பெண்களுக்கும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளும் உரிமை உண்டா?

in 2020 ஆகஸ்ட்

பெண்களுக்கும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளும் உரிமை உண்டா?

S.H.  அப்துர் ரஹ்மான்

அன்புள்ள சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழகத்தில் ஜனாஸா தொழுகை விஷயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்தும் நபி(ஸல்) பெண்களுக்கு வழங்கிய அனுமதி குறித்தும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

இன்றைய தமிழக முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகையில் பெண்கள் பங்கெடுக்க அனுமதிப்பதில்லை.

தந்தையை இழந்த மகளுக்கும், கணவனை இழந்த மனைவிக்கும் ஜனாஸா தொழும் உரிமை மறுக்கப்படுகிறது. இது நியாயமா? தந்தைக்காக மகளோ, கணவனுக்காக மனைவியோ கூட அவர்களுக்காக வீட்டில் ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்ற நிலை உள்ளது. பெற்ற மகளை விட வேறு யார் தந்தைக்கு சிறப்பாக துஆ செய்ய முடியும்? தனது தந்தைக்காக நடக்கும் ஜனாஸா தொழுகையில் அவரது மகள் கலந்து கொள்ள வாய்ப்பு மறுக்கப்படுவது நியாயமா? மனைவியை விட வேறு யார் கணவனுக்காக சிறப்பாக துஆ செய்ய முடியும்?

குடும்பத்தினர் ஜனாஸாவுக்காக தொழுகை நடத்தும் உரிமையை யாரும் பறிக்க முடியாது.

பெண்களுக்கு ஜனாஸா தொழுகை தொழ அனுமதி உண்டா?

ஆயிஷா(ரழி) அவர்கள், சஅத் பின் அபீ வக்காஸ்(ரழி) அவர்களின் பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டு சென்று தொழுகை நடத்துமாறு கூறினார்கள். மக்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது ஆயிஷா(ரழி) அவர்கள் எவ்வளவு விரைவாக மக்கள் மறந்துவிடுகின்றனர். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், சுஹைல் பின் அல்பைளா(ரழி) அவர்களுக்குப் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள் என்று கூறினார்கள். இந்த ஹதீஃத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம்: 1770, அத்தியாயம்: 11, இறுதிக் கடன்கள்.

ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது :

சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் இறந்தபோது அவரது பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டு வருமாறும், தாங்கள் அவருக்கு (இறுதித் தொழுகை) தொழப் போவதாகவும் நபி(ஸல்) அவர்களின் துணைவியர் சொல்லி அனுப்பினார்கள். அவ்வாறே மக்களும் செய்தனர். அப்போது அவரது பிரேதம் நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் அறைகளுக்கு அருகில் கொண்டு வந்து அவர்கள் தொழுது கொள்வதற்காக வைக்கப்பட்டது. பிறகு “மகாஇத்” எனும் இடம் நோக்கி இருந்த “பாபுல் ஜனாயிஸ்” தலைவாயில் வழியாகப் பிரேதம் வெளியே கொண்டுசெல்லப்பட்டது.

இது குறித்து மக்கள் குறை கூறுவதாகவும் “பிரேதங்களைப் பள்ளிவாசலுக்குள் கொண்டு செல்லக்கூடாது” என்று அவர்கள் பேசிக் கொள்வதாகவும் நபி(ஸல்) அவர்களுடைய துணைவியருக்குச் செய்தி எட்டியது. அப்போது நான் “மக்கள் தங்களுக்குத் தெரியாத விஷயத்தில் ஏன் அவசரப்பட்டுக் குறை கூறுகின்றனர்? பள்ளிவாசலுக்குள் ஒரு பிரேதத்தைக் கொண்டு சென்றதற்காக எங்களை அவர்கள் குறை சொல்கின்றனர். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சுஹைல் பின் அல்பைளா (ரழி) அவர்களுக்குப் பள்ளிவாசலின் நடுப்பகுதியில்தான் தொழுகை நடத்தினார்கள் என்று கூறி னேன். இதை அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம்:1771, அத்தியாயம்: 11, இறுதிக் கடன்கள்.

பெண்கள் எப்படி ஜனாஸா தொழுகையில் சேரலாம் என்று நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்யவில்லை. ஜனாஸாவை எப்படி பள்ளிவாசலுக்குள் கொண்டுவரலாம் என்று தான் நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்ததாக இந்த ஹதீஃதில் கூறப்பட்டுள்ளது. எனவே பெண்கள் ஜனாஸா தொழுகையில் பங்கெடுப்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததன் காரணமாகவே நபித்தோழர்கள் இதை ஆட்சேபிக்கவில்லை என்று அறியலாம்.

நபி(ஸல்) அவர்கள் வாழ்வில் ஒரு சம்பவம்:

அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா(ரழி), நபி(ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபி(ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூதல்ஹா (ரழி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஹுலைம் அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை. அறிவிப்பவர் : அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ், நூல் : ஹாகிம்:1/519.

நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி இறந்தவரின் குடும்பத்தினர் ஜனாஸா தொழுகை தொழுதுள்ளனர். அதுவும் இறந்தவரின் வீட்டில் வைத்து தொழுதுள்ளனர். அதில் ஒரு பெண்ணும் கலந்து கொண்டுள்ளார் என்று இந்த ஹதீஃத் தெளிவாகக் கூறுகிறது.

இதில் இருந்து பெண்களும் ஜனாஸா தொழுகையில் பங்கு பெறலாம் என்பதை அறிந்து கொள்கிறோம். ஊர் மக்கள் தொழுவதற்கு முன்னர் குடும்பத்தார் மட்டும் தொழுதுள்ளனர் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்கிறோம

பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளக்கூடாது என்றால் இதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள்.

தொழுகை நடத்தத் தகுதியானவர்கள்:

ஒருவர் இறந்துவிட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான்தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும் மறுக்க முடியாது.

“எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக-தலைவனாக ஆகாதே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமஸ்வூத்(ரழி), நூல்: முஸ்லிம்:1079,1078

நபி(ஸல்)வுடைய இந்தப் பொதுவான அறிவுரையில் திருமணம் நடத்தி வைத்தல், ஜனாஸா தொழுகை நடத்துதல் உள்ளிட்ட அனைத்துமே அடங்கும் என்பதால் இறந்தவரின் குடும்பத்தினரே ஜனாஸா தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் என்பதை அறியலாம்.

நான்கு தடவை தக்பீர் கூறுதல்:

நஜ்ஜா´ மன்னருக்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தியபோது அவருக்காக நான்கு தடவை தக்பீர் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி), நூல்: புகாரி:1245,1318, 1319, 1328, 1334, 1333, 3881, 3879)

ஐந்து தடவை தக்பீர் கூறுதல்:

ஐந்து தடவை தக்பீர்கள் கூறுவதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.

ஸைத்(ரழி) அவர்கள் எங்கள் ஜனாஸாக் களுக்கு நான்கு தக்பீர் கூறி தொழுவிப்பார், ஒரு தடவை ஐந்து தடவை தக்பீர் கூறினார். இது பற்றி அவரிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், நபி(ஸல்) அவர்கள் ஐந்து தடவையும் தக்பீர் கூறியிருக்கிறார்கள் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா, நூல்: முஸ்லிம்: 1589.

நான்கு தக்பீர் கூறுவது தான் நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது அதுவே சிறப்பானது என்பதையும், மிக அரிதாக ஐந்து தக்பீர்கள் கூறியுள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஜனாஸா தொழுகை முறை :

முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதவேண்டும்.

இரண்டாவது தக்பீர் கூறிய பின் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும்.

மூன்றாவது, நான்காவது தக்பீர்களுக்குப் பின், நபி(ஸல்) கற்று தந்த துஆக்களை ஓதிக் கொள்வதுடன் நமக்குத் தெரிந்த மொழியிலும் துஆச் செய்யலாம்.

“இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி), நூல்: இப்னு ஹிப்பான்: 7:345, 7:346

உள்ளத்தூய்மையுடன் கலப்பற்ற முறையில் துஆச் செய்வது என்றால் நமக்குத் தெரிந்த மொழியில் துஆச் செய்யும்போது தான் அது ஏற்பட முடியும். எனவே இறந்த வருக்காக மறுமை நன்மையை வேண்டி தாய்மொழியில் துஆச் செய்யலாம்.

பெண்களின் இன்றைய   நிலை :

இன்றைய சமூக சூழலில் பெண்கள் பள்ளிவாசலோடு உள்ள தொடர்பை நிறுத்திக் கொண்டார்கள். ரமழான் மாத காலத்தில் மட்டும் பள்ளிக்கு வந்து தராவீஹ் தொழுகையில் கலந்து கொள்கிறார்கள். ஐவேளை தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு வருவதில்லை. இதற்குப் பல காரணங்கள் பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்ற தடையேதும் நபியவர்கள் விதிக்கவில்லை என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம்.

இதை சாலிம்(ரஹ்) அவர்கள் தம் தந்தை அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஃத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.   முஸ்லிம் : 751, அத்தியாயம் : 4, தொழுகை.

பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுகையில் ஈடுபடக்கூடிய அமைதியான சூழல் இருக்கும் பகுதி மக்கள் இது பற்றி சிந்திக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் ஐவேளை தொழுகைக்கும் பள்ளிவாசலில் வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. அதுபோல் ஜனாஸாத் தொழுகையிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு மேலே உள்ள ஹதீஃத்கள் ஆதாரமாக அமைந்துள்ளது.

பெண்கள்  ஜனாஸாவைப் பின் தொடராமல் இருப்பது சிறந்தது:

ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது அதிக நன்மை தரக்கூடியது என்றாலும் ஜனாஸாவைப் பெண்கள் பின்தொடர்ந்து செல்லாமல் இருப்பது நல்லது.

பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டாலும் ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

“ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களால் தடுக்கப்பட்டிருந்தோம். ஆனால் வன்மையாக தடுக்கப்படவில்லை” என உம்மு அதிய்யா(ரழி) அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி : 1278

மென்மையான முறையில் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்றால் அதைச் செய்யாமலிருப்பது நல்லது என்றே புரிந்து கொள்ளவேண்டும்.

ஜனாஸா தொழுகைக்குத் தனி இடம் :

வீட்டிலும், பள்ளிவாசலிலும் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்றாலும் அது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அரிதாகவே நடந்திருக்கிறது.

பள்ளிவாசலில் ஜனாஸாவை வைப்பதற்கு என தனியாக ஒரு இடம் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. பெரும்பாலும் அங்கு தான் ஜனாஸாவை வைத்து தொழுகை நடத்தினார்கள்.

“விபச்சாரம் செய்த ஆணையும், பெண்ணையும் யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பள்ளிவாசலுக்கு அருகில் இறந்தவர்களின் உடல் வைக்கப்படும் இடத்தில் வைத்து அவ்விருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: புகாரி: 1329,4556,7332.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஜனாஸாக்களை வைப்பதற்காக நிர்ணயிக்கப் பட்ட தனியிடம் இருந்தது என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.

மேலும் சில நேரங்களில் வீட்டில் தொழுததற்கும், பள்ளியின் உள்ளே தொழுததற்கும் ஆதாரம் உள்ளது.

பெண்கள் ஜனாஸா தொழுகையை பள்ளியில் தொழ அனுமதி :

அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரஹ்) அவர்கள் கூறியதாவது :

சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் இறந்தபோது “அவரது பிரேதத்தைப் பள்ளி வாசலுக்குக் கொண்டுசெல்லுங்கள். அவருக் காக நான் தொழப் போகிறேன்” என ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரழி) அவர்களிடம் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டபோது, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பைளா எனும் பெண்மணியின் இரு புதல்வர்களான சுஹைலுக்கும் அவருடைய சகோரருக்கும் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்” என்று கூறினார்கள். (முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் கூறுகின்றேன்) சுஹைல பின் தஅத் என்பதே அவரது பெயராகும். பைளா என்பது அவருடைய தாயாரின் (புனை) பெயராகும். இந்த ஹதீஃத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம்: 1772, அத்தியாயம்:11, இறுதிக் கடன்கள்.

தெளிவான ஹதீஃத் ஆதாரம் இருந்தா லும், இந்த காலகட்டத்தில் பெண்கள் பள்ளிவாசல் சென்று ஜனாஸா தொழ சுன்னத் ஜமாஅத்தினர் அனுமதிப்பது கடினம். அதனால் பெண்கள் தங்களின் நெருங்கிய உறவினருக்கு ஜனாஸா தொழுகையில் பங்கு பெற முடியாமல் போகிறது. அல்லாஹ் தந்த உரிமையை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. பெண்கள் தங்கள் நெருங்கிய உறவினருக்கு பிரார்த்தனை செய்வதை தடுப்பது அநீதியாகும். அதை உணர்ந்து சுன்னத் ஜமாஅத்தினர் இறை வனுக்கு அஞ்சி பெண்களை பள்ளியில் ஜனாஸா தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் அனுமதித்ததை தடுப்பது தவறு என்று உணர வேண்டும்.

இன்றைய சூழலின் பெண்கள் ஜனாஸா தொழுகையை அடைய   தீர்வு :

அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரழி) நபி(ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரி டம் நபி(ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரழி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்க வில்லை. அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ், நூல்: ஹாகிம் : 1:519 (1350)

மேற்படி ஹதீஃதின்படி பெண்கள் முதலில் தனியாக வீட்டில் ஜனாஸா தொழுகை நடத்திவிட்டு பின்னர் பள்ளிக்கு ஜனாஸாவை கொண்டு வந்து அங்கு ஆண்கள் ஜனாஸாதொழுகை நடத்தலாம். அதற்கு நபி(ஸல்) மரணம் அடைந்தபோது அவர்க ளுக்கு நடைபெற்ற பல ஜனாஸா தொழுகை சான்றாக உள்ளது.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

“நபியவர்கள் தம்முடைய வீட்டிலுள்ள கட்டிலின் மேல் வைக்கப்பட்டார்கள். பிறகு மக்கள் தனித்தனி குழுவினராக நபியவர்களிடத்தில் நுழைந்து அவர்களுக்காக தொழுதார்கள். அவர்கள் தொழுது முடித்த பிறகு பெண்களை (தொழுவதற்காக நபியவர்களின் வீட்டிற்குள்) அனுமதித்தார்கள். அவர்கள் தொழுது முடித்த பிறகு சிறுவர்களை அனுமதித்தார்கள். நபியவர்களின் (ஜனாஸாவிற்கு) எந்த ஒருவரும் மக்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தவில்லை. நூல் : இப்னு மாஜா: 1617.

பெண்களுக்கு ஜனாஸா தொழுகை பற்றிய விழிப்புணர்வு இல்லை, சுன்னத் ஜமாத்தினர் பெண்கள் ஜனாஸா தொழுகை தொழ அனுமதிப்பது இல்லை, தவ்ஹீத் ஜமாஅத்தினரோ பெண்கள் தொழ அனுமதி உண்டு என்று கூறி அவர்கள் குடும்பத்தினருக்கு மட்டும் ஜனஸா தொழுது விலகி கொள்கின்றனர். மற்ற இடங்களில் பெண் கள் ஜனாஸா தொழுகைக்கு தூண்டுவதும் இல்லை, வலியுறுத்துவதும் இல்லை.

முஸ்லிம்கள் அனைவரும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நாம் கலந்து கொள்ளும் ஜனாஸாக்களில் அவர்களின் குடும்பத்தார்களிடம் இது பற்றி எடுத்து கூறி பெண்கள் ஜனாஸா தொழுகை நடத்தவும் அவர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு துவா செய்யும் பாக்கியம் கிடைக்கவும் செய்வோம். இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

 

Previous post:

Next post: