சின்னஞ்சிறிய வி­யங்கள் தான் ஆனாலும்…!

in 1990 பிப்ரவரி

சின்னஞ்சிறிய வி­யங்கள் தான் ஆனாலும்…!

அபூஃபாத்திமா

“ஈமான் கொண்டவர்களே! (வழி தவறி விடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள்

உரக்க “ஆமீன்’ சொல்லலாமா கூடாதா? ரஃபுவுல்யதைன் (இருகைகளையும் உயர்த்துதல்) செய்யலாமா, கூடாதா? பிஸ்மியை சப்தமின்றி ஓதுவதா, சப்தமிட்டு ஓதுவதா? கையை நெஞ்சிய கட்டுவதா, தொகுப்புளுக்கு கீழ் கட்டுவதா? ரமழான் இரவுத் தொழுகை 8 ரகாஅத்தா, 20 ரகாஅத்தா? என இவைபோன்ற சின்னஞ்சிறிய வி­யங்களினால் முஸ்லிம்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம் மீது பலர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இந்த சிந்தனைகள் சிறந்த அறிவு ஜீவிகளையும் ஆட்டிப் படைப்பதால் இதற்கு மிக விரிவாக நாம் விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அல்லாஹ் மனிதனை கலீபாவாக (பிரதிநிதியாக)ப் படைத்து இந்த மிகவும் சின்னஞ்சிறிய உலகில் பிரதான குறிக்கோளுடன் வாழ அனுமதித்திருக்கிறான். மனிதனின் பிரதான குறிக்கோள் இவ்வுலகில் இறையாட்சியை (இகாமத்துத்தீன்) நிலைநாட்டுவதே. பொதுவாக மனித சுபாவம் சீர்திருத்தம் என்றால் தன்னை மறந்துவிட்டு தன் சுற்றுப்புறச் சூழலை சீர்திருத்துவதே என்ற மாயையில் சிக்கி இருக்கிறது. இதனால் பெரும் பெரும் சிந்தனையாளர்களின் சீர்திருத்த முயற்சிகள் இவ்வுலகிற்கு ஆக்கப்பூர்வமான எந்தப் பலனையும் தரவில்லை. உலகம் உய்ய வேண்டுமென்றால் எந்த சீர்திருத்தவாதியும் முதலில் தன்னில் இறையாட்சியை நிலைநாட்டிவிட்டு அதன் பிறகே தனக்கு வெளியே அதனை நிலைநாட்ட முற்பட வேண்டும்.

இறையாட்சியை நிலை நாட்டுவதில் முஸ்லிம்கள் அனைவரும் தங்களிலேயே ஒரு அழகிய முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அதில் சிறிய வி­யமாக இருந்தாலும், பெரிய வி­யமாக இருந்தாலும் கருத்து வேறுபாடுகளுக்கு ஆளாகிப் பிரிந்து நிற்கும் நிலை உண்மை முஸ்லிம்களுக்குக் கூடவே கூடாது. மாற்றார்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது ஸ்லிம்களில் காணப்படும் கருத்து வேறுபாடுகளும், பிரிந்து நிற்கும் மனப்பான்மையுமேயாகும் என்பதை தமது இயற்கை மார்க்கமான இஸ்லாத்திற்குத் திரும்பும் சகோதரர்களின் வாக்கு மூலங்கள் நிரூபிக்கின்றன.

இறையாட்சியை விட்டு மனித ஆட்சியை (மனித அபிப்பிராயங்களை) நிலைநாட்ட முற்படுவதாலேயே கருத்து மோதல்களும், பிளவுகளும், பிரிவுகளும் ஏற்படுகின்றன. அப்படியானால் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் அதன் மூலம் உய்வுக்கும் சிறிய பெரிய வி­யங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் இறையாட்சி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை இந்த அறிவு ஜீவிகள் உணர வேண்டும்.

இப்போது இந்த அறிவு ஜீவிகள் சின்னஞ்சிறிய வி­யங்கள் என்று கூறுகின்ற வி­யங்களைப் பார்ப்போம். இவை அனைத்தும் தொழுகை சம்பந்தப்பட்ட வி­யங்களே, ஒரு மனிதன் ஒரே ஒரு இறைவனையும், அந்ந இறைவனின் இறுதித் தூதரையும் ஏற்றுக் கொண்ட பின் அந்த இறைவனின் கட்டளையை ஏற்று அந்த இறுதித் தூதரின் வழிகாட்டலின்படி ஐங்கால தொழுகையை நிறைவேற்றுவது தலையாயக் கடமையாக இருக்கிறது. எவன் இந்த ஐங்கால தொழுகையை அதன்தன் நேரத்தில் நிறைவேற்றவில்லையோ அவன் தன்னை முஸ்லிம் என்றோ, இஸ்லாத்தில் தனக்கும் பங்கு இருக்கிறது. என்றோ சொல்லிக் கொள்ள எவ்வித உரிமையும் அற்றவனாக ஆகிவிடுகிறான். தொழுகை இறைவனால் கட்டளையிடப்பட்டு நபி(ஸல்) அவர்களால் அழகிய முன் மாதிரியாக தொழுது காட்டப்பட்டுள்ளது

விசுவாசிகளே! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள், அல்லாஹ்வின் தூதருக்கும் வழிபடுங்கள். உங்களின் செயல்களை (அமல்களை ) வீணாக்கிக் கொள்ளாதீர்கள். (47:33)

மரணம் (யகீன்) உமக்கு வரும் வரை உம் இறைவனை வணங்கிக் கொண்டிருப்பீராக (15:99)

எனஅல்லாஹ்வும் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் (புகாரீ, முஸ்லிம்) என நபி(ஸல்) அவர்களும் கட்டளையிட்டுள்ளார்கள். இந்த நிலையில் பிரதான கடமையான தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியை விட்டு மனித அபிப்பிராயங்களை (மனித ஆட்சி) ஏற்று தொழுதால் அந்தத் தொழுகை அல்லாஹ்வின் அறிவுறுத்தலின் படி வீணாகி விடுகிறது என்பதில் சந்தேகமுண்டோ?

இப்போது இந்த அறிவு ஜீவிகள் சின்னஞ்சிறிய வி­யங்கள் என்று கூறுபவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

உரக்க ஆமீன் சொல்லலாமா, கூடாதா?

தொழுகையில் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் உரக்க ஆமீன் சொல்லி பள்ளி எதிரொலித்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன. மெதுவாக ஆமீன் சொன்னதற்கு ஒரு ஹதீஸையும் இவர்களால் காட்ட முடியாது. இந்த நிலையில் இறையாட்சியை (இகாமத்துத்தீன்) நிலைநாட்ட உண்மையில் விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள், அவனது தூதருக்கும் வழிபடுங்கள், உங்களின் (அமல்களை) செயல்களை வீணாக்கிக் கொள்ளாதீர்கள் (47:33) என்ற இறைக்கட்டளைப்படியும், என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் (புகாரீ, முஸ்லிம்) என்ற நபி(ஸல்) அவர்களின் உத்திரவுப்படியும், இறையாட்சியை நிலைநாட்ட முற்பட வேண்டுமா? அல்லது ஆதாரமில்லாததைச் செயல்படுத்தி மனித ஆட்சியை நிலை நாட்டத் துணை போக வேண்டுமா? ஆமீன் உரக்கச் சொல்வதா, மெதுவாகச் சொல்வதா?என்பது அவர்கள் சொல்வது போல் சின்னஞ்சிறிய வி­யம் தான்.

ஆனால் இந்த சின்னஞ்சிறிய வி­யத்தில் இறைக் கட்டளை மீறப்பட்டு அதாவது இறையாட்சி முறியடிக்கப்பட்டு மனித விருப்பம் (மனித ஆட்சி) நிலை நாட்டப்படுவது சின்னஞ்சிறிய வி­யம் என்று இவர்கள் சொல்லத்துணிவார்களா? கொசு மிகமிக அற்பமான ஒன்று தான் அதைக் கொல்லுவதுகூட அற்பமான பாவமில்லாத ஒரு செயல்தான் ஆனால் அதே சமயம் அந்த அற்பமான கொசுவை ஒருவன் அல்லாஹ் அல்லாத ஒன்றுக்காக பலியிடுவதாகக் கருதிச் செய்தால் அவனது ஈமான் எஞ்சி இருக்க முடியுமா? சிந்தியுங்கள். நாம் இங்கு கொசுவை உதாரணம் காட்டியிருப்பதைக் கண்டு எள்ளி நகையாடலாம். உங்களது ஏளன நகைப்புக்கு முன் அல்லாஹ் கூறும் வசனத்தைப் பாருங்கள்:

நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும்(அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். இறை நம்பிக்கை கொண்டவர்கள் அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையயன்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?’ என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை நல்வழிப்படுத்துகிறான். ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை. (2:26)

அதே போல் ஆமீன் உரக்கச் சொல்லுவது சின்னஞ்சிறிய வி­யம் தான், அதனைச் சொல்லாமல் விடுவதும் பாராதூரமான குற்றமில்லை தான். அதே சமயம் அல்லாஹ்வின் கட்டளையும், அவனது தூதரின் நடைமுறையும் தெளிவாக இருக்கும் நிலையில் அதைவிட்டு, இமாம் அபூ ஹனீபா(ரஹ்) என்ற மனிதரின் கட்டளையை ஏற்றுச் செயல்படும் எண்ணத்தில் ஆமீன் உரக்கச் சொல்லாமல் விடுவது மனித ஆட்சியை நிலை நிறுத்தி, இறையாட்சியை தகர்த்தெறியும் பெருங்குற்றமில்லையா? அறிவு ஜீவிகளே சற்று நிதானமாகச் சிந்தியுங்கள். இங்கு செய்யப்படும் காரியம் சிறிதா, பெரிதா? என்பதல்ல வி­யம். அந்த காரியங்கள் எந்த எண்ணத்தோடு செய்யப்படுகின்றன. அதனால் அவை எத்தனை பெரிய குற்றங்களாக பரிணமிக்கின்றன என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ரஃப்வுல்யதைன் (இரு கைகளை உயர்த்துதல்) செய்யலாமா? கூடாதா?

நபி(ஸல்) அவர்கள் ரஃப்வுல்யதைன் செய்ததாக பல ஹதீஸ் நூல்களில் ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டிருக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் ரஃப்வுல்யதைன் செய்தே தொழுததாக சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஆதாரங்கள் கிடைக்கும்போது, அந்த நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை விட்டு இறையாட்சியை முறியடித்து இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் பெயரால் மனித அபிப்பிராயத்தை நிலை நிறுத்துவது, அதாவது மனித ஆட்சிக்கு வழி வகுப்பது இந்த அறிவு ஜீவிகளுக்கு சாதாரண சின்னஞ்சிறிய வி­யமாகத் தெரிகிறதா?

பிஸ்மியை சப்தமின்றி ஓதுவதா? சப்தமிட்டு ஓதுவதா?

நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் பிஸ்மியை சப்தமின்றி ஓதியதற்குப் பல ஹதீஸ்கள் பல நூல்களில் மிகத் தெளிவாக இருக்க, தொழுகையில் பிஸ்மியை சப்தமிட்டு ஓதியதற்கு சந்தேகத்திற்கிடமில்லாத தெளிவான ஒரு ஹதீஸும் இல்லாத நிலையில். பிஸ்மியை சப்தமிட்டு ஓதுவது இறையாட்சியை முறியடித்து இமாம் ஷாபி(ரஹ்) அவர்களின் பெயரால் மனித அபிப்பிராயத்தை- அதாவது மனித ஆட்சியை நிலைநாட்டும் பெருங்குற்றமில்லையா?

கையை நெஞ்சில் கட்டுவதா, தொப்புளுக்குக் கீழ் கட்டுவதா?

நபி(ஸல்) அவர்களின் நடைமுறையில் கையை நெஞ்சில் கட்டுவதற்குரிய ஆதாரம், தொப்புகளுக்குக் கீழ் கட்டுவதற்குரிய பலவீனமான ஆதாரத்தைவிட ஆதாரப்பூர்வமாக இருக்கும் நிலையில், அதுவும் ஹனபிமத்ஹபின் பெரும் பெரும் அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தொப்புகளுக்குக் கீழ் கை கட்டுவது சம்பந்தமான ஹதீஸ் பலவீனமானது என்று ஒப்புக் கொண்ட நிலையில், அதனைச் செயல்படுத்துவது இறையாட்சியை முறியடித்து, மனித ஆட்சியை நிலை நிறுத்தும் பெருங்குற்றமாக ஆகாதா?
ரமழான் இரவுத் தொழுகை 8 ரகா அத்தா, 20 ரகா அத்தா?

நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவுகளில் 8+3 ரகாஅத் தொழுததற்கு ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்கள் இருக்கின்றன. 20+3 ரகாஅத் தொழுததற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை விட்டு விட்டு, மனித அபிப்பிராயப்படி 20+3 ரகாஅத் தொழுவது இறையாட்சியை முறியடித்து மனித ஆட்சியை நிலைநாட்டும் பெருங்குற்றம் இல்லையா?

இந்த அறிவு ஜீவிகள் இந்தச் செயல்களின் சிறிய பெரிய தன்மையைப் பார்ப்பதை விடுத்து அவை முஸ்லிம் களால் எந்த எண்ணத்தோடு (நிய்யத்) நிலைநாட்டப்படுகின்றன. அது அவர்களை எங்கே கொண்டு சேர்க்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைப்படியே தாங்கள் செயல்படுவதாக எண்ணித்தான் அவ்வாறு செயல்படுகிறார்கள் என்று கூறி தப்பிக்க முற்படலாம். இறைவனுக்கு இணை வைக்கும் மனிதனும் இறைவனின் கட்டளைப்படியே செயல்படுவதாக எண்ணித்தான் செயல்படுகிறான். ‘

அவன் அல்லாஹ்வின் கட்டளை என்று நம்பினானேயல்லாமல், அது அல்லாஹ்வின் கட்டளைப்படி உள்ளதுதானா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கு குர்ஆனும், ஹதீஸும் தெளிவான ஆதாரங்களாக இருந்தும் அவற்றைக் கொண்டு தனது செயல்களைச் சரிபார்த்துக் கொள்ளத் தவறி விட்டான். இங்கு அவன். இறைவனது கட்டளையை நிறைவேற்றுவதாகவே எண்ணிச் செயல் பட்டாலும், இறைக்கட்டளைக்கு மாறாக மனித அபிப்பிராயங்களை ஏற்று இறைவனுக்கு இணை வைக்கிறான் என்பதும், இறைவனுயை தண்டனையிலிருந்து அவனது நல்ல நம்பிக்கை அவனைக் காப்பாற்றாது என்பதுமே உண்மையாகும்.

இந்த காரியங்கள் இணைவைக்கும் அளவுக்கு பெரிய குற்றங்கள் இல்லை என்று வாதாடலாம். இறைவனது கட்டளைகள் நிராகரிக்கப்பட்டு இறைவனது பெயராலேயே மனித அபிப்பிராயங்கள் செயல்படுத்தப்படுகின்றன. என்ற கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு இவற்றின் பாராதூரமான நிலை தெரியாமல் இருக்க முடியாது. அப்படியே இந்த அறிவு ஜீவிகளின் இந்த வாதத்தை ஒரு பேச்சுக்கு ஒப்புக்கொண்டாலும், பொதுமக்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறதென்று சொல்ல முடியுமேயல்லாமல், இவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது.

காரணம் இவர்கள் இந்தச் செயல்களை அல்லாஹ்வின் கட்டளைதான் என்று நம்பிச் செயல்படவில்லை. அவர்களுக்கு இவை அல்லாஹ்வின் கட்டளைப்படியுள்ள நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளிலுள்ளவை அல்ல என்பது நன்றாகவே தெரியும். மனித அபிப்பிராயப்படி இடையில் புகுத்தப்பட்டவை என்பதும் நன்கு தெரியும். அப்படியானால் அவற்றை அவர்கள் ஏன் செயல்படுத்திக் கொண்டும், தங்களின் இந்தத் தவறான செயல்களை நியாயப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். இதில் தான் இரகசியமே இருக்கிறது.

இந்த அறிவு ஜீவிகள் பொதுமக்களை தங்களின் பெரிய முதலீடாகக் கருதுகின்றனர். ஒரு வியாபாரி தனது வியாபாரத்தின் முதலீடு எவ்வாறு சிதறி விடக் கூடாது என்று எண்ணுகிறானோ அதேபோல் இவர்களும் பொதுமக்கள் தங்களைவிட்டு சிதறிச் சென்று விடக் கூடாது என்பதில் பெரிதும் அக்கறை காட்டுகின்றனர். அதனால் பொது மக்களுக்கு ஏற்றவாறு பொதுமக்கள் விரும்பும் வகையில் தங்கள் நடை முறைகளை ஆக்கிக் கொள்கின்றனர். பொதுமக்கள் மனங்கோணாமல்இருக்க அவர்கள் தவறு என்று தெரியாமல் நடைமுறைப்படுத்தும் இச்செயல்களை இவர்கள் தவறு என்று தெரிந்து கொண்டே மனமுரண்டாகச் செயல்படுத்திக் கொண்டு இவை சின்னஞ்சிறிய வி­யங்கள் என்று தங்கள் தவறான செயல்களை நியாயப்படுத்தவும் செய்கின்றனர்.

பொதுமக்கள் அறியாது ஒரு தவறைச் செய்தால் இவர்கள் அறிந்த நிலையில் இரு தவறுகளைச் செய்கிறார்கள். காரணம் பொது மக்கள் தங்களை விட்டுப் போய்விடக் கூடாது என்பதே பொது மக்களின் மனம் கோணி விட்டால் அவர்கள் தங்களை அறிஞர்களாக மதிக்க மாட்டார்கள், தங்களின் பேச்சைக் கேட்க மாட்டார்கள் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தங்களை அழைக்க மாட்டார்கள். சொல்லாலும், கல்லாலும் அடித்துத் துன்புறுத்துவார்கள். இப்படி தங்களுக்குப் பலவகைளிலும் தொல்லைகளும், துன்பங்களும் கொடுக்க முற்படுவார்கள் என்ற அச்சமே இவர்களை இவ்வாறு செயல்படத் தூண்டுகிறது. சுருங்கச் சொல்லின் இவர்கள் அல்லாஹ்வை திருப்திப் படுத்தச் செயல்பட வில்லை. பொதுமக்களை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.

இந்த அறிவு ஜீவிகள் தங்கள் தவறான செயல்களை இன்னொரு கோணத்திலும் நியாயப்படுத்த முற்படுவர் உள்ளதை உள்ளபடிச் சொல்வதால் மக்கள் வெறுப்படைந்து நம்மை விட்டுச் சென்று விட்டால் பின் யாருக்கு உபதேசம் செய்வது? என்ற ஐயத்தைக் கிளப்புவர் சாதாரண அறிவு படைத்தவர்களுக்கு இந்த வாதம் நியாயமாகவேபடும். ஆனால் இந்த வாதமும் தவறேயாகும். உபதேசம் செய்யுங்கள். உபதேசம் விசுவாசிகளுக்கு நிச்சயமாக பலன் தரும் (51:55)

இது இறைவாக்கு. அப்படியானால் உள்ளதை உள்ளபடிச் சொல்லுவதால் நிச்சயம் உண்மை விசுவாசிகள் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள் யாருடைய உள்ளத்தில் விசுவாசம் இல்லையோ அவர்களே உண்மையைக் கண்டு விரண்டோடுவார்கள். பாருங்கள் இவர்களின் சிந்தனை எப்படிப் போகிறதென்று உண்மையை ஏற்றுக் கொள்ளும் உண்மை விசுவாசிகளுக்கு உபதேசிப்பதை விட்டு, உண்மையைக் கண்டு விரண்டோடும் அவிசுவாசிகளுக்கு, அவர்கள் விசுவாசத்தில் வந்து விடுவார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் உண்மையை வளைத்துத் திரித்துக் கூற முற்படுகிறார்களே இது அறிவுடைமையா? பலன் தரும் மக்களை விட்டு பலன் தராத மக்களுக்காக சத்தியத்தை வளைக்க முற்படுவது பலன் தரும் மக்களுக்குச் செய்யும் பெரும் துரோகம் அல்லவா? \

இதனை 1987 மார்ச் அந்நஜாத் இதழில் இடம்பெற்ற “அழைப்புப் பணி” என்ற கட்டுரையில் விரிவாக விளக்கி இருக்கிறோம். இவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தையும் தர முடியாது. முகல்லிதுகளைப் போல் சில வசனங்களைத் திரித்துக் கூறி தங்கள் கூற்றை நியாப்படுத்த முற்படலாம் சத்திய போதனைகளைச் செய்த நபிமார்களில் சில நபிமார்களுக்கு ஒரு ஆதரவாளரும் கிடைக்கவில்லை. பல நபிமார்களுக்கு விரல்விட்டு எண்ணும் அளவிலேயே ஆதரவாளர்கள் கிடைத்தார்கள் என்ற உண்மையை இவர்கள் உணர வேண்டும்.

அல்லாஹ்வின் நாட்டப்படி உலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாவதாக இருந்தாலும் உள்ளதை உள்ளபடி மக்கள் முன் எடுத்து வைப்பதால் அது சாத்தியமாகுமேயல்லாமல், சத்தியத்தை வளைப்பதினாலோ, மறைப்பதினாலோ ஆகப் போவதில்லை என்பதையும் மனித ஒற்றுமைக்கு இறைவன் காட்டிய வழியே சிறந்ததல்லாமல் மனிதரின் மனோநிலைக்கு ஏற்றுவாறு தங்களின் மனித அபிப்பிராயத்தில் தோன்றும் வழி சிறந்தது இல்லை என்பதையும் உணரவேண்டும்.

“”நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்” (20:44)

“”உம் ரப்பின் பாதையில் விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டு நீர் அழைப்பீராக!” (16:125)

ஆகிய குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி சத்தியத்தை வளைப்பதையும், மறைப்பதையும் நியாயப்படுத்த முற்படுகின்றனர். கடினமான மொழிகளில் மக்களைத் திட்டுவதையும், கண்டிப்பதையும் இவ்வசனங்கள் தடை செய்கின்றனவேயல்லாமல் இன்ன காரியம் செய்வது ´ர்க் இன்ன காரியம் செய்வது பித்அத், இப்படிப்பட்ட செயல்களைச் செய்யாதீர்கள். இவை உங்களை நரகில் கொண்டு சேர்க்கும், இப்படிப்பட்ட செயல்களைச் செய்வது கொண்டு வழிகெட்ட 72 கூட்டங்களில் சேர்ந்து நரகம் புக நேரிடும் என்று தெளிவாக மக்களை எச்சரிப்பது கடினமான பேச்சுக்களை என்று இந்த அறிவு ஜீவிகள் எண்ணுவது தவறாகும்.

நீண்ட காலம் பழகிப் போன ஒன்றைத் தவறு என்று எடுத்துக் காட்டுவதால் பொதுமக்கள் ஆத்திரப்படுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அப்படிப்பட்ட தவறுகளைக் சுட்டிக்காட்டாமல் விட்டு விடுவதே நல்லது என்று இவர்கள் எண்ணுகின்றனர். குர்ஆனையும் ஹதீஸையும் முறையாகப் பார்ப்பார்களேயானால் நாம் கூறும் நடைமுறையே சர்வ சாதாரணமாகக் கடைபிடிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக, 20:44 வசனத்தின் படி மென்மையாகச் சொல்ல அறிவுறுத்தப்பட்ட மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னிடம் கூறிய வாசகங்கள் இதோ:

“வானங்களையும், பூமியையும் படைத்த ரப்பைத் தவிர வேறு யாரும் இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப்பற்றி) நான் எண்ணுகிறேன்.” (17:102)

“எவர் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து, (அதை ஏற்காது) பின் வாங்குகிறாரோ அவருக்கு வேதனையுண்டு என்று திடமாக எங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது (20:48)

16:125 வசனத்தின் பிற்பகுதியிலேயே,\ இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் அறிவான்.

என அழகிய முறையில் விவாதம் செய்வதற்கு அதாரமிருக்கிறது. அவற்றைப் பார்த்து படிப்பினை பெற்றுக் கொள்வது அழைப்புப்பணி செய்பவர்களின் கடமையாகும்.\

தொழுகை சம்பந்தப்பட்ட இவை அனைத்தும் மனிதன் தன்னளவில் இறையாட்சியை நிலைநாட்டும் காரியங்களாகும். இவற்றைச் செயல்படுத்துவதில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. இவற்றிலேயே மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு மக்களை திருப்தி படுத்தும் நோக்கத்துடன் இறையாட்சியை முறியடித்து மனித ஆட்சியை நிலை நாட்டுபவர்களின் கையில் இந்த நாட்டினது ஆட்சி ஒப்படைக்கப்பட்டால் பல நிர்ப்பந்தங்களுக் கிடையேயுள்ள ஆட்சியில் எந்த அளவு இறையாட்சியை நிலைநாட்டுவார்கள் என்ற சிந்தித்துப் பார்க்க வேண்டும். கூரை ஏறிகோழி பிடிக்க முடியாதவன் அதற்கு மேல போய் சாதித்து விடுவான் என்பதை எதிரிபார்க்க முடியுமா?

இந்த அறிவு ஜீவிகள் இவற்றை சின்னஞ்சிறிய வி­யங்கள் என்று கூறிவிட்டு பெரும் பெரும் வி­யங்களாக எவற்றைக் கருதுகிறார்கள்? இஸ்லாத்தின் மூலக்கொள்கைகளிலும், அடிப்படைகளிலும் கவனஞ் செலுத்திப்பாடுபட்டா லாவது நலமாக இருக்கும் . இவர்கள் இஸ்லாத்தின் மூலக்கொள்கைகளையும், அடிப்படைகளையும் தகர்த்தெறியும் ´ர்க் பித்அத் இவற்றில் கவனஞ் செலுத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

அழிவில்லாத நித்யமான மறுமைக்கு வெற்றியை ஈட்டித்தரும் காரியங்களை சின்னஞ்சிறிய காரியங்கள் என்று சொல்லிக் கொண்டு சின்னஞ்சிறிய அழிந்து போகும் இவ்வுலகம் சம்பந்தப்பட்ட காரியங்களைப் பெரும் பெரும் காரியங்களாக எண்ணி தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி செயல்பட்டு வருகின்றனர் என்பதனை அடுத்த\

இதழில் தக்க ஆதாரங்களுடன் விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: