பெண்கள் பள்ளிக்கு வரலாமா?
முஹம்மது ஹனீபா, திருச்சி.
பெண்களுக்கு ஆத்மாவே இல்லை என்று சொல்லி கொண்டிருந்த காலத்தில், பெண்களை போகப் பொருளாகக் கொண்டிருந்த மக்கள் மத்தியில், பெண்களுக்கு சொத்துரிமை, திருமண ஒப்புதல் உரிமை, திருமண ரத்து உரிமை, போரில் கலந்து கொள்ளும் உரிமை, வாரிசுரிமை போன்ற இன்ன பிற உரிமைகளை தரப்படாத அந்த காலத்தில், அல்லாஹ் தன் இறுதித் தூதர் மூலமாக ஆண்களுக்கு நிகரான அனைத்து உரிமைகளையும், உயர்வையும் வழங்கினான். சுபஹானல்லாஹ்! அல்லா நீதி தவறாதவன் என்று இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் இன்று ஆணாதிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் அடியார்களான பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதையும், ஆண்களுக்கு நிகரான இபாதத்துக்களை செய்வதையும் தடை செய்து வைத்திருப்பதைக் காண்கிறோம். பிற மதங்களில் கூட பெண்கள் சர்ச், கோவில்களுக்கு வருவதையும் அவர்கள் வழிபாடு செய்தலையும் தடை செய்யவில்லை என்பதையும் கண்டு வருகிறோம்.
நம் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற கீழை நாடுகளில் இதுபோன்ற நடைமுறைகள் புழக்கத்தில் உள்ளன. ஐக்கிய அரபு நாடுகளில் இதுபோன்ற நடைமுறைகள் இல்லை. அவர்கள் பள்ளிவாசல்களில் பெண்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இதை இன்றும் ஹஜ் உம்ராவிற்கு போகும் நம்மவர்கள் கண்டுதான் வருகிறார்கள். குர்ஆனிலும், ஹதீஃதுகளிலும் பெண்கள் பள்ளிக்கு வந்து அமல்கள், பிரார்த்தனைகள், பிரசங்கங்களில் கலந்துகொள்ள எந்தவிதமான தடையும் கிடையாது என்பதையும் நாம் அறியமுடிகிறது.
விஷயம் இவ்வாறு இருக்க, நம் தமிழகத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஏன் இந்த முகல்லிது ஜமாத்தார்களும், சத்தியத்தை மறைக்கும் மெளலவிகளும் பெண்கள் பள்ளிக்கு வருவதை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். எதற்கெடுத்தாலும் சட்டத்தில் எங்கு ஓட்டை இருக்கிறது? நமக்கு சாதகமாக குர்ஆனிலும், ஹதீஃதுகளிலும் எங்காவது சொற்கள் இருக்கிறதா? என்று ஆராய்ந்து அவற்றிற்கு சுய விளக்கம் தந்து அசத்தியத்தை நிலை நிறுத்த இந்த கூட்டம் படாதபாடுபட்டு முயன்று வருகிறார்கள்.
மேற்கண்ட இந்த விஷயத்தில் இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்?
பள்ளி நிர்வாகிகள் : இவர்களை நாம் சந்தித்து பெண்கள் பள்ளிக்கு வருவதற்கு அனுமதி தாருங்கள், என்று சொன்னால் இவர்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா? “பெண்கள் பள்ளிக்கு வந்தால் பெரிய குழப்பம் ஏற்படும். மற்ற மதங்களில் உள்ளதுபோல் ஆண்களும், பெண்களும் கலந்து விடுவார்கள். இதனால் ஃபித்னா, ஃபசாதுகள் தலைதூக்கும், நாமும் சரியானபடி அமல்கள் செய்ய முடியாமல் போய்விடும் என்கிறார்கள். நாம் அவர்களிடம் ஏன் இப்படி கூறுகிறீர்கள்? பஸ்களிலும் பொது இடங்களிலும், திருமண மண்டபங்களிலும், இன்ன பிற போராட்டங்களுக்கும் பெண்கள் செல்லத்தானே செய்கிறார்கள். அது மட்டும் பரவாயில்லையா? என்று கேட்டால், “ஹி… ஹி… ஹி…இல்ல பாய் நம் முன்னோர்கள் எதைச் செய்தார்களோ அதைத்தான் நாம் செய்கிறோம், நாமாக அதையயல்லாம் மாற்ற முடியாது. அவர்களெல்லாம் தெரியாமலா இதைச் செய்தார்கள்” என்று கூறுகிறார்கள். நீங்கள் வேண்டு மென்றால் ஆலிம் உலமாக்களை கேட்டுப் பாருங்களேன். அப்போது இது பற்றி விளக்கமான ஷரீஅத் சட்டத்தை கூறுவார்கள் என்று ஒதுங்கிக் கொள்வார்கள்.
ஆனால் இந்த ஜமாஅத்தார்கள் பராஅத் இரவு, 27வது கிழமை இரவு, மிஃராஜ் இரவு என்ற இரவுகளில்பெண்களை பள்ளிக்கு வர வழைத்து பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கிக் கொடுத்து பித்அத் அமல்களை செய்யப் பணிவதோடு முடிவில் இவர்களுக்கு பிரியாணிப் பொட்டலங்களையும், மலிதா, தப்ரூக் என்ற பிரசாதங்களையும், வழங்குவார்கள். இம்மாதிரி நேரங்களிலும், திருமண பயான்களிலும் பெண்கள் பயான்களை கேட்பதே இல்லை. கஜகஜவென்று மற்றவர்களின் குறைகளை பேசியே வீடு திரும்புகின்றனர்.
ஆலிம்கள் உலமாக்கள் :
இவர்களெல்லாம் நாம் மேலே சொன்னபடி சுயவிளக்கம் கொடுப்பவர்கள்தான். சட்டத்தில் ஓட்டையை ஏற்படுத்தியவர்கள் இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். “ஷரீஅத் முறைப்படியும், இஜ்மாவு, கியாஸ் அடிப்படையிலும், இமாம்களாலும், முன் சென்ற பெரியார்கள், நாதாக்களாலும் வகுக்கப்பட்ட ஃபிக்ஹு சட்டம்தான் இவைகளெல்லாம். நாம் இவற்றையயல்லாம் புறந்தள்ளிவிட முடியாது” என்பர். நாம் “அதெல்லாம் எப்படி சாத்தியமாகும் குர்ஆனும், ஹதீஃதும் தவிர மற்றெல்லாம் மார்க்கம் அல்லவே! என்று கேட்டால் இவர்கள் சுதாரித்துக் கொண்டு “ஆம் ஹதீஃதில் தான் கூறப்பட்டுள்ளனவே, பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாதென்று என்று கூறி ஆயிஷா(ரழி) அவர்களின் ஒரு ஹதீஃதை இவர்கள் காட்டுவார்கள். அது என்னவென்றால் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிப்பு செய்கிறார்கள். இக்காலத்துப் பெண்களின் இந்த நிலையைக் கண்டால் நபி(ஸல்) அவர்கள் பனீ இஸ்ராயீல் காலத்துப் பெண்களை பள்ளிக்கு வருவதை தடை செய்தது போல் இவர்களையும் தடை செய்திருப்பார்கள். (புகாரி:869 அறிவிப்பாளர்: அம்ராபின் அப்திர்ரஹ்மான்: அபூதாவூத் 482) என்று உள்ள ஹதீஃதைக் காட்டி பாருங்கள் அன்னை ஆயிஷா அவர்கள் பல்லாயிரம் ஹதீஃத்களை அறிவிப்பு செய்த மாமேதை அவர்களே இப்படி கூறிவிட்டார்கள் பாருங்கள்” என்று சப்பைக்கட்டு காட்டுவார்கள்.
மேற்கண்ட ஹதீஃதை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டால் நபிகளாரின் காலத்துக்கு பின்பும் பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுது சென்றதை தெளிவாகவே அறிய முடிகிறதல்லவா? மேலும் இந்த கூற்று ஆயிஷா(ரழி) அவர்களின் சொந்த கருத்தாகும். யாருடைய சொந்த கருத்தாக இருந்தாலும் அது மார்க்கத்துக்கு முரணாகும் பட்சத்தில் எவ்வளவு பெரிய சஹாபாக்கள், கலீஃபாக்களின் கூற்றாயினும் அது ஒதுக்கப்படக்கூடிய ஒன்றே. ‘
ஏனெனில் இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் உங்கள் மீது என் அருட்கொடையை பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாமை மார்க்கமாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன்: 5:3) என்று நெறிநூல் அல்குர்ஆனில் அல்லாஹ் கூறி விட்ட பின்பு புதிதாக ஒன்றை மார்க்கத்தில் நுழைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதிலும் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அல்லாஹ்வும் தூதரும் காட்டித்தராத எந்த ஒரு அமலும் அது 100 ரத்துக்கள் உடையதாயினும் அல்லாஹ்விடம் நிராகரிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தெரிவித்தும் இருக்கிறார்கள். எனவே அக்காலப் பெண்களின் நவீன அலங்காரத்தைக் கண்டித்தே இவ்வாறு கூறியிருக்கிறார்களேயன்றி தடை செய்து அல்ல என்பதே உண்மையாகும்.
அடுத்து இவர்கள் முன் வைப்பது “பெண்கள் அவர்கள் வீட்டிலேயே அவர்களின் அறைகளில் தொழுது கொள்வதே அவர்களுக்கு சிறப்பாகும்” என்ற நபி மொழியைத்தான். இதை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டால் பிறகு ஏன் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார்களான பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுக்காதீர்கள் (புகாரி: 873,865 அறிவிப்பு இப்னு உமர்(ரழி)) என்று கூற வேண்டும்.
ஆகவே மேற்கண்ட ஹதீஃத் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்து கூறப்பட்டதல்ல. பள்ளிக்கு வர இயலாத பலஹீனமான பெண்கள், குழந்தைகளுக்கு பாலூட்டி பராமரிக்கும் தாய்மார்கள், குடும்ப அலுவல் காரணமாக வரமுடியாத பெண்கள் போன்றவர்களுக்கு அளிக்கப்பட்ட கருணை அடிப்படையிலான “சலுகைதான் என்பதை நாம் உணர வேண்டும். பெண்களும் முழு ஜமாஅத்தின் நன்மையைப் பெறவேண்டும் என்பதற்காக சிறப்பித்து அல்லாஹ்வாலும் தூதராலும் கொடுக்கப்பட்ட அருட்கொடையாகும்.
மாறாக தடையில்லை என்பதை மேலும் நாம் பல ஆதாரத்துடன் பார்க்கலாம். அவையாவன:
முதலில் குர்ஆனின் வசனங்களை பார்க்க வேண்டும் :
நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும், அல்லாஹ்வுக்கு வழிப்படும் ஆண்களும், வழிப்படும் பெண்களும், உண்மையே பேசும் ஆண்களும், உண்மையே பேசும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும், பொறுமையுள்ள பெண்களும், அல்லாஹ்வுக்கு அஞ்சிய ஆண்களும், அஞ்சிய பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், நோன்பு நோற்கும் பெண்களும், தங்கள் வெட்கஸ்தலத்தை காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகமாக தியானிக்கும் ஆண்களும், தியானிக்கும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், நற்கூலியையும் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்குர்ஆன்: 33:35) மேலும் பார்க்க 3:195, 16:97, 4:32, 33:73. மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் எல்லா அமல்களிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களையும் இணைத்தே கூறுகின்றான்.
நாம் ஹதீஃதுகளில் பார்த்தோம் என்று சொன்னால் :
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) கூறினார்கள்:
ஹதீஃத் 1: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது குழந்தை அழுவதை நான் செவியுறுவேன். அந்த குழந்தையின் தாய்க்கு நான் சிரம் தந்துவிடக் கூடாது என்பதற்காக எனது தொழுகையை நான் சுருக்கமாக முடித்துவிடுவேன். புகாரி: 707, அறிவிப்பு : அபூ ஹுரைரா(ரழி)
ஹதீஃத் 2 : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சலாம் சொல்வார்கள். அவர்கள் தம் இல்லத்துக்கு திரும்புவதற்கு முன் பெண்கள் திரும்பிச் சென்று தம் இல்லங்களுக்குள் நுழைந்து விடுவார்கள். அதுவரை நபி(ஸல்) தாம் தொழுத இடத்திலேயே வீற்றிருப்பார்கள். புகாரி: 850, அறிவிப்பு: உம்முசலமா(ரழி)
ஹதீஃத் 3 : எங்களது வீட்டில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அவர்களைப் பின்பற்றி நானும் அநாதைச் சிறுவர் ஒருவரும் தொழுதோம். என் தாயார் உம்மு சுலைம்(ரழி) எங்களுக்குப் பின்னால் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். புகாரி: 727, அறிவிப்பு அனஸ் பின் மாலிக்(ரழி).
ஹதீஃத் 4 : அல்லாஹ்வின் தூதர் ஒரு நாள் இஷாவை தாமதப்படுத்தினர். அப்போது உமர்(ரழி) வந்து பெண்களும், சிறுவர்களும் தூங்கிவிட்டனர் என்று கூறியதும், நபி(ஸல்) புறப்பட்டு வந்து பூமியில் இருப்போரில் உங்களைத் தவிர யாரும் இந்த தொழுகையை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை என்று கூறினார்கள். புகாரி: 864, அறிவிப்பு: ஆயிஷா(ரழி)
ஹதீஃத் 5 : உங்கள் மனைவிமார்கள் பள்ளி வாசலுக்கு செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி: 873, அறிவிப்பு: அப்துர் ரஹ்மான் பின் உமர்(ரழி)
ஹதீஃத் 6: பெருநாளன்று திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண்களை தொழும் திடலுக்கு புறப்படச் செய்யும்படி நாங்கள் கட்டளையிடப்பட்டோம்.
புகாரி:974-978, அபூதாவுத் 961, அறிவிப்பு: உம்மு அதிய்யா(ரழி)
ஹதீஃத் 7 : பெண்களே! ஆண்கள் சஜ்தாவிலிருந்து நிமிரும் வரை நீங்கள் உங்கள் தலையை உயர்த்த வேண்டாம்.
முஸ்லிம்: 750, அபூதாவூத் : 725, அறிவிப்பு: சஹ்ல் பின் சஅத்(ரழி)
ஹதீஃத் 8 : தொழுகையில் ஏற்படும் மறதியை உணர்த்த தஸ்பீஹ் கூறல் ஆண்க ளுக்கும், கை தட்டல் பெண்களுக்கும் உரியதாகும்.
முஸ்லிம் : 1192, அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி)
ஹதீஃத் 9: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் ஒரு வாசலைக் காட்டி இந்த வாசலைப் பெண்களுக்கென விட்டுவிட்டால் மிக நன்றாய் இருக்கும் என்று சொன்னார்கள். அபூதாவுத்: 391, அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரழி)
ஹதீஃத் 10 : ஆண்கள் வரிசையில் சிறந்தது முதல் வரிசை ஆகும். பெண்கள் வரிசையில் சிறந்தது கடைசி வரிசையாகும்.
அபூதாவுத்: 580, அறிவிப்பு : அபூஹுரைரா(ரழி)
ஹதீஃத் 11 : இப்னு உமர்(ரழி) தன் புதல்வர் பிலாலை நோக்கி கடுமையாக ஏசிவிட்டு “நானோ அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியதை உனக்கு அறிவிக்கிறேன். நீயோ பெண்கள் பள்ளிக்கு வருவதை தடுப்போம் என்கிறாயே என்று கூறினார்கள். முஸ்லிம்: 752, அறிவிப்பு : சாலிப் பின் அப்தில்லா(ரழி)
மேற்கண்ட நபிமொழி(ஹதீஃத்) மட்டுமின்றி ரமலான் மாத இரவுத் தொழுகையில் பெண்களும் கலந்து கொண்டதாக ஹதீஃத்களும், ஜனாஸா தொழுகைகளும் பெண்களுக்கு உண்டு என்ற வரலாற்று மற்றும் ஹதீஃத் ஆதாரங்களும் காணக் கிடைக்கின்றன.
மேற்கண்ட இவை அனைத்தையும் மறுத்து தடை செய்யப்பட்டு விடுவதால் நம் மார்க்கப் பெண்கள் பிரசங்கங்கள், பிரச்சாரங்கள், கலந்துரையாடல்கள் போன்றவைகளிலும் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இதனால் பெண்கள் மத்தியில் அறியாமை சூழ்ந்து கொண்டு உலக வீண விஷயங்களில் அவர்கள் அதிகம் ஈடுபாடு காட்டத் தலைப்பட்டு விட்டார்கள். பிள்ளைகள் வளர்ப்பிலும் உலக ஈடுபாடே அதிகரிக்கிறது. ஆகவே நமது சமுதாயம் மிகுதியான சீர்கேட்டை அடைய அல்லாஹ்வின் சாபத்திற்குள்ளான இப்லீஸ் ஆகிய ஷைத்தான் செய்த சூழ்ச்சி வளையில் இவர்கள் வீழ்ந்து விட்டார்கள் என்பதே உண்மை.
இந்த நிலை மாறவேண்டும். மறுமலர்ச்சி பிறக்க வேண்டும். எல்லா இறையில்லங்களிலும் மாதர்களின் வருகையினால் அவர்களுக்குள்ளும் முஸ்லிம்களுக்குள்ளும் நல்ல மாற்றங்கள் நிகழ வேண்டும். இஸ்லாமிய சட்ட நுணுக்கங்களை எல்லோரும் அறிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். நபிகளாரின் காலத்துப் பொற்காலம் மலர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்போமாக.