ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : ஜனாஸா-மய்யித்தைக் குளிப்பாட்டும் போது தண்ணீரில் இலந்தை இலையை ஏன் போடுகிறார்கள்? இது நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தா? வழிமுறையா?
மாஜிலா இத்ரீஸ், அடிஅக்காமங்கலம்.
தெளிவு : நபி(ஸல்) அவர்களின் புதல்வி (ஜைனபு(ரழி) அவர்கள்) மரணமாகி (அவர்களின் ஜனாஸாவை நாங்கள் குளிப்பாட்டி)ய போது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்து நீங்கள் 3 தடவை அல்லது 5 தடவை, மேலும் தேவை என்று கருதினால் இவற்றைவிட அதிகமான தடவைகள் தண்ணீரையும் இலந்தை இலையையும் கொண்டு ஜனாஸாவைக் குளிப்பாட்டுங்கள். இறுதியாக கற்பூரத்தைத்(தூள் செய்து) தண்ணீரில் போட்டு அதைக் கொண்டும் குளிப்பாட்டுங்கள் நீங்கள் குளிப்பாட்டி முடித்தவுடன் என்னிடம் சொல்லுங்கள் என்றார்கள் அதன்படி நாங்கள் குளிப்பாட்டிவிட்டு அவர்களிடம் கூறினோம். அப்போது அவர்கள் தமது வேஷ்டியை கொடுத்து ஜனாஸாவின் உடலில் இதை அணிவித்து விடுங்கள் என்றார்கள். (உம்மு அதிய்யா (ரழி), புகாரீ)
இவ்விறிவிப்பில் மய்யித்தைத் தண்ணீரையும் இலந்தை இலையையும் கொண்டு குளிப்பாட்டும்படி கூறப்பட்டுள்ளது. தண்ணீருடன் இலந்தை இலையை எவ்வாறு சேர்த்து குளிப்பாட்ட வேண்டும் என்பதற்கான விளக்கம் எதுவுமில்லை. ஆனால் குளிப்பாட்டுவது தண்ணீரைக் கொண்டுமட்டுமல்லாமல், இலந்தை இலையை அத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை ஹதீஸின் வாசகத்திலிருந்து வெளிப்படையாக உணர முடிகிறது.
இலந்தை இலையை என்ன செய்ய வேண்டும் என்பதற்கான விளக்கம் :
” இலந்தை இலையை மய்யித்தின் உடலில் தேய்த்து பிறகு தண்ணீரைக் கொண்டு கழுவுவது” என்பதாக ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். “”இலந்தை இலையைத் தண்ணீரில்போட்டு அதிலிருந்து நுரை வரும்வரை கையை விட்டு கலக்கிக் கொண்டிருக்கவேண்டும். பின்னர் அதிலிருந்து வரும் நுரையை மய்யித்தின் உடலில் தேய்த்து தண்ணீரால் கழுவுவது” என்பதாக இமாம் குர்துபீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறிவிட்டு இதுதான் இலந்தை இலையையும், தண்ணீரையும் கொண்டு மய்யித்தைக் குளிப்பாட்டும் முறை என்பதாகவும் கூறியுள்ளார்கள்.
சிலர் “இலந்தை இலையைத் தண்ணீரில் போட்டுவிட வேண்டும்” என்பதாகக் கூறுகிறார்கள். இதை இப்னு முன்திர்(ரஹ்) அவர்கள் எடுத்துக் கூறிவிட்டு இம்முறையை இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் சரி காணாமல் இதை நிராகரித்துவிட்டு தனித்தனியாக இலந்தை இலையையும் தண்ணீரையும் கொண்டு ஒவ்வொரு முறையும் கழுவ வேண்டும் என்கிறார்கள்.\
இதுவகையில் மிக நம்பகமான அறிவிப்பு ஒன்றை இமாம் அபூதாவூத் அவர்கள் இப்னு ஸீரின் அவர்கள் கூறியுள்ளதாக “”கதாதா” அவர்களின் அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்துள்ளார்கள்.
அதாவது; இப்னு ஸீரின் அவர்கள் நேர்முகமாக உம்மு அதிய்யா (ரழி)அவர்களிடமிருந்து மய்யித்துக் குளிப்பாட்டும் முறையைக் கற்றுக் கொண்டவராவார்கள். ஆகவே “அவர்கள் தண்ணீரையும், இலந்தை இலையையும் கொண்டு மய்யித்தை இருமுறை குளிப்பாட்டிவிட்டு மூன்றாம் முறையாக தண்ணீரையும், கற்பூரத்தையும் கொண்டு குளிப்பாட்டுவார்கள்.” (ஃப்தஹுல்பாரீ பாகம் 3, பக்கம்126)
மேற்கண்டவாறு “இலந்தை இலையை மய்யித்தின் உடலில் தேய்த்து பிறகு தண்ணீரைக் கொண்டு கழுவுவது” என்பதாக ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்களின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு சில பகுதிகளில் இலந்தை இலையை அறைந்து எடுத்து வைத்துக் கொண்டு அதை மய்யித்தின் உடலில் தேய்த்து பின்னர் தண்ணீரால் கழுவுதைப் பார்க்கிறோம்.
ஐயம் : நபி(ஸல்) அவர்களை பூச்சிகள் அணுகாது, விச ஜந்துக்கள் தீண்டாது என்று கூறுகிறார்களே இது உண்மையா? சரியான ஆதாரம் ஏதும் உண்டா?
முஹம்மது இப்றாஹிம். சென்னை.
தெளிவு : ஒரு நாள் இரவு நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது தமது கையைத் தரையில் வைத்தார்கள். உடனே ஒரு தேள் அவர்களைக் கொட்டி விட்டது. அப்போது அவர்கள் அத்தேளைத் தமது மிதியடியால் அடித்துக் கொன்று விட்டு, தாம் தொழுது முடித்தவுடன் “அல்லாஹ் இத் தேளை நாசமாக்குவானாக! இது தொழுது கொண்டிருப்பவரையும் விடுவதில்லை, தொழா தவரையும் விடுவதில்லை” என்றோ அல்லது “நபியையும் விடுவதில்லை, நபி அல்லாதவரையும் விடுவதில்லை” என்றோ கூறிவிட்டு, பின்னர் உப்பையும் தண்ணீரையும் கொண்டு வரும்படி செய்து அதை ஒரு பாத்திரத்தில் ஆக்கி, பின்னர் உப்பு கலந்த அந்த தண்ணீரைத்தேள் கொட்டிய அந்த பாகத்தில் ஊற்றி அந்த பாகத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டு குல்அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் ஆகிய இரு சூராக்களையும் அதற்காக ஓதிக் கொண்டிருந்தார்கள். (அலி(ரழி), பைஹகீ)
யா அல்லாஹ்! நான் உன்னிடத்தில் வெண்குஷ்டம், கரும்குஷ்டம், பைத்தியம் மற்றும் கொடிய நோய்களை விட்டுப் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறி நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். (அனஸ் (ரழி), அபூதாவூத், நஸயீ)
யா அல்லாஹ்! நான் உன்னிடத்தில் (என்மீது) கட்டிடம் இடிந்து விழுவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் மேலிருந்து கீழே விழுந்து விடுவதை விட்டும், நீரில் மூழ்கிவிடுவதை விட்டும், நெருப்பில் எரிந்து கரிந்து விடுவதைவிட்டும் மிகவும் தள்ளாத பருவத்தையடைந்து அதனால் நான் சீரழிவதை விட்டும், “”என்னை ஏதேனும் வி ஜந்துக்கள் கொட்டி மரிப்பதை விட்டும், ஆக இத்தகைய அனைத்து ஆபத்துகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். (அபுல்யஸார் (ரழி), அபூதாவூத், நஸயீ)
ஆகவே மேற்காணும் ஹதீஸ்களை கவனித்துப் பார்க்கும்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்தைப் பார்க்கினும் மேலானவர்களாயிருப்பினும் சாதாரணமாக ஒரு மனிதருக்கு ஏற்படக்கூடிய பாம்பு கடித்தல், தேள் கொட்டுதல் போன்ற சிறிய ஆபத்துகளிலிருந்து நீரில் மூழ்குதல், நெருப்பில் கரியுதல், வெண்குஷ்டம், கரும் குஷ்டம் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகுதல் போன்ற பெரிய ஆபத்துகள் வரை எல்லா ஆபத்துகளுமே அவர்களுக்கும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளவர்களாகவே இருந்துள்ளார்கள் என்பதை மேற்கண்டவாறு அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியுள்ள வாசகங்களே உணர்த்துவதால், “”நபி(ஸல்) அவர்களை பூச்சிகள் அணுகாது, வி ஜந்துக்கள் தீண்டாது” என்று கூறப்படும் கூற்று ஆதாரமற்றது என்பதை அறிகிறோம்.
ஐயம்: அன்னிய ஒரு ஆண் மற்றொரு பெண்ணுடைய கையைப் பிடித்து மூஸாபஹா- கைலாகு செய்வது கூடுமா? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும், ஆயிஷா ஜீரானா, புஜியரா, யு.ஏ.இ
தெளிவு : ஆதமின் புதல்வனாகிய மனிதன் மீது விபச்சாரத்திலிருந்து அவனுடைய பாகத்தை (அவனில்) அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அதன் அவன் அடைந்தே தீருவான். ஆகவே கண்களின் விபச்சாரம் பார்வையாகும். நாவின் விபச்சாரம் பேச்சாகும். காதுகளின விபச்சாரம் செவிமடுத்தலாகும். உள்ளம் ஏக்கமடைகிறது விரும்புகிறது. ஆனால் மர்ம உறுப்போ அதை மெய்ப்பித்து விடுகிறது அல்லது பொய்ப்பித்து விடுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரீ, முஸ்லிம்)
அந்த மூமினாகிய பெண்கள் அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணை வைப்பதில்லை (என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும்……) (60:12) என்ற வசனத்தின் அடிப்படையில் (கை அடித்துக் கொடுக்காமல் வெறுமனே) பேச்சின் மூலமே நபி(ஸல்) அவர்கள் பெண்களிடத்தில் பைஅத்து- ஒப்பந்தம் செய்தார்கள் என்பதாக ஆயிஷா (ரழி) கூறுவதோடு நபி(ஸல்) அவர்கள் தமது ஆதிக்கத்தின் கீழ் உள்ள பெண்களைத் தவிர எந்தப் பெண்ணுடைய கையையும் தொட்டதில்லை என்பதாகவும் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ)
மேற்காணும் வசனமும், ஹதீஸும் அன்னிய ஆணும் பெண்ணும் ஒருவரை மற்றொருவர் பார்த்துக்கொள்வது தவறு என்பதை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்திருக்கும் போது, அன்னிய ஓர் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஒருவர் மற்றொருவரின் கையைப் பிடித்து முஸாபஹா-கைலாகு செய்வதானது பெரிய குற்றமாகும். காரணம் நீங்கள் விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாயிருப்பதோடு (வேறு கேடுகளின் பக்கம் இட்டுக் செல்லும்) தீய வழியாகவும் இருக்கிறது (17:32) என்று அல்குர்ஆன் கூறுகிறது.
ஆகவே ஒருவருக்கொருவர் கண்ணால் பார்ப்பதைவிட கையால் பிடிப்பதானது தீமைக்கு மிக நெருக்கமாயிருப்பதால் மேற்காணும் வசனத்தின் அடிப்படையில் இது கூடாது என்பதை அறிகிறோம்.
ஐயம் : பறவைகளை வேட்டையாடுவது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? பறவைகளை வேட்டையாடுவதை எந்த சந்தர்ப்பத்தில் தடை செய்கிறது?
எம்.ஏ. ஹாஜி முஹம்மது. நிரவி
தெளிவு : உங்களுக்கு (மற்றுமுள்ள) பிரயாணிகளுக்கும் பயன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) நீரில் வேட்டையாடுவதும், அதனைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் வரை கரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது – தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அவனிடமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (5:96)
உங்களில் ஒருவர் ஒரு சிட்டுக்குருவியையோ அல்லது அதைவிடப் பெரியதொன்றையோ அற்குரிய முறை அன்றி அதைக் கொன்று விடுவாரானால் அதை (வீணாக)க் கொன்றது பற்றி அல்லாஹ் கேட்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! “அதற்குரிய முறை” என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் (அதற்குரிய முறை என்று நான் கூறியதாவது) அவர் அதை அறுத்து சாப்பிடுவதேயாகும். வீணாக அதன் தலையை முறிந்து எறிந்து விடுவதல்ல என்றார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ருப்னுல் ஆஸ்(ரழி), நஸயீ, தாரமீ)
மேற்காணும் வசனம், ஹதீஸ் ஆகியவற்றின் வாயிலாக பொதுவாக பறவை மற்றும் பிராணிகளை ¼ட்டையாடுவது ஆகுமானதாகும். என்பதையும், ஹஜ்ஜு, உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியிருக்கும்போது நீரில் வேட்டையாடுவது மட்டும் ஆகும் என்பதையும், தரையில் பறவையையோ மற்ற பிராணிகளையோ வேட்டையாடுவது ஹராம் என்பதையும் அறிகிறோம்.
ஐயம் : இலங்கை வானொலியில் பகல் 12 மணியளவில ஒருவர்4 ரகாஅத்து நபில் தொழுதால் உலகில் உள்ளோர் அனைவரும் செய்த பாவத்தைவிட அதிகமான பாவம் அவர் செய்தவராயிருப்பினும் அல்லாஹ் அவர் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதாக ஒரு முறை கேட்டேன் இது ஸஹீஹான ஹதீஸா? இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் தொழுதார்களா? அதீஃப் அஹ்மத் திமிரி.
தெளிவு : இவ்வாறு தாங்கள் இலங்கை வானொலியிலோ அல்லது வேறு வழியிலோ கேட்டிருந்தாலும் இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸ் எதுவுமில்லை. இதுபோன்று சிறியதொரு அமலுக்குப் பெரிய தவாபு-பலன் உண்டு என்பதாகக் கூறப்படும் ஹதீஸ்களில் பெரும்பாலானவை லயீபானவை அல்லது மவ்ழூஃ- இடைச் செருகுகளானவையாகவே இருக்கும். சிறியதொரு பாவத்திற்கு பெரிய தண்டனை உண்டு என்பதாகக் கூறப்படும் ஹதீஸ்களின் நிலையும் இவ்வாறே லயீபானவை அல்லது மவ்ழூஃ-இடைச்செருகுகளானவையாகவே இருக்கும் என்பதாக இனம் கண்டு கொள்ளும்படி ஹதீஸ்கலா வல்லுநர்கள் அறிவித்துள்ளார்கள்.
ஐயம் : பர்ளான தொழுகையை வீட்டில் தொழ வேண்டிய நிலை ஏற்படும் போது வீட்டிலுள்ள பெண்களுக்கு நாம் இமாமாக நின்று தொழ வைப்பது கூடுமா? பெண்களுக்கு ஒரு பெண் இமாமாக நின்று தொழ வைப்பது கூடுமா? எஸ்.ஏ. சையித் முபாரக், கொல்லாபுரம்.
தெளிவு : பர்ளான தொழுகைகளை அவற்றிற்காக பாங்கு – அழைப்புக் கொடுக்கப்படும் இடமாகிய பள்ளி வாசலுக்குச் சென்று தொழுவதே முறை என்று ஹதீஸில் உள்ளது. நிர்ப்பந்தமாக வீட்டில் தொழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டால் நாம் பெண்களுக்கு இமாமாக நின்று தொழ வைப்பது எத்தடையுமின்றி ஆகுமென்பது மட்டுமின்றி விசேமும் கூட.
ஒரு பெண் மற்ற பெண்களுக்கு இமாமாக நின்று தொழ வைப்பது மார்க்கத்தில் ஆகுமான செயலாகும் என்பதில் ஐயமில்லை. ஆனால் தொழவைக்கும் அப்பெண் முதல் ஸஃப்பில் நடுவில் நின்று கொள்ள வேண்டும். ஆண்களைப்போல் ஸஃப்புக்கு முன்னால் தனியாக நிற்பது கூடாது. இதுபற்றி முழு விபரங்களை அந்நஜாத் இவ்விதழில் “” நபி வழியில் நம் தொழுகை” எனும் பகுதியில் பார்க்க!