நபி வழியே நம் வழி!
அஹமது இப்ராஹீம், புளியங்குடி
அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் வின் அருள் உண்டாவதாக!
அன்பாளர்களே!
ஒரு தாய் மக்களாக இருக்கவேண்டிய அனைத்து சமுதாய மக்களும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு இரத்தம் சிந்தக் கூடிய அளவுக்கு அதுவும் கொரானா நோய் இறங்கி மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும் மதவாதப் புரோகிதர்கள் அப்பாவி மக்களைத் தூண்டி மத மோதல்களை உருவாக்குகின்றனர்.
நம்முடைய சகோதர சமுதாயத்தில் அவர்கள் கடவுளாக வணங்கக்கூடிய முருகன் பற்றி அவர்களுக்கிடையே வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே! அதே சமயத்திலுள்ள புரோகிதர்கள் மத மோதல்களை உருவாக்கும் எண்ணத்தோடு சம்பந்தமே இல்லாமல் இஸ்லாமிய மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் வம்புக்கிழுக்கின்றனர். காரணம் கால காலமாக இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்து அவர்களை மோதவிட்டு அதன் மூலம் அனைத்து உயர் பதவிகளையும் ஆக்கிரமித்தும், அனுபவித்தும் உல்லாச வாழ்வு வாழ்கின்றனர் அது அவர்களுடைய பிழைப்பு.
இதே வழியில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் நமது சமுதாயப் பிரிவு இயக்கங்களைச் சார்ந்த புரோகிதர்கள் உடனே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்து சமுதாயம் புரோகிதர்களுடன் மதம் சம்பந்தமான விவாதத்திற்கு தயார் என்று நமது மக்களைத் தூண்டி விடுகிறார்கள். இத்தகைய விவாதத்திற்கு இறைவன் அனுமதி யளித்திருக்கின்றானா? என்று ஆராய்ந்து பார்த்தால் வசனம் 15:94 புறக்கணிக்க சொல்கின்றனர். அல்குர்ஆனில் ஒரே ஒரு இடத்தில் அதுவும் சத்தியத்தை தெரிந்து கொள்ளவேண்டி ஆர்வத்துடன் வரும் மனிதர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான்.
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்குர்ஆன்: 16:125)
அதாவது நாம் மக்களிடம் சென்று அழகிய முறையில் உபதேசம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குரிய பதிலை வஹியின் அடிப்படையை வைத்தும் அதற்கு விளக்கமாக அமைந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் போன்றவற்றின் மூலம் அழகிய முறையில் பதிலளிப்பதைக் குறித்தே இவ்வசனம் கட்டளையிடுகிறது. மாறாக வீணான வீண் விவாதங்களில் ஈடுபடுவதை மார்க்கம் தடை செய்கிறது. காரணம் மார்க்கத்தை நிராகரிக்கும் நிராகரிப்பாளர்களிடம் விவாதம் செய்யும் போது ஒருவர் குறையை ஒருவருக்கொருவர் சுட்டிக்காட்டும் போது கோபதாபங்கள் வர வாய்ப்பு ஏற்படும்.
இதன்மூலம் வாய்த் தகராறு ஏற்பட்டு பின்பு கைகலப்பாக மாறி வன்முறைதான் வெடிக்கும். அதனால் தான் அல்குர்ஆனில் பல இடங்களில் வீணான வீண் விவாதங்களை எல்லாம் வல்ல அல்லாஹ் தடை செய்து புறக்கணிக்கச் சொல்கின்றான்.
எனினும், (நபியே!) மன்னிப்பைக்கைக் கொள்வீராக! நன்மையை(க் கடைபிடிக்கு மாறு மக்களை) ஏவுவீராக! மேலும், அறிவீனர்களைப் புறக்கணித்துவிடும். குர்ஆன்:7:199
அதே சமயம் இந்த தேவையற்ற விவாதங்கள் மூலம் உன் கட்சியா? என் கட்சியா? என இளைஞர்கள் வாதத் திறமையின் மூலம் தூண்டப்படுவதால் மூளைச் சலவை செய்யப்பட்ட அந்த இளைஞர்கள் இந்தப் புரோகிதர்களுக்கு ரசிகர்களாகவும், அடிமைகளாகவும் ஆகிவிடுகின்றனர். அதன் மூலம் புரோகிதர்களின் வருமானம் பெருகும். இதில் ருசி கண்டு இவ்வாறு பல இலட்சங்களை சம்பாதித்தவர்கள்தான் இன்றைய தவ்ஹீத் மத போதகர்களும், புரோகிதர்களும் ஆவர். இவர்கள் மூலம் நமது சமுதாயம் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இனியும் சந்திக்கவுள்ளது. அதனை விட்டும் நமது சமுதாயத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக.
எனவே நமது உயிரினும் மேலான அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்வோரை காவல்துறை, நீதிமன்றங்கள் மூலம் நட வடிக்கை எடுப்பதற்கு மார்க்கம் தடை செய்யவில்லை. மாறாக பதிலுக்குப் பதிலாக அவர்களுடைய மதக் கடவுளர்களை தரக் குறைவாக விமர்சிக்க நமக்கு தடை இருக்கின்றது.
(முஃமின்களே!) உங்கள் பொருள்களி லும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள், ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன்: 3:186)
அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள், (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம். பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். (குர்ஆன்: 6:108)
எனவே எனது அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களை கூர்ந்து கவனித்துப் படியுங்கள். ஆராய்ந்து பாருங்கள், அதன்படி நடப்போம் வாருங்கள்.
மத்ஹபு மற்றும் தவ்ஹீத் இயக்கங்களின் புரோகிதர்களை புறக்கணிப்போம். அல்குர்ஆன், ஹதீஃத்களோடு நேரடியாக தொடர்பு கொள்வோம். நபி(ஸல்) அவர்களின் வழியே நமது வழியாக ஆக்கிக் கொள்வோம். இம்மை மறுமை வெற்றி உறுதி என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை வைப்போம்.