அன்பு வேண்டுகோள் !

in 1990 பிப்ரவரி

இதழின் உள்ளே…..

v    அன்பு வேண்டுகோள் !

v    நபி வழியில் நம் தொழுகை…

v    வினா எழுப்பினர்! விடை கண்டனர்!!

v    ஒரே சமுதாயம்…

v    மறுமை சிந்தனை!

v    தூய இஸ்லாத்தில் பித்அத் ஊடுருவல்

v    மூல ஆதாரங்கள் அடிப்படையில் சின்னஞ்சிறிய விசயங்கள் தான் ஆனாலும்…!

v    நவீன தாருந் நத்வா பாரீர் !

v    துலாக்கோல்….

v    ஐயமும்!   தெளிவும் !!

v    விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

***********************************************************************

அன்பு வேண்டுகோள் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபை கொண்டு அந்நஜாத் கொண்ட கொள்கையில் இதுவரை நழுவாது செயல்பட்டு வந்திருக்கிறது. எதிர் காலத்திலும் அது தனது கொள்கையில் உறுதியாகச் செயல்பட எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டுகிறோம். நாம் இவ்வாறு வேண்டுகோள் விடுப்பதற்குக் காரணம் விசயம் தெரிந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் நல்லது செய்கிறோம் என்ற நல்லெண்ணத்திலேயே அந்நஜாத்தின் லட்சியத்திலிருந்து தடம் புரளச் செய்ய முயன்று வருகின்றனர்.

சர்ச்சைகளிலோ, விமரிசனங்களிலோ ஈடுபடாமல் குர்ஆன், ஹதீஸை மட்டும் அந்நஜாத்தில் இடம் பெறச் செய்தால் போதும் என்பது அவர்களது அபிப்பிராயமாகும். பெரும் பெரும் சிந்தனையாளர்களையும் இந்த விசயத்தில் ஷைத்தான் தன் வலையில் சிக்க வைத்து விடுகிறான். இந்த முறைதான் உயர்ந்த அணுகுமுறை என்று நம்பவைத்தும் விடுகிறான்.

குர்ஆன், ஹதீஸ் 1400 ஆண்டுகளாக இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை கொண்டு மக்கள் பலன் அடைவதைத்தான் முல்லாக்கள் தடை செய்து வைத்துள்ளனர். அத்தடைகளை அகற்றாமல் நாம் செய்யும் எந்த முயற்சியும் பலன் அளிக்கப் போவதில்லை.

அதற்கு நாமே நல்ல உதாரணமாக இருக்கிறோம். நமக்கு அரபி மொழி தெரியாது. 1963லிருந்து 1970 வரை அரபி கற்ற இந்த மவ்லவிகள் தான் மார்க்கத்தின் பூரண சொந்தக்காரர்கள் என்று பரிபூரணமாக நம்பி அவர்கள் கூறுவது அனைத்தையும் வேதவாக்காக எடுத்துச் செயல்படத்தான் செய்தோம். 1970ல் இந்த மவ்லவிகள் பற்றி நாம் நிதர்சனமாகத் தெரிந்து கொண்ட சில உண்மைகள் நம்மை நிலைதடுமாற வைத்தன. அல்லாஹ்வின் அருள் இல்லை என்றால் அவை நம்மை நாஸ்திகத்தின் பால் செல்ல வைத்திருக்கும். 1970 லிருந்து 1983 வரை பெரும் தடுமாற்றத்திலேயே இருந்து கொண்டிருந்தோம். 1983ல் நமக்கு இந்த மவ்லவிகள் பற்றி ஏற்பட்ட தெளிவுக்குப்பின் அவர்களை நம்பாமல் நேரடியாக குர்ஆன் ஹதீஸ் மொழி பெயர்ப்புகளைப் பார்த்து சிந்திக்க ஆரம்பித்தோம். 1983ல் இருந்து குர்ஆன், ஹதீஸ் தமிழ் உரைகள் நமக்கு தாராளமாக போதுமானவையாகத்தான் இருந்தன. அவற்றை மக்கள் முன் எடுத்து வைத்தோம். அவை இந்தக் குறுகிய காலகட்டத்தில் மவ்லவி வர்க்கத்திற்கே கிலி ஏற்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளன.

இதிலிருந்து என்ன தெரிகிறது? குர்ஆன், ஹதீஸ் மக்களிடையே இருந்தும் அவை ஏன் அவர்களுக்கு உரிய பலனை அளிக்கவில்லை? இந்த மவ்லவி வர்க்கம் ஏற்படுத்தியுள்ள தடைகள் குர்ஆன், ஹதீஸை மக்கள் விளங்கவிடாமல் தடுக்கின்றன. இது நாம் 1970லிருந்து 1983 வரை நேரடியாகப் பெற்ற அனுபவம் எனவே இடைத்தரகர்களாக இருக்கும் இந்த புரோகிதக்கூட்டத்தை சமுதாயத்திலிருந்து அகற்றிவிடும் பணியில் நாம் வெற்றி பெற்றுவிட்டால் நிச்சயமாக சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டு வருகிறோம். அதற்கு ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Previous post:

Next post: