புரோகித அரபி மதரஸாக்களுக்கு மாற்றாக…. உடனடித் தேவை …

in 2020 டிசம்பர்

புரோகித அரபி மதரஸாக்களுக்கு மாற்றாக….

உடனடித் தேவை

ஒரு இஸ்லாமிய பல்கலைக் கழகம்

முஹிப்புல்  இஸ்லாம்

சர்ச்சைகள் :

மதரஸாக்கள் குறித்த சர்ச்சைகள் இந்திய தேசத்தில் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் நேரம் இது! சகோதர சமயத்தவர்கள் மதரஸாக்கள் பற்றி பல்வேறு கோணங்களில் வினாத் தொடுக்க தொடங்கியுள்ளனர். விதண்டாவாதங்களை ஒதுக்கி அவர்களின் நியாயமான ஐயங்களைத் தெளிவுபடுத்துவது முஸ்லிம்களின் நீங்காக் கடமையாகும். அதற்குமுன், மதரஸாக்கள் பற்றி முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிதல் அவசியமாகும்.

வேரூன்றி விடுதல் :

இந்தியாவில் முஸ்லிம்கள் செல்வாக்குடன் வாழும் பகுதிகளில் தொன்று தொட்டு மதரஸாக்கள் நிறுவப்பட்டு நடந்து வருகின்றன. 21வது நூற்றாண்டு வரை பொருளாதாரத்தில் நலிவடைந்திருந்த கேரள முஸ்லிம்கள் – தமிழக மதரஸாக்களில் ஓதி, “ஸனது’ (சான்றிதழ்) பெற்றுச் செல்வர். வேலூர், பொதக்குடி போன்ற பல்வேறு மதரஸாக்களில் ஓதிய கேரள மவ்லவிகளை இன்றும் நாம் பரவலாய் பார்க்க முடிகிறது. இதன் மூலம் அந்த காலங்களில் தமிழகத்தில் மதரஸாக்கள் தழைத்தோங்கி விழுதுகள் விட்டிருந்தன.

கேரளாவில் மதரஸாக்கள் விதைக்கப்படும் முன், தமிழகத்தில் மதரஸாக்கள் வேரூன்றி விட்டதை எளிதாய் உணர முடிகிறது.

மதரஸாக்கள், தமிழகத்தில் எப்போது? எப்படி? யாரால்? ஏன் தோற்றுவிக்கப்பட்டது? என்பதை மதரஸாக்கள் ஆதரவு “மனாருல் ஹுதா’ சிறப்பிதழில் விலாவாரி யாக எடுத்துக் காட்டியுள்ளது.  (பார்க்க: மனாருல் ஹுதா, மே 2002)

தமிழகத்தோடு போட்டியிடும் கேரளம் :

கேரள முஸ்லிம்கள் அரபு நாடுகள் சென்ற பின், தமிழ்நாட்டைக் காட்டிலும் கூடுதலாய் மதரஸாக்களை உருவாக்கி வருகிறார்கள். ஒரு காலத்தில் மதரஸாக்கள் இல்லாமல், தமிழகம் வந்து ஓதி சென்ற கேரள முஸ்லிம்கள், இன்று தமிழ்நாட்டைக் காட்டிலும் கூடுதலாய் மதரஸாக்களை உருவாக்கி வருகிறார்கள்.

இந்தியாவில் மெத்தப்படித்தவர்கள்! எதையும் அறிவுப்பூர்வமாய் சிந்திப்போர்! ஒரு முறைக்கு பன்முறை விஷயங்களைப் பரிசீலித்து ஆழ்ந்து சிந்தித்து-அலசி ஆராய்ந்து-அதைப் பலரிடம் பல்வேறு கோணங்களில் விமர்சித்து-விவாதிப்போர் என்று தங்களுக்குத் தாங்களே புகழாரம் சூட்டிக் கொள்ளும்-மலையாள சகோதரர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

அரபு நாடுகளிலும் சந்தா வசூல் :

மலையாள சகோதரர்கள் மதரஸாக்கள் பற்றி மாறுபட்ட கோணத்தில் சிந்திக் காதது நமக்கு வேதனையையும், வியப்பையும் தருகிறது. இன்று, கடல் கடந்து, அரபு நாடுகளுக்குப் பொருளீட்ட சென்றுள்ள கேரள முஸ்லிம்கள் – தங்கள் ஊர்களி லுள்ள மதரஸாக்களுக்கு சந்தா வசூலித்து வருகிறார்கள்.

கேரளத்தின் ஒவ்வொரு ஊர்களிலுமுள்ள மதரஸாக்களும் போட்டிப் போட்டுக் கொண்டு காலண்டர்கள் அச்சடித்து சந்தாதாரர்களுக்கும் அன்பளிப்பவர்களுக்கும் மலையாள முஸ்லிம்கள் கொடுத்து வருவதை அரபு நாடுகளில் பணி புரியும் தமிழ் முஸ்லிம்களும் நன்கறிவர். வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர சந்தா வசூல்களும் ஜாம் ஜாம் என்று நடந்து வருகின்றன. வசூலிப்பதில் கில்லாடிகளான மலையாளிகள் ரமழான் மாதத்தில் இந்த வசூல் வேட்டையை – முழு வீச்சில் நடத்தி வருவதோ, காணக்கிடைக்காத கண் கொள்ளா காட்சியாகும்.

அரபு நாட்டு வசூலில் பல புதிய மதர ஸாக்களும் கேரளத்தில் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மதரஸாக்கள் நிலை :

குர்ஆன் மதரஸாக்கள்! அரபு கல்லூரிகள்! அனாதை இல்ல மதரஸாக்கள்! ஹிப்ஸ் மதரஸாக்கள், என்று பல படித்தரங்களில் எண்ணற்ற மதரஸாக்கள், தமிழகத்தில் ஊர் தோறும் நடந்து கொண்டும், புதிதாக தொடங்கப்பட்டும் வரும் அதே நேரத்தில் சில மதரஸாக்கள் மூடப்பட்டும் வருகின்றன. பல மதரஸாக்கள் மூடப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. தமிழக, கேரள நிலைகளை நாம் அறிந்துள்ளதால் மற்ற மாநிலங்களைக் குறிப்பிடவில்லை. தேவ்பந் மதரஸாவும், ரேபரலி மதரஸாவும் மிகவும் பிரபல்யமானவை.

சந்தா அல்லது பொது வசூல் :

பெரும்பாலான மதரஸாக்கள் சந்தா வசூலில் நடைபெற்று வருகின்றன. இதை நாட்டு மக்கள் நன்குணர்ந்துள்ளனர். தொடங்கும்போது வசூலின்றி சில மதரஸாக்கள் துவக்கப்பட்டிருந்தாலும், போகப்போக சந்தா வசூலில் அல்லது பொது வசூலில் வரும் வருமானத்தால் தான் இந்த மதரஸாக்கள் நடத்தப்பட்டு வருவதையும் முஸ்லிம் பொதுமக்கள் இப்போது சரியாக உணரத் துவங்கியுள்ளனர்.

வக்ஃபு சொத்துள்ள மதரஸாக்கள் நிலை :

சில மதரஸாக்களுக்கு ஏராளமான சொத்துக்கள் வக்ஃபு செய்யப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலான மதரஸாக்களுக்கு அந்த சொத்துக்கள் பயன் தராததால் அவைகள் நாட்டின் பல பகுதிகளில் இழுத்து மூடும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. அல்லது அவைகளும் வேறு வழியின்றி சந்தா வசூலில் தஞ்சம் அடைந்துள்ளன. தமிழகத்தில் சந்தா அல்லது பொது வசூலில் இத்தகு மதரஸாக்கள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலை :

முன்பு போல் வக்ஃபு சொத்துக்கள் பெயரால் மதரஸாக்கள் தோற்றுவிக்கப்பட்டு நடத்தப்படுவது இப்போது அரிதாகி விட்டது. அதனால், மதரஸாக்கள் அமைவ தற்குரிய அடிப்படை ஒன்று சந்தா வசூல் அல்லது பொது வசூல், இத்தனை கடும் சிரமத்திற்கிடையே உருவாக்கப்பட்டு நடத்தப்படும் மதரஸாக்களில் என்ன பாடத் திட்டம்? எப்படிப்பட்டவர்களுக்கு? எந்தச் சூழலில்? எப்படி போதிக்கப்படுகிறது? இதையயல்லாம் மதரஸாக்களுக்காக பாடுபடும் யாராவது எண்ணிப் பார்த்த துண்டா? இல்லையயன்பது நிச்சயமானது மாறுபட்டு ஒரு சிலர் சிந்தித்தாலும் அது எடுபடாமல் முகல்லிது புரோகித முல்லாக்கள் தடுத்து விடுவார்கள்.

தமிழக முஸ்லிம்களின் மார்க்க அறிவு மிகவும் மங்கிப் போனதற்கு இந்த மதரஸாக்கள் கல்வியே முக்கிய காரணம்.

மார்க்கத்தைப் பின்னுக்குத்தள்ளிய மதரஸா கல்வி?

  1. இன்று தமிழ் முஸ்லிம்கள் ஓரிறைக் கொள்கையைச் சிதைத்து இறைக் கிணையாக்குதலை – வணக்க வழிபாடாக்கிக் கொண்டதற்கு முக்கிய காரணம் இந்த மதரஸா கல்விதான். பெரும்பாலான மதரஸாக்களின் முகப்புகளை அலங்கரிக்கும் வண்ணமயமாக கட்டப்பட்டுள்ள அல்லது புதுப்பிக்கப்பட்டுள்ள சமாதிகள், இதனுடைய முக்கிய அடையாளங்களாகும். சமாதி வணக்க துவக்கம் இந்த மதரஸாக்களில் இருந்து ஆரம்பிப்பதுதான்.
  2. அல்குர்ஆன் பொருளுடன் பயிற்றுவிக்கப்படுகிறதோ – இல்லையோ – பல்வேறு திரைப்பாடல்கள் இசையில்-ஷிர்க்கான மவ்லிதுகள் ஓத கற்றுக் கொடுக்கப்படுவதும் மதரஸாக்களில்தான்.
  3. அல்குர்ஆன், ஸஹீஹான அல்ஹதீதுகளுக்கு மாற்றமான ஃபிக்ஹு (ஹனஃபி, ஷாஃபி) கலை துணிவுடன் போதிக்கப்படுவதும் இந்த மதரஸாக்களில்தான்.
  4. நபி(ஸல்) அவர்களின் ஒப்புயர்வற்ற வாழ்வியல் வழிகாட்டுதலைப் பின்னுக்குத் தள்ளி – பிக்ஹு கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து – மத்ஹப்புகள் பெயரால் – முஸ்லிம்களை நிரந்தர பிளவில் சிக்க வைத்திருப்பதும் இந்த மதரஸா கல்விதான்.
  5. கருத்து வேறுபாடுகளால் முஸ்லிம்களுக்குள் மோதலை உருவாக்குவதும், அதன் மூலம் முஸ்லிம்களின் உயிர், உடமை, பொருள்களை இழப்பிற்குள்ளாக்குவதும் இந்த மதரஸா கல்விதான்.
  6. இஸ்லாமிய வாழ்க்கை நெறிக்கு முற்றிலும் மாறுபட்ட வரதட்சணைக் கொடுமையையும், சடங்கு சம்பிரதாய திருமணத்தையும் வேரூன்ற செய்திருப்பதும் இந்த மதரஸா கல்விதான்!
  7. ஒரே தடவையில் சொல்லப்படும் மூன்று தலாக்கால் நிரந்தர மணமுறிவு ஏற்படச் செய்து – இலட்சக்கணக்கான அபலைப் பெண்களை வாழாவெட்டியாக்கிய பெருமையும் இந்த மதரஸா கல்விக்கே!
  8. இஸ்லாமிய நெறிக்கு முற்றிலும் மாற்றமான திருமணத்தாலும், தலாக்காலும் பல பெண்கள் இன்று ஒழுங்கீனங்களில் ஈடுபடும் நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதற்குக் காரணமும் இந்த மதரஸா கல்வியே!
  9. திருமணம் மற்றும் பிறப்பு, இறப்பு சடங்குகள், மீலாத் விழாக்கள், தர்ஹா உரூஸ்கள், கந்தூரிகள், சந்தனக் கூடுகள் என்று கணக்கிலடங்கா சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் முஸ்லிம் பொதுமக்களின் பொருளாதாரத்தையும், உழைப்பையும் முயற்சியையும் விழலுக்கிரைத்த நீராக்குவதும் இந்த மதரஸா கல்வியே!
  10. முன்னரே பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை முஸ்லிம்களை மேலும் பொருளாதார ரீதியில் அதலபாதாளத்தில் தள்ள செய்யும் மதரஸா கல்வி, சுயமே உழைத்து, தொழில் செய்யும் தகுதியை இழக்கச் செய்து – புரோகிதத்தை நிரந்தரமாய் தழைத்தோங்க செய்வதும் இந்த மதரஸா கல்வியே என்பதை யாரும் மறுக்க முடியாது.
  11. முஸ்லிம்கள் வாழும் முறைகள்-மாற்றார்களை அசத்தும் வண்ணம் – இந்து முன்னோர்களின் சடங்கு-சம்பிரதாயங்களை – இஸ்லாமிய சாயத்தில் பளபளக்கவைத் திருப்பதும் இந்த மதரஸா கல்வியே!

மேலே பட்டியல் இடப்பட்டுள்ளவைகள் சில மாதிரிகளே! இன்னும் இப்பட்டியலில் அடங்காத எண்ணிரந்த தீங்குகளை இந்த மதரஸா கல்வி ஏற்படுத்தி வருவதைத் தெளிவாக அந்நஜாத் துவக்கத்திலிருந்தே படம் பிடித்துக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. பலன் பூஜ்யமே! ஒரு சிலர் நீங்கலாய் இதை மற்றவர்கள் கண்டு கொள்வதாய் இல்லை. வல்ல அல்லாஹ்வின் நல்லருளை ஆதரவு வைத்து எங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து வருகிறோம். இன்றில்லை யயனினும், நாளை அந்த வல்ல அல்லாஹ் நிச்சயம் வெற்றியருள்வான்.

உண்மை நிலை என்ன?

இங்கு அரபு மதரஸாக்களில் ஓதியவர்களின் வண்டவாளங்கள் இன்று அரபு நாடுகளில் தண்டவாளம் ஏறிக்கொண்டிருக்கின்றன. அரபு மதரஸாக்களில் ஓதியவர்கள் அரபு மொழியை முறையாக எழுத, பேச, படிக்க கற்றிருப்பார்கள் என்பது முஸ்லிம் பொதுமக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை! ஆனால் உண்மை நிலை என்ன? இந்த அரபு மதரஸாக்கள் வழங்கிய சான்றிதழ்(ஸனது)களை அரபு நாடுகள் அங்கீகரிக்கவில்லை! ஏன்? அரபு மதரஸாக்களின் சான்றிதழ்கள் பெற்றிருப்பவர்களால் முறையாக அரபு எழுத, பேச, படிக்க முடியவில்லை. இப்போது புரிந்திருக்கும் மதரஸாக்களின் அவலட்சணம்.