இஸ்லாம் பார்வையில் வரவு, செலவு, சிக்கனம், சேமிப்பு…
M.A. ஹனிபா
பகுதி – 1
“நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரானதின்பாலே வழிகாட்டுகின்றது. நல்லறங்கள் புரியும் நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக மாபெரும் கூலி உண்டு என நன்மாராயம் கூறுகின்றது. (அல்குர்ஆன்: 17:9)
“நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவோருக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாகவும் அளவோடும் வழங்குகின்றான். நிச்சயமாக இதில் நம்பிக்கை கொள்ளும் சமூகத்திற்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன” (அல்குர்ஆன்: 30:37, மற்றும் 17:30)
“நெருங்கிய உறவினருக்கும், ஏழைக்கும், வழிப்போக்கருக்கும் அவரவர் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் (சங்கையான) முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்ததாகும். அவர்கள்தாம் வெற்றியாளர்கள்”. (அல்குர்ஆன்: 30:37)
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித இனம் அனைவரும் ஓர் தந்தை ஒரு தாய் மக்களே! மனிதர்கள் அனைவரும் கண்ணியத்திற்குரியவர்களே! பல்வேறு குலங்கள், கோத்திரங்கள் இருந்தாலும் மனிதகுலம் ஒன்றே! மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதற்கு இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இறையச்சமுள்ள ஒழுக்க மாந்தர்களே இறைவனின் பார்வையில் உயர்ந்தவர்கள் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு படைப்புக்கும், மனிதனுக்கும் பொருத்தமான சட்டங்களும், நியாயமான வாழ்க்கைத் திட்டங்களும் அமைத்து வழங்கியிருக்கும் சட்ட மாமேதை இறைவன். எனவே, மனிதர்கள் இறைவனின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்படிந்து நடக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இறைவன் மனிதனின் அகம், புறம், சொல், செயல் அனைத்தையும் பரிசீலித்து நீதி வழங்குபவன். மனிதனுக்கு வாழ்வையும் எண்ணற்ற அருட்கொடைகளையும் வழங்கியுள்ள அர்ரஹ்மானுக்கே மனிதன் நன்றியுள்ளவனாக இருக்கக் கடமைப்பட்டுள்ளான்.
வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செய்யும் மனிதனின் அனைத்துப் பாவங்களையும் அறிபவனும், தன் தவறை உணர்ந்து திருந்தி பாவமன்னிப்பு கோரு வோருக்கு மன்னிப்பு வழங்குபவனும் இறைவனே!
இறைவனின் திருப்பொருத்தமே மனிதனுக்குக் கிடைக்கும் பாக்கியத்திற்கும், மறுமையின் நிரந்தரமான மகிழ்ச்சிக்கும், மாபெரும் வெற்றிக்கும் காரணமாகும். ஆகவே, மனிதன் இறைவனுடைய திருப்பொருத்தத்தை மட்டும் நாடவேண்டும்.
மனித இயல்பையும்,தேவைகளையும், மன ஆவலையும் நேரடியாக அறிபவனும் இரட்சிப்பவனும் இறைவன் ஒருவனே! மனிதன் இறைவனையே முழுதும் சார்ந்து வாழ்ந்து நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளான்.
ஒவ்வொரு முஸ்லிமும் தமது அன்றாட வாழ்வியல் செயல்முறைக்கு திருக்குர்ஆன் வழிகாட்டலையே பின்பற்ற வேண்டும். அதில் முக்கிய பங்கு வகிப்பது, வாழ்வாதாரத்துக்கு உணவு, உடை, உறைவிடம் என மனிதனின் முக்கியத் தேவை பொருளாதாரமாகும்.
மனிதனின் பொருளாதாரத் தேவையைத் தாராளமாகவும், அளவோடும் அல்லாஹ்வே வழங்குகிறான் என்றும், அந்தப் பொருளாதாரத்தில் “நெருங்கிய உறவினருக்கும், ஏழைக்கும், வழிப்போக்கருக்கும் அவரவர் உரிமையை வழங்கிட வேண்டும்” எனவும் மேற்கண்ட அர்ரூம் அத்தியாயம்: 30:37,38 வசனங்கள் கட்டளையிடுகின்றன.
இன்னும், “நெருங்கிய உறவினர், அநாதைகள், வறியோர், வழிப்போக்கர், யாசிப்போர், அடிமைகளை விடுதலை செய்வதற்கும் ஒருவர் தாம் விரும்பும் செல்வத்தை வழங்க வேண்டும் என சற்று கூடுதல் விளக்கம் 2:177 வசனத் தொடரில் அமைந்துள்ளது.
இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள பொருளாதார அருட்கொடையில் பிறருக்குரிய உரிமையும் அடக்கம். “நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரானதில்பாலே வழி காட்டுகின்றது” (17:9) இந்த வசனத்தின் அடிப்படையில், ஆகுமானவை (ஹலால்) விலக்கப்பட்டவை (ஹராம்) என இருவித பொருள் திரட்டுவதில் இஸ்லாம் ஆகுமானவையை அனுமதித்து மிகுந்த கவனத்துடன் இஸ்லாம் விலக்கியுள்ளதை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும்.
இறைவழியில் முயன்று ஹலாலான முறையில் ஒருவர் பொருட் செல்வங்களை சேகரித்திருந்தாலும், ஒரு மனிதனது செல்வம் அவருக்கு மட்டும் உரியதல்ல! சமூகத்தி லுள்ள பலவீனமான மக்கள், நாதியற்றவர்கள் ஆகியோருக்கும் அதில் உரிமையுள்ளது. ஆகவே, தம் விருப்பம் போல் அறவழி தவிர்த்து “வீண் விரயம் செய்யும்” அதிகாரம் அவருக்கு இல்லை.
பகுதி – 2 :
வீண் விரயம் செய்யாதீர்கள் :
“ஆதமுடைய சந்ததியினரே! தொழுமிடத்திலெல்லாம் (ஆடைகள் எனும்) உங்கள் அலங்காரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள், நிச்சயமாக அவன் வீண் விரயம் செய்பவர்களை நேசிக்கமாட்டான்” (அல்குர்ஆன்: 7:31, 6:142)’
“நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாகவே இருக்கின்றனர், ஷைத்தான் தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 17:27)
மேலும், உறவினர், வறியோர், வழிப்போக்கர் ஆகியோரின் உரிமையை வழங்குவீராக! நீர் வீண் விரயம் செய்ய வேண்டாம். (அல்குர்ஆன்: 17:26.30:37)
மேலும், அவர்கள் செலவு செய்தால் விரயம் செய்யமாட்டார்கள், (கஞ்சத்தனமாக) குறைக்கவும் மாட்டார்கள். இவற்றுக்கிடையே நடுநிலையானதாக அது இருக்கும். (அல்குர்ஆன்: 25:67)
ஒரு மனிதனின் செல்வத்தில் பிறருக்கும் உரிமையுள்ளது என்று திருமறையில் விவரிக்கப்பட்ட பிறகு அவர் வீண் செலவு, விரயம், ஊதாரித்தனம் செய்வதும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணி, வீண் செலவு, விரயம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் ஒரு மனிதரால் அவரது செல்வத்தில் பிறருக்கும் உரிமை உள்ளதை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? அவரால் புரிந்து கொள்ள முடியாது! என்பதே இதன் கருத்தாகும்.
ஆகவே, “நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவே இருக்கின்றனர் என்று ஊதாரித்தனமாக செலவு செய்பவர், ஷைத்தானின் சகோதர ராவார்” என ஊதாரியை ஷைத்தானோடு இணைத்து திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது. ஷைத்தான் தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். வீண் விரயம் செய்பவரும் இறைவனின் கட்டளையைப் புறக்கணித்து தனது இரட்சகனுக்கு செலுத்த வேண்டிய நன்றியை மறந்து, நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.
(நபியே!) “நிச்சயமாக எனது இரட்சகன் தனது அடியார்களில் தான் நாடுவோருக்கு உணவைத் தாராளமாகவும், அளவோடும் வழங்குகின்றான். நீங்கள் (நல்லறங்களில்) எதைச் செலவிட்டபோதும் அவன் அதற்குப் பிரதியீட்டை வழங்குவான். அவன் உணவளிப்போரில் சிறந்தவன் என்று நீர் கூறுவீராக!” (அல்குர்ஆன்: 34:39)
“அவர்கள் மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள், தொழுகையையும் நிலைநாட்டுவார்கள், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்” (அல்குர்ஆன்:2:3)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வளமும், உயர்வும் மிக்க அல்லாஹ், “ஆதமின் மகனே! நீ (பிறருக்கு) ஈந்திடு. உனக்கு நான் ஈவேன்” என்று கூறினான்.
மேலும், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் வலக்கரம் நிரம்பியுள்ளது. இரவிலும், பகலிலும் அது வாரி வழங்குகிறது. அதை எதுவும் குறைத்து விடாது” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நூல்கள்: முஸ்லிம்: 1815,1816, புகாரி: 4684,5352,7496)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தரமம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி), நூல்கள்: புகாரி: 1410, முஸ்லிம்:1843)
“தொழுகையை நிலைநாட்டுங்கள், ஜக்காத்தையும் கொடுத்து வாருங்கள்” என்கிற தர்ம சிந்தனையைத் தூண்டும் இந்த வசனங்கள் இபாதத்துடன் இணைத்து குர்ஆனில் பல இடங்களிலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியல் வழிச் செய்திகளிலும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
கடமையான தர்மம் மட்டுமல்ல, உதிரியான தர்மம் சிறிதோ பெரிதோ, உணவு உடை உதவி எதுவாக இருந்தாலும் கொடுக் கத் தகுதியானவர் அதைப் பெற உரிமை உள்ளவருக்கு அவற்றை வழங்கிட வேண்டும். அல்லாஹ் அதற்கு பகரமாக அடியானுக்கு சுவனத்தை வழங்குவதாக வாக்களித் திருக்கிறான்.
“பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரக நெருப்பிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள இயன்றவராக இருக்கிறாரோ அவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்!” (நபிமொழி: முஸ்லிம்: 1845,1846)
ஆகவே, “வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்கமாட்டான்” என்ற வசனத்தின் குறிப்பறிந்து ஊதாரித்தனத்திலிருந்து விலகி, சமுதாயத்தில் உள்ள ஆதரவற்றவர்கள், பலவீனமானவர்கள் மீது செல்வத்தைச் செலவு செய்யும் செல்வந்தர், அவர்கள் மீது பேருபகாரம் புரிகிறார் என்று அர்த்தமல்ல, மாறாக, அவரது கடமையை தான் நிறைவேற்றுகின்றார்.
“மேலும், உறவினர், வறியோர், வழிப்போக்கர் ஆகியோரின் உரிமையை வழங்குவீராக!” நீர் வீண் விரயம் செய்ய வேண்டாம். (அல்குர்ஆன்: 17:26, 30:37)
மேற்கண்ட இறைமறை வசனங்கள், பலவீனப்பட்ட மக்களின் உரிமைகளைத் தட்டிப் பறிப்பதிலிருந்து செல்வந்தர்களைத் தடுக்கிறது. தன்னிடமுள்ள செல்வத்தில் மற்றவர்களுக்கும் உரிமையுள்ளது. அந்த உரிமையை நிறைவேற்றுவது அவசியம் என்ற உணர்வு பணம் படைத்தவர்களுக்கு ஏற்பட்டால், வறுமையில் வாடும் ஏழைகள் மற்றும் அவரவருக்கான உரிமைகள் தடையின்றி கிடைத்து விடும். வீண் விரயமும் தவிர்க்கப்பட்டு முறையாக அல்லாஹ்வின் கட்டளை அமல்படுத்தப்படும்
பகுதி – 3 :
கடன் பெறுவது, கடன் கொடுத்து உதவுவது :
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், வட்டியில் எஞ்சியுள்ளதை விட்டுவிடுங்கள்”. (அல்குர்ஆன்: 2:278)
ஒரு மனிதனின் பொருளாதார நிலைமையைச் சீர்படுத்துவதற்காக அல்லது ஏதேனும் விடுவிக்க முடியாத இக்கட்டான தேவையை நிறைவேற்றுவதற்காக பொருளுதவி கட்டாயம் தேவைப்படும். அந்த உதவி கிடைக்கவில்லையானால் அவரது நிலைமை அதிகம் சீரழிந்து போகலாம் அல்லது அவ்வகை சிரமங்கள் அதிகரித்து விடலாம்.
அப்படி ஒரு சூழ்நிலைக்கு ஆளான ஒருவருக்குக் கடன் கொடுத்து உதவி செய்திட வேண்டும். கடன் பெற்றவர் உடனடியாக தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வார். பிறகு கடன் வழங்கியவருக்கு அவரது பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவார்.
இதுபோன்ற தவிர்க்க முடியாத அவசியத் தேவையுடையோருக்கு கடன் கொடுத்து ஒத்துழைப்பு வழங்குவது, மனிதமெனும் மனிதாபிமான கட்டமைப்புக்கு முக்கிய அம்சமாகும். காலத்தின் கட்டாயத்தினால் ஒரு மனிதன் கடன் கேட்பதால் அவரது அந்தஸ்தில் எவ்வித குறைவையும் ஏற்படுத்தி விடாது.
மனிதர்களின் தேவையைப் பூர்த்தி செய்தல், அவர்களின் சிரமங்களைக் களைதல், அவர்களின் வறுமை நிலையை அகற்றுதல் ஆகியவைக் குறித்தும், இதில் கடன் கொடுப்பதும், கடன் வாங்குவதும் கூடும் என்பதிலும் இஸ்லாம் தெளிவான வழிகாட்டலைக் குறிப்பிட்டுள்ளது.
சந்தர்ப்ப சூழ்நிலையால் வாழ்வாதாரத் தேவை முற்றும் நசிந்த நிலையிலும் யாசிப்பதும், கடன் கோருதலும் தன்மானக் குறைவு., சுயமரியாதைக்கு இழுக்கு, அவமானம் எனக் கருதி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மனிதன் சென்று விடுகின்றான்.
இன்றைய பொருளாதார சிந்தனைப் போக்கு உலக ஆதாயப் பயனுக்குரிய கருவியாகக் கடனைத்தான் எதிர்பார்க்கிறது. இன்றைய வர்த்தக உலகில் கடனுக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ளது. ஒரு வியாபாரத்தைத் தொடங்குவதற்கும், அதை நடத்திச் செல்வதற்கும் அதில் அவ்வப்போது ஏற்படும் நஷ்டங்களைச் சமாளிப்பதற்கும் கடன் கை கொடுத்து உதவுகிறது.
தற்கால உலகில் தொழில் மற்றும் வியாபாரத்துக்காக கடன் வாங்குவது இன்றியமையாத முக்கியத்துவமாக ஆகிவிட்டது. கடன் கொடுக்கல், வாங்கல் நின்றுவிட்டால் சிறிய பெரிய தொழில் நிறுவனங்களும் வியாபார நிறுவனங்களும் ஸ்தம்பித்து நின்றுவிடும்.
உலகாதாயக் கடன் வட்டியின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டியில்லாமல் எவரும் எவருக்கும் கடன் கொடுக்க முன் வருவதில்லை. மாறாக, வட்டி வட்டிக்கு வட்டி என அதிகமதிகம் வட்டியை பெருக்கவே விரும்புகின்றனர். அப்பவும் வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரம் செய்பவர் வியாபாரம் நசிந்து நஷ்டம் ஏற்பட்டால் வட்டியும் கட்ட முடியாமல் கடனையும் அடைக்க முடியாமல் அவமானத்திற்குள்ளாகி தற்கொலை செய்து கொள்கிறார்.
ஆக, உலக ஆதாயக் கடனில் கடன் கொடுத்தவன் வளமடைகின்றான். கடன் வாங்கியவன் தனது உழைப்பை எல்லாம் வட்டிப் பணமாக செலுத்தி, பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமுமின்றி வளமிழந்து வலுவிழந்து தற்கொலைக்குத் தள்ளப்படுகிறான்.
இஸ்லாம் இத்தகைய உலக ஆதாயச் சிந்தனைக்கு எதிரானது. பொருளீட்டி பயனடையவதற்கான கருவியாக கடனை இஸ்லாம் கருதவில்லை. மாறாக, கடன் கொடுப்பது தேவைப்பட்டோருக்கு உதவும் ஒருவகை உபகாரமாகும் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் கண்ணோட்டமாகும்.
இந்தக் கண்ணோட்டத்தின் பயன் என்னவென்றால், பண மதிப்பு நாள் தோறும் குறைந்து வருவதையும் கூட கணக்கிட்டு அதற்குப் பகரமாக கடன் வாங்கியவரிடம் வட்டிக்கு வட்டி என்று வசூல் செய்யாமல், முடிந்தவரை அவருக்குச் சலுகை செய்யவேண்டும். கடனைத் திருப்பித் தருவதற்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று அவர் கேட்டால் அதிகமான கால அவகாசம் அவருக்கு அளிக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடனைத் திருப்பிக் கொடுக்க அவரால் இயலவில்லை எனில் அதனை மன்னித்து கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும். திருக்குர்ஆன் வட்டியைத் தடை செய்வதாக அறிவித்தவுடன் கடன் தொடர்பாக இதை உயர்வான போதனையாக வழங்குகிறது.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், வட்டியில் எஞ்சியுள்ளதை விட்டு விடுங்கள்.”
“(அவ்வாறு) நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும், போர்ப்பிரகடனம் செய்யப்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (வட்டியை விட்டு தவ்பா செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வத்தின் மூலதனம் உங்களுக்குரியதாகும். (இதன்மூலம்) நீங்கள் அநியாயம் செய்யவும் மாட்டீர்கள். அநியாயம் செய்யப்படவும் மாட்டீர்கள்”.
(கடன்பட்ட) “அவன் கஷ்டமுடையவனாக இருந்தால் வசதி வரும்வரை வாய்ப்பளிக்க வேண்டும். (அதனை) தர்மமாக ஆக்கிவிடுவதே உங்களுக்குச் சிறந்ததாகும்”
“அல்லாஹ்விடம் நீங்கள் மீட்டப்படும் நாளை அஞ்சிக் கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவை சம்பாதித்தவற்றிற்கு (கூலி) முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்” (அல்குர்ஆன்: 278-281)
கடன் வாங்குபவர் கடனைத் திருப்பிச் செலுத்திட வேண்டும் என்பதே கடனில் முக்கியமான நிபந்தனை. இதை உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட நியாயமான நிபந்தனையாகும்.
இருந்தும், கடன் பெற்றவர் கடனைத் திரும்பச் செலுத்த இயலாத சிரமத்திலிருந்தால் அவருக்கு அவகாசம் அளியுங்கள். இயன்றால் கடனை “தர்மமாக விட்டுக் கொடுங்கள் என அல்லாஹ் உயர்வான உபதேசம் வழங்குகிறான்.
இஸ்லாமின் பார்வையில் தர்மம் செய்வதின் சிறப்பு :
(நல்வழியில் செலவு செய்து) “அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் வழங்குபவர் யார்? (அவ்வாறெனில்) அவன் அதை அவருக்குப் பன்மடங்குகளாகப் பெருக்குவான். (அல்குர்ஆன்: 2:245, 57:11,18, 64:17)
“நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கின்றேன்” என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் தொழுகையை நிலைநாட்டி ஜக்காத்தையும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு உறுதுணையாகவும் இருந்து “அல்லாஹ்வுக்கு அழகிய கடனும் கொடுத்து வந்தால், “நிச்சயமாக நான் உங்கள் தீமைகளை உங்களை விட்டு நீக்கி, உங்களைச் சுவனச் சோலைகளில் நுழைவிப்பேன்”. (அல்குர்ஆன்:5:12) மேலும் பார்க்க. வசனம்: 73:20)
நபிமொழிகள் :
“யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தரவேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்து விடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் இடம் தருகின்றான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுல் யசர்(ரழி) நூல் : நீண்ட ஹதீஃதின் சுருக்கம், முஸ்லிம் : 5736)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், நடு இரவில் அல்லது இரவின் இறுதி மூன்றிலொரு பகுதியில் கீழ்வானிற்கு இறங்குகிறான். “என்னிடம் பிரார்த்திப்பவர் எவரும் உண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். அல்லது என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன்” என்று கூறுகின்றான்.
பிறகு “(நான்) இல்லாதவனும் அல்லன், (வாக்கு மீறுவதன் மூலம்) அநீதி இழைப்பவனும் அல்லன். (இத்தகைய) “எனக்கு (அழகிய) கடனளிப்பவர் யாரும் உண்டா?” என்று அல்லாஹ் கேட்கிறான். (முஸ்லிம்: 1389)
அதாவது, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், அல்லாஹ்வின் திருப்தியை நாடி மட்டுமே, தூய பொருட்களிலிருந்து ஜகாத், ஸதகா போன்ற தானம், தர்மங்கள் வழங்குவதை ஆர்வமூட்டியே தர்மம் செய்வதை தமக்கு அளிக்கும் கடனாக அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்.
குர்ஆன் வசனங்கள், ஹதீஃத்களின் உபதேசப்படி, கடன் கொடுத்தவர் கொடுத்த கடனைத் தள்ளுபடி செய்து விட்டால் கடன் தர்மமாகி விடும். அல்லாஹ் தர்மத்தை தனது வலக்கரத்தால் பெற்று அதைப் பன்மடங்காகப் பெருகச் செய்கிறான். இம்மையில் செய்த தர்மம் மறுமை நாள் வரை வளர்ந்து கொண்டிருக்கும். ஒரு முஸ்லிம் பிறருக்குச் செய்யும் தர்மம், உதவி இவை வீண் விரயமாகி விடுவதில்லை.
“அல்லாஹ் வட்டியை அழித்து, தர்மத்தை வளர்க்கின்றான்”. 2:276
“கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே சிறந்தவர்”
ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரை(ப் பிடித்து)க் கண்டிக்கத் தயாராயினர்.
அவரை விட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது” என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், “அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதையே கொடுங்கள்’. “அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்’ என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரழி), நூல்: புகாரி:2306, முஸ்லிம்: 3270, நஸாயீ: 4539, அஹ்மத்) (இன்ஷா அல்லாஹ் தொடரும் )
சமாதி வழிபாட்டு புரோகித மவ்லவிகளின் தில்லுமுல்லுகள், பித்தலாட்டங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்துப் பார்ப்போம்.