இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

in 2020 செப்டம்பர்

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

அபூ அப்தில்லாஹ்

மறு பதிப்பு :

பல மதங்கள் ஏன்?

ஆதி மனிதர் ஆதத்திலிருந்து இன்று வரை கோடானுகோடி மக்கள் பிறந்திருக்கிறார்கள். இறந்திருக்கிறார்கள், 600 கோடி மக்கள் இன்று உலகில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். அவர்களின் பலர் பலவிதமான மதங்களைப் பின்பற்றி அவற்றைப் போதிக்கும் புரோகிதர்களை தங்களின் நேர்வழிகாட்டிகளாக நம்பி அவர்களைக் கண்மூடிப் பின்பற்றி வருகின்றனர்.

  1. ஹிந்துக்கள், மடாதிபதிகளையும், குருக்களையும், பூசாரிகளையும் மதபோதகர்களாக நம்பி அவர்களின் போதனைகளை வேதவாக்காக நம்பிப் பின்பற்றுகின்றனர்.
    2. யூதர்கள், அவர்களின் ரிப்பீயூன்களான மதகுருமார்களை நேர்வழிகாட்டிகளாக நம்பி அவர்களின் போதனைகளை வேதவாக்காக நம்பிப் பின்பற்றுகின்றனர்.
    3. பெளத்தர்கள் ஆமுதுரு என்ற பெளத்த சந்நியாசிகளை நேர்வழிகாட்டிகளாக நம்பி அவர்களின் போதனைகளை வேதவாக்காக நம்பிப் பின்பற்றுகின்றனர்.
    4. கிறிஸ்தவர்கள், பாதிரிகளையும், சந்தியாசிகளையும் நேர்வழிகாட்டிகளாக நம்பி அவர்களின் போதனைகளை வேதவாக்காக நம்பிப் பின்பற்றுகின்றனர்.
    5. இதுபோல் இன்று உலகில் காணப்படும் அனைத்து மதவாதிகளும் அவரவர்களின் மதபோதகர்களை நேர்வழி காட்டிகளாக நம்பி அவர்களின் போதனை களை வேதவாக்காக நம்பிப் பின்பற்றுகின்றனர்.

அல்குர்ஆன் மூலம் சத்தியத்தை உணர்ந்துள்ள ஒரு முஸ்லிம் இந்த மதபோதகர்கள் – அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறவர்கள் அதாவது இடைத்தரகர்கள்-புரோகிதர்கள் உண்மையாளர்கள் அல்லர், தங்களின் வருவாய்க்காக மக்களை ஏமாற்றி, மதிமயங்கச் செய்து, இறைவனுக்கு இணை வைக்கக் கூடிய செயல்களையே வழிபாடாகக் காட்டி மக்களை வஞ்சிக்கின்றனர், மக் களை நரகில் கொண்டு சேர்க்கின்றனர். கேவலம் அற்ப உலக வாழ்வின் இன்பத்தில் ஆசை வைக்கின்றனர். அவர்கள் உள்ளத்தள வில் நேர்மையாளராக இருந்தாலும், அவர்கள் தாங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ஆசிரியர்கள் மீதும், முன்னோர்கள் மீதும், மூதாதையர்கள் மீதும் குருட்டு நம்பிக்கை வைத்து அதனால் அவர்களும் வழிகெட்டு, அவர்களை நேர்வழிகாட்டிகளாக நம்பி யுள்ள மக்களையும் வழிகெடுக்கிறார்க என்ற முடிவுக்கே வரமுடியும்.

மேலும் அவர்கள் வேதவாக்காக இறை வழிகாட்டுதல்களாக மக்களுக்குப் போதிப்பவைகளில் பெரும்பாலானவை இறை அறிவிப்புகளுமில்லை – நபி வழிகாட்டலுமில்லை; அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முன்னோர்கள், மூதாதையர்களின் கற்பனைகளும், யூகங்களும், கட்டுக்கதைகளுமே என்பதையும் சத்தியத்தை உணர்ந்துள்ள ஒரு முஸ்லிம் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும்.

இறைவனால் அருளப்பட்ட நேர்வழி ஒன்றே!

