப்பானில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இவ்வறிவிப்பை அடிப்படையாக கொண்டு இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தம்பதிகள் ஒருவருக்கொருவர் வெட்கத் தலங்களைப் பார்த்துக் கொள்வது ஆகும் என்பது தெளிவு என்பதாக தமது நூலாகிய ஃபத்ஹூல் பாரீ பாகம் 1. பக்கம் 290ல் குறிப்பிட்டுள்ளார்கள்.
(43) “ஒருவர் ஜும்ஆவுடைய தினத்தில் பிரயாணம் செய்வாரானால் அவருடைய இரு மலக்குகளும் “இவருக்கு இவருடைய பிரயாணத்தில் உற்ற துணை கிடைக்காமல் போகட்டும். இவருடைய ஹாஜத்-தேவைகளும் பூர்த்தியாகாது போகட்டும் என்பதாக சாபம் விடுவார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதை “கதீபு” அவர்கள் “ஹுஸைன்பின் அலவான்” என்பவர் வாயிலாக தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதில் இடம் பெற்றுள்ள “ஹுஸைன்பின் அலவான்” என்பவரை இப்னு முயீன் அவர்கள் பொய்யர் என்பதாகவும். இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் இடைச்செருகலானவற்றை அறிவிப்பவர் என்பதாகவும் விமர்சித்துள்ளார்கள்.
ஒருமுறை உமர்(ரழி) அவர்கள் பிரயாண நிலையில் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அப்போது அவர் “இன்று ஜும்ஆவுடைய நாளாக இல்லாவிட்டால் நான் பிரயாணம் செய்திருப்பேன்” என்றார். அதைக் கேட்ட உமர்(ரழி) அவர்கள் “நீர் புறப்படும், நிச்சயமாக ஜும்ஆவுடைய தினம்(உமது) பிரயாணத்திற்கு முட்டுக் கட்டையாக இல்லை என்றார்கள். (அஸ்வதுபின் கைஸ்(ரழி) பைஹகீ, இப்னு ஷைபா)
ஆகவே இவ்வறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு வெள்ளிக்கிழமை பிரயாணம் தாராளமாகச் செய்யலாம் என்பதை அறிகிறோம்.
(44) “நிச்சயமாக நீ விரும்பியவற்றை எல்லாம் சாப்பிடுவதானது “இஸ் ராஃபு” வீண் விரயத்தில் நின்றும் உள்ளதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இது அனஸ்(ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதாக இப்னு மாஜ்ஜா, இப்னு அபித்துன்யா, அபூ நயீம் ஆகியோர் தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள “நுஹுபின் தக்வான்” என்பவரை ஒட்டுமொத்தமாக ஹதீஸ் கலாவல்லுநர் அனைவரும் நம்பகமற்றவர் என்பதாக கூறுவதோடு, இப்னு ஜவ்ஸீ அவர்களும் தமது இடைச் செருகல் தொகுப்பில் இவ்வறிவிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
பொதுவாக நல்ல உணவு சாப்பிடுவதல், நல்ல ஆடை அணிதல் ஆகியவை ஒரு முஃமீனாகிய மனிதருக்கு அழகல்ல -முறை அல்ல என்பதாக சூஃபியிஸ அடிப்படையில் பலரும் பல விதமாக மேற்காணும் அறிவிப்பில் உள்ளவாறு எழுதியிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் பின்வரும் அல்குர்ஆன் வசனம் இவ்வாறு கூறுவது தவறு என்பதை எடுத்துக் காட்டுகிறது.
“(நபியே!) நீர் கேட்பீராக; அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்? நீர் கூறும் அவை இவ்வுலக வாழ்க்கையில் மூமினாகிய மக்களுக்கு அனுமதிக்கப்பட்டவையாகும். (எனினும்) மறுமையில் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகும். இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக் கூடிய மக்களுக்கு விவரிக்கிரீறோ…” (7:32)
“அவன் எத்தகையவன் என்றால் அவன்தான் உலகத்திலுள்ளவை அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். (2:29)
மேற்காணும் வசனங்கள் மூமினாகிய மக்களுக்கு இவ்வுலகில் நல்லாடை நல்லுணவு கிடைப்பதுபோல் பிற மக்களுக்கு அவை இவ்வுலகில் கிடைத்தாலும் மறுமையில் மூமினாகிய மக்களுக்கு மட்டுமே சொந்தம் பிறருக்கு இந்த வாய்ப்புக் கிட்டாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
(45) “இரத்தம் ஒரு திர்ஹம்-ஒரு வெள்ளிக்காசின் அளவு இருப்பின் அதைக் கழுவியாக வேண்டும்ட. அத்துடன் தொழுதிருந்தால் அத்தொழுகையை மீட்கத் தொழவேண்டும்” என்ற நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” இவ்வறிவிப்பை “கதீபு” அவர்கள் நூஹ்பின் அபீமர்யம் வாயிலாக பதிவு செய்துள்ளார்கள்.
இதில் இடம் பெற்றுள்ள நூஹ்பின் அபீமர்யம் என்பவர் முஹத்திஸீன்களிடத்தில் சர்ச்சைக்குரியவராவார். சரியான பொய்யரும் கூட இப்னு ஜவ்ஸி அவர்கள் இதைத் தமது இடைச் செருகல் தொகுப்பில் இடம் பெறச் செய்து இனம் காட்டியுள்ளார்கள்.
இந்த ஆதாரமற்ற இடைச்செருகலான அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு ஹனபி மத்ஹபினர் கடுமையான நஜீஸுக்கு – அசுத்தத்திற்கு அளவுகோள் அது ஒரு திர்ஹம் – ஒரு வெள்ளிக் காசின் அளவு இருப்பது தான் என்று சட்டம் இயற்றி அதை பிக்ஹு கிதாபுகளில் பதிவு செய்து வைத்துள்ளார்கள். இவ்வாறு அல்லாஹ் கூறியதாகவோ, அவனுடைய தூதர் கூறியதாகவோ ஒரு சான்றுமில்லை. மேற்காணும் போலி ஹதீஸ் ஒன்றுதான் அவர்களுக்கு சான்றாக உள்ளது. உண்மையில் ஒரு திர்ஹத்திற்குக் குறைவாக நஜீஸ்-அசுத்தம் இருப்பினும் அதையும் கழுவியாக வேண்டும் என்பதாக ஆடையைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனும் வகையில் வந்துள்ள ஸஹீஹான ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.
(46) “ஒருவருடைய கண் பூனைக் கண்ணாக இருப்பது மிகவும் பரக்கத்தாகும். நபிதாவூத்(அலை) அவர்கள் கூட பூனை கண்ணையுடையவர்களாயிருந்தார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதை “ஹுஸைன்பின் அலவான்” என்பவரின் வாயிலாக ஹாக்கிம் அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் காணப்படும் ஹுஸைன்பின் அலவான் என்பவர் சரியான பொய்யரும் ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவருமாவார் என்று ஹதீஸ் கலாவல்லுநர்கள் கூறுகிறார்கள்.
(47) “யார் என்து பள்ளியாகிய மஸ்ஜிதுந்நபவியில் 40 தொழுகைகள் ஒரு வக்கும் தவறிவிடாது தொழுகிறாறோ, அவருக்கு நரகத்தை விட்டும் விடுதலை கிடைப்பதோடு, முனாபிக் தன்மையை விட்டும்ட விடுதலை கிடைத்து விடும். மேலும் நரக வேதனையை விட்டும் “நஜாத்” ஈடேற்றமும் கிடைத்துவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்”
இவ்வறிவிப்பு அஹ்மது, தப்ராணி ஆகிய நூல்களில் :நபீத்” என்பவர் மூலம் “அப்துர் ரஹ்மான் பின் அபிர்ரிஜால்” வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள “நபீத்” என்பவர் இந்த ஓர் அறிவிப்பைத் தவிர வேறு எதையும் அறிவித்ததாக இல்லை. இவரைப் பற்றி விபரங்கள் எதுவும் ஹதீஸ் சலாவல்லுநர்களுக்குக் கிட்டவில்லை. குறிப்பாக “ஸஹீஹைன் மற்றும் ஸுனன்ர்கள்” எனும் அரும் பெரும் நூல்களின் தொகுப்பாளரில் எவரும் ஒரு ஹதீஸை கூட பதிவு செய்யவில்லை. ஆகவே மேற்காணும் முறையான காரணங்களை வைத்து ஹதீஸ் கலாவல்லுநர்கள் இதை பலகீனமான அறிவிப்பென்று விமர்சித்துள்ளார்கள்.