ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : ஹதீஃத் அறிவிப்புகளில் இப்னு அப் பாஸ்(ரழி) என்று வருகிறது. இப்னு அப்பாஸ் என்றால் அப்பாஸ் உடைய மகன் என்றுதானே அர்த்தம்.
முகம்மது பாரூக், பேட்டை, திருவெல்வேலி.
தெளிவு : ஒருவரை யார் என்று தெரிந்து கொள்ள, தந்தை பெயர் மூலமாக இன்னாரின் மகன் என்று அறியப்படுவது, அரபிகளின் வழக்கம். எனவே, அப்பாஸ்(ரழி) அவர்களின் மகனை இப்னு அப்பாஸ்(ரழி) என்று அழைத்து வந்தனர். இப்னு அப்பாஸ் அவர்களின் பெயர் அப்துல்லாஹ் ஆகும். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் என்றும் இவர் அழைக்கப்படுவது உண்டு. உமர்(ரழி) அவர்களின் மகனை இப்னு உமர்(ரழி) என்று அழைத்து வந்தனர். அவரது பெயரும் அப்துல்லாஹ் என்பதாகும். எனவே, அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) என்றும் அவர் அழைக்கப்பட்டு வந்ததும் உண்டு.
ஐயம் : இத்தாவில் இருக்கும் உடன் பிறவா சகோதரியுடன் தொலைபேசி மூலம் பேசலாமா? முகம்மது பாரூக், பேட்டை, திருவெல்வேலி.
தெளிவு : உடன் பிறவா சகோதரி என்பது உறவு முறை அல்ல. அவர் அன்னியப் பெண் அவருடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? தொலைபேசியில் தான் பேசவேண்டும் என்றால் அன்னியப் பெண்ணுடன் அப்படி பேசுவதற்கான அவசியம் என்ன? இத்தாவில் இருக்கும் பெண்மணியுடன் பேசுவதற்கு ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் அதுவும் வரையறைக்குள் அல்லாஹ் அனுமதிக்கிறான். அந்த இறைவசனத்தைப் பாருங்கள்.
(இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி, குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றம் இல்லை. நீங்கள் அவர்களைப் பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால், இரகசியமாக அவர்களிடம் வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்.
ஆனால் இதுபற்றி வழக்கத்திற்கு ஒத்த சொல்லை நீங்கள் சொல்லலாம். இன்னும் கெடு முடியும்வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள். அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன்: 2:235
திருமணம் செய்து கொள்வதாக இருந்தால், “குறிப்பாக அறிவிப்பதற்கு வழக்கத்திற்கு ஒத்த சொல்லை நீங்கள் சொல்லலாம்” என்று அல்லாஹ் அனுமதிக்கிறான் கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கிறான். திருமணத்தைக் காரணமாக்கி இத்தா இருக்கும் பெண்களுடன் அடிக்கடி பேச அனுமதி இல்லை என்பதையும் இதிலிருந்து அறிய முடிகிறதல்லவா?
திருமணம் பற்றி குறிப்பாக பேசுவதற்கு அனுமதி இருப்பதால் அப்படி பேசுவதை நேரில் திரை மறைவில் பேசிக் கொள்ளலாம். அல்லது (விடியோ மூலம் அல்லாமல்) தொலைபேசி மூலம் பேசிக் கொள்ளலாம்.
எனவே, இத்தாவில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்யும் எண்ணம் இருந்தால்தான், அதனைத் தெரிவிக்க மட்டும் பேசலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.