ஐயமும் தெளிவும்
ஐயம் : உடல் சுத்மாயிருந்து உடை சுத்தமில்லாமல் இருந்தால் தொழுவதுக் கூடுமா? உவைஸுல்கர்னி, அல்கோபார்
தெளிவு : தொழுகைக்கு உடல், உடை, இடம் ஆகியவை சுத்தமாயிருத்தல் வேண்டும். உமது ஆடைகளை நீர் சுத்தப்படுத்திக் கொள்வீராக!” (74:4)
இந்த வசனத்தின் அடிப்படையில் ஆடைகள் பரிசுத்தமாயிருத்தல் அவசியம் என்பது தெளிவாகிறது.
*ஒரு முறை ஒருவர் நபி(ஸல்) அவர்களிடத்தில் நான் எனது மனைவியுடன் கலந்துறவாடும் சமயத்தில் அணிந்துள்ள ஆடையில் தொழுவதுக் கூடுமா? என்று அவர் கேட்கும் போது (நான் அதைக்) கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு அவர்கள் தொழுவதுக் கூடும், ஆனால் அதில் ஏதேனும் அசுத்தம் இருந்தால் அதை நீர் சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்” என்றார்கள். (ஜாபிருபின் ஸமுரா(ரழி) இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)
இதன் மூலம் தொழும் போது ஆடைகள் சுத்தமாயிருப்பது அவசியம் என்பதை அறிகிறோம்.
ஐயம் : கஃபா, மஸ்ஜிதுந்நபவீ ஆகியவற்றின் படங்களை பிரேம் செய்து வீட்டில் சுவற்றில் மாட்டி வைப்பதுக் கூடுமா? (உவைஸுல்கர்னி, அல்கோபார்)
தெளிவு : “நாயும் உருவப்படங்களும் உள்ள வீட்டில் மலக்குகள் பிரவேசிக்கமாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதல்ஹா(ரழி) புகாரீ, முஸ்லிம்)
ஒரு முறை நான் ஒரு தலையணை வாங்கினேன் அதில் உருவப்படம் இருந்தது, அதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தவுடன் வீட்டில் பிரவேசிக்காமல் வாசலில் நின்று கொண்டார்கள். அப்போது அவர்கள் முகத்தில் வெறுப்பான நிலையை நான் உணர்ந்து அல்லாஹ்வின் தூதரே! நான் தவறை விட்டு மீண்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதரின் பக்கமும் வந்துவிட்டேன் என்று கூறி, நான் என்ன தவறு செய்தேன் என்றேன். அதற்கு அவர்கள் ‘இந்த தலையணை ஏன் இந்நிலையில் இருக்கிறது’ என்றார்கள், அப்போது நான் ‘இதை நான் நீங்கள் அதில் அமருவதற்காகவும், அதன் மீது சாய்ந்து கொள்வதற்காகவும் வாங்கியுள்ளேன் என்றார்கள்.
அதற்கு அவர்கள் நிச்சயமாக இவ்வுருவங்களையுடையோர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார், மேலும் அவர்களிடம் நீங்கள் சிருஷ்டித்தவைகளுக்கு நீங்கள் உயிர்க்கொடுங்கள் என்று கூறப்படும் என்றும் மேலும் நிச்சயமாக உருவப்படங்களுள்ள வீட்டில் மலக்குகள் பிரவேசிக்கமாட்டார்கள்” என்றும் கூறினார்கள், (ஆயிஷா(ரழி) புகாரீ, முஸ்லிம்)
நான் ஒரு முறை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடத்தில் இருந்தேன், அப்போது ஒருவர் அவர்களிடம் வந்து “இப்னு அப்பாஸ்” அவர்களே! நான் என் வாழ்க்கையே என் கைத் தொழிலைக் கொண்டவனாகயிருக்கிறேன், நானோ இந்த உருவப்படங்களைத் தயாரிக்கிறேன் என்றார்’ அதற்கு இப்னு அப்பாஸ்(ரழி) நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்துக் கேட்டதைத் தவிர வேறு எதையும் நான் உமக்குக் கூறவில்லை (என்று கூறி விட்டு பின்வறுமாறு கூறினார்கள்)
ஒருவர் ஓர் உருவப் படத்தை வரைந்தால் நிச்சயமாக அவர் அதற்கு உயிர் கொடுக்கும் வரை அல்லாஹ் அவரை வேதனை செய்பவனாகயிருக்கிறான். அவனோ அதற்கு உயிர்க் கொடுப்பவனாகயில்லை’ என்று அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள். அதற்கு அவர்கள் (பயத்தால்) பெருமூச்சு விட்டார். அவர் முகத்தின் நிறம் மஞ்சனித்து விட்டது, அப்போது நீர் இவ்வாறு செய்து தான் ஆகவேண்டும் என்றிருந்தால் இதோ மரத்தையும் உயிரில்லாதவற்றையும் வரைந்துக் கொள்வீராக! என்றார்கள் (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ)
மேற்காணும் ஹதீஸ்களின் மூலம் நாய், உருவப்படம் ஆகியவற்றை வீட்டில் வைப்பது கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் கஃபா, மஸ்ஜிதுந்நபவி ஆகிய உயிரற்றவைத் தேவைக்கு வைத்துக் கொள்வது ஆகும் என்றிருந்தாலும் அவற்றை மார்க்கத்திற்குப் புறம்பாக எத்தகைய தவறான நோக்கங்களுக்காக வீட்டில் மாட்டி வைப்பது கூடாது, உதாரணமாக அதற்குப் பூ போடுவது, சாம்பிராணி, பக்தி முதலியவற்றின் புகையைக் காட்டுவது போன்று, மார்க்கத்தைச் சரிவர உணராத நம் சகோதரரில் சிலரும் இத்தகைய படங்களை மாட்டி வைத்துக்கொண்டு பத்தி புகைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு செய்வோர் அவற்றைத் தவிர்த்துக் கொள்வாராக.
ஐயம் : மரணமானவர்களுக்கு யாஸீன் ஓதினால் அதனால் அவர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதாக ஹதீஸ் இருப்பதாகக் கூறுகிறார்களே அது உண்மைதானா? அதற்கு ஸஹீஹான ஹதீஸ் இருக்கிறதா? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதில் தரவும். M. முஹம்மது இஸ்மாயீல், முத்துப்பேட்டை,
தெளிவு : உங்களில் மரணமானவர்கள் மீது யாஸீன் சூராவை ஓதுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மஃகலு பின் யஸார்(ரழி) அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜ்ஜா)
இவ்வறிவிப்பு இக்ரஊயாஸீன் அலா மவ்த்தாக்கும்’ என்பதாக அபூதாவூத், அஹ்மத் ஆகியவற்றிலும் இகர ஊஹா இந்த மவ்த்தாக்கும் யஃனீ யாஸீன்’ என்பதாக இப்னு மாஜ்ஜாவிலும் அரபி வாசகம் இடம் பெற்றுள்ளது, இவற்றின் பொருள்:
(1) உங்களில் மரணமானவர்கள் மீது யாஸீனை ஓதுங்கள்,
(2) உங்களில் மரணமாகும் தருவாயில் உள்ளவர்களிடத்தில் அதை ஓதுங்கள்! அதாவது யாஸீனை (ஓதுங்கள்) என்பதாகும்.
இவ்வறிவிப்பைத் தமது தந்தைத் தமக்கு மஃகலு பின் யஸார்(ரழி) எனும் சஹாபி அறிவித்துள்ளார்கள் என்பதாக தம்மிடம் எடுத்துக் கூறியதாக ‘அபூஉஸ்மான்’ என்பவர் அறிவித்துள்ளார்.
அபூஉஸ்மான் என்னும் ஒரே நபர் ஒரே ஹதீஸை வித்தியாசமான இரு கருத்தில் தடுமாற்ற நிலையில் அறிவித்துள்ளார்கள். இவ்வறிவிப்பில் இக்கோளாறு காணப்படுவதோடு, அபூஉஸ்மான் எனும் இதன் அறிவிப்பாளரும் அவருடைய தந்தையும் ஹதீஸ் கலாவல்லுநர்களிடத்தில் அறிமுகமில்லாதவர்களாயிருக்கின்றனர்.
இந்த அறிவிப்பு பற்றி இமாம் தாருகுத்னீ அவர்கள், இதன் வாசகத்திலும் அறிவிப்பாளரிலும் கோளாறிருப்பதாக தாம் விமர்சிப்பதோடு, மரணமானவர்களுக்கு யாஸீன் ஓதல் சம்பந்தப்பட்ட வகையில் வந்துள்ள அறிவிப்புகளில் ஒன்று கூட ஸஹீஹானதாக இல்லை என்று இனம் காட்டியுள்ளார்கள்.
மரணமானவர்களுக்கு பலன் கிட்டும் வகையில் ஸஹீஹான ஹதீஸ்.
“ஒருவர் மரணமாகிவிட்டால் அவருடைய அமல்களில் மூன்றைத் தவிர அனைத்தும் அவரை விட்டும் துண்டித்து விடுகிறது. நிரந்தரமான தர்மம், பலன் தரும் கல்வி, அவருக்காகப் பிரார்த்தனை செய்யும் (அவருடைய) ஸாலிஹான பிள்ளை’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
‘மனிதன் தான் முயற்ச்சித்ததைத் தவிர வேறு எதையும் அடைந்துக் கொள்ள மாட்டான்’ மேலும் நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலனை) அவனுக்குக் காண்பிக்கப்படும்.
மேற்காணும் ஹதீஸும், குர்ஆன் வசனமும் ஒருவர் மரணமானதன் பின்னர் தாம் இவ்வுலகில் பாடுபட்டு அமல் செய்தவையோடு, ஹதீஸில் காணப்படும் மூன்று வகையான பலன்களும் கிட்டும் என்பதை உணர்த்துகின்றன.
ஐயம் : ஒருவர் ஒரு கோழியை அறுக்க முனைந்தார், உடன் அது செத்துவிட்டது அவர் உடனே அதை அறுத்தார். அப்போது அதிலிருந்து இரத்தம் சொட்டியது, இந்நிலையில் அந்த கோழியை சாப்பிடுவது கூடுமா? G. அஹ்மத், நாகை,
தெளிவு : (அறுக்காமல் தானாகச்) செத்தவை உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளன’ (5:3) வசனத்தின்படி செத்துவிட்ட பிறகு அறுத்து இரத்தம் வெளிவந்தாலும் சரி அப்பிராணியைச் சாப்பிடுவது ஹராம் தான் என்கிறது, அறுக்கும் போது இரத்தம் வெளிவருவதால் கோழி ஹலாலாகி விடாது. எனினும் அறுக்கும் போது அது உயிராக இருக்க வேண்டும் என்பதே ஹலாலாவதற்கான நிபந்தனையாகும்.
ஐயம் : குறிப்பிட்ட சில தொழுகைகளைக் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் வழமையாக தொழுவது கூடுமா? உதாரணமாக ளுஹாவை முஹர்ரம் மாதத்தில் மட்டும், துஹஸ்ஸுதுவை ரபீஉல் அவ்வல் மாதத்தில் மட்டும் தொழுவது, N.T மக்தூம், காயல்பட்டினம்.
தெளிவு : நபி(ஸல்) அவர்கள் எந்த அமலைப் பொதுவாகச் செய்தார்களோ அவற்றைப் பொதுவாகவும் குறிப்பாக செய்தார்களோ அதைக் குறிப்பாகவும் செய்வதே மார்க்கமாகும். உதாரணமாக முஸபஹா – கைலாகு செய்வதைப் பொதுவாக நடைமுறைப் படுத்தியுள்ளார்கள். அதை நாம் பொதுவாக நடைமுறையில் கடைப்பிடிக்காமல், குறிப்பாக பெருநாள், ஜும்ஆ, சுப்ஹு அஸ்ருத் தொழுகைகளுக்குப் பின்னால் மட்டுமே குறிப்பாகச் செய்து வருவது நபிவழியல்ல.
இவ்வாறே ளுஹாத் தொழுகையும். தஹஜ்ஜுத் தொழுகையும் போதுமானவையாக நடைமுறைப்படுத்தியிருக்கும் போது அவற்றைக் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் வழமையாக குறிப்பாக செய்வதும் நபி வழியாகாது.
ஐயம் : வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பாவின் போர் கதீபு – பிரசங்கி “அல்லாஹும்ம அஜிர்னாமினன்னார்’ என்று துஆ செய்யும் போது எல்லோரும் ‘ஆமின் என்று கோஷமிடுவதற்கு நபிவழியில் ஆதாரம் உண்டா?
தெளிவு : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்களுக்கு கடும் பஞ்சம் ஏற்ப்பட்டு விட்டது. ஜும்ஆவின் போது நபி(ஸல்) அவர்கள் பிரசங்கம் செய்துக் கொண்டிருக்கையில் ஒரு நாட்டுப்புறத்தவர் எழுந்திருந்து “அல்லாஹ்வின் தூதரே! பொருள் அழிந்து விட்டது, குடும்பத்தவர் பட்டினிக் கிடக்கின்றனர். ஆகவே எங்களுக்காக அல்லாஹ்விடத்தில் துஆச் செய்யுங்கள்’ என்றார் உடனே அவர்கள் தமது கரங்களை உயர்த்தினார்கள் (புகாரீயின் மற்றொரு அறிவிப்பில் “உடனே தமது கரங்களை நீட்டிப் பிரார்த்தனை செய்தார்கள்’ என்று உள்ளது) (அனஸ்(ரழி), புகாரீ)
மேற்காணும் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு தமதுக் கரங்களை நீட்டி துஆ செய்த போது நபித்தோழர்களில் எவரும் ஆமின் கூறினார்கள் என்பதாக இந்த அறிவிப்பில் இடம் பெறவில்லை.
ஒருவர் துஆச் செய்யும் போது “ஆமின்” என்று கூறுபவருக்கு மட்டும் தான் அவர் ஓதிய துஆவின் பலன் கிடைக்கும் மற்றவருக்குக் கிடைக்காது என்பதில்லை, ஒவ்வொரு முஸ்லிமும் செய்யும் பொதுவான துஆவில் பிற முஸ்லிம்கள் அனைவருக்கும் பங்குள்ளது.
மூஸா(அலை) அவர்கள் பிர் அவ்னுடைய அடாபிடித்தனத்தை அழித்து நாசமாக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்த போது, நபிஹாரூன்(அலை) அவர்கள் அவர்களுக்குச் சமீபத்தில் இருந்து கொண்டு அவர்கள் கேட்ட அந்த துஆவுக்கு “ஆமின்” கூறாமலேயே, அல்லாஹ் அவ்விருவரையும் நோக்கி, ‘கத்உஜீபத்தஃவத்துகுமா’ உங்கள் இருவருடைய துஆவும் அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்று கூறும் (10:89) குர்ஆன் வசனமே இதற்குப் போதுமானச் சான்றாக அமைந்துள்ளது. ஆகவே மிம்பரில் கதீபு துஆச் செய்யும் போது மக்கள் ஆமின் கூறுவது நபிவழியல்ல.
ஐயம் : கூட்டுக் குடும்பமாகவோ, அல்லது தனிக்குடும்பமாகவோ வசித்துவரும் பெற்றோரின் மகன்கள் வெளிநாட்டிலோ, அல்லது உள் நாட்டிலோ அவரவர்கள் சுய உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்களது தந்தைக்கு அனுப்பி வைத்தால், அவர் மகன்களின் வருவாயின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு தம் பெயரில் சொத்துக்களை வாங்கி வைத்துக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறதா? அந்த வருவாயில் பெற்றோரின் உரிமை என்ன? குர்ஆன் ஹதீஸின் படி விளக்கம் தேவை.
S.A சுலைமான், துபை
தெளிவு : நிச்சயமாக உங்கள் மக்கள் உங்களின் சிறந்த சம்பாத்தியத்தில் நின்றும் உள்ளவராவர், எனவே அவர்களின் பொருளில் இருந்து நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அம்ருபின் ஷுஜுபு, இப்னுமாஜ்ஜா)
*ஒருவர் நபி(ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் செல்வமும், ஒரு குழந்தையும் உள்ளது, ஆனால் என் தந்தையோ என் பொருளைச் சீரழிக்க நினைக்கிறார் என்று கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி நீரும், உமது பொருளும் உமது தந்தைக்குரியவையாகும் என்று கூறினார்கள். (ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி), இப்னு மாஜ்ஜா)
மேற்காணும் ஹதீஸ்களில் இரண்டாவது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் ஒருவரை நோக்கி, நீரும் உமது பொருளும் உமது தந்தைக்குரியவை என்று கூறியிருப்பதால் நபி(ஸல்) அவர்களே ஒருவருக்கு அவர் தந்தை என்ற ஹோதாவில் தனது மகனுடைய சம்பாத்தியத்திலிருந்து தன் பெயருக்கு சொத்து வாங்கலோ, அல்லது வேறு எந்த வகையிலும் தனது மகன் பொருளை கபளிகரம் செய்யவோ அவருக்கு உரிமையில்லை.
ஏனெனில், தன் மீது தன் மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் போன்றே இன்று தன் மகன் மீது அவருடைய மனைவி, மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. எனவே தந்தை மகனுடைய சொத்திலிருந்து தனது சுய தேவைகளையே பூர்த்தி செய்துக் கொள்ளலாமே தவிர மகனுடைய சொத்தில் ஏகபோக உரிமையில்லை. இதையே முதலாம் ஹதீஸில் இடம் பெற்றுள்ளன. ‘அவர்கள் பொருளில் இருந்து நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்” என்ற வாசகம் தெளிவுப்படுத்துகிறது. தந்தைக்கு தன் மகன் சொத்தின் மீதுள்ள உரிமை மகன் இறந்ததன் பின்னரே, தந்தை அவனுடைய சொத்திலிருந்து குர்ஆன் கூறும் விகிதப்படி உரிமை பெறுகிறார். அதாவது,
(உங்களில் இறந்த) அவருக்குச் சந்ததியுமிருந்து, அவருடைய பெற்றோருமிருந்தால்) தாய் தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் ஆறிலொரு பாகமுண்டு. (இறந்த) அவருக்குச் சந்ததியில்லாமலிருந்து பெற்றோர் (மட்டும்) அவருக்கு அனந்தரர்களானால் அவருடைய தாய்க்கு மூன்றிலொரு பாகம் தான்(மற்ற இரு பாகமும்) தகப்பனையே சாரும். (4:1)
ஐயம் : ஹனபி மத்ஹபுவைச் சார்ந்த ஆண், பெண் இருபாலரும் ஒரே மாதிரியாகத்தான் தொழ வேண்டுமா? இரு பாலரும் கைகளை நெஞ்சில் கட்ட வேண்டுமா? அல்லது கீழே இறக்கிக் கட்ட வேண்டுமா? P.A.M ஸபிய்யா, கடையநல்லூர்.
தெளிவு : முஸ்லிம்கள் அனைவரும் ஆண், பெண் என்ற எப்பாகுபாடுமின்றி தாம் தொழும் போது தமது நெஞ்சில் கைகளைக் கட்டிக் கொள்வதே நபிவழியாகும். ஹதீஸின் அடிப்படையில் ஆணுக்கும். பெண்ணுக்கும் ஒரே அமைப்பிலேயே உள்ளது. இரு பாலரின் தொழுகையிலும் சிறிதும் வித்தியாசமில்லை.
ஐயம் : தமிழகத்தில் பல பள்ளிவாசல்களில் இமாம் தொழ வைக்கும் இடத்திற்கு மேல் சுவர்களில் ‘லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதூர் ரசூரில்லாஹு என்ற அரபியில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு எழுதி வைப்பதற்கு குர்ஆன், ஹதீஸில் ஆதாரமுண்டா? முஹம்மத் மக்தூம், துடியலூர், கோவை.
தெளிவு : ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் சித்திர வேலைப்பாடுடைய ஆடையில் தொழுது விட்டு, இச்சித்திரங்கள் என்னைத் தன் பக்கம் ஈர்த்து விட்டன. ஆகையால் இதை ‘அபூஜஹ்ம்’ என்பவரிடத்தில் கொண்டு போய் கொடுத்துவிட்டு சித்திரமில்லாத வேறு ஆடையை வாங்கி வாருங்கள் என்றார்கள். (ஆயிஷா(ரழி) புகாரீ, முஸ்லிம்)
*ஆயிஷா(ரழி) அவர்கள் தமது வீட்டின் பாகத்தை மறைத்துக் கட்டும் வகையில் மெல்லிய திரை ஒன்றை வைத்திருந்தார்கள் அதற்கு நபி(ஸல்) அவர்கள் இந்தத் திரையை என்னை விட்டும் அகற்றி விடுவாயாக! இதில் உள்ள சித்திரங்கள் (நான் தொழுகையில் இருக்கும் போது) எனது தொழுகையில் குறுக்கிடுகின்றன என்றார்கள். (அனஸ்(ரழி), புகாரீ)
தொழுவோரின் சிந்தனையைத் திருப்பும் வகையில் கலிமாவின் வாசகமட்டுமின்றி குர்ஆனுடைய ஆயத்தோ, அல்லது துஆக்களைப் போன்றுள்ள எத்தகைய வாசகத்தையும் பள்ளிவாசல் சுவரில் எழுதுவதை மேற்காணும் ஹதீஸ்கள் வன்மையாக கண்டிக்கின்றன. பள்ளியில் இவ்வாறாக எழுதுபவர்கள் புண்ணியம் போல் பாவத்தையே செய்கிறார்கள் என்பது தெளிவு.
ஐயம் : கபரில் இருப்பவர்கள் எதையும் செவியுர முடியாதென்று இறைவன் குர்ஆனில் சொல்லியிருக்கும் போது, நாம் கப்ருக்குச் சென்று யாருக்காக எல்லாம் சொல்ல வேண்டும்? S.M ஜுபைர், ரியாத்
தெளிவு : அன்றியும் உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களைச் செவியுறும் படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படி செய்பவராக நீர் இல்லை. (35:22)
சஹாபாக்கள் கப்ருஸ்தானுக்குச் செல்லும் போது பின்வரும் துஆவை (ஓதும் படி) அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவர்களாயிருந்தார்கள். அதாவது: அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியாரி மினல்மூமினீனவல் முஸ்லிமீன். வ இன்னா இன்ஷா அல்லாஹுபிக்கும் லலாஹிக்கூன். நஸ்அலுல்லாஹல் னா வலக்குமுல் ஆஃபியா.
பொருள் : மூமின், முஸ்லிம்களுடைய வீட்டாரே! உங்கள் மீது சாந்தி உண்டாகுக! இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக நாங்களும் உங்களிடமே வந்து சேருவார் தான். அல்லாஹ்விடம் எங்களுக்கும், உங்களுக்கும் ஆஃபியத் (சுகத்)தைக் கேட்கிறோம். (புரைதா(ரழி) முஸ்லிம்)
மேற்காணும் குர்ஆன் வசனம் (35:22)ல் ‘அல்லாஹ் தான் நாடியவர்களை செவியுறும்படி செய்கிறான் கப்ருக்களில் உள்ளவர்களைக் கேட்கும் படி செய்பவராக நீர் இல்லை’. தான் நாடியோர்க்கும் கேட்க வைக்கும் சக்தி அல்லாஹ்வுக்கு மட்டும் இருப்பதால், நாம் நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ள படி கப்ராளிகளுக்கு ஸலாம் கூறி விட வேண்டியது தான். அதை அவர்களுக்கு எத்தி வைக்கும் சக்தி அவர்களிடமிருப்பதால் அவன் எத்தி வைத்துவிடுவான், நமது ஸலாத்தை அவர்கள் கேட்டார்களா. இல்லையா என்ற கவரை நமக்குத் தேவையில்லை.