தலையங்கம்! – போலிஸ்

in 2020 ஆகஸ்ட்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அந்நஜாத்

இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்

ஆகஸ்டு 2020

துல்ஹஜ்1441 – முஹர்ரம் 1442

  1. தலையங்கம்!
  2. நஃப்ஸும் ரூஹும் ஒன்றா?
  3. நபி வழியே நம் வழி!
  4. கடமையான தொழுகையில் ஏற்படும் குறையும்…  அதை நிறைவாக்கும் உபரியான தொழுகையும்…
  5. அமல்களின் சிறப்புகள்….
  6. பெண்களுக்கும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளும் உரிமை உண்டா?
  7. ஹலாலான சொந்த செல்வத்திற்கே ஜகாத்!
  8. சுவர்க்கம் என்பதும் மறைவான  இறை நம்பிக்கையில் உள்ளதாகும்!

09.அறிந்து கொள்வோம் !

  1. ஐயமும்! தெளிவும்!!

தலையங்கம்!

போலிஸ்

போலிஸ் என்ற வார்த்தைக்கு காவல் என்ற பொதுவான அர்த்தம் கொள்ள முடிகிறது. காவல் என்ற வார்த்தை நமக்கு துணை நிற்கும் நல்ல வார்த்தையாகவே பார்க்கப்பட வேண்டி இருக்கிறது. அப்படி யாரேனும் பார்க்கிறார்களா? வாழ்வாதாரத்திற்கான வழியாக இருப்பதால் போலிஸ் வேலையில் சேர்பவர்கள் மட்டும், இதை நல்ல வார்த்தையாகப் பார்க்கின்றனர். சேர்ந்து அனுபவம் பெற்றபின் நல்லவர்கள் அந்த பார்வையை தொடர்கிறார்களா? அல்லது விரும்பாவிட்டாலும் அரசு சம்பளத்திற்காக பணியைத் தொடர்கிறார்களா? பொதுமக்கள் பலராலும். இது நல்ல வார்த்தையாகப் பார்க்கப்படுவதில்லை என்பதுதான் நிதர்சன உண்மையாக இருக்கிறது! காரணம் என்ன? சிந்திப்போம்.

போலிசின் ஒரு பக்கம்!

போலிஸ் ஸ்டேசன் பக்கம் மட்டும் தலைவைத்து படுக்கக் கூடாது, போலிஸ்காரருடன் நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது, கேஸ் கிடைக்காவிட்டால் உடன் இருப்பவர் மீதே கேஸ் போட்டுவிடுவார்கள், அவர்களிடம் ஈவு இரக்கம் இருக்காது, பாக்கெட்டில் கையை விட்டு மொபைல் அல்லது பணத்தை எடுத்துக் கொள்வர். சல்லி பெறாத அற்ப விஷயத்திற்கு சில போலிஸ்காரர்களிடம் அவஸ்தைப்பட்டவர்கள் தெரிவித்த சோகங்களைக் கேட்டபோது, இறைவன் அவற்றை தாங்கிக் கொள்ள அவர்களுக்குத் தனியாக ஒரு இதயத்தைக் கொடுத்திருப்பான் என்று எண்ணத் தோன்றியது.

இன்னும் இன்னும் என்று இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் போலிஸ் மீது பல தரப்பு மக்களி டமிருந்து நிரம்பவே இருக்கின்றன. அவர்களுடைய குடும்பம் நன்றாகவே இருக்காது என்று சாபத்தையும் சிலர் சேர்த்து கொடுத்து விடுகிறார்கள். இவர்கள் மக்களை காவல் காக்கின்றனரா? அல்லது மந்திரிகளை, அரசிய ல்வாதிகளை, உயர் பதவிகளில இருக்கும் அரசு அதிகாரிகளை, செல்வந்தர்களை காவல் காக்கின்றனரா? என்ற வினாவிற்கு எவரும் சட்டென்று சரியான பதிலை சொல்லி விடுவர்!

போலிசின் மறுபக்கம்!

எல்லா போலிஸ்காரர்களும் மேலே கூறியவாறுதான் இருக்கிறார்களா என்று எவரும் ஒப்பீடு செய்வதில்லை என்றே நாம் கருதுகிறோம். ஒரு சில கெட்டவர்களை அளவு கோலாக எடுத்துக் கொண்டு ஒரு துறையை எடை போட்டு விடுகிறார்கள். பொதுவாகவே காவலர்களின் பணிநிலை எவ்வாறு இருக்கிறது? முதல்வரை, மந்திரிகளை, அரசியல்வாதிகளை, மேல் நிலை அதிகாரிகளை காவல் காக்கும்போது, போலிஸ்காரர்கள் படும் கஷ்டங்களைப் பார்த்து எம் மனம் நொந்து போயிருக்கிறது. இதனால் எம் மனதின் “மென்மையான மூலையில்” (SOFT CORNER) போலீஸ்காரர்களுக்கான இடத்தை எப்போதும் தந்திருக்கிறோம்!

காலை எட்டு மணிக்கு வருவதாக தெரிவித்த முதல்வர் / மந்திரிகள் மாலை நான்கு மணிக்கு வரும்வரை, சுற்றுலா மாளிகையிலிருந்து சிட்டிக்குள் முதல்வர் போகும் இடம்வரை கால் கடுக்க நின்று கொண்டும், அசந்து போகும் நேரத்தில் கடுமையான வெயிலிலும் ஒரு வினாடி கூட உட்கார இடமில்லாதபோதும், உயர் அதிகாரிகள் வாகனங்களில் வரும்போதெல்லாம், துவண்டுபோன துண்டாக வெயிலில் நைந்து போய் நிற்கும் போலிஸ் தங்களை விரைப்பாக்கிக் கொண்டு சல்யூட் அடித்து பந்தோபஸ்து டூட்டி பார்க்கும் காவலர்களுக்காக எம் மனம் வலித்ததுண்டு! அதேபோல டிராஃபிக் டூட்டி பார்க்கும் ஆண் பெண் காவலர்களின், நின்று கொண்டேயிருக்கும் அவர்களின் அன்றாட கஷ்டங்களும் எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

எமர்ஜென்ஸி நேரத்தில் பொண்டாட்டியாவது பிள்ளையாவது, வா என்றால் போயாக வேண்டும். இது யாருக்காக? போலிஸ் வேலையில் சேவை மனப்பான்மையுடன் நேர்மையாகப் பணியாற்ற வந்த பட்டதாரி புது அதிகாரி, மேலதிகாரியின் உத்தரவால் தவறான வழியில் திசை மாற்றம் செய்யப்படுகிறார். பழகியபின் அவரும் மாறி விடுகிறார். எம் மனம் அப்போதெல்லாம் வெதும்பியதுண்டு. சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் முழுமையாக இல்லாதபோது, பொட்டலமாக அந்த உடலை எடுத்து செல்வதற்கு ஒரு போர்வை கூட பொதுமக்கள் எவரிடமிருந்தும் அவசரத்திற்கு கிடைக்காது என்று ஆய்வாளர் ஒருவர் தம் கஷ்டத்தை பகிர்ந்துகொண்டபோது சமுதாயத்தை எண்ணி எம்மை நாமே நொந்து கொள்ளும்படி ஆகிவிட்டது.

உயர் கல்வி பெற்று உயர் பதவிக்கு வந்த அதிகாரிகள் மற்றும் அனுபவத்தால் உயர் பதவி பெற்ற அதிகாரிகள், இறுதிவரை நேர்மை, ஒழுக்கம் ஆகிய கொள்கை உறுதியுடன் பணியாற்றி வருபவர்கள் பலரை நாம் அறிந்திருக்கிறோம். அவர்களுடைய பட்டியலைத் தருவது எமது நோக்கமன்று. ஏனெனில், நல்லவர் ஒருவரின் பெயர் அப்பட்டியலில் இடம் பெற தவறி விடக் கூடாது என்பதற்காக. கலவரங்கள் போன்ற இக்கட்டான சூழலில் உயிரை துச்சமாகக் கருதி எவருக்கும் பயப்படாமல் திறமையாக பணியாற்றியவர்கள் பலரை நாம் அறிந்திருக்கிறோம்.

போலிசுக்கு மக்களின் மரியாதை!

நம் நாட்டில் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவு தமிழ்நாட்டில் மட்டும்தான், மக்கள் போலிசார்களை அதிகமாக போற்றி மதித்து வருகின்றனர். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற சொல்லாடலை மதிக்கும் மக்கள் தமிழகத்தில் தான் அதிகம். தவறு செய்த போலீசைக் கூட அவர்களின் சீருடைக்கு மரியாதை தந்து எம் தமிழ் மக்கள் அமைதி காப்பதுண்டு.

சாத்தான் குளம் காவல் நிலையம்!

இப்படிப்பட்ட தமிழ்நாட்டில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் லாக் டவுன் நேரத்தில் கடை வைத்திருந்ததாகக் கூறி கைது செய்து விசாரணை என்ற பெயரில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை மகன் இருவரையும் போலிஸ் அடித்தே கொன்று விட்டனராம். ஒரு மகன் தன் தந்தையை நிர்வாணமாகப் பார்த்திருக்க மாட்டார். அதேபோல தந்தையும் சிறுகுழந்தைப் பருவத்தில் நிர்வாணமாகப் பார்த்த தம் மகனை, அதன் பிறகு ஒரு போதும் நிர்வாணமாகப் பார்த்திருக்க மாட்டார்.

கொடுமையிலும் கொடுமை காட்டுமிராண்டி காவலர்கள் தந்தை மகன் இருவரையும் நிர்வாணமாக்கி அந்த உறவைக் கொச்சைப்படுத்தி, அவர்களின் ஆசனவாயில் லத்தியை செருகி காவல் நிலையத்தைப் பூட்டிவைத்து இருவரையும் ரத்தம் சொட்டச்சொட்ட அடித்து, துவைத்து, துவசம் செய்தனராம். மார்பில் இருந்த ரோமங்கள் பிடுங்கப்பட்டனவாம். தந்தை மகனின் அலறல் சத்தம் இரவெல்லாம் கேட்டுக் கொண்டிருந்ததாம்! அருகில் குடியிருந்தவர்கள் பயம் இரக்கம் என்ற இரு உணர்வுகளுக்கிடையே இரவைக் கழித்தனராம்! ! இறைவா! இது தொடர்பான எந்த ஒரு செய்தியையும் உண்மை ஆக்கிவிடாதே! தந்தை மகன் இருவரையும் காப்பாற்று! என்று எம்மால் பிரார்த்திக்கத்தான் முடிந்தது. ஆனால் செய்திகள் முந்திவிட்டன! இருவரும் கொல்லப்பட்டு விட்டனராம்.

சம்பவத்தை சென்னை ஹைகோர்ட்டின் மதுரை கிளை தாமாகவே முன்வ ந்து விசாரணையைத் துவக்கியது. தமிழக அரசு சிபிசிஐடிக்கும், மீண்டும் சிபிஐக்கும் மாற்றி இருக்கிறது. என்ன பிரயோஜனம்? உண்மைக்காக உயிரைக் கொடுத்த அந்த உத்தமர்களின் சகாப்தம் முடிந்து விட்டது; மீண்டும் உயிர் பெற்று அவர்களால் இந்த பூமிக்கு வரமுடியாது. ஆனால், தண்டனையிலிருந்து குற்றவாளிகள் தப்பித்து விடாமல் விசாரணையை விரைவுபடுதி, சரியான தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும். அப்போதுதான் நீதியாளர்களின் நாடு என்று இழந்து விட்ட பெயரை இந்தியா மீட்டெடுக்க முடியும்!

நீதி நிலை நாட்டப்படுமா?

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை கொன்றதற்காக மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது போலீஸ்! ஆனால் இங்கோ‘ உன்னால் ஒன்றும் புடுங்க முடியாதுடா’ என்று நீதிபதி காதுபட சொல்கிறார் நமது போலிஸ். இவ்வளவு பெரிய கொடுமைகள் செய்த காவலர்கள் மனிதர்கள் தானா? இவர்கள் குற்றவாளி என்றால், தயவு செய்து அரசு அவர்களுக்கு காக்கி சீருடையை திரும்பப் பெற்றுத் தர முயற்சிக்காதீர்கள். கடும் தண்டனை கிடைக்க முயற்சி செய்யுங்கள். தந்தை மகன் இருவரும் உண்மைக்காக உயிர் நீத்தார்கள்! அந்த உண்மையை நீதிமான்கள் நிலைநாட்டட்டும்

நடப்பது என்ன?

கொன்றவர்களுக்கு எதிர்ப்பு காட்டாமல், கொல்லப்பட்டவர்களை ஈவு இரக் கமின்றி நோயாளிகள் என்று கூறும் சமுதாயமாக எம் சமுதாயம் இருக்கிறது. “காவல் துறை உங்கள் நண்பன்” என்று கூறிய போலிஸ் அந்த மக்களை என்றுமே நண்பர்களாக ஆக்கிக் கொள்ள முயன்றதில்லை யே-ஏன்? “பிரண்ட்ஸ் ஆப் போலிசை” ஏன் அனுமதித்தீர்கள்? மக்கள் மீது வன்மத்தைக் கட்டவிழ்த்து விடவா? மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று நினைத்து, மக்களும் ஆட்சியாளர் வழியில் பயணித்து, “பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்“ போல, “ஃபிரண்ட்ஸ் ஆப் பீப்ள்” என்று ஒன்றை ஏற்படுத்தினால், அது நியாயமாகி விடாதல்லவா? சாத்தான் குளம் பிரச்னை ஐநா வரை சென்று விட்டதாம். ஐநா பொதுச் செயலாளர் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறாராம். .

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலர்கள், அதிகாரிகள், புதிதாகப் பொறுப்பேற்ற காவல் துறையினர், விசாரணைக்காக நியமிக்கப்பட்டவர்கள் என எவரையும் விட்டுவிடாமல் பலதரப்பட்டவர்களையும் ஒவ்வொருவரின் பின்புலம் பற்றி விலாவாரியாக ஆராய்ந்த ஜூனியர் விகடன், பலரின் பின்புலம் குற்றப் பின்னணிக் கொண்டிருப்பதாகவும், அதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களைக் துணிச்சலுடன் கொடுத்து, சாத்தான்குளம் விவகாரத்தில் நீதி கிடைக்குமா என்ற தமது ஐயத்தை வெளிப்படுத்தி தமது தனித்துவம் பெற்ற எழுத்துலக பாரம்பரியத்தை நிலைநாட்டி இருக்கிறது – ஆனந்த விகடன் குழுமத்தினர்! சினிமாக்களில் வருகின்ற நேர்மையான போலீஸ் மட்டுமே சாத்தான்குளம் விவகாரத்தில் உண்மையைக் கொண்டு வரமுடியும் என்று கூறி, அப்படித் தெரிவிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு விட்டதற்காக தமது வருத்தத்தையும் பதிந்திருக்கிறது ஜூவி!

உண்மையைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் பல மீடியாக்கள் இடையே ஆனந்த விகடன் குழுமத்தினரைப் எம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதேபோல, டூட்டியில் இருந்து கொண்டே பயங்கர நிகழ்வுகளை அணுவணுவாக நேரில் பார்த்த அந்த பெண் காவலர் ரேவதி அவர்கள் விசாரணைக் குழுவினருக்கு தான் கண்ட உண்மையை பதிய வைத்திருக்கிறார். அவர்களுக்கு எமது மரியாதைகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவரை மனமாரப் பாராட்டுகிறோம்.

இவ்வளவு நடந்தும் குற்றவாளிகள் தப்பித்தால், மறுமையின் கடுமையான தண்டனையிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்பது நிச்சயம்.

“அவர்கள் எங்கிருப்பினும், அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்விடமிருதும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு ஒப்பந்தமில்லாமல் (தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்; ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை நிராகரித்தார்கள்; அநியாமமாக நபிமார்களை கொலை செய்தார்கள். இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும், (இறைக் கட்டளையை) மீறி நடந்து கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்). (அல்குர்ஆன் 3:112)

Previous post:

Next post: