அமல்களின் சிறப்புகள்….
தொடர் : 60
- அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.
தமிழாக்கமும், வெளியிட்டோரும் :
பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.
சென்ற இதழில் ஆய்வு செய்தவை :
அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்தின் பக்கம் 394ல் “சிறிது நேரம் சிந்திப்பது இரவு முழுவதும் வணங்குவதை விடச் சிறந் தது” என்று ஹதீஃதில் கூறப்பட்டுள்ளதாக எழுதி இருப்பதையும், “சிறிது நேரம் அல் லாஹ்வின் படைப்பினங்களைப் பற்றி சிந் திப்பது 80 ஆண்டுகளின் வணக்கங்களை விடச் சிறந்தது” என்று ஹதீஃது ஒன்று தெரி வித்திருப்பதாக எழுதி இருப்பதையும், “60 ஆண்டுகளின் வணக்கங்களை விடச் சிறந்தது” என்று மற்றுமோர் ஹதீஃது தெரிவித்திருப்பதாக கூறி இருப்பதையும், மேலும் “அபுதர்(ரழி) அவர்களின் வணக் கங்களில் சிறந்த வணக்கம் சிந்தனை செய்வது” என்று ஒரு செய்தியை தந்திருப்பதையும் நாம் ஆய்வு செய்து அத்தனையும் ஹதீஃதுகள் அல்ல; அசி ஆசிரியர் அவரது புளுகு மூட்டையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து விட்ட பச்சை பொய் என்று சென்ற ஜூன் இதழில் நிரூபித் திருந்தோம். அதே கருத்தில் சிந்தனை செய் தல் பற்றி இன்னும் நிறைய எழுதப்பட்டி ருக்கின்ற செய்திகளில் சிலவற்றை இந்த ஜூலை இதழில். இன்ஷா அல்லாஹ், இப் போது ஆய்வு செய்வோம்.
அசி புத்தகத்தின் 394ம் பக்க கடைசி பத்தியிலுள்ளவை :
இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் எழுதியுள்ளதாவது : சிந்தித்தல் சிறந்த வணக்கம் என்று கூறப்பட்டிருப்பதின் காரணம், அதில் அல்லாஹ்வை திக்ரு செய்தல் இருப்பதுடன், மேலும் இரண்டு விஷயங்களும் அதில் உள்ளன. முதலாவது, சிந்தனை செய்வது “மஃரிபா” என்னும் ஞானத்தின் திறவு கோலாக இருக்கிறது. இரண்டாவது அதனால், அல்லாஹ்வின் மீது நேசம் பிறக்கிறது. சிந்தனை செய்தல் என்பதைத்தான் சூஃபியாக்கள் “முராக்கபா” என்று கூறுகி றார்கள். மேலும் பல ரிவாயத் மூலம் இதன் சிறப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.
எமது ஆய்வு :
]அசி புத்தகத்தில் மேற்கண்ட செய்தியில் 6 விசயங்களைத் தந்திருக்கின்றனர். 1.சிந்திப்பதில் அல்லாஹ்வை திக்ர் செய்தல் இருக்கிறதாம். 2.சிந்தனை செய்வது மஃரிபா என்ற ஞானத்தின் திறவுகோலாம், 3.சிந்தனை செய்வதால் அல்லாஹ்வின் மீது நேசம் பிறக்கிறதாம், 4.சிந்தனை செய்வதை சூபியாக்கள் “முராக்கபா” என்று சிறப்பித்துக் கூறுகின்றனராம், 5.சிந்தனை செய்வதன் சிறப்பை பல ரிவாயத்துக்கள் உறுதி செய்கின்றனவாம், 6.மேற்கண்ட 5 செய்தி களையும் எழுதி இருப்பது இமாம் கஸ்ஸாலி என்று “அமல்களின் சிறப்புகள்(அசி) புத்தகம்” தெரிவித்திருக்கின்றது.
அகிலங்களைப் படைத்த இறைவன் அல்லாஹ்தான் இஸ்லாம் மார்க்கத்தை, ஜிப்ரில் (அலை) எனும் வானவர் வழியாக “இறுதி இறைத் தூதர்” முஹம்மது(ஸல்) அவர்க ளுக்கு குர்ஆன் எனும் நெறிநூல் மூலமாக கொடுத்து அருள் புரிந்திருக்கிறான் என்பதையும், அதனை அந்த தூதர் உலக மக்களிடம் போதித்து, அதன் பிரகாரம் வாழ்ந்து காட்டியும் இருக்கிறார்கள் என்பதையும் மார்க்க ஈடுபாடு இல்லாத சாதாரண முஸ்லிம் கூட சொல்லி விடுவார். ஆனால் “ஷைகுல் ஹதீஃத்(?) என்ற பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் மறக்காமல் எப்போதும் போட்டுக் கொள்ளும் ஜக்கரியா என்பவர் அதாவது அசி ஆசிரியர், அல்லாஹ் கொடுத்ததையும், தூதர் கொடுத்ததையும் பின்பற்ற வேண்டும் என்று பெயரளவில் சொல்வாரே தவிர, அவைகளை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டவர் கிடையாது என்பதை கடந்த 58 தொடர்களில் படித்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ். இனி வரும் தொடர்களிலும் இந்த உண்மையை இன்னும் விரிவாகத் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
அல்லாஹ் கொடுத்ததையும், தூதர் கொடுத்ததையும் ஏற்றுக் கொள்வது இல்லை என்பதை அசி ஆசிரியரே மேற்கண்ட செய்தியில், தெரியப்படுத்தி இருப்பதைப் பாருங்கள். அதாவது, மேலே உள்ள 5 செய்திகளையும் இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் எழுதி இருக்கிறாராம். கஸ்ஸாலியின் பெயருக்கு முன்னாள் இமாம் என்று அசி ஆசிரியர் சொல்லி இருப்பதாலும், பின்னால் அடைப்புக் குறிக்குள்(ரஹ்) என்று எழுதி இருப்பதாலும், கஸ்ஸாலி என்பவரை அல்லாஹ்வுக்கு பயந்த நல்லடியார் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.
நபிமார்கள் காலத்தில் எப்படி ஃகாரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், நம்ரூத் போன்ற இஸ்லாத்தின் எதிரிகள் இருந்தார்களோ அதேபோல நபி(ஸல்) அவர்கள் காலத்தில் யூத கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். அவர்களின் மறைவுக்குப் பின், அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் பின்பற்றுவதாக வாயளவில் கூறிக்கொண்டு இஸ்லாத்தில் இருந்து கொண்டே அல்லாஹ் இறக்கி அருள் புரிந்த வழிகாட்டல் குர்ஆனுக்கும், இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் கொடுத்துச் சென்ற வழிகாட்டல் ஹதீஃதுகளுக்கும் மாற்றமாக தமது மனோ இச்சைக்குக் கீழ்படிந்து, இஸ்லாத்தில் இல்லாததையயல் லாம் மார்க்கத்தில் இருப்பதாகக் கூறி பிரிவினைகளை ஏற்படுத்தினர்.
குர்ஆன், ஹதீஃதுக்கு எதிராக நான்கு இமாம்களின் பெயரால் நான்கு மத்ஹப்களை அறிமுகம் செய்து ஃபிக்ஹு சட்டங்களை உண்டாக்கி, சுன்னத் வல் ஜமாஅத் எனும் பெயர் சூட்டி கோலோச்சி வருபவர்கள் தான் இன்றளவும் இஸ்லாத்திலுள்ள எல்லா பிரிவுகளுக்கும் மூலகர்த்தாக்கள்.
சுன்னத் வல் ஜமாஅத்தை சேர்ந்தவர்தான் கஸ்ஸாலி. இவரைப் பற்றி ஓரளவேனும் தெரிந்து கொள்வோம். ஈரான் நாட்டின் தூஸ் எனும் ஊரில் பிறந்தவர். 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், கிரேக்க தத்துவத்தால் கவரப்பட்ட அவிசென்னா (இப்னு சினா), அல்கிந்தி, அல்அஸ்அரி, அல்ஜூவாய்னி, ஹாரிஸ் அல் முஹாஸிபி ஆகியோரின் தாக்கத்தால் கிரேக்கத் தத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டவர். இஸ்லாம் காட்டித்தராத மஃரிபா போதனைகளைப் பின்பற்றி பல நூல்களை எழுதினார், சூஃபி யாக்களின் வரலாறு, சூஃபிக் கதைகள் எழுதினார். இவரது “இஹ்யாவு உளுமுத்தீன்” என்ற நூலுக்கு அதிக ஆதரவு கிடைத்தது. ஜல்லிக் கதைகளை அள்ளி விடுவதில் வல்லவர். அந்த விஷயத்தில் இவரது ஆதரவாளர்கள் இவரை மிஞ்சி விட்டனர். மூஸா (அலை) அவர்களுடன் கஸ்ஸாலி உரையாடிய கதைகள் என்றும், நபி(ஸல்) அவர்களை கஃபத்துல்லாஹ்வில் கனவில் கண்டார்கள் என்று ஜல்லிக் கதைகளை அள்ளி வீசுகின்றனர்.
இந்த கஸ்ஸாலி என்பவரைப் பற்றியும் அவரது சூஃபிஸ சிந்தனைப் பற்றியும் போதிய அளவு நாம் ஏற்கனவே எழுதியுள் ளோம். “இசைக் கருவியை உடைத்தெறியவே நான் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியிருக்க, “இசை கூடும்” என்று தீர்ப்பு கொடுத்தவர்தான் இந்த அறிவாளி(?) கஸ்ஸாலி என்பவர்.
இவரது ஆதரவாளர்கள் mailofislam.com என்ற தளத்தில் தெரிவிப்பதாவது. உலகமே கஸ்ஸாலி(ரஹ்) சிறப்பை உணர்ந்து இருந்ததாம். சில மடையர்கள் இவரை எப்போதும் குறை கூறிக் கொண்டிருந்தனராம். இவ் வாறு ஓர் அறிஞர் எந்நேரமும் கஸ்ஸாலியின் “இஹ்யாவு உளுமுத்தீன்” நூலைப் பற்றி எப்போதும் குறை சொல்லிக் கொண்டு இருப்பாராம்.
குறை கூறியவர் “இஹ்யாவு உளுமுத்தீன்” நூலை மதரசாவுக்கு எடுத்து வந்தாராம்.
அறிஞர் : என் கையில் இருப்பது என்ன?
மாணவர்கள் : “இஹ்யாவு உளுமுத்தீன்”
அறிஞர் : இரவில் நான் கனவு கண்டேன். அதில், கஸ்ஸாலி என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து, இவர் “இஹ்யாவு உளுமுத்தீன்” நூலைக் குறை கூறுகிறார். நீங்கள் சொல்லாத ஒரு வார்த்தையையேனும், அதில் நான் சொல்லி இருக்கேனா?
நபி(ஸல்): இல்லை! குறை சொன்னதற்காக 70 கசையடி கொடுங்கள் என்று கூறினார்களாம்.
அந்த அறிஞர் சட்டையை திறந்து அவரின் உடலில் இரவில் பட்ட கசையடிகளின் தழும்புகள் இருந்ததைக் காட்டினாராம். தழும்புகள் அப்படியே இருந்ததாம். இதிலிருந்து இமாம் கஸ்ஸாலியின் சிறப்பையும் கண்ணியத்தையும் உணர்ந்து கொள்ளலாம் என்று அந்த தளத்தில் பதியப்பட்டு இருக்கிறது.
இன்னும் வேடிக்கைகள் இருப்பதை தயவு செய்து அந்த தளத்திற்கு சென்று பாருங்கள். தியான மண்டபங்களில் அமர்ந்து அடிக்கடி கஸ்ஸாலி தியானம் செய்வாராம். வலிமார்களின் கப்ருகளை ஜியாரத் செய்தாராம். இவரிடமிருந்து கற்றுக் கொண்ட பக்த கோடிகள் ஜியாரத் என்ற பெயரில் தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கையேந்தி துஆ செய்வதை இன்று கண் முன்னால் பார்த்து வருகிறோம். கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்கள் அவர்களுக்கு ஏளனமாகப் போய்விட்டது.
“அல்லாஹ்வையன்றி வேறு எவர்களிடம் அவர்கள் துஆ செய்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க முடியாது. அவர்களே படைக்கப்பட்டவர்கள் தாம்” 16:20
“அவர்கள் இறந்தவர்களே; உயிருள்ளவர்கள் அல்ல; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்”. (16:21)
“உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாகமாட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களை செவியேற்கும்படி செய்கிறான். கப்ருகளில் உள்ளவர்களை கேட்கும்படி செய்பவராக (நபியே!) நீர் இல்லை”. (35:22)
அல்லாஹ் இவ்வாறு சொல்கிறான். ஆனால், கஸ்ஸாலி கப்ரு ஜியாரத் செய்கிறார்; மூஸா(அலை) அவர்களுடன் பேசுகிறார்; நபி(ஸல்) அவர்களுடன் பேசுகிறார். கேட்டால், கனவாம்!
அமல்களின் சிறப்புகள் புத்தகத்தை ஆய்வு செய்யும் நான் கூறுகிறேன். “நான் ஒரு கனவு கண்டேன்; அதில் மூஸா(அலை) அவர்களுடனும் என்னுடனும் கஸ்ஸாலி பேசுவதாக கனவு கண்டது சுத்தப் பொய் என்று நபி(ஸல்) அவர்கள் என் கனவில் கூறினார்கள்” என்று நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? கனவுகளை மார்க்கம் ஆக்கும் உங்கள் கொள்கைப்படி நான் என்ன, யார் கனவு கண்டாலும் கனவில் எதைக் கண்டாலும், எப்படிக் கண்டாலும் அதை நீங்கள் ஏற்றுக்கொண்டுத் தானே ஆக வேண்டும்.
கனவுகள் மார்க்கம் ஆகாது என்ற சாதாரண உண்மைக் கூட தெரியாதவர்களா நீங்கள்? அல்லது தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறீர்களா?
மூஸா(அலை) அவர்களுடன் உரையாடிய கதைகள் என்றும், நபி(ஸல்) அவர்களை கஃபத்துல்லாஹ்வில் கனவில் கண்டார்கள் என்று ஜல்லிக் கதைகளை அள்ளி வீசுகின்றனர். அந்த கஸ்ஸாலியின் அறிவு(?) எல்லோருக்கும் கிடைக்கப் பிரார்த்தனை செய்யு மாறு அரபிக் கல்லூரி மாணவர்களிடம் போதித்து வருகிறது தப்லீக் ஜமாத் ஆதரவு அரபிக் கல்லூரிகள்.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? அல்லாஹ்வின் தூதரின் அறிவு அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகி விட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் பளிச் சென்று தெரிகிறது அல்லவா? அதுவும் அல்லாமல் இஸ்லாம் காட்டும் நேர்வழிக்கு எதிராக செயல்படுவதில் சிந்தனை செய்கிறார்கள் என்பதும் ஒளிவு மறைவின்றி தெரிகிற தல்லவா? இதுதான் சிந்தனை செய்வதின் சிறப்பா? இதனை இந்த இதழிலிருந்து விரிவாக காண்போம்.
அல்லாஹ்வின் கட்டளைப்படி அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் நெஞ்சத்தை ஜிப்ரீல் (அலை) அவர்கள் பிளந்து, “ஸம்ஸம்” தண்ணீரில் கழுவி, அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்திருந்த தங்கத் தட்டிலிருந்து ஈமானையும், ஞானத்தை (அறிவை)யும் நெஞ்சில் ஊற்றினார்கள். (ஹதீஃதின் சுருக்கம் : ஆதாரம் : புகாரி, ஹதீஃத் எண்:3342) அதுபோல, கஸ்ஸாலியின் நெஞ்சைப் பிளந்து ஈமானையும், ஞானத்தை (அறிவை)யும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஊற்றினார்கள் என்று எண்ணிக் கொள்கின்றனரா? அப்படி எல்லாம் இல்லை என்று கூறுவார்களேயானால், பிறகு எதற்கு தப்லீக் ஜமாத்தினர், அரபி கல்லூரிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த கஸ்ஸாலி அறிவை யாசிக்கிறார்கள்? இதனால்தான் என்னவோ, அவர்களின் உள்ளங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஃதுகளின் பக்கமும் வர மறுத்து பிக்ஹு சட்டங்களில் நிலைத்து விட்டதோ?
ஹிதாயத் (நேர்வழி) கிடைத்தல் என்பது அல்லாஹ்விடமிருந்து மட்டுமே! எனவே, கஸ்ஸாலி அறிவிலிருந்து வெளிவந்த மார்க்க முரணான செயல்களிலிருந்து மனித குலத்தை பாதுகாக்கும்படி நாம் அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோமாக!
அசி புத்தகத்தின் அடுத்த புதிய உளறல்களைப் பாருங்கள். சிந்திப்பதில் அல்லாஹ்வை திக்ரு செய்தல் இருக்கிறதாம்! சிந்தனை செய்வது “மஃரிபா” என்னும் ஞானத்தின் திறவுகோலாகவும் இருக்கிறதாம்!! அதனால், அல்லாஹ்வின் மீது நேசமும் பிறக்கிறதாம்!!!
ஆஹா! ஓஹோ! எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு! மார்க்கத்தில் இல்லாததைப் பற்றி சிந்தித்து, மார்க்கத்தில் புதிது புதிதாக எதையாவது புகுத்தி, இஸ்லாத்தின் புது ரூட் போட்டு, நரகத்திற்கு மக்களை தயார் செய்து அனுப்ப மட்டுமே சிந்தனை செய்கிறார்கள்! கேடுகெட்ட இவர்களின் சிந்தனையை, குர்ஆன் மற்றும் ஹதீஃதுகளின் துணையோடு இப்போது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்திப்பதில் அல்லாஹ்வை திக்ரு செய்தல் இருக்கிறதாம்! “திக்ர்” என்ற வார்த்தையின் பொருள் “நினைவு கூர்தல்” என்பதா கும். இந்த அடிப்படையில் பார்த்தால் சிந்திப்பதில் அல்லாஹ்வை திக்ர் செய்தல் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டதாக வேண்டும். ஆனாலும், அதனை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையை அசி ஆசிரியரே ஏற்படுத்தித் தந்திருக்கின்றார்.
அதாவது திக்ர் செய்வதற்கென்று (அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கென்று) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பல சொற்றாடல்களைக் கற்றுத் தந்திருக்கிறார்கள். அவைகளைக் கொண்டுதான் அல்லாஹ்வை திக்ர் செய்ய வேண்டும். புதிது புதிதான அமல்கள் “வழிகேடுகள்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்லிச் சென்றனர். மஃரிபா போன்ற இஸ்லாத்தில் இல்லாத வழிகேடான விஷயங்களை சிந்திக்கச் சொல்லும் அசி ஆசிரியரின் சிந்தனை குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்பட்டதாக இருக்கிறது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும். எனவே இவர்கள் சிந்திப்பதில் அல்லாஹ்வை திக்ர் செய்தல் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை!