தொடர் – 2
அபூ அப்தில்லாஹ்
மறு பதிப்பு :
புரோகித மவ்லவிகளின் தில்லுமுல்லுகள் :
எல்லாம் வல்ல ஏகன் இறைவன் மனிதனைப் படைத்து அவனுக்கென்று ஒரு வாழ்க்கை நெறியைக் கொடுத்துள்ளான். அந்த ஒரே வாழ்க்கை நெறியை மனித வர்க்கத்திற்கு நடைமுறையில் செயல்படுத்திக் காட்ட இறைத்தூதர்களை காலத்திற்குக் காலம் அனுப்பி வைத்தான். அவர்களுக்கு நேர்வழியைக் காட்டும் நெறிநூல்களையும் அருளினான். இறுதி நெறிநூலான அல்குர்ஆனை அவனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளி அதைத் தெளிவு படுத்தும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டதோடு (பார்க்க அல்குர்ஆன்: 75:19) நடைமுறையில் விளக்கிக் காட்டும் பொறுப்பை தனது கண்காணிப்பில் (பார்க்க : அல்குர்ஆன் : 52:48) நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தான் (பார்க்க: 16:44) அல்லாஹ்வினதும் அவனது இறுதித் தூதரினதும் விளக்கத்திற்கு மாறாக வேறு விளக்கம் சொல்லுவது பகிரங்க வழிகேடு, அது ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி என்று கடுமையாக எச்சரித்துள்ளான் (பார்க்க: 33:36) இவ்வளவு கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி அல்குர்ஆனுக்கு விளக்கம் கூறும் பேர்வழிகள் என்று கிளம்பும் புரோகித மவ்லவிகள் உண்மையில் விளக்கம் கூறுபவர்களாக இல்லை, மாறாக அல்லாஹ்வின் தெள்ளத் தெளிவான விளக்கத்தை மறைப்பவர்கள், உண்மையைத் திரிப்பவர்கள், வளைப்பவர்கள், அவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான், மலக்குகளும் சபிக்கிறார்கள், சபிப்பதற்கு உரிமையுடைய மனிதர்களும் சபிக்கிறார்கள், அவர்களும் மீளா நரகமே அதிலிருந்து விடு தலையோ மீட்சியோ இல்லை என்றும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளான் அல்லாஹ். (பார்க்க: 2:159-162)
இந்த மவ்லவிகளின் கல் நெஞ்சம் எந்த அளவு கொடூரமாக இருக்கிறதென்றால், ஏகன் இறைவனின் இத்தனைக் கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி -துச்சமாக மதித்து – புறக்கணித்துவிட்டு, அல்குர்ஆன் வசனங்களுக்கு சுய விளக்கங்கள் கொடுத்து தாங்களும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்கிறார்கள் என்ற விபரங்களை பிப்ரவரி 2004 இதழில் பார்த்தோம்.
இந்த இதழில் வழிகேடுகளில் மிகப் பெரிய வழிகேடான கபுரு சடங்குகளை – சமாதி வழிபாடுகளை அல்குர்ஆன் வசனங்களை திரித்து வளைத்து மறைத்து நியாயப்படுத்தும் முகல்லிது மவ்லவிகளின் தில்லுமுல்லுகளை – தகிடு தத்தங்களை விரிவாகப் பார்ப்போம்.
ஷிர்க் – இணை வைத்தலின் ஆரம்பம் :
ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து நபி நூஹ்(அலை) அவர்களுக்கு முன் னர் வரை ஆதத்தின் சந்ததிகளான மனித வர்க்கத்தினர் கொலை, கொள்ளை, மது, மாது, சூது, திருட்டு போன்ற பஞ்சமா – பாவங்கள் செய்கிறவர்களாக இருந்தாலும், இறைவனுக்கு அவனால் படைக்கப்பட்ட மனிதர்களையோ, மற்ற படைப்பினங்களையோ இணையாக்கும் அதாவது ஷிர்க் வைக்கும் இறைவனால் மன்னிக்கப்படாத மிகக் கொடிய பாவத்தை – மிகப் பெரும் அநியாயத்தை மனிதரில் யாருமே செய்யவில்லை. ஆயினும் மேலே கூறப்பட்ட பஞ்சமா – பாவங்களை செய்தாலும் அவை பாவங்கள் என்ற உள்ளத்தில் ஏற்படும் உறுத்தலோடு செய்து வந்ததால், பின்னர் அவை பற்றி மனம் கேட்டு மீளும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். ஆனால் ஆதத்தின் சந்ததிகளை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளுவேன் என்று சபதம் ஏற்றிருக்கும் ஷைத்தானுக்கு இது பெரும் ஏமாற்றமாகவே இருந்து வந்தது.
பெரும் முயற்சிகள் செய்து, மனிதர்களை அவர்களின் இச்சைக்கு அடிமைப்படுத்தி, இந்த பஞ்சமா – பாவங்களை செய்ய வைத்தாலும், இறுதியில் அவர்கள் மனம் வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு மீண்டு விடுகிறார்கள். எனவே ஷைத்தான் தனது சபதத்தை நிறைவேற்ற பெரும் தடை ஏற்பட்டு விடுவதாக மிக மிக வருந்திக் கொண்டிருந்தான். இந்த நிலையில் அவனது அபார அறிவில் பொறிதட்டிய பாவச் செயலே – இறைவனால் மன்னிக்கப்படாத செயலே – இறைவனால் படைக்கப்பட்ட மனிதனையும் மற்றும் படைப்பினங்களையும் இறைவனுக்கு இணை வைக்கும் கொடூரச் செயல். அதுவும் மனிதர்கள் மிகப் பெரிய பாவமான இந்த இணை வைக்கும் செயலை – வழிகேட்டை மிகப் புண்ணியமான செயல் – வழிபாடு என்று நம்பி செய்ய வைக்கும் நயவஞ்சகத் திட்டமாகும். இதனை அல்குர்ஆன் : 18:102,103,104,105, 106 வசனங்களில் அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறி எச்சரித்துள்ளான்.
மனிதர்களில் நல்லவர்களுக்கு மரியாதை செய்கிறோம். நன்றி செலுத்துகிறோம் என்ற பெயரில் இறந்து போனவர்களுடைய கபுருகளில் – சமாதிகளில் சில ஞாபகார்த்த சடங்குகளைச் செய்ய வைத்தான் ஷைத்தான் முதலில் ஆக ஏகன் இறைவனுக்கு இணை வைக்கும் மிகக் கொடிய மாபாதகச் செயலின் ஆரம்பம் கபுரு-சமாதிச் சடங்குகளேயாகும். அதன் பரிணாம வளர்ச்சியே புத்-விக்ரஹ-சிலை வணக்கமாகும். இந்த உண்மையை இன்று அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகளுக்குப் போய் பார்ப்பவர்கள் நிதர்சனமாகத் தங்களின் கண்களாலேயே பார்த்து உணர முடியும். நல்லதைச் செய்கிறோம் – வழிபாடு செய்கிறோம் என்ற மூட நம்பிக்கையில் கபுரு-சமாதி சடங்குகளையும், சிலை வணக்கத்தையும் பக்தியின் பெயரால் மக்களை செய்ய வைத்தான் ஷைத்தான்.
உண்டியல் வருமானம் :
இப்படிப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டு உண்டியல் வருமானம் வர வாய்ப்பு ஏற்பட்டதால், புரோகிதர்களும் தங்களின் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டு, ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்பட ஆர்வமுடன் முன் வந்தனர். ஷைத்தான் தன்னுடைய முயற்சியில் பெரும் வெற்றி கொண்டான். மனித வர்க்கத்தில் பெருங்கொண்ட கூட்டத்தை நரகில் கொண்டு போய் தள்ள வழிகண்டான். மனிதர்களும் பக்தியின் பெயரால் – புண்ணியம் என்ற நினைப்பில் இணை வைக்கும் இம்மாபாதகச் செயலில் ஈடுபட்டதால், தங்களின் தவறை உணர்ந்து தங்களைப் படைத்த இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்கும் வாய்ப்பை இழந்தனர். அழிந்து நாசமாயினர் – நாசமாகி வருகின்றனர்.
இந்த இணை வைக்கும் செயல் நபி நூஹ்(அலை) அவர்களின் வருகைக்கு முன்னரே கற்பனை செய்யப்பட்டு, அவர்கள் நபியாக வந்தபோது கொடி கட்டிப் பறந்து, இந்த விபரங்களை 10:71, 11:25,26,27, 71:1-10,21-25 போன்ற அல்குர்ஆன் வசனங்களை படித்து விளங்குகிறவர்கள் உணர முடியும். அந்தச் சமுதாயம் தங்களுக்கு முன் னர் இவ்வுலகில் வாழ்ந்து, சிறந்து மடிந்த நல்லோர்களையே முதலில் சமாதி வழிபாட்டின் மூலமும், பின்னர் சிலை வழிபாட்டின் மூலமும் ஏகன் இறைவனை நெருங்கச் செய்பவர்களாகவும், தங்களுக்காக இறைவனிடம் பரிந்துரை செய்பவர்களாகவும் மூடத்தனமாக நம்பி வழிபட்டு வந்தனர். அந்த நல்லடியார்களின் பெயர்களையும் ஏகன் இறைவன் தனது இறுதி நெறிநூலில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.
உங்கள் தெய்வங்களை விட்டு வீடாதீர்கள், இன்னும் வத்து, வாஉ, யகூ, யஊக், நஸ்ரூ ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டு விடாதீர்கள் என்று (புரோகிதர்கள்) சொல்கின்றனர். அல்குர்ஆன் : 71:23
அன்று ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது :
அன்று ஆரம்பித்து ஏகன் இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய பாவச் செயல், அன்றிலிருந்து இன்று வரை ஆதத்தின் சந்ததிகளைப் பிடித்து ஆட்டுகின்றது, பஞ்சமா – பாவங்களை செய்ய வைத்துத் தோற்றுப்போன ஷைத்தான், இறைவனுக்கு மனிதனையும், படைப்பினங்களையும் இணை வைக்கச் செய்து மனித வர்க்கத்தை நரகில் கொண்டு தள்ள நிரப்பும் தனது தந்திரம், தான் நினைத்ததை விட வெற்றியடைந்துள்ளதைக் கண்டு பூரிப்படைந்து கைகொட்டிச் சிரித்து மகிழ்கிறான். இறைவனது நல்லடியார்கள் என்று நம்பி, இறந்து போனவர்களை, சமாதிகளாகவும், சிலைகளாகவும் வடித்து தங்களுக்காகக இறைவனிடம் பரிந்துரைப்பவர்களாகவும் இறைவனை நெருங்கச் செய்பவர்களாகவும் நம்பி வழிபட்டு வருகின்றனர். (பார்க்க: 10:18, 39:3) இன்னும் சில புரோகிதர்கள் அதற்கும் ஒருபடி மேலே போய் இறந்து போன அவர்களிடம் நேரடியாகவே கேட்கலாம். அவர்கள் கேட்பவற்றைக் கொடுக்கும் வல்லமை பெற்றவர்கள் என்று பொய்யாகக் கூறி மக்களை வஞ்சித்து வருகின்றனர்.
கொடுமைகளிலெல்லாம் பெருங் கொடுமை!
கொடுமைகளிலெல்லாம் பெருங் கொடுமை என்னவென்றால், தெள்ளத் தெளிவான அல்குர்ஆனின் போதனைப்படி தான் நடக்கிறோம் என்று மார் தட்டும் முஸ்லிம்களிடமும் ஏகன் இறைவனுக்கு அவனது அடியார்களை இணையாக்கும் கொடூரமான பாவச் செயலை இந்தப் புரோகித வர்க்கம் கொண்டு வந்து நுழைந்திருப்பதுதான். முஸ்லிம்களில் மிகப் பெருங்கொண்டவர்கள் இந்த வழிகேட்டில் மூழ்கித் திளைக்கின்றனர். அழிந்து நாசமாகின்றனர். நரகில் போய் விழுகின்றனர்.
பாமரனும் குர்ஆனை விளங்க முடியும்!
இப்போது இறைவனுக்கு இணை வைக்கும் இம்மாபெரும் வழிகேடு எவ்வளவு பெரிய கொடூரமான பாவம் – இறைவனால் மன்னிக்கப்படாத குற்றம் என்பதை விவரிக்கும் அல்குர்ஆன் வசனங்களை வரிசையாகத் தருகிறோம். படித்துப் பார்த்து சிந்தித்து உண்மையை உணர வேண்டுகிறோம். 4:48, 116, 5:72, 7:33, 9:31, 10:18, 18:102-106, 22:31, 33:66,67,68, 39:3, 40:12, 42:21 இன்னும் இவை போல் எண்ணற்ற வசனங்களில் இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதகச் செயல் பற்றி – மன்னிக்கப்படாத பாவம் பற்றி உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குகின்றன. இவற்றை மூன்றாம் வகுப்பு வரை படித்த, தமிழைத் திக்கித்திக்கிப் படிக்கும் ஆணாயினும், பெண்ணாயினும் விளங்க முடியும். அல்லது எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர்வழியாக இருந்தாலும் பிறர் அவற்றைப் படிப்பதைக் காதால் கேட்ட மாத்திரத்தில் இறைவன் கூறுவதை தெளிவாக விளங்க முடியும்-புரிய முடியும்.
ஆனால், அதற்கு மாறாக இன்று என்ன நடக்கிறது? பாமரர்களுக்கு குர்ஆன் விளங்காது என்ற மூட நம்பிக்கையை இந்தப் புரோகிதர்கள், மக்கள் உள்ளங்களில் புரை யோடச் செய்திருப்பதால், அவர்கள் அறிவிழந்து, இந்தப் புரோகிதர்கள் இந்த தெளிவான, நேரடியான வசனங்களைத் திரித்து, வளைத்து மறைத்துக் கொடுக்கும் கோணல் விளக்கங்களை அப்படியே கண்மூடி ஏற்று வழிகெட்டுச் செல்கின்றனர். இதையும் ஏகன் இறைவன் 2:41,79,174, 3:78,187,188, 4:44,46, 9:9,10,34, 11:18,19, 31:6 இன்னும் இவை போல் பல வசனங்களில் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறான்.
குறிப்பான ஒரே பொருளைத் தரும் வசனங்கள் :
இந்த வசனங்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவான குறிப்பான ஒரே பொருளை மட்டும் தரும் முஹ்க்கமாத் வசனங்களாகும். இவற்றிற்கு வேறு பொருள்கள் கொள்வது – விளக்கம். வியாக்யானம் – தஃப்ஸீர் என்ற பெயரால் இந்தப் புரோகிதர்கள் கற்பனைக் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவது, அப்பட்டமான வழிகேடாகும், நரகத்தில் கொண்டு சேர்க்கும், இதையே அல்குர்ஆன் 2:159-162 வசனங்கள் ஐயம் திரிபற- சந்தேகத்திற்கு இடமின்றி பறைசாற்றுகின்றன
அல்குர்ஆன் கூறும் தெள்ளத் தெளிவான விளக்கங்களை மறைத்து மக்களை வழிகெடுக்க இந்தப் புரோகிதர்கள் கையாளும் தந்திரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
முதலில் இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு நிராகரிப்பவர்களுக்கு இறங்கியது. முஸ்லிம்களாகிய நம்மைக் கட்டுப்படுத்தாது என்று அப்பட்டமான பொய்யைக் கூறி அப்பாவி முஸ்லிம்களை வழிகெடுக்கிறார்கள், காஃபிர்கள் பிறப்பிலேயே காஃபிர்களாகப் பிறப்பது போலும், அதற்கு மாறாக முஸ்லிம்கள் மட்டும் பிறப்பிலேயே முஸ்லிம்களாக பிறப்பது போலும் கதையளந்து மக்களை மடையர்களாக ஆக்குகிறார்கள். உண்மை நிலை என்ன? எந்தக் குழந்தையும் பிறக்கும்போது பாவத்தைச் சுமந்து கொண்டோ, நிராகரிக்கும் நிலையிலோ பிறப்பதில்லை. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்திலேயே பிறக்கின்றன என்பது நபி (ஸல்) அவர்களின் தெளிவான போதனையாகும். பின்னர் அக்குழந்தை வளர்ந்து விபரம் அறிந்த பின் அதன் செயல்பாட்டை வைத்தே அது முஸ்லிமாகவோ, காஃபிராகவோ ஆகின்றது. இறைவனின் இறுதி நெறிநூலின் நேரடிக் கட்டளைகளையும், இறுதி நபியின் வழிகாட்டலையும் அப்படியே ஏற்று நடப்பவர்கள் முஸ்லிம்கள் மறைத்து, திரித்து, வளைத்து, நிராகரித்து நடப்பவர்கள் காஃபிர்கள். மற்றபடி முஸ்லிம் குடும்பத்தில் பிறப்பதால் மட்டும் முஸ்லிமாக இருக்கப் போவதுமில்லை. காஃபிர் குடும்பத்தில் பிறப்பதால் காஃபிராக ஆவதுமில்லை. முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் முஸ்லிமாகவே இருந்தார்கள். அவர்களின் சந்ததியில் வந்தவர்களே இறைக் கட்டளைகளைப் புறக்கணித்து காஃபிரானார்கள். (பார்க்க: அல்குர்ஆன்: 2:38,39)
சபிக்கப்பட வேண்டியவர்கள் புரோகிதர்கள்:
இறைவனது இறுதி நெறிநூலில் தவறானவை – வழிகேடு எனக் கூறப்பட்டவை அனைத்தும் ஆதத்தின் சந்ததிகள் அனைவரையும் கட்டுப்படுத்தும். இந்தச் சுயநல புரோகிதர்கள் கூறுவது போல், முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது, காஃபிர்களை மட்டுமே கட்டுப்படுத்தும் என்பது அப்பட்டமான பொய்க்கூற்றாகும். பெரும் பித்தலாட்டமாகும். முஸ்லிம்களை மயக்கி வழிகெடுக்கும் பெரும் அயோக்கியத்தனமாகும். அல்குர்ஆனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் கடமை – கட்டாயம் அல்குர்ஆனை இறைவனின் இறுதி நெறிநூல் என ஒப்புக்கொண்டுள்ள முஸ்லிம்களுக்கே மிகமிக அதிகமாக இருக்கிறது. அதற்கு மாறாக இறைவனின் இறுதி நெறிநூலான அல்குர்ஆனிலுள்ள வசனங்கள் அதை நெறிநூலாக ஏற்றுள்ள முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது, காஃபிர்களுக்காக இறக்கப்பட்டவை என இந்தப் புரோகித முல்லாக்கள் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி வழிகெடுப்பது அப்பட்டமான அயோக்கியத்தனம் அல்லாமல் வேறு என்னவாம்? இப்படிப்பட்ட புரோகிதர்களை இறைவன் 2:61 கூறியிருப்பது போல் சபித்தாலும் குற்றமில்லை. அதற்கு மாறாக நாம் அவர்களை மிகக் கடுமையாகச் சாடி தோலுரித்துக் காட்டி அனைத்து முஸ்லிம்களையும் அவர்களின் உடும்புப் பிடியிலிருந்து விடுவிக்கவே பாடுபடுகிறோம்
அனைத்தையும் அறிந்த இறைவனிடமே பரிந்துரையா?
அடுத்து இன்னொரு தந்திரத்தைக் கையாண்டு அப்பாவி முஸ்லிம்களை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளுவார்கள். அல்லாஹ்விடம் சிபாரிசு செய்பவைகளாக, பரிந்துரைப்பவைகளாக, நெருங்கச் செய்பவைகளாக புத்களை – சிலைகளை வணங்குவதுதான் இணைவைக்கும் குற்றம். இறந்துபோன அவுலியாக்களை இக்காரியங்களுக்காக அணுகுவது – சடங்குகள் செய்வது இணை வைப்பது ஆகாது எனக்கூறி அப்பாவி மக்களை வழிகெடுப்பார்கள். இப்படி மக்களை வழிகெடுப்பதற்காகவே மின்தூனில்லாஹ் என்று அல்குர்ஆனில் இடம்பெறும் இடங்களிலெல்லாம் அல்லாஹ் அல்லாதவர்கள் என்று சரியாக மொழி பெயர்க்காமல் அல்லாஹ் அல்லாதவைகள் என சிலைகளைக் குறிப்பது போல் திரித்து வளைத்து மொழி பெயர்த்து அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி வழிகெடுப்பார்கள். இப்படி ஏமாற்றி, சிலை வணக்கம்தான் கூடாது – இணை வைக்கும் குற்றம் மற்றபடி கபுரு வணக்கம் – சமாதி வணக்கம் கூடும் -இபாதத் – வழிபாடு என்று திரித்துக் கூறி வழிகேட்டை வழிபாடு போல் கற்பனை செய்து, தங்களின் உண்டியல் வருமானத்திற்கு வழிவகுப்பார்கள். ஃபாத்திஹா, மெளலூது, கந்தூரி, கூடு கொடி, கவாலி, பாட்டுக் கச்சேரி என ஜாம் ஜாம் என நடத்தி வருமானத்தைப் பெருக்கிக் கொள்வார்கள், அப்பாவி முஸ்லிம்களை நரகில் தள்ளுவார்கள்.
மக்களை மயக்கி ஏமாற்றும் மவ்லவிகள் :
அல்குர்ஆனின் பல வசனங்கள் தெள்ளத் தெளிவாக நேரடியாக அல்லாஹ்வின் அடியார்களை (சிலைகளை அல்ல) பரிந்துரைப்பவர்களாக சிபாரிசு செய்பவர்களாக அல்லாஹ்வை நெருங்கச் செய்பவர்களாக நம்பி சடங்குகள் செய்வதைத்தான் வணங்குவதாகக் கூறுகின்றன என்பதை மக்களிடமிருந்து மறைத்து விடுவார்கள். (பார்க்க : 10,18, 18:102-106, 39:3)
நாங்கள் அவுலியாக்களை – அல்லாஹ்வின் அடியார்களை வணங்கவா சொல்கிறோம். அந்த நல்லடியார்களிடம் அல்லாஹ்விடம் எங்களுக்காக சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்கத்தானே சொல்லுகிறோம். அவுலியாக்களின் – நல்லடியார்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்கத்தானே சொல்லுகிறோம் என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை மயக்கி ஏமாற்றுவார்கள். வைத்தியரிடம் சென்று நோய்க்காக வைத்தியம் செய்வதில்லையா? வக்கீலிடம் சென்று வழக்கை நடத்தும்படி கேட்பதில்லையா? முதன் மந்திரியிடமோ, மந்திரியிடமோ MC, MLA, MPக்களைக் கொண்டு சிபாரிசு செய்யச் சொல்வதில்லையா? இது வெல்லாம் ஷிர்க்கா – இறைவனுக்கு இணை வைப்பதாகுமா? என்று வாய் ஜாலங்களைக் கூறி முஸ்லிம்களை மயக்கி அவுலியாக்களைக் கொண்டு அல்லாஹ் விடம் சிபாரிசு செய்வதை நியாயப்படுத்துகிறார்கள்.
தஆவுன், இஸ்திஆனத் வேறுபாடு!
உயிரோடுள்ள மனிதர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் காரணகாரியங்களு டன் செய்து கொள்ளும் உதவி தஆவுன் இதை அல்லாஹ் ஆகுமாக்கி இருக்கிறான். அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கும் உதவி இஸ்திஆனத் இது பரஸ்பர உதவி இல்லை. ஒரு தரப்பு உதவி தேடுதல் ஆகும். இந்த இஸ்திஆனத் என்ற ஒரு தரப்பு உதவியை அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும். இந்த உதவியை அல்லாஹ் அல்லாத யாரிடமும், அவர்கள் உயிரோடு இருந்தாலும், இறந்து விட்டாலும் கேட்கக் கூடாது. அதுவே இணை வைக்கும் பெருங்குற்றம் என்பதைப் பல அல்குர்ஆன் வசனங்கள் உணர்த்துகின்றன. (பார்க்க : 10:18, 18:102-106, 39:3) மிகமிக நெருக்கமாக, நம்பிக்கைக்குரியவனாக, உதவி செய்பவனாக அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த அவுலியாவும் வரமுடியாது என்பதையும் பல குர்ஆன் வசனங்கள் உணர்த்துகின்றன. (பார்க்க: 2:186, 11:61, 34:50, 50:16, 56:85)
மனித உதாரணங்கள் இறைவனுக்கு பொருந்துமா?
இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் பற்றிய எந்த உதாரணமும் அல்லாஹ்வுக்குப் பொருந்தாது என்ற அல்லாஹ்வின் கடுமையான எச்சரிக்கைகளைப் புறக்கணித்து விட்டு முதன்மந்திரி, மந்திரி உதாரணங்களைக் கூறி இறந்துபோன அல்லாஹ்வின் அடியார்களிடம் உதவி தேடுவதை நியாயப்படுத்தும் இந்தப் புரோகிதர்கள் எந்த அளவு கல் நெஞ்சம் உடையவர்களாக இருப்பார்கள் என்பதை சிந்திப்பவர்களே விளங்க முடியும்.
மனிதர்களைப் பொறுத்தமட்டிலும் முதன் மந்திரியாக இருந்தாலும், மந்திரியாக இருந்தாலும் சிபாரிசு செய்யப்படுபவரைப் பற்றி அ, ஆ கூட தெரியாத நிலையில் இருப்பவர்கள். MC, MLA, MP அறிமுகப்படுத்திய பின்னர் அறிந்து கொள்ளும் பரிதாப நிலையிலேயே இருப்பார்கள். எனவே MC, MLA, MP சிபாரிசை ஏற்று, அல்லது லஞ்சத்தைப் பெற்று விரும்பும் காரியத்தைச் செய்து கொடுக்கலாம். மந்திரிகளுக்கு முதன்மந்திரிகளுக்கு பெண்டாட்டி, வைப்பாட்டி போன்றவர்களின் தயவு கட்டாயம் தேவைப்படும். அதனால் அவர்களுக்காக சில காரியங்களைச் செய்து கொடுக்கவும் கூடும். இந்த அறிவற்ற நிலையை தேவையுடைய நிலையை அல்லாஹ்வுடன் ஒப்பிட்டுக் கூறும் இந்த தர்ஹா புரோகித மவ்லவிகள் எந்த அளவு மரமண்டைகளாக இருப்பார்கள்? அல்லது அறிந்த நிலையில் அப்பாவி முஸ்லிம்களை நரகில் தள்ளி உண்டியல் ஆதாயம் தேடும் கல் நெஞ்சர்களாக இருப்பார்கள் என்பதைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்! உணர்வீர்கள்.
அல்லாஹ் அறிவில் குறைந்தவனா?
சிபாரிசு செய்யப்படுபவரைப் பற்றி சிபாரிசு செய்யும் அவுலியா அறிந்திருப்பதை விட (இறந்து போன அவர்கள் எதையுமே அறிய முடியாது, ஒரு வாதத்திற்காக அறிவதாக ஒப்புக் கொண்டாலும்) அல்லாஹ் மிக மிக அறிந்தவனாக இருக்கிறான். இந்த நிலையில் இந்த சிபாரிசில் பொருள் இருக்க முடியுமா? அப்படியானால் இப்படு உதாரணங்கள் கூறி மக்களை ஏமாற்றுகிறவர்கள் மீது இரக்கம் காட்டமுடியுமா? அல்குர்ஆன் 2:159-162 வசனங்கள் கூறுவது போல் அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரது சாபத்தைப் பெற்று ஷைத்தானுடன் நரகம் புகுபவர்களா இல்லையா?
புரோகிதர்களின் கற்பனை தர்ஹாக்கள் :
இன்னும் பெரிய வேதனைக்குரிய கண்டிக்கத்தக்க விஷயம் இந்த தர்கா புரோகித மவ்லவிகள், உண்மையான அவுலியாக்க ளுக்காக – நல்லடியார்களுக்காக தர்ஹாக்கள் கட்டி மக்களை ஏமாற்றவில்லை. மடா குடிகாரன், கஞ்சா மஸ்தான், ஸ்திரீலோலன், பைத்தியம், பீங்காட்டப்பா, சட்டி மஸ்தான் போன்ற கேடுகெட்ட மனிதர்களை மட்டுமல்ல, கழுதை, குதிரை, யானை, நாய், பூனை போன்ற மிருகங்களையும், மிதியடி, கட்டை போன்றவற்றையும் புதைத்து வைத்துக்கொண்டு, தர்காக்கள் கட்டி அங்கெல்லாம் உண்டியல் வைத்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் எப்படிப்பட்ட கல் நெஞ்சர்களாக, கொடுமையாளர்களாக இருப்பார்கள் என்பதை சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
இன்று தமிழகத்தில் காணப்படும் பெரும்பாலான தர்காக்கள் ஒரு குடிகாரனின், ஒரு கஞ்சா மஸ்தானின் கனவில், பச்சைத் தலைப்பாவுடன் ஒரு தாடி வைத்த பெரியவர்(?) வந்து இங்கு நான் அடக்கமாகி இருக்கிறேன். எனக்காக இங்கு ஒரு தர்ஹா கட்டுங்கள் என்று சொன்னதாகத்தான் இருக்கும். மற்றபடி அங்கு உண்மையிலேயே ஒரு சாதாரண நடுத்தர மனிதர் கூட வாழ்ந்து இறந்து அடக்கப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இருக்காது.
இதை நாம் மிகைப்படுத்திக் கூறவில்லை. இந்த எமது கூற்றை மறுக்கும் சமாதி வழிபாடு புரோகித மவ்லவிகள் இருந்தால், அவர்கள் எல்லா தர்ஹாக்களுக்கும் வேண்டாம். ஒருசில தர்ஹாக்களுக்காவது இவர்கள் எழுதி வைத்துள்ள கட்டுக் கதைகள் இல்லாமல் ஆதாரபூர்வமான சரித்திரத்தையோ, வரலாறையோ கொண்டு வந்து நிரூபித்துக் காட்டட்டுமே பார்க்கலாம்.
சமாதி வழிபாட்டு புரோகித மவ்லவிகளின் தில்லுமுல்லுகள், பித்தலாட்டங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்துப் பார்ப்போம்.