ஐயமும், தெளிவும்
ஐயம் : சில அவசியத்தை முன்னிட்டு ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு திருமணம் செய்து கொள்வதை மார்க்கம் அனுமதிக்கிறதா? அந்நஜாத் வாசகர், வாணாதிராஜபுரம்.
தெளிவு : முறைப்படி மார்க்க அடிப்படையில் நிக்காஹ் செய்து விட்டு, அவசியத்தை முன்னிட்டு ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவுத் திருமணம் செய்துக் கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை.
ஐயம்: தப்லீக் தஃலீம் கிதாபுகளில் இது செய்தால் இத்தனை நன்மை, இது செய்தால் இத்தனை பாவம் என்பதாக பட்டியல் போட்டு காட்டப்பட்டுள்ளதே இவ்வாறு ஒன்றை எதிர்ப்பார்த்து அமல் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றதா? M.A. ஹாஜி முகம்மது நிரவி
தெளிவு : தப்லீக் உடைய தஃலீம் கிதாபில் நன்மை செய்ய ஆர்வமூட்டியும் தீமை செய்யாமலிருக்க எச்சரிக்கை செய்தும் பல விதமான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்தும் ஸஹீஹான ஹதீஸ்கள் என்று உத்திரவாதம் செய்ய இயலாது. காரணம் அதில் பெரும்பாலான அறிவிப்புகள் பலகீனமானவையாகவும், இடைச்செருகலானவையுமாகவே இடம் பெற்றிருக்கின்றன. உண்மையான விஷயங்களைக் கூறி நன்மை செய்ய ஆர்வமூட்டுவதும் தீமை செய்யாமல் தடுப்பதும் இன்றியமையாததாகும். இதனால் ஒன்றை எதிர்ப்பார்த்து அமல் செய்யும் நிலை ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது.
ஒன்றை எதிர்ப்பார்த்து அமல் செய்யக் கூடாதென்று குர்ஆனோ, ஹதீஸோ கூறவில்லை. இவ்வாறு சூபிசத்தை அடிப்படையாகக் கொண்ட சிலர் கூறியிருப்பதாக அறிகிறோம். “உதாரணமாக ஒரு பெரியார் எனக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்ற ஆசையால் நான் நல்ல அமல் செய்வதில்லை, இவ்வாறே நரகம் எனக்கு கிடைத்து விடுமோ என்ற அச்சத்தால் நான் பாவச் செயலை விடுவதில்லை. நான் நல்ல அமல் செய்வதும், பாவச் செயலை விடுவதும், அல்லாஹ் ஒருவனுடைய திருப்பொருத்தத்தை அடைவதற்காகத்தான் என்று கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இக்கூற்றை மேலோட்டமாக பார்க்கும் போது சரியானதாகவே தெரிந்தாலும் இது முறையானதல்ல; பொதுவாக மனிதன் லாபத்தையுடைய ஆவலுள்ளவனாகவும், நஷ்ட்டத்தைப் பயப்படக்கூடியவனாகவும் இருப்பதால் அல்லாஹுவும் அவனது நிலைக்கேற்ப மனிதன் நன்மை செய்தால் அவனுக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்று கூறி அவனை நன்மை செய்யும்படி ஆர்வம் மூட்டுகிறான். தீமை செய்தால் அவனுக்கு நரகம் கிடைக்கும் என்று கூறி தீமையை விட்டுவிலகி நடக்கும்படி அச்சமூட்டி எச்சரிக்கின்றான். இந்த அடிப்படையிலே தான் தனது தூதர்கள் அனைவரையும் நன்மை செய்ய ஆர்வமூட்டக் கூடியவர்களாகவும் தீமை செய்யாது அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர்களாகவும் அனுப்பிவைத்துள்ளான்.
அல்லாஹ்வின் ஆர்வமூட்டல்:-
நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில் சுவர்க்கத்தின்) பேரின் பத்தில் இருப்பார்கள், அவர்கள் ஆசனங்கள் மீது சாய்ந்த வண்ணம் (சுவர்க்கத்தின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் முகங்களிலிருந்தே அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை (நபியே!) நீர் அறிந்துக் கொள்வீர். முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும். அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். எனவே அதற்காக ஆர்வம் கொள்வோர் (அதற்கான நல்ல அமல்கள் செய்ய) ஆர்வம் கொள்வார்களாக. (83: 22,26)
நிச்சயமாக இது தான் மகத்தான வெற்றியாகும். எனவே பாடுபடுவோர் இதுப் போன்ற வெற்றியைப் பெறுவதற்காகப் பாடுபடுவார்களாக! (37:60, 61)
அல்லாஹ்வின் அச்சமூட்டல்:-
(மறுமைநாளில் பாவிகளாகிய) இவர்களின் (தலைக்கு) மேலும் நெருப்பு சூழ்ந்திருக்கும் இவர்களின் (பாதங்களின்) கீழும் நெருப்பு சூழ்ந்திருக்கும். இவ்வாறே இதன் மூலம் அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான். எனது அடியார்களே! எனக்கே அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள். (39:16)
ஆகவே அல்லாஹ் எது விஷயத்தில் தனது அடியார்களை ஆர்வமூட்டுகிறானோ அது விஷயத்தில் அவர்கள் ஆர்வம் கொண்டவர்களாகவும், எது விஷயத்தில் அவர்களுக்கு அச்சமூட்டுகிறானோ அது விஷயத்தில் அவர்கள் அச்சம் கொண்டவர்களாகவும் நடந்துக் கொள்வதே அவசியம்.
எனவே விஷயம் இவ்வாறிருக்க கவர்கம் கிடைக்கும் என்ற ஆசையினால், நரகம் கிடைத்துவிடுமோ என்ற பயத்தால் நான் அமல் செய்ய மாட்டேன். அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் அமல் செய்வேன் என்று கூறுவதில் என்ன அர்த்தமிருக்கிறது?
ஒருவர் நரகத்திற்குப் பயந்து, சுவர்க்கத்திற்கு ஆசைப்பட்டு நல்ல அமல் செய்ய முற்ப்பட்டு விடுவாராயின் அவருக்கு சுவர்க்கம் கிடைப்பதோடு, தானாகவே அங்கு அவருக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைத்து விடுகிறது என்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக்க மேலானவர்கள். அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்திலுள்ள நிலையான சுவனபதியாகும். அவற்றில் நீர் அருவி சதா ஓடிக் கொண்டே இருக்கும் அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான், அவர்களும் அல்லாஹ்வையன்றி திருப்தியடைவார்கள், தன் இறைவனுக்குப் பயந்து நடபவருக்கே இந்த (மேலான) நிலை உண்டாகும். (98: 7,8)
ஆகவே அல்லாஹ் கூறுவதுப் போல் சுவர்க்கத்தின் மீது ஆர்வம் கொண்டு, நரகத்திற்குப் பயந்து நல்ல அமல் செய்வதினாலேயே சுவர்க்கம் கிடைப்பதோடு அல்லாஹ்வின் பொருத்தமும் கிடைத்துவிடும் என்பதை அறிகிறோம். தப்லீக்குடைய தஃலீம் கிதாபில், நன்மை, பாவம் சம்பந்தமாக போடப்பட்டுள்ள பட்டியலில் பெரும்பாலான அறிவிப்புகள் பலஹீனமானவையாகவே உள்ளன.
ஐயம் : அரைக் கை சட்டைப் போட்டுக் கொண்டு தொழுவது ஆகுமா? இவ்வாறு தொழுதால் ‘மக்ரூஹ்’ என்று கூறுகிறார்களே இதற்கு ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும், நபி(ஸல்) அவர்கள் அரைக்கை சட்டைப் போட்டுத் தொழுதுள்ளார்களா?
தெளிவு: உங்களில் எவரும் தமது இரு புஜங்களின் மீது ஆடையில்லாது ஒரு ஆடை மட்டும் அணிந்த நிலையில் தொழ வேண்டாம்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), அபூதாவூத்)
இவ்வறிவிப்பு இடுப்பில் மட்டும் ஆடை அணிந்திருக்கும் போது, இரு புஜங்களையும் துண்டு முதலிய ஆடையால் மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகின்றது.
ஒரு ஆடையில் மட்டும் தொழுபவர் அந்த ஆடையின் (மேல்) இரு ஓரங்களையும் மாற்றி பிடறியில் கட்டிக் கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)
ஜாபிருபின் அப்துல்லாஹ்(ரழி) அவர்களின் வாயிலாக புகாரீயில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் ஆடை விசாலமாயிருப்பின் ஆடையின் மேல் இரு ஓரங்களையும் மாற்றி பிடறியில் கட்டிக் கொள்வீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. இவ்வறிவிப்புகளும் இரு புஜங்கள் மறைக்காப்படாவிடினும் ஆடையின் மேல் ஓரங்களை மாற்றி பிடறியில் முடிச்சுப் போடுவதன் மூலம் இரு புஜங்களுக்கு இடையிலுள்ள பிடறியின் பாகமேனும் மறைக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதோடு, ஆடை பற்றாக்குறையாயிருப்பின் இடுப்பில் ஒரு ஆடை மட்டும் அணிந்துக் கொண்டு இரு புஜங்கள் மற்றும் பிடறியின் பக்கங்கள் எதுவும் மறைக்கப் படாது தொழுவது ஆகும் என்பதையும் உணர்த்துகின்றன.
மேற்காணும் அறிவிப்புகளில் தொழும்போது இரு புஜங்களையும்; மறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதானது அவை அவ்ரத் – அவசியம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் என்பதனால் அல்ல. தொழும்போது உடலை மறைத்திருப்பது நல்லது – விசேஷம் என்ற வகையிலாகும். இரு புஜங்களையும், மறைத்துக் கொள்வது நல்லது என்று கூறிய நபி(ஸல்) அவர்கள், ஒருவர் தாம் தொழும்போது அவர் தமது தலையை மறைத்துக் கொள்வது நல்லது என்றோ, அல்லது அவர் தமது கைகளை மறைத்துக் கொள்வது நல்லது என்றோ கூறியிருப்பதாக ஒரு ஹதீஸும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே தாராளமாக அரைக்கைச் சட்டைப் போட்டுக் கொண்டு தொழுவது ஆகும். அதுமக்ரூஹ் – மார்க்கத்தில் வெறுக்கத்தக்க செயல் என்று கூறுவதற்கு ஹதிஸில் எவ்வித ஆதாரமுமில்லை. நபி(ஸல்) அவர்கள் அரைக்கை சட்டைப் போட்டார்கள் என்பதாக ஹதீஸ்களில் நம்மால் காண இயலாவிட்டாலும், பிறர் அரைக்கைச் சட்டைப் போட்டுக் கொண்டு தொழுவதை அவர்கள் தடைசெய்யவில்லை என்பதை மேற்காணும் ஹதீஸ்களின் மூலம் நாம் அறிகிறோம்.
ஐயம் : மஸ்ஜிதுந் நபவிக்குச் செல்பவர்கள் 8 நாள் மதீனாவில் தங்கி 40 நேரத் தொழுகை அங்கு தொழ வேண்டும் என்று சிலர் கூறுவதை முன்னிட்டு அவ்வாறு தொழுதுவிட்டு வருகிறார்களே இதற்கு ஹதீஸ்களில் ஆதாரமுண்டா? உவைஸுல்கர்னீ, அல்கோபர்
தெளிவு : யார் எனது பள்ளியாகிய மஸ்ஜிதுந்நபவியில் 40 தொழுகைகள் ஒரு நேரம் கூட தவறிவிடாது தொழுகிறாரோ, அவருக்கு நரக வேதனையை விட்டும் விடுதலைக் கிடைப்பதோடு, முனாபிக் தன்மையையும் விட்டு விடுதலை கிடைத்து, நரக வேதனையிலிருந்து ஈடேற்றமும் கிடைத்துவிடும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதாக தப்ரானி, அஹ்மத் ஆகிய நூல்களில் காணப்படுகிறது. ஆனால் ஆனால் இது பலஹீனமான அறிவிப்பு என்பதாக ஹதீஸ் கலாவல்லுநர்கள் கூறியுள்ளார்கள். அதிக விபரத்திற்கு அந்நஜாத் 90 செப்டம்பர், அக்டோபர் இதழில் ஹதீஸ்களில் இடைச்செருகலானவையும், பலகீனமானவையும் என்ற பகுதியில் 47-வது அறிவிப்பைப் பார்க்கவும்.
ஐயம் : பிறர் வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஒருவர் அவ்வீட்டிலுள்ள தென்னை மரத்தின் தேங்காய்களை எடுத்து தாம் உபயோகித்துக் கொள்வது கூடுமா?
முஹம்மது பாருக், மேல்பாளையம்.
தெளிவு : வாடகை உடன்படிக்கையில் தென்னைமரம் உட்படுத்தப்பட்டிருந்தால் அதை உபயோகித்துக் கொள்வது ஆகும்.
விசுவாசிகளே! உங்களுக்குள் சம்மதத்தின் பெயரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவன்றி, உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் சாப்பிட வேண்டாம். (4: 29)