இயக்கவாதிகளுக்கு மீண்டும் ஓர் வேண்டுகோள்!
அஹமது இப்ராஹிம், புளியங்குடி
எனது அன்பான தவ்ஹீத் இயக்கங்களின் சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்!
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நமது தமிழகத்தில் உண்மையான இஸ்லாம் எதுவென்றே தெரியாமல் ஹனஃபி. ஷாஃபி என்ற இரு வழிகெட்ட மத்ஹபுகள் அத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற மார்க்க விளக்கமில்லாத ஓர் அரசியல் கட்சி இவைகள் மட்டும்தான் இஸ்லாம் என நம்பி நாங்கள் வாழ்ந்து வந்தோம்.
ஆனால் உண்மையல்லாத இந்தப் போலியான மத்ஹபு மார்க்கத்தில் முஸ்லிம்கள் என்ற பெயரில் நாங்கள் வாழ்ந்து வந்தாலும் மற்ற சமுதாய மக்களோடு இணக்கமாக வாழ்ந்து வந்ததால் அந்த இந்து சமுதாய மக்கள் நமது முஸ்லிம் சமுதாய மக்களை முதலாளி என்றும் மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா என்றும் முறை சொல்லி அழைத்து மிக மிகக் கண்ணியமாக வைத்திருந்தனர்.
இருக்கின்ற ஒரே அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம்லீக் என்ற இயக் கத்தில் தமிழகத்திலுள்ள எல்லா ஊர் ஜமாஅத் மஹல்லா முஸ்லிம்கள் அனைவரும் 100 சதவீதம் அங்கம் வகித்தனர். அதன் தலைவராக முஹம்மது இஸ்மாயில் சாகிப் அவர்கள் தலைவராக இருந்தார்கள். கம்யூனிஸ்ட் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளில் நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஒன்றிரண்டு பேர் இருந்தால் அவர்களை நம் ஜமாஅத் மக்கள் ஏதோ இந்துக்களை பார்ப்பது போன்று பார்ப்பார்கள். அந்த அளவுக்கு முஸ்லிம் லீக் கட்சியும் அதன் தலைவரான இஸ்மாயில் சாகிப் அவர்களும் சமுதாய ஒற்றுமை விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.
அத்தகைய இஸ்மாயில் சாகிப் அவர்களும் அவருடன் இருந்தவர்களும் தங்கள் கட்சியையும் தங்கள் சமுதாயத்தையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு மிக கண்ணியமான முறையில் அரசியல் நடத்திய காரணத்தினால் இஸ்மாயில் சாகிப் அவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் என்ற கண்ணியமான பட்டப் பெயரால் அழைக்கப்பட்டார்கள். இவ்வளவும் தூய இஸ்லாம் நமக்கு கிடைக்காத அறியாமை (அய்யாமுல் ஜாஹிலியா என்ற) மத்ஹபு காலத்தில் அதாவது 1986க்கு முன் நமது சமுதாயத்திற்கு கிடைத்த கண்ணியமும் மதிப்புமாகும்.
இந்நிலையில்தான் 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருச்சி அபூ அப்தில்லாஹ் அவர்களின் தலைமையில் மவ்லவி. பீ.ஜைனுல் ஆபிதீன் என்ற புரோகிதரை ஆசிரியராகக் கொண்டு நஜாத் என்ற பத்திரிக்கை வெளிவந்து தமிழகத்தில் ஓர் மாபெரும் தூய இஸ்லாமிய புரட்சியை ஏற்படுத்தியது. மத்ஹபு, தர்கா, தப்லீக், தரீக்கா போன்ற இணை வைப்புகளில் மூழ்கி இருந்த இளைஞர்கள் அவைகளிலிருந்து விடுபட்டு கூட்டம் கூட்டமாக தூய இஸ்லாமை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். இந்தப் புரட்சியின் விளைவு மவ்லவிகள் எனப்படும் புரோகிதர்களே அல்லாஹ்வின் மார்க்கத்தை சத்தியத்தை மறைத்த மறைக்கும் மாபாவிகள் என்பது பொதுமக்களுக்கு தெரிய வந்தது.
இவ்வாறு நஜாத் பத்திரிக்கை மூலம் சத்திய மார்க்கம் தெரிய வந்ததால் தங்களின் புரோகித இனம் நபி(ஸல்) அவர்களின் காலத்தைப் போல் அன்றைய தாருந்நத்வா என்ற ஜமாஅத்துல் உலமா சபை தலைவரான அபூஜஹீலும் அவனைச் சேர்ந்த உலமாக்களும் அப்பாவி ஸஹாபாக்களின் தூய இஸ்லாமிய எழுச்சி காரணமாக தூர்வாரப்பட்டதைப் போன்று நாமும் நம்மைச் சேர்ந்த ஆலிம்களும் எங்கே இருந்த இடம் தடம் தெரியாமல் போய் விடுமோ என்றும் அப்பாவி இளைஞர்கள் கூலி வாங்காமல் ஆலிம்கள் போன்று மார்க்கப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இனி தங்களுடைய சன்னிதானம் என்ற அந்தஸ்தும் கூடவே பிழைப்பும் பறிபோய் விடுமோ என்றஞ்சிய புரோகிதர்களான பீ.ஜையும் எஸ்.கமாலுத்தீனும் இளைஞர்களை வழிகெடுத்து முதன் முதலாக மூபுஞக்ஷி என்ற இயக்கத்தை துவக்கி இஸ்லாமிய மார்க்கத்தை விட இயக்கமே மேல் என்ற இயக்கவெறியை தூண்டி விட்டனர்.
1987ம் ஆண்டு முதன்முதலாக இயக்கமாகப் பிரிந்து அன்று தொட்டு இன்றுவரை சுமார் 70க்கும் மேலான இயக்கங்களாகப் பிரிந்து கொண்டே செல்கின்றது. இனியும் பிரிந்து கொண்டேதான் செல்லும். ஏனெனில் பிரிவினை இயக்கங்களின் தலைவர்களும் தொண்டர்களும் நரகிற்குரியவர்கள் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தீர்ப்பு. (ஆதாரம் : அல்குர்ஆன்: 11:118,119)
இவ்வாறு பிரிந்த தவ்ஹீத் இயக்கங்களின் மேடைகளில் அதன் தலைவர்கள் தங்கள் தங்கள் இயக்கங்களை வளர்ப்பதற்காக சமீபத்திய NRC, CAA போன்ற குடியுரிமை சீர்திருத்த சட்ட எதிர்ப்பு சாலை மறியல் கூட்டங்களில் அதன் மேடைகளில் நமது சமுதாய பிரிவினை இயக்கங்களின் ஆண்களும், பெண்களும் இந்துத்வாவையும் அதன் தலைவர்களையும் மிகவும் தரக்குறைவாகவும், வீராவேசமாகவும் பேசி நமது இளைஞர்களிடத்தில் குர்ஆன், ஹதீஃதுக்கு எதிராக இனவெறியையும், இயக்கவெறியையும் தூண்டி வந்தனர், வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் உடனடிப் பலனாக பயங்கரவாத பாஜகவுக்கு தமிழகத்தில் ஆளே இல்லாதிருந்த நிலை மாறி தற்போது அக்கட்சிக்கு இந்துத்வா இளைஞர்கள் அதிகமானோர் கூட்டம் கூட்டமாக வரத்துவங்கியுள்ளனர்.
இதுதான் தவ்ஹீத் இயக்கங்களின் வளர்ச்சியின் பலன் தமிழகத்தில் RSS அமோகமாக வளர்கின்றது. தன் நிழலையே கண்டு பயப்படும் இந்த தவ்ஹீத் புரோகிதர்களில் ஒரு புரோகிதர் பாபர் பள்ளிக்குள் காவிகள் நுழைந்தால் அந்த நிமிடத்தில் என் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு மனித வெடிகுண்டாக மாறுவேன் என முழக்கமிட்டு அப்பாவிகளிடமிருந்து கைத்தட்டலை பெறுகிறார். இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு மனிதன் தற்கொலை கொள்வானேயானால் அவன் நிரந்தரமாக நரகத்தில் இருப்பான் அவனுக்கு மன்னிப்பு என்பது இல்லை என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறிய எச்சரிக்கையை புறக்கணிக்கும் பாவத்திற்கு ஆளாகிறார். பேசுவது குர்ஆன், ஹதீஃத் செயல்படுவது அதற்கெதிரானது.
இந்த போலித்தனமான வீராவேச பேச்சின் காரணமாக இந்துத்துவா தீவிரவாதிகள் தாங்களே ஒரு இடத்தில் குண்டு வைத்து விட்டு அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது மிகச் சுலபமாக சுமத்தி விடுகின்றனர். இதனால் நமது ஒட்டுமொத்த சமுதாய இளைஞர்கள் காவல்துறையால் பொய் வழக்கிற்கு ஆளாகி தங்களுடைய இளமைக் கால வாழ்க்கை முழுவதையும் சிறைக் கொடுமைகளில் கழித்து விட்டு கடைசியாக வயதான காலத்தில் இவர்கள் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படு கின்றனர். சிறைப்பட்ட காலத்தில் இவர்களின் குடும்பங்கள் சின்னாபின்னமாகி சீரழிந்து விடுகிறது. இது தற்போது வழக்கமாகிவிட்டது.
1987க்குப் பிறகு உருவான தவ்ஹீத் இயக்கங்களின் வளர்ச்சியினால் நமது சமுதாயம் பெற்ற பலன் இதுதான். அதாவது கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் காலத்தில் நமது சமுதாயம் ஓரணியாக ஒன்றாக இருந்ததால் நமது சமுதாயத்திற்கு இருந்த மரியாதையும், கண்ணியமும் எப்போது தவ்ஹீத் இயக்கங்கள் உருவானதோ அப்போதே எடுபட்டும் போய்விட்டது. அப்போதிருந்தே நமது சமுதாயம் மிகக் கீழான நிலையை அடைந்துவிட்டது. இப்போது சொல்லுங்கள் நமது சமுதாயத்தின் உண்மையான விரோதிகள் யார் என்று தெரிகிறதா? சாட்சாத் தவ்ஹீத் பிரிவுகளும் அவைகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் அதன் தலைவர்களுமேயாவர்.
எனவே எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! இளைஞர்களே!!
உடனடியாக தாங்கள் இதுநாள் வரை அங்கம் வகிக்கும் ஹனஃபி, ஷாஃபி, இ.யூ.மு.லீக் JAQH, MMK, TNTJ, INTJ, YMJ, SALAFI, SDPI போன்ற இஸ்லாமிய மார்க்கத்திற்கெதிரான பிரிவினை இயக்கங்களை விட்டும் நீங்கி அல்குர்ஆன் 21:92 வசனப்படியும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படியும் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டு ஒரே அமீரின் கீழ் அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத் என்ற பெயரில் (ஆதாரம் : 22:78 மற்றும் புகாரி: 3606) ஒன்றிணைவதைத் தவிர வேறு வழியில்லை என மீண்டும் மீண்டும் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.