துன்பங்கள் துயரங்கள் ஏற்படும்போது….
கோட்டூர் கலீல்
நமக்கு ஏதாவது துன்பம் அல்லது துயரம் ஏற்படும்போது, அதாவது நம் பள்ளிவாசல்கள் கயவர்களால் இடிக்கப்பட்டது போல், NRC/ CAA போன்ற கொடூர சட்டங்கள் அராஜக அரசுகளால் கொண்டு வருவது போல், ஆதாரங்களின் அடிப்படையில் உங்களுடையதுதான். ஆனால் அவர்கள் எங்களுடையது என்று சொல்கிறார்கள். அதனால் அவர்களிடம் கொடுத்து விடுவோம் என்ற அநீதியான தீர்ப்புகள் போன்ற துன்பம், துயரம் ஏற்படும்போது,
ஆர்ப்பாட்டம் பண்ணு…
போராட்டம் பண்ணு…
கடிதம் எழுது….
ஈமெயில் அனுப்பு…
திருச்சியை திணறச் செய்…
சிறையை நிரப்பு….
சாலையை மறி…
பேஸ்புக்கில் பதிவு போடு…
ட்விட்டரில் ட்ரென்ட் செய்…
வாட்சப்பில் போஸ் கொடுத்து போட்டோ போடு…
போஸ்டர் அடிச்சு ஒட்டு…
வாளி வச்சு வசூல் செய்…
வேனுக்கு ஸ்பான்சர் கொடு…
இப்படி எது செய்தாலும்…
ஒரு பிரயோஜனமும் கிடைக்காது
வெற்று விளம்பரத்தை தவிர…
ஆனால் என்ன செய்யவேண்டும் என்று நான் எதுவும் சொல்ல வரவில்லை. வல்லோன் வழங்கியதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன்: 3:186)
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:153)
(நம்பிக்கையாளர்களே! பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (2:155)
இத்தகையவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து புகழுரைகளும் கிருபையும் ஏற்படுகின்றன. மேலும், இவர்கள்தாம் நேரான வழியையும் அடைந்தவர்கள். (அல்குர்ஆன்: 2:157)
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலி ஹான) நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணை வைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள் தாம். (அல்குர்ஆன்: 24:55)
நிச்சயமாக, அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் (அதற்குரிய) நற்கூலியைக் கொடுத்திருக்கிறேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்!
(அல்குர்ஆன்: 23:111) இறைவன் கூறிய வழியில் வெற்றியையும் இறைவனின் அருளையும் இறைவனின் பொருத்தத்தையும் பெற இஸ்லாம் அனுமதிக்காத மேலே கூறப்பட்ட சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் இவைகளை கைவிட்டு விட்டு பொறுமையையும், தொழுகையையும் கையில் எடுப்போம். இன்ஷா அல்லாஹ்.