ஏகன் இறைவனால் மக்களுக்காக மனிதப் படைப்பின் ஆரம்ப முதல் அருளப்பட்ட நேர்வழி – சத்தியவழி ஒன்றே ஒன்று தான். அது ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை ஒரே ஒரு வழிதான். இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் மக்களுக்குப் போதித்ததும் அந்த ஒரே ஒரு வழியான-நேர்வழியான சத்திய வழிதான் என்பதையும், மதங்கள் அனைத்தும் மனிதர்களின்-புரோகிதர்களின் கற்பனை, வழிகேடுகளே என்பதையும் ஓர் உண்மை முஸ்லிம் உணர முடியும்.

இறைவன் தனது இறுதி வேதத்தில்:

நூஹூக்கு எதனை அவன் உபதேசித் தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப் பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால், நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே – இணை வைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்-(அவனை) முன்னோக்குபவருக்கு அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.

அவர்கள், தங்களிடம் ஞானம்(வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவே அன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை, (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். அன்றியும், அவர்களுக்குப் பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ, நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். அல்குர்ஆன்: 42:13,14

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம். அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்து விடும். நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்குப் போதிக்கிறான். அல்குர்ஆன்: 6:153 என்று இறைவன் தெள்ளத் தெளிவாகக் கூறி எச்சரிக்கிறான்.

இந்த எச்சரிக்கையிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது – இறைவனால் அருளப்பட்டதை மக்களுக்குப் போதித்துள்ளனர். தங்களின் சொந்த அபிப்பிராயங்களை மக்க ளுக்கு மார்க்கமாகப் போதிக்கவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. (மேலும் பார்க்க: 4:163, 164,165, 33:7,8)

புரோகிதர்களின் கைவரிசை :

ஆனால் அந்தந்த நபிமார்களுக்குப் பின்னர் அந்தந்த சமூகங்களில் அந்தந்த நபிமார்களின் போதனைகளைப் பின்பற்றி அவற்றையே மக்களுக்குப் போதிப்பதாகப் பாசாங்கு காட்டிய புரோகித வர்க்கம், தங்களின் வருவாய்க்காக கற்பனை செய்த கட்டுக்கதைகளையும், கப்ஸாக்களையும், யூகங்களையும் நேர்வழியாக மக்களுக்குப் போதிக்கத் துணிந்தனர். இறுதி நெறிநூல் அல்குர்ஆனுக்கு முன்னர் நபிமார்களுக்கு இறக்கியருளப்பட்ட வேதங்கள் தற்சமயத் திற்குரியவைகளாக இருந்ததால் அவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படாததால், அவற்றில் தங்களின் கற்பனைகளையும், யூகங்களையும் கலந்து மக்களை ஏமாற்ற, அவர்களுக்கு மிகவும் வாய்ப்பாகப் போய் விட்டது – வசதியாகப் போய் விட்டது.

எனவே இறுதி நபிக்கு முன்னர் உலகில் தோன்றிய அத்தனை இறைத்தூதர்களும் போதித்த சத்திய வழியான – ஒரே வழியான – நேர்வழி, இந்தப் புரோகிதர்களால் பல பல மதங்களாகக் கற்பனை செய்யப்பட்டன. இன்று உலகில் காணப்படும் பல்வேறு மதங்களுக்கும், மனிதர்களைப் படைத்த ஒரே இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. அவை அவனால் அருளப்பட்டவையுமல்ல. அவன் அங்கீகரித்தவையுமல்ல. அந்தந்த மதப்புரோகிதர்களின் கற்பனையில் உருவானவை. நிலைநாட்டப்பட்டவை, நடைமுறைகளுக்குக் கொண்டு வரப்பட்டவை அவைகள். இந்தப் புரோகி தர்களை நம்பி அந்த மதங்களைப் பின்பற்றும் அப்பாவி மக்கள் நாளை மறுமையில் மாபெரும் நஷ்டத்திற்கும், தண்டனைக்கும் ஆளாகப் போகிறார்கள். நரகின் எரிகட்டைகளாகப் போகிறார்கள். விஷ ஞானமுள்ள எந்த முஸ்லிமும் இதை மறுக்கமாட்டீர். இதையே முஸ்லிம்கள் மட்டுமே சுவர்க்கம் புகுவர், மற்றவர்கள் நரகம் புகுவார்கள் என்று பரவலாகப் பேசப்படுகிறது. பெரும்பாலான முஸ்லிம்கள் இவற்றை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மதங்களில் புரோகிதர்கள் உரிமை பெற்றவர்களே!

இந்த மதங்களைக் கற்பனை செய்தவர் கள் புரோகிதர் – மனிதர்களே; எனவே மனிதர்களான அந்தப் புரோகிதர்கள் அந்தந்த மதங்களில் பூரண அதிகாரம் பெற்றவர்கள், அவர்கள் போதிப்பதையே வேத வாக்காக அந்தந்த மதங்களைப் பின்பற்று வோர் ஏற்றே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை. அவர்கள் மட்டுமே அந்த மதங்களை மக்களுக்குப் போதிப்பதற்கும், அதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்கும் முழு உரிமை பெற்றவர்கள். அதில் வேறு யாரும் தலையிட முடியாது என்பதிலும் பொருள் இருக்கவே செய்கிறது. காரணம் அந்த கற்பனை மதங்களின் காரணகர்த்தர்களே, அவற்றைப் படைத்தவர்களே அவர்கள் தான். அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது உண்மைதான்.

  1. எனவே ஹிந்து மதத்தைப் படைத்த புரோகிதர்களே அதைப் போதிக்கும் உரிமை-அதிகாரம் பெற்றவர்கள். அவர்களே மடாதிபதிகள், குருமார்கள், பூசா ரிகள் என்பதை ஒப்புக்கொண்டு ஆக வேண்டும்.
    2. யூத மதத்தைப் படைத்த புரோகிதர்களே அதை யூதர்களுக்குப் போதிக்கும் உரிமை-அதிகாரம் பெற்றவர்கள், அவர்களே ரிப்பீயூன்களான யூத குருமார்கள், மறுக்க முடியாது.
    3. பெளத்த மதத்தைப் படைத்த புரோகிதர்களே அதை பெளத்தர்களுக்குப் போதிக்கும் உரிமை-அதிகாரம் பெற்றவர்கள், அவர்களே ஆமுதுரு என்ற பெளத்த குருமார்கள் என்பதை மறுக்க முடியாது.
    4. கிறிஸ்தவ மதத்தைப் படைத்த புரோகிதர்களே, அதை கிறிஸ்தவர்களுக்குப் போதிக்கும் உரிமை-அதிகாரம் பெற்றவர்கள். அவர்களே கிறிஸ்தவ பாதிரிகள் சந்நியாசிகள், உண்மைதான்.
    5. இதுபோல் இன்று உலகில் காணப்படும் அத்தனை மதங்களையும் படைத்த புரோகிதர்களே அந்தந்த மதங்களை அந்தந்த மத மக்களுக்குப் போதிக்கும் உரிமை-அதிகாரம் பெற்றவர்கள், அவர்களே அந்தந்த மதகுருமார்கள் – போதகர்கள் என்பதை ஏற்றே ஆக வேண்டும்.

இப்படி நபி(ஸல்) அவர்களுக்கு முன் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து இறைத் தூதர்களின் சமூகங்களும், அந்தந்த சமூகங்களில் வஞ்சகமாகப் புகுந்து கொண்டு புரோகிதர்களால் வஞ்சிக் கப்பட்டார்கள், அந்தப் புரோகிதர்களை நேர்வழிகாட்டிகளாக நம்பி வழிகெட்டார்கள். நரகிற்கு விறகுக் கட்டைகளாக ஆளானார்கள், ஆகிறார்கள்.

முஸ்லிம் மதப்புரோகிதர்கள்!

மாற்று மதத்தினர் அனைவருமே வழிகேடர்கள், நரகிற்குரியவர்கள், முஸ்லிம்கள் மட்டுமே நேர்வழி நடந்து சுவர்க்கம் போகிறவர்கள் என்று மார் தட்டும் முஸ்லிம்கள் அவர்களின் இந்தக் கூற்றில் உண்மையாளர்களா? என இப்போது ஆராய்வோம்.

மற்ற மதத்தினர்கள் தங்கள் தங்கள் இறைத்தூதர்களின் போதனைப்படி நடப்பதாகக் குருட்டுத்தனமாக நம்பி, அவர்களிடையே வஞ்சகமாகப் புகுந்து கொண்டு புரோகிதர்கள் படைத்த-உருவாக்கிய வழிகேடுகளான மதங்களைப் பின்பற்றுகிறார்களே அல்லாமல், அந்த வஞ்சகப் புரோகிதர்களின் சுயநலத்தை அறிந்து அவர்களை விட்டும் விலகும் நிலையிலில்லை. இறைவன் அருளிய நேர்வழியை அறிய முற்படுவதும் இல்லை. அவர்களின் குருட்டுப் பக்தி அவர்களின் சிந்தனைக்குத் திரையாக ஆகிவிட்டது.

மற்ற மதத்தினர்கள்தான் இறைவன் அருளிய நேர்வழியை விட்டு அவரவர்களது நம்பிக்கைக்குரிய புரோகிதர்கள் கற்பனை செய்து உருவாக்கிய மதங்களைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அவர்களை வழிகேடர்கள் என்று சொல்லும் முஸ்லிம்களிலுள்ள மிகப் பெரும்பான்மையினரும், முஸ்லிம் மதத்தைக் கற்பனை செய்து உருவாக்கிய முஸ்லிம் மதப் புரோகிதர்களையே நேர்வழி காட்டும் நல்லவர்களாகக் குருட்டுத்தனமாக நம்பி அவர்களின் வழிகேட்டை, போதனைகளையே வேதவாக்காக ஏற்று அவர்களையே பின்பற்றுகின்றனர். அந்தப் புரோகிதர்களே மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்கும் முழு அதிகாரம் பெற்றவர்கள், வேறு யாரும் அதில் தலையிட முடியாது என்று குருட்டுத்தனமாக வாதிட்டு வருகின்றனர். இதுவே பெரும்பான்மை முஸ்லிம்களின் நிலை. இந்த பெரும்பான்மை முஸ்லிம்களும் குருட்டு பக்தியால் தங்களின் சிந்தனைக்குத் திரையிட்டுக் கொண்டவர்கள் தான்.

உண்மைதான்! எப்படி மாற்று மதங்களிலுள்ள புரோகிதர்கள், தங்கள் தங்கள் மதங்களைக் கற்பனை செய்து உருவாக்கிய கற்பனையாளர்களாக-படைத்தவர்களாக இருக்கிறார்களோ, அதனால் அவற்றில் பூரண உரிமை-அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்களோ, அதனால் அவற்றில் பூரண உரிமை-அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்களோ, வேறு யாரும் அதில் தலையிட முடியாததோ, அதேபோல் தான் முஸ்லிம் மதப்புரோகிதர்கள் முஸ்லிம் மதத்தின் கற்பனையாளர்களாக-படைத்தவர்களாக இருக்கிறார்கள். எனவே முஸ்லிம் மதத்தில் அந்த முஸ்லிம் புரோகிதர்களுக்கே பூரண உரிமை-அதிகாரம் இருக்கிறது. அதில் எம்போன்ற யாருமே தலையிட முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

மதங்களுக்கும், இறைவனுக்கும் சம்பந்தமே இல்லை!

ஆனால், மற்ற மதங்களிலுள்ள புரோகிதர்கள் கற்பனை செய்து படைத்துள்ள பல மதங்களுக்கும், உண்மையில் மனிதனைப் படைத்து, அவனுக்குரிய ஒரே நேர்வழியைக் கொடுத்த இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையோ, அதேபோல் முஸ்லிம் மதப் புரோகிதர்கள் கற்பனை செய்து படைத்துள்ள முஸ்லிம் மதத்திற்கு, அந்த ஒரே இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் பெரும்பான்மை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

உலகத்தில் காணப்படும் எந்த மதத்திற்கும், அந்த மதம் எந்த இறைத்தூதரின் பெயரால் மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டு, மக்கள் ஏமாற்றப்படுகிறார்களோ, அந்த நபிக்கும், அந்த நபியை மக்களிடையே அனுப்பி வைத்த இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. உதாரணமாக மூஸா(அலை) அவர்களுக்கும் அவர்களை நபியாக அனுப்பி வைத்த ஏகன் இறை வனுக்கும், யூதப் புரோகிதர்கள் உஜைர் (அலை) அவர்களை இறைவனின் குமாரராக கற்பனை செய்து உருவாக்கியுள்ள யூத மதத்திற்கும் சம்பந்தம் கடுகளவும் இல்லை. ஈஸா(அலை) அவர்களுக்கும், அவர்களை நபியாக அனுப்பி வைத்த ஏகன் இறைவனுக் கும், கிறிஸ்தவப் புரோகிதர்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவனின் குமாரராகக் கற்பனை செய்து உருவாக்கியுள்ள கிறிஸ்தவ மதத்திற்கும், இறைவனுக்கும் சம்பந்தம் கடுகளவும் இல்லை.

வரலாறுகளின் மூலம் யூத மதத்தைக் கற்பனை செய்த புரோகிதர்களில் முதலாமவன் சாமிரி என்பதும் கிறிஸ்துவ மதத்தைக் கற்பனை செய்த புரோகிதர்களில் முதலாமவன் பவுல் என்பதும் தெரிய வருகிறது.

யூதப் புரோகிதர்களைப் பின்பற்றும் முஸ்லிம் புரோகிதர்கள் :

முஸ்லிம்களாகிய நீங்கள், யூத கிறிஸ்தவர்களை அடிபிரளாமல் அப்படியே பின்பற்றுவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தது போல், முஸ்லிம் மதப்புரோகிதர்களும், நான்கு இமாம்களின் பெயரால் முஸ்லிம் மதத்தைக் கற்பனை செய்து உருவாக்கி, மத்ஹபுகளைப் படைத்து அவை கொண்டு முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மை யினரை வழிகெடுத்து நரகில் தள்ளி வருகிறார்கள். மற்றபடி முஸ்லிம் மதப்புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள முஸ்லிம் மதத்திற்கும் (மத்ஹபுகள், இயக்கங்கள்) இறைவனுக்கும் அவனால் இறுதியாக அனுப்பப்பட்டு இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும், ஏன்-எந்த இமாம்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்துள்ளார்களோ அந்த மரியாதைக்குரிய நான்கு இமாம்களுக்கும் கடுகளவும் சம்பந்தமே இல்லை.

யூத, கிறிஸ்தவ மதப் புரோகிதர்களைப் போல் முஸ்லிம் மதப்புரோகிதர்களுக்கும் சம்பந்தமே இல்லை, யூத கிறிஸ்தவ மதப்புரோகிதர்களைப் போல் முஸ்லிம் மதப்புரோகிதர்களும் வஞ்சகர் களே, மக்களைத் துணிந்து நரகில் கொண்டு தள்ளுபவர்களே. அதற்கு மாறாக முஸ்லிம் மதப் புரோகிதர்கள் மக்களுக்கு நேர்வழி யைத்தான் போதிக்கிறார்கள். அவர்கள் மக்களை வழிகெடுப்பதில்லை என்று நம்பும் முஸ்லிம்கள், அது போல் அனைத்து மதப் புரோகிதர்களும் மக்களுக்கு நேர்வழியைத் தான் போதிக்கிறார்கள். மக்களை வழிகெடுப்பதில்லை என்ற மற்ற மத மக்களது கூற்றையும் ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லவா? அவர்கள் வழிகேடர்கள், நரகிற்குரியவர்கள், நாங்கள் மட்டுமே நேர்வழி நடந்து சொர்க்கம் செல்பவர்கள் என்ற குருட்டு வாதத்தை வைக்கக் கூடாது எம்மதமும் சம்மதம் என்பதையும் ஒப்புக்ொள்ள வேண்டும் அல்லவா?

அவர்கள் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், உண்மையிலே சுவர்க்கம் செல்லும் நல்லடியார்களாக இருந்தால், எப்படி மற்ற மதங்களிலுள்ள புரோகிதர்களைப் புறக்கணிக்கிறார்களோ, அவர்கள் தங்களை நம்பும் மக்களை வழிகெடுக்கிறார்கள் என்று கூறுகிறார்களோ, அதே போல் முஸ்லிம் மதப்புரோகிதர்களையும் புறக்கணிக்க வேண்டும். அவர்கள் தங்களை நம்பியுள்ள முஸ்லிம்களை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளுகிறார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

புரோகிதர்களால் கற்பனை செய்து உருவாக்கப்பட்ட – படைக்கப்பட்ட எண்ணற்ற மதங்களில்தான் அந்தந்தப் புரோகிதர்களுக்கு முழு உரிமை உண்டு, அதிகாரம் உண்டு. மற்றபடி இறைவனால் அரு ளப்பட்டு நேர்வழியில் அவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. அதை மக்களுக்காக விளக்கும் பேர்வழிகள் என்று அவர்கள் உள்ளே புகுந்து வயிறு வளர்ப்பதுடன் மக்களை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளும் ஈனச் செயலை செய்யும் அதிகாரம் பெற்றவர்களும் இல்லை. அப்படிப்பட்டவர்கள் படைப்புகளிலேயே மிகவும் கேடுகெட்டவர்கள், ஈனப்பிறவிகள் இறைவனது, மலக்குகளது, மனிதர்களது பெரும் சாபத்திற்குரியவர்கள் என்பதை விளங்கி அந்த மதப் புரோகிதர்களை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

புரோகிதர்கள் விளக்கம் கூற தகுதியற்றவர்கள் :

மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டவர்கள், தொண்டைத் தொழிலாக ஆக்கியவர்கள் இறைவனது இறுதி நெறி நூலிற்கு விளக்கம் கூறும் தகுதி பெற்றவர்கள் அல்லர், அவர்களின் விளக்கம் உண்மை விளக்கமாக இருக்காது, மக்களை வழிகெடுக்கும் கோணல் விளக்கமாகவே இருக்கும். அரபி மொழி படித்த மமதையில்- ஆணவத்தில் அல்குர்ஆனுக்கு விளக்கம் கூறும் தகுதி எங்களுக்கே உண்டு என்று அவர்கள் பிதற்றுவதும், பெரும்பான்மை முஸ்லிம்கள் அவர்களின் இந்தப் பொய்க் கூற்றை நம்பி ஏற்று வழிகெட்டுச் செல்வதும் மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

இதோ, இறுதி இறை நெறிநூல் அல்குர் ஆன் கூறுவதைக் கவனமாகச் சிந்தனையுடன் படித்து விளங்குங்கள்.

“உங்களிடம் கூலி கேட்காதவர்களை நீங்கள் பின்பற்றுங்கள். இன்னும் இவர்களே நேர்வழி பெறறவர்கள்” 36:21

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் – அதனை நாம் நெறிநூலில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கிறார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான், மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடையவர்களும் சபிக்கிறார்கள்.

எவர்கள் பாவமன்னிப்புத் தேடி (தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கிறேன்.

யார் (இந்நெறிநூல் உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் நிராகரிப்பவர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.

அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள். அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படாது. மேலும் (மன்னிப்புக்கோரி) அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது. அல்குர்ஆன் : 2:159-162)

மேலும் இறைவனால் பாதுகாக்கப்பட்டு இறுதி இறைநெறிநூல் அல்குர்ஆனில் 3:138, 10:57, 12:104, 13:19, 19:97, 21:10, 38:49,87, 43:2,3, 44:58, 54:17,22,23,32,40, 68:52, 81:27 ஆகிய எண்ணற்ற இடங்களில் அல்குர்ஆன் மனிதகுலம் அனைத்திற்கும், முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர் அனைவரும் மிக எளிதாக விளங்கும் அளவில் எளிதாக, தெள்ளத் தெளிவாக, எந்த அரபி பண்டிதரின் மேலதிக விளக்கமும் தேவை இல்லாத நிலையில் இரவும் பகலைப் போல் தெள்ளத்தெளிவாக இருக்கிறது என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது. மேலும் அல் குர்ஆனில் பல்வேறு இடங்களில் ஏகன் இறைவன் இதை உறுதி செய்துள்ளான்.

அல்குர்ஆனை விளக்கும் அதிகாரம் இறைவனுக்கே!

அதனை (அல்குர்ஆனை) விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. (அல்குர்ஆன்: 75:19) என்று இறைவனே பொறுப்பேற்று, இரவும், பகலைப் போல் தெளிவுபடுத்திய பின்னர், இந்த மவ்லவிகள் நாங்களே குர்ஆனுக்கு விளக்கம் கூறும் அதிகாரம் பெற்றவர்கள் என்று கூறுவது எப்படி முறையாகும்? சரியாகும்? அல்குர்ஆனை மக்களுக்கு நேர்வழிகாட்டியாக அருளிய ஏகன் இறைவனே அதை மக்களுக்கு விளக்குவது தனது பொறுப்பு என்று அந்தப் பொறுப்பை ஏற்று, விளக்கிய பின்னர், அந்த விளக்கம் போதாது. அதற்கு நாங்கள் மேலும் விளக்கம் கூறுகிறோம் என்று கூறும் மவ்லவிகள் அகந்தை, ஆணவம் உள்ளவர்களா? இலலையா? அல்லாஹ்வை விட நாங்கள் விளக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்கிறார்களா? இது அப்பட்டமான ஆணவமா? இல்லையா? அப்படிப்பட்ட ஆணவ மவ்லவிகளின் மேல் விளக்கம் உண்மையிலேயே விளக்கமாக இருக்குமா? அல்லது மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்லும் ஷைத்தானின் துர்போதனையால் உருவான கோணல் விளக்கமாக இருக்குமா? என்பதை சிறிதளவு சுய சிந்தனை உள்ளவர்களும் விளங்க முடியும்.

ஆக இந்த அரபி மொழி கற்ற மவ்லவிகளின் மேலதிக விளக்கம், விளக்கமாக இருக்காது தெளிவான விளக்கத்தைக் குழப்பத்திலாக்கி மக்களை வழிகெடுப்பதாகவே இருக்கும். இறைவனது தெளிவான விளக்கத்தை மறைப்பதாகவே இருக்கும். இதையே இறைவன் தனது இறுதி நெறிநூலில் மேலே எழுதியுள்ள 2:159-162 வசனங்களில் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளான். ஆனால் மனம் கல்லாய்ப் போன ஹஜ்ரத்துகள்(?) இதை விளங்க மாட்டார்களா?

இறைத்தூதருக்கும்

இறைவன் தனது விளக்கத்திற்கு மேலதிகமாக தனது இறுதித் தூதரை அனுப்பி இறுதி இறை நெறிநூல் அல்குர்ஆனுக்கு செயல்முறையில் தெளிவான விளக்கம் கொடுக்கும்படி கட்டளையிட்டுள்ளான். அது வருமாறு:

மனிதர்களுக்காக அருளப்பட்டதை நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.
அல்குர்ஆன் : 16:44

இவ்வளவு தெளிவான இந்த விஷயத்தில் அரபி கற்ற மவ்லவிகளுக்கு என்ன வேலை இருக்கமுடியும்? இந்த அத்தனை வசனங்களிலும் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர், ஆண், பெண் அனைவரும் சுயமாகச் சிந்தித்து விளங்கிச் செயல்பட அல்குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறதே அல்லாமல், ஒரேயயாரு வசனத்தில் கூட அரபி கற்ற மவ்லவிகள் விளக்கம் கூற அதிகாரம் பெற்றவர்கள் என்று கூறப்படவில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் மட்டுமே அல்குர்ஆனுக்கு செயல்முறையில் விளக்கும் கூறும் அதிகாரம் பெற்றவர்கள் என்று 16:44 வசனம் உறுதிப்படுத்துகிறது.

இவை அனைத்தையும் முறையாகவும், சரியாகவும் சிந்தித்து விளங்குகிறவர்கள், 2:159 வசனப்படி அல்லாஹ் தெளிவுபடுத்திய பின்னரும், தெளிவுபடுத்தும் பேர்வழிகள் என்று வஞ்சகமாக நுழையும் இந்த மவ்லவிகள் உள்ளதை உள்ளபடி விளக்கவில்லை. அதற்கு மாறாக இந்த வசனம் கூறுவது போல் உண்மை விளக்கத்தை வளைக்கிறார்கள், திரிக்கிறார்கள், அதன்மூலம் மறைக்கிறார்கள் என்றே விளங்க முடிகிறது.

அவற்றிற்குரிய ஆதாரங்களை அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.  இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Previous post:

Next post: