நபி வழியில் நம் தொழுகை
தொடர் : 46
அபூஅப்திர் ரஹ்மான்
என்னை எவ்வாறுத் தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
ஜும்ஆவுக்கு முன் பின் சுன்னத்தான தொழுகையின் விபரம்:
ஜும்ஆ தொழுகைக்கு முன்னால், சுன்னத்து என்ற அடிப்படையில் தொழுவதற்கு எதுவுமில்லை. ஆனால் இமாம் மிம்பரில் ஏறிய பிறகு வருவோர் உள்பட அதற்கு முன்னால் வந்தவர் அனைவரும் “தஹிய்யத்துல் மஸ்ஜித்” என்னும் பள்ளியின் காணிக்கைத் தொழுகை 2 ரகாஅத்துக்கள் தொழுதுக் கொள்வதுக் குறித்து நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் பிரவேசித்தால் தாம் (அதில்) உட்காருவதற்கு முன்பே இரு ரகாஅத்துக்கள் தொழுதுக் கொள்வாராக!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.. (அபூ காதா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை மின்பரின் மீது நின்று கொண்டிருக்கும் போது “ஸுலைக்குல் கதஃபானீ(ரழி)’ அவர்கள் வந்து தாம் (எதுவும்) தொழுவதற்கு முன் (பள்ளியில்) அமர்ந்து விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி, நீர் 2 ரகா அத்துக்கள் தொழுது விட்டீரா? என்று கேட்க, அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். உடனே எழுந்து அவ்விரு ரகாஅத்துக்களையும் தொழுதுக் கொள்வீராக! என்று கூறினார்கள். (ஜாபிர்(ரழி), முஸ்லிம்)
உங்களில் ஒருவர் இமாம் “குத்பா’ ஓதிக்’ கொண்டிருக்கும் போது (பள்ளிக்கு) வந்தால் அவர் 2 ரகாஅத்துக்கள் தொழுதுக் கொள்வதோடு அவ்விரு ரகாஅத்துக்களையும் சுருக்கமாகத் தொழுதுக் கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாபிர்(ரழி) முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்).
நபி(ஸல்) அவர்கள் ளுஹ்ருக்குப் முன் 2 ரகாஅத்துக்களும், அதற்குப் பின் 2 ரகாஅத்துக்களும், மஃரிபுக்குப் பின் 2 ரகாஅத்துக்கள் தமது வீட்டிலும் இஷாவுக்குப்பின் 2 ரகாஅத்துக்களும் தொழுவார்கள், ஜும்ஆவுக்குப் பின்னால் எதுவும் தொழாமல் தமது வீட்டிற்குச் சென்று அங்கு 2 ரகா அத்துக்கள் தொழுவார்கள். (இப்னு உமர்(ரழி) புகாரீ)
மேற்காணும் அறிவிப்புகளின் மூலம், வெள்ளிக்கிழமை இமாம் ‘குத்பா’ ஓதிக் கொண்டிருக்கும் போது வருபவரும் தஹியத்துல் மஸ்ஜித் என்ற வகையில் பள்ளியின் காணிக்கைத் தொழுகை 2 ரகாஅத்துக்கள் தொழுதுக் கொள்வது விசேஷம் என்பதை அறிகிறோம்.
ஜும்ஆவின் பர்ளுக்கு முன்னால் ‘சுன்னத்து’ என்று எதுவும் இருக்குமானால் நபி(ஸல்) அவர்கள் அந்த சுன்னத்தான தொழுகையை அல்லவா தொழும்படி அவருக்குக் கூறியிருப்பார்கள். அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கட்டிக் காட்ட வேண்டிய அந்தக் கட்டத்தில் தாம் அதைச் சுட்டிக்காட்டாது, பொதுவாகப் பள்ளிக்கு வருவோர் தாம் அதில் உட்காருவதற்கு முன்பே இரு ரகாஅத்துக்கள் தொழுதுக் கொள்ள வேண்டும் என்ற ஹதீஸுக்கேற்ப அவர் நடந்துக் கொள்ளாது அவர் பள்ளிக்கு வந்தவுடன் அங்கு அவர் உட்காருவதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரை எழுந்து அந்த இரு ரகாஅத்துக்களையும் தொழும்படி கூறியிருப்பது, ஜும்ஆவுக்கு முன் சுன்னத்து உண்டு என்று கூறுபவர்கள் அதற்கான ஒரு ஹதீஸையும் எடுத்து வைக்காது, ளுஹ்ருக்குப் பகரமாக ஜும்ஆயிருப்பதால் ளுஹ்ரைப் போன்று இதற்கும் முன் சுன்னத்து உண்டு என்று தன்னிச்சையாகக் கூறியுள்ளார்.
ஜும்ஆவின் பின் சுன்னத்தின் நிலை:
ஜும்ஆவு(டைய பர்ளு)க்குப் பின் தொழுவோர் 4 ரகாஅத்துக்கள் தொழுதுக் கொள்வார்களாக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ)
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவுக்குப் பிறகு தமது வீட்டில் 2 ரகாஅத்துக்கள் தொழுவார்கள்’ (இப்னு உமர்(ரழி) புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜ்ஜா)
இமாம் அபூதாவூத் அவர்கள் இப்னு உமர்(ரழி) அவர்களின் இந்த ஹதீஸின் தொடரில் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு பள்ளியில் தொழுதால் 4 ரகாஅத்துக்களும், வீட்டில் தொழுதால் 2 ரகாஅத்துக்களும் தொழுவார்கள் என்று இப்னு உமர்(ரழி) அவர்களே அறிவித்துள்ளார்கள் என்பதாக தமது நூலில் அறிவித்துள்ளார்கள். ஆனால் ஜும்ஆவின் பர்ளுக்கு முன் (ளுஹ்ருக்கு 4 அல்லது 2 ரகாஅத்துக்கள் தொழுவதுப் போல் ) நபி(ஸல்) அவர்கள் எதுவும் தொழுதார்கள் என்பதற்கு அறவே ஹதீஸில் ஆதாரமில்லை என்பது தெளிவு.
தஹியத்துல் மஸ்ஜித் எல்லா நாட்களிலும் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் தொழுதுக் கொள்வது விசேஷமாக இருப்பதுப் போன்றே ஜும்ஆவுடைய தினத்திலும் பள்ளிக்குச் செல்லும் போது அதைத் தொழுது கொள்வது விசேஷமாகும். ஜும்ஆவுடைய தினத்தில் மட்டும் தான் தஹியத்துல் மஸ்ஜித் – பள்ளியின் காணிக்கைத் தொழுகை தொழ வேண்டும் என்பதல்ல.
‘ஜும்ஆ’ யார் மீதுக் கடமை, யார் மீது கடமை இல்லை?
ஜும்ஆவுடையத் தொழுகையைத் தொழுவது 4 நபர்கள் தவிர ஏனைய, அனைத்து முஸ்லிம்கள் மீதும் உரித்தான கடமையாகும். அடிமை, பெண். சிறுவர் மற்றும் நோயாளி ஆகியோர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், (தாரிக்குப்பின் ஷிஹாபு(ரழி) அபூதாவூத், ஹாக்கிம்)
பிரயாணிகள் மீதும் ஜும்ஆக் கடமையில்லை.
நபி(ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது அரஃபா தினத்தன்று வெள்ளிக்கிழமையாக இருந்தும் அன்று அவர்கள் ஜும்ஆ தொழவில்லை. இதுவிஷயம் புகாரீ, முஸ்லிம் ஆகிய இரு பெரும் நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஜாபிர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜுப் பிரயாணத்தை விபரிக்கும் போது ‘பிறகு நபி(ஸல்) நபி(ஸல்) அவர்கள் அரஃபாவை வந்தடைந்தார்கள் பிலால்(ரழி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ளுஹர் தொழுதார்கள். பிறகு இகாமத் கூறினார்கள். அப்போது அஸ்ரையும் தொழுதுக் கொண்டார்கள்’ என்று அவர்கள் விபரித்துள்ள விஷயம் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
ஆகவே நபி(ஸல்) அவர்களும் மற்றுமுள்ள சஹாபாக்களும பிரயாணிகளாக இருந்தடையால் தங்கள் மீது ஜும்ஆ கடமை இல்லாததால் ளுஹர் தொழுதுள்ளார்கள் என்பதை அறிகிறோம். ஜும்ஆ கடமை இல்லாதவர்கள் தமது சிரமங்களை பார்க்காது ஜும்ஆ தொழுதுவிட்டால் அவர்களுக்கு அந்த ஜும்ஆ கூடிவிடும். அவர்களை விட்டும் ளுஹரு தொழ வேண்டும் என்ற கடமையும் நீங்கி விடும்.
நகரங்களிலும், குக்கிராமங்களிலும் ஜும்ஆ தொழுவதுக் கூடும்
நபி(ஸல்) அவர்களின் பள்ளியாகிய (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந்நபவியில் ஜும்ஆ நடைபெற்றதன் பின் ‘பஹ்ரைனி’லுள்ள) ஜுவாஸா என்னும் கிராமத்தில் ‘மஸ்ஜிது அப்தில் கைஸ்’ எனும் பள்ளியில் தான் முதலாவதாக நடைபெற்றது. (இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ, அபூதாவூத்)
உமர்(ரழி) அவர்கள் ‘பஹ்ரைன்’ வாசிகளுக்கு நீங்கள் எந்த இடத்தில் இருந்த போதிலும் ‘ஜும்ஆவை நடத்திக் கொள்ளுங்கள்! என்று கடிதம் எழுதினார்கள்.
(அபூஹுரைரா(ரழி) இப்னு அபஷைபா)
நாற்பது நபர்களுக்குக் குறைந்தவர்கள் ஜும்ஆ தொழுதால் அது ஜும்ஆ வாக மாட்டாது என்ற அறிவிப்பின் நிலை’
நாற்பது அல்லது அதற்கும் அதிகமாயுள்ளவர்களுக்குத்தான் ஜும்ஆவும், ஹஜ்ஜுப் பெருநாளும், நோன்புப் பெருநாளும் உள்ளன என்பதாகவே நபி(ஸல்) அவர்களின் நடைமுறை இருந்து வந்துள்ளது’ என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஜாபிர்(ரழி) தாருகுத்னீ)
இவ்வாறே இதேக் கருத்தில் ஓர் அறிவிப்பு பைஹகியிலும் ஜாபிர்(ரழி) மூலம் அறிவிக்கப்பட்டு இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘அப்துல் அஜீஸ் பின் அப்திர்ரஹ்மானில் கர்ஷீ எனும் மிகவும் பலஹீனமானவர் இடம் பெற்றுள்ளார்.
‘இவருடைய இவ்வறிவிப்பை எடுத்து வீசி விடுங்கள். ஏனெனில் இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யாகும். என்று இமாம் அஹ்மது பின் ஹம்பல் அவர்களும், இவர் சரியானவர் அல்லர்என்று இமாம் நஸயீ அவர்களும், இவர் பேச்சு எடுபடாதவர் என்று தாருகுத்னீ அவர்களும், இப்னு ஹிப்பான், பைஹகீ ஆகியோர் இவ்வறிவிப்பு ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல என்று கூறியிருப்பதாக ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸுல் ஹபீர்’ எனும் நூலில் விமர்சித்துள்ளார்கள்.
எனவே ஜும்ஆத் தொழுகையும் மற்ற தொழுகைகளை எவ்வாறு ஜமாஅத்தாக தொழுவதற்கு இரு நபர்கள் இருந்தால் போதுமோ, அவ்வாறே ஜும்ஆத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதற்கும் இரு நபர்கள் இருந்தால் போதும் என்பதே சரியாகும். இவ்வாறின்றி ஜும்ஆவுக்கு 40 நபர்கள் இருந்தாக வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதற்கு சரியான சான்றுகள் எதுவுமில்லை.
இவ்வாறு நிபந்தனை விதிக்க வேண்டுமானால் அது ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறின்றி ஜும்ஆ நிறைவேற்றுவதற்காக, குறிப்பிட்ட தொகையினர் வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதற்கு ஹதீஸ் கலா வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆகவே மேற்காணும் ஆதாரங்களை வைத்து ஜும்ஆ தொழுகையைக் குக்கிராமங்களில் நடத்தலாம் என்பதோடு, இரு நபர்கள் இருந்தாலும் ஜும்ஆ நடத்தலாம் என்பதையும் அறிகிறோம்.
மிம்பரின் மீது குத்பா:
நபி(ஸல்) அவர்கள் ஒரு மிம்பரை-பிரசங்க மேடையைத் தயாரித்து அதன் மீது (நின்றுக் கொண்டு) குத்பா -பிரசங்கம் செய்துக் கொண்டிருந்தார்கள்.
(லஹ்லுபின் ஸஃது(ரழி) புகாரீ, முஸ்லிம்)
வெள்ளிக்கிழமை இமாம் மிம்பரின் மீது அமர்ந்த பிறகு சொல்லப்படும் பாங்குத்தான் உண்மையில் ஜும்ஆவின் பாங்காகும்.
ஜும்ஆ தினத்தில் இமாம்(மிம்பரில்) அமர்ந்தவுடன் பாங்கு சொல்வதுதான் நடைமுறையில் இருந்துக் கொண்டிருந்தது. என்பதாக ஸாயிபுபின் யஜீத்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
(ஸாயிபு பின் யஜீத்(ரழி) புகாரீ)
நபி(ஸல்) அவர்களுக்கு எதிரில் பள்ளியின் வாசலில் பாங்கு!
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் மிம்பரில் அமர்ந்தவுடன் அவர்களுக்கு எதிரில் பள்ளிவாயலின் வாசலில் நின்று பாங்கு சொல்லப்படும் (ஸாயிபு பின்யஜீத்(ரழி) அபூதாவூத்) இதன் மூலம் மிம்பருக்கு நேராக அதன் அருகில் நின்று தான் பாங்கு சொல்லவேண்டும் என்பது இல்லை என்பதை அறிகிறோம்.
நின்றுக் கொண்டு குத்பா பிரசங்கம் செய்தல்.
நபி(ஸல்) அவர்கள் நின்றுக் கொண்டே குத்பா – பிரசங்கம் செய்வார்கள், பிறகு உட்காருவார்கள். பின்னர் நீங்கள் இப்போது செய்து வருவது போல் எழுந்து நின்று கொள்வார்கள். (இப்னு உமர்(ரழி) புகாரீ)
இரண்டு குத்பா ஓதலும், அவற்றுக்கிடையில் அமருதலும்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு குத்பாக்கள் ஓதிக் கொண்டிருந்ததோடு, அவ்விரண்டுக்கு மத்தியில் அமர்ந்துக் கொண்டுமிருந்தார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ)
குத்பாவின் போது அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, ‘அம்மா பஃது’ என்று கூறுவது.
நபி(ஸல்) அவர்கள் (தமது குத்பா பிரசங்கத்தின் போது) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்ததன் பின்னர் “அம்மா பஃது’ என்று கூறுவார்கள். (அம்ருபின் தஃலபு(ரழி) புகாரீ)
நபி(ஸல்) அவர்கள் (தமது குத்பா பிரசங்கத்தின் போது) மக்களை நோக்கி ஷஹாதத்து (அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லல்லாஹுவ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று) ஓதிவிட்டு பின் “அம்மப பஃது’ என்று கூறினார்கள். (ஆயிஷா(ரழி) புகாரீ)
அம்மா பஃது என்பதற்கு அதற்கு அடுத்தப்படியாக என்பது பொருளாகும்.
குத்பா பிரசங்கத்தின் போது நபி(ஸல்) அவர்களின் உணர்ச்சி -உதவேகம்
நபி(ஸல்) அவர்கள் (குத்பா – பிரசங்கம் செய்யும் போது) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அதன்பின்னர் தமது உரத்த தொனியில் மிக ஆவேசத்தோடு, உங்கள் எதிரிகள் உங்களிடம் காலையில் வர விருந்துக் கொண்டிருக்கிறார்கள். மாலையில் வர விருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று படைக்கு எச்சரிக்கை விடுபவர் எச்சரிப்பதுப் போல் பேசுவார்கள்
மேலும் யுகமுடிவு நாளும், நானும் இவ்வாறு உள்ளோம் என்று தமது ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் சேர்த்துக் காட்டினார்கள். பிறகு ‘அம்மா பஃது’ என்று கூறிவிட்டு, நிச்சயமாக விஷயங்களில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும், வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதுடைய வழிகாட்டலாகும். காரியங்களில் தீயவை அவற்றில் புதிதாக உண்டு பண்ணப்பட்டவையாகும். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள நூதன முறை அனைத்தும் வழிகேடாகும் என்று கூறினார்கள். (ஜாபிரு பின் அப்தில்லாஹ்(ரழி), முஸ்லிம்)
நஸயீ உடைய அறிவிப்பில் ‘வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் சேர்ப்பவையாகும்’ என்ற வாசகம் மேல் அதிகமாக இடம் பெற்றுள்ளது. நபி(ஸல்) அவர்கள் குத்பா – பிரசங்கம் செய்யும்போது, அவர்களின் கண்கள் சிவந்து விடும், தோனி உயர்ந்து விடும், (தீமைகளைச் சுட்டிக் காட்டும் போது) கோபம் கடுமையாகிவிடும். (ஜாபிருபின் அப்தில்லஹ்(ரழி), முஸ்லிம்)
குர்ஆனுடைய வசனங்களை ஓதி மக்களுக்கு போதனை செய்தல் :
நபி(ஸல்) அவர்கள் நின்ற வண்ணம் குத்பா பிரசங்கம் செய்வார்கள், இரு குத்பாக்களுக்கும் இடையில் உட்காருவார்கள், குர்ஆனின் வசனங்களை ஓதி மக்களுக்கு போதனை செய்வார்கள். (ஜாபிருபின் ஸமுரா(ரழி) முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)
ஜும்ஆவுடைய தினத்தில் நபி(ஸல்) அவர்கள் உபதேசத்தை நீட்டிக் கொண்டிருக்கமாட்டார்கள். அவர்கள் உபதேசமெல்லாம் எளிய நடையிலுள்ள ஒரு சில வாசகங்களாகவே இருந்தன. (ஜாபிருபின் ஸமுரா(ரழி) முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)