சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
செப்டம்பர் மாத தொடர்ச்சி…
சுவர்க்கத்தில் கடுமையான குளிரும் இல்லை:
அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து மகிழ்ந்தவண்ணம் இருப்பார்கள். கடுமையான குளிரையும் அதில் அவர்கள் காணமாட்டார்கள். (76:13) குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்ட வேண்டிய தேவையும் இல்லை. (27:7, 28:28)
வெள்ளிக்கிழமை தோறும் சுவர்க்கத்திலுள்ள கடைத்தெரு :
சுவர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுவர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடயிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மென்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள். அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் மேலும் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே’ என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்’ என்று கூறுவார்கள். என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ்பின் மாலிக் (ரழி) முஸ்லிம்: 5448, 2833, ரியாதுஸ் ஸாலி ஹூன், 1889)
சுவர்க்கத்து “யாகூத்’ என்னும் உயர்தரக் குதிரைகள் :
அல்லாஹ்வின் தூதரே சுவர்க்கத்தில் குதிரைகள் உள்ளனவா? என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் உன்னைச் சுவர்க்கத்தில் நுழையச் செய்தால் செம் பவளத்தால் ஆன குதிரை உன்னைத் தூக்கிக் கொண்டு சுவர்க்கத்தில் பறந்து செல்ல வேண்டும் என்று நீ விரும்பினால் அதுவும் (அந்த இடத்திற்கெல்லாம் உன்னைத் தூக்கிக் கொண்டு பறப்பதும்) நடக்கும். மேலும் சுவர்க்கத்தை சுற்றிப்பார்க்க நாடி குதிரையில் செல்ல எண்ணினால் “யாகூத்’ என்ற குதிரையும் கிடைக்கும். அது நம்மை நினைத்த இடத்திற்கெல்லாம் சுமந்து கொண்டு பறந்து செல்லும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும்,
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்ட ஒரு கனவில் என்னுடைய கையில் பட்டுத் துணி ஒன்று இருந்தது. நான் சுவர்க்கத்தில் எந்த இடத்திற்குச் செல்ல விரும்பினாலும் அது என்னைக் கொண்டு செல்லும் அப்போது என்னிடம் இருவர் வந்து என்னை நரகத்திற்குக் கொண்டுசெல்ல முயன்றார்கள். அப்போது அவர்களை ஒரு வானவர் சந்தித்து “இவரை விட்டு விடுங்கள் என்று கூறிவிட்டு என்னிடம் “பயப்படாதீர்’ என்று கூறினார்கள். (இப்னு உமர்(ரழி) புகாரி: 1156,1157,1158)
மற்றுமொரு மனிதர் சுவர்க்கத்தில் ஒட்டகம் உள்ளதா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ் உன்னைச் சுவர்க்கத்தில் நுழையச் செய்தால் உனது மனம் விரும்பக் கூடிய உனது கண்கள் குளிரக்கூடிய அனைத்தும் உமக்குக் கிடைக்கும் என்று அவருக்கு நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (புரைதா(ரழி) திர்மிதி:2666,2667,2668) அதனால் சுவர்க்கவாசிகளின்,
மனம் விரும்புகின்ற அனைத்தும் அங்கு கிடைக்கும் :
அவர்கள்,”அத்ன்” எனும் (நிலையான சுவர்க்கச்) சோலைகளில் நுழைவார்கள் அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் விரும்பும் அனைத்தும் அங்கு அவர்களுக்குக்கிடைக்கும் இவ்வாறுதான் இறையச்சம் உடையோருக்கு அல்லாஹ் பிரதிபலன் வழங்குகின்றான். (16:31) அ(ந்தச் சுவர்க்கத்)தில் மனம் விரும்புகின்ற கண்கள் சுவைக்கின்ற இன்பங்கள் (அனைத்தும்) உள்ளன. அதில் நீங்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பீர்கள். (43:71)
அங்கு அவர்கள் விரும்புகின்றவை(கள் அனைத்தும்) அவர்களுக்குக் கிடைக்கும். (அதில்) அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இது உம்முடைய இறைவனால் பொறுப்பேற்கப்பட்ட வாக்குறுதியாகும். (25:16)
அதாவது இனிமையான உணவுகள், பானங்கள், உடைகள், குடியிருப்புகள், வாகனங்கள், துணைகள், வேலையாட்கள், கண் கொள்ளாக் காட்சிகள் என எந்தக் கண்ணும் கண்டிராத எந்தக் காதும் கேட்டிராத எவரது உள்ளத்திலும் தோன்றியிராத அருட்கொடைகள் அனைத்தும் சுவர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் நிரந்தரமாகத் தங்கி நீடித்து நிலைத்திருப்பார்கள். அது முற்றுப் பெறாது முடிந்து போகாது நீங்கிவிடாது அங்கிருந்து இடம்பெயர அவர்கள் விரும்பமாட்டார்கள். இது அல்லாஹ்வின் வாக்குறுதியால் கிடைத்ததாகும். அவர்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தி அவர்களுக்குப் பேருபகாரம் செய்துள்ளான். அதனையே, அவர்கள் கேட்பவைகளெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும் (36:57) அதாவது அவர்கள் எப்போது எது கேட்டாலும் எல்லா வகையான சுகங்களையும் தடை யின்றிப் பெறுவார்கள். உதாரணமாக ஒரு ஹதீஃதில் வந்துள்ளதாவது.
சுவர்க்கத்தில் அமர்ந்து பானம் அருந்திக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை மேகம் கடந்துசெல்லும். அவர்களில் யார் எதை விரும்பினாலும் அதை அந்த மேகம் மழையாகப் பொழியும். அவர்களில் ஒருவர் அந்த மேகத்தை நோக்கி ஒத்த வயதுடைய கட்டழகிகளை எங்களுக்குப் பொழிவாயாக! என்று கூறுவார் அவ்வாறே அது நடக்கும். (அபூழப்யா அஸ்ஸுலஃபீ(ரஹ்) தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 5:35)
சுவர்க்கத்திலும் விவசாயம் செய்ய விரும்பும் சுவர்க்கவாசி :
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள், சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், “நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்” என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்)
அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்கும் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராய் விடும். மலைகளைப் போல் விளைந்து குவித்து போய்விடும். அப்போது இறைவன், “எடுத்துக்கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது’ என்று கூறுவான். என்றார்கள் (நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, “அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறையாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்” என்று கூறினார். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 2348, 7519)
சுவர்க்கவாசிகள் இன்பத்தோடுதான் இருப்பார்கள்:
“சுவர்க்கவாசிகள்” சுவர்க்கத்தினுள் நுழைந்ததும் பொது அறிவிப்பாளர் ஒருவர் இனி நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள் என்று அறிவிப்புச் செய்வார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள். (அபூஹுரைரா(ரழி) அபூசயீத் அல்குத்ரீ (ரழி) முஸ்லிம்: 5457,2837, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் 4:334,697)
சுவர்க்கவாசிகளின் ஆடைகள் இற்றுப் போகாது :
“நிச்சயமாக” நீர் இ(ச் சுவர்க்கத்)தில் (வெளிப்படை அவலமான ஆடையில்லாது) நிர்வாணமாக இருக்கமாட்டீர். (20:118)
சுவர்க்கத்தில் நுழைபவர்கள் அருட்கொடை பெற்றவராக இருப்பார் கைசேதப்படக் கூடியவராக இருக்கமாட்டார். அவருடைய ஆடைகள் (ஒருபோதும்) கிழியாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்.)
அவர்களின் ஆடைகள் இற்றுப் போகாது, கிழியாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹுரைரா(ரழி), திர்மிதி: 2645, 2662, முஸ்னத் அஹ்மத்) மேலும்
சுவர்க்கத்தில் மனதை வருந்தக்கூடியவைகள் எதுவுமில்லை :
“பொறாமை” இல்லை (113:5),
“பெருமை” இல்லை (38:74),
“ஆணவம்” இல்லை (2:34),
“ஷைத்தான்” இல்லை (2:168),
“பகைவர்” இல்லை (2:36),
“பொய்ப்பித்தல்” இல்லை (78:35),
“பைத்தியம்” இல்லை (81:22),
“பாவம்” இல்லை (56:25),
“வீணானவை” இல்லை (19:62),
“பொய்” இல்லை (92:10),
“அவதூறு” இல்லை (24:4),
“ஒட்டுக் கேட்டல்” இல்லை (15:18),
“துரோகமிழைத்தல்” இல்லை (12:52),
“ஏமாற்றுதல்” இல்லை (6:112),
“நஷ்டம்” இல்லை (5:5),
“துன்பம்” இல்லை (65:7),
“அழுகை” இல்லை (12:16),
“கஷ்டம்” இல்லை (2:185),
“நஷ்டம்” இல்லை (18:73),
“அழிவு” இல்லை (14:28),
“இழிவு” இல்லை (9:63),
“ஏமாற்றம்” இல்லை (4:142),
“ஏழ்மை” இல்லை (3:112),
“வறுமை” இல்லை (2:61),
“இருள்” இல்லை (2:17),
“கடன் தொல்லை” இல்லை (2:280),
“ஏசுதல்” இல்லை (6:108),
“நயவஞ்சகம்” இல்லை (4:145),
“குழப்பம்” இல்லை (2:191),
“மோசடி செய்தல்” இல்லை (22:38),
“உபாதை” இல்லை (2:222),
“முதுமை” இல்லை (புகாரி: 2822),
“நரைமுடி” இல்லை (19:4),
“ஊமையாவதில்லை” (16:76),
“செவிடாவதில்லை” (8:22),
“குருடாவதில்லை” (17:79),
“கொலை செய்யப்படுவதில்லை” (5:30),
“திருட்டு” இல்லை (5:38),
“இட்டுக்கட்டுதல்” இல்லை (24:4),
“ஆடைகள் மாசடைவதில்லை” (முஸ்லிம்: 5457),
“ஆடைகளைக் கழுவுதல்” இல்லை (74:4),
“அடுப்புப் பத்தவைத்தல்” இல்லை (2:17),
“புகை” இல்லை (44:10),
“யருப்பின் ஜுவாலை” இல்லை (55:35),
“அனல் காற்று இல்லை” (56:42),
“சமைத்தல்” இல்லை (51:26),
“கொதிநீர்” இல்லை (56:42),
“சோதனை” இல்லை (67:2),
“துறவரம்” இல்லை (57:27),
“எவ்வித சிரமும்” இல்லை (15:48) ஆக மொத்தத்தில்,
சுவர்க்கத்தில் எந்த விதமான சிரமமும் இல்லை :
அதனால் அவர்கள், “எங்களை விட்டும் கவலைகளைப் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நிச்சயமாக எங்கள் இறைவன் மிகவும் மன்னிப்பவனாகவும் மிகவும் நன்றி பாராட்டுபவனாகவும் இருக்கின்றான்” என்று (சுவர்க்கவாசிகள்) கூறுவார்கள். (35:34) “கவலை” (அல்ஹஸன்) என்பது ஏதேனும் ஒன்றைக் குறித்து அஞ்சுவதைக் குறிக்கும். உயர்ந்தோன் அல்லாஹ் அந்த அச்சத்தை எங்களை விட்டும் அகற்றினான். நாங்கள் பயந்து கொண்டும் அஞ்சிக் கொண்டும் இருந்த இம்மை மற்றும் மறுமையின் கவலைகளை எல்லாம் எங்களை விட்டும் அகற்றி எங்களுக்கு அல்லாஹ் நிம்மதியைத் தந்தான் என்று அவர்கள் கூறுவார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்: 7:585-587)
அவனது கருணையாலேயே இது கிடைத்தது என்பார்கள் :
அவன்தான் தனது அருளால் நிலையான இந்த இல்லத்தில் எங்களைத் தங்க வைத்தான் (என்றும் அவர்கள் கூறுவார்கள். 35:35)
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவரையும் அவரின் நற் செயல் சுவர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (மாறாக, அல்லாஹ்வின் தனி பெரும் கருணையாலேயே எவரும் சுவர்க்கம் புகமுடியும்) என்று கூறினார்கள். மக்கள், “தங்களையுமா?” (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை) இறைத் தூதர் அவர்களே? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “(ஆம்) என்னையும் தான், அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர என்று கூறினார்கள். (அபூ ஹுரைரா(ரழி), புகாரி: 5673, 6453, 6464, 6467, முஸ்லிம் : 5423, 5428)
இங்கே எங்களை எந்தத் தொல்லையும் தொடுவதில்லை, உடல் வலியும் இல்லை உயிர் வலியும் இங்கு இல்லை :
இங்கே எங்களை எந்தத் “தொல்லை யும்” அணுகுவதில்லை (என்றும் அவர்கள் கூறுவார்கள் 35:35) இங்கு “தொல்லை” என்பதைக் குறிக்க “நஸப்” எனும் சொல்லும் “களைப்பு” என்பதைக் குறிக்க “லுஃகூப்” எனும் சொல்லும் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. பொதுவாக இரு சொற்களுமே “சிரமம்” எனும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அப்படியிருக்க இங்கு இறைவன் இரண்டையும் கூறி இதுவும் இருக்காது அதுவும் இருக்காது என்று சொல்வதன் மூலம் அங்கு அவர்களுக்கு உடல் ரீதியான தொந்தரவும் இருக்காது உயிர் ரீதியான தொல்லையும் இருக்காது என்று உணர்த்துகின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர்: 7:585, 589)
சுவர்க்கவாதிகளில் மிகக் குறைந்த தரம் உடையவருக்கு :
மூசா(அலை) அவர்கள் இறைவனிடம் “சுவர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரம் உடையவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு இறைவன் கூறினான். சுவர்க்கவாசிகள் சொர்க்கத்திற்குள் நுழைந்த பிறகு ஒரு மனிதர் வருவார். அவரிடம் “நீ(சென்று) சுவர்க்கத்திற்குள் நுழைந்து கொள்!” என்று கூறப்படும். அதற்கு அவர், “இறைவா! எப்படி (நான் நுழைவேன்)? மக்கள் அனைவரும் அவரவர் இருப்பிடங்களைப் பிடித்துக் கொண்டு தமக்குக் கிடைத்ததை எடுத்துக் கொண்டுவிட்டார்களே? என்று கூறுவார். அவரிடம், “உலக அரசர்களில் ஒருவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியைப் போன்று உனக்குக் கிடைத்தால் திருப்திதானே?” என்று கேட்கப்படும். இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக் கும்” என்று (நான்கு மடங்கைக்) குறிப்பிடுவான். ஐந்தாம் மடங்கு பற்றிக் கூறும் போது, அவர், “திருப்தியடைந்து விட்டேன், இறைவா!” என்பார். உடனே இறைவன், “இதுவும் உனக்குக் கிடைக்கும், இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும். உன் மனம் விரும்புகின்ற, உன் பார்வை ரசிக்கின்ற அனைத்தும் உனக்குக் கிடைக்கும்” என்பான். அப்போது அவர், “திருப்தியடைந்தேன், இறைவா! என்று கூறுவார் என்று, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃகீரா பின் ஷிஅபா (ரழி) முஸ்லிம்: 312, திர்மிதி: 3122, மேலும் பார்க்க, அபூஹுரைரா(ரழி) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி), புகாரி: பாகம் 7, பக்கம்: 770, பாடம்: 7, 22, 806, 4581, 554, 573, 6558, 6559, 6560, 6566, 6568, 6571, 6573, 6574, 7383, 7434, 7437, 7438, 7439, 7440, 7493. 7510, 7511)
நரகத்திலிருந்து இறுதியாக வெளியேற்றப்பட்டு கடைசியாக சுவர்க்கத்திற்குள் செல்லும் மனிதனுக்கு :
நரகவாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது, அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வான வர்களுக்கு உத்தரவிடுவான். வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். முடிவில் ஒரு மனிதன் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே தங்குவான். நரகவாசிகளில் கடைசியாக இவன்தான் சுவர்க்கம் செல்பவன், நரகவாசிகளில் கடைசியாக இவன் தான் சுவர்க்கம் செல்பவன். அவனுடைய முகம் நரகை நோக்கிய நிலையில் இருப்பான். அப்போது அந்த மனிதன் “இறைவா!” என் முகத்தை நரகத்தைவிட்டும் திருப்புவாயாக! அதனுடைய காற்று என்னை வெளுகச் செய்துவிட்டது. அதனுடைய சூடு என்னைக் கரித்துவிட்டது” என்பான். அதற்கு இறைவன் “இவ்வாறு செய்தால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?” என்று கேட்பான். அதற்கு அம்மனிதன் “உன் கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு ஒன்றையும் கேட்கமாட்டேன்” என்பான்.
அல்லாஹ் அவனிடம் இது பற்றி உறுதிமொழியும் ஒப்பந்தமும் செய்து அவன் நாடியதைக் கொடுப்பான். அவனுடைய முகத்தை நரகத்தை விட்டும் திருப்பி விடுவான். சுவர்க்கத்தின் பால் அவனுடைய முகத்தைத் திருப்பியதும் அம்மனிதன் சுவர்க்கத்தின் செழிப்பைக் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். பிறகு “இறைவா! என்னைச் சுவர்க்கத்தின் வாசலுக்கு அருகில் கொண்டு செல்வாயாக! என்று கேட்பான். அதற்கு இறைவன் முன்பு கேட்டதைத் தவிர வேறு எதனையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீர் உறுதிமொழி அளிக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அம்மனிதன் “இறைவா! உன்னுடைய படைப்பினங்களில் நான் மிகவும் துர்பாக்கியசாலியாக ஆகாமலிருக்க வேண்டும்” என்பான். அதற்கு இறைவன், நீ கேட்டதைக் கொடுத்துவிட்டால் வேறு எதனையும் கேட்காமலிருப்பாயா?” என்று கேட்பான். அம்மனிதன் “கேட்கமாட்டேன், உன்னுடைய கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு எதனையும் கேட்க மாட்டேன்” என்பான்
இது பற்றி அவனிடம் உறுதிமொழியும் ஒப்பந்தமும் எடுத்துக் கொண்டு அவன் நாடியதைக் கொடுப்பான். அவனைச் சுவர்க்கத்தின் வாசலுக்கருகில் கொண்டு செல்வான். வாசலுக்கு அம்மனிதன் சென்றதும் அதன் கவர்ச்சியையும் அதிலுள்ள செழிப்பையும், மகிழ்ச்சியையும் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான், அதன் பின்னர் “இறைவா! என்னைச் சுவர்க்கத்தின் உள்ளே கொண்டு செல்வாயாக!” என்பான். “ஆதமுடைய மகனே! என் வாக்கு மாறுகிறாய்? முன்பு கொடுத் ததைத் தவிர வேறு எதனையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் நீ உறுதிமொழி எடுக்கவில்லையா?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அம்மனிதன் “இறைவா! உன்னுடைய படைப்பினங்களில் மிகவும் துர்பாக்கியசாலியாக என்னை ஆக்கி விடாதே! என்பான். இம் மனிதனுடைய நிலை கண்டு இறைவன் சிரிப்பான். பின்பு சுவர்க்கத்தில் நுழைவதற்கு அவனுக்கு இறைவன் அனுமதி அளிப்பான். அதன் பின்னர் இறைவன் அம்மனிதனை நோக்கி “நீ விரும்பக் கூடியதை யயல்லாம் விரும்பு” என்பான்.
அம்மனிதன் விரும்பக்கூடியதை எல்லாம் விரும்புவான். அவன் விருப்பத்தை(க் கூறி) முடித்த பின் இறைவன் அம்மனிதனுக்கு (அவன் கேட்க மறந்ததையயல்லாம்) நினைவுபடுத்தி “இதை விரும்பு, அதை விரும்பு’ என்று (இறைவனே) சொல்லிக் கொடுப்பான். முடிவில் அவனுடைய ஆசைகளைச் சொல்லி முடித்தபின் “நீ கேட்டதும் அது போல் இன்னொரு மடங்கு உனக்கு உண்டு” என இறைவன் கூறுவான் என்றார்கள். இச்செய்தியை அறிவித்த அபூ ஹுரைரா (ரழி) அவர்களிடம் அபூ ஸயீத் (ரழி) உனக்கு நீ கேட்டதும் அது போன்ற பத்து மடங்கும் கிடைக்கும் என்று இறைவன் கூறுவதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறினார்கள். (புகாரி: 806, 7437, 6573, முஸ்லிம்: 299)
மேலும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவர்க்கவாசிகளி லேயே குறைந்த தரத்திலும் ஆகக் கீழ்நிலை அந்தஸ்திலும் உள்ள மனிதர் யார் எனில் அவர்தான் (கடைசி ஆளாக) சுவர்க்கத்தில் நுழைவார். அவருக்குப் பிறகு (வேறு) யாரும் நுழையமாட்டார்கள். அவரது பார்வையில் ஒரு நூறாண்டு பயணத்தூரம் அளவுக்கு அவருக்குள்ள சுவர்க்கம் விசாலமாக்கப்படும். தங்க மாளிகைகளிலும் முத்துக் கூடாரங்களிலும் அவர் தங்கியிருப்பார் அங்கு ஒரு சாண் அளவு இடம் கூட செழிப்பாக்கப்படாமல் இருக்காது. காலையிலும், மாலையிலும் எழுபது ஆயிரம் தங்கத் தட்டுகள் அவரிடம் கொண்டு வரப்படும். அவை ஒவ்வொன்றின் உணவு வகையும் வேறு ஒன்றில் இல்லாத வண்ணம் இரு க்கும். அவற்றில் முதல் தட்டில் உணவு உட்கொள்ளும் பொழுது அவருக்கிருந்த ஆசை யும் விருப்பமும் கடைசித் தட்டில் உணவு உட்கொள்ளும் பொழுதும் அவருக்கு இருக்கும் உலகிலுள்ள ஒட்டுமொத்த மக்களும் அவரிடம் விருந்தினர்களாக வந்தாலும் அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவு வகைகள் அவர்கள் அனைவருக்கும் போதுமான அளவில் இருக்கும் அவர்களுக்கான விருந்தோம் பலில் அவருக்கு வழங்கப்பட்ட எதையும் (அவர்களின் வருகை) குறைத்துவிடாது என்று. (இப்னு அப்பாஸ்(ரழி) முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக், தஃப்சீர் இப்னு கஸீர்: 8:291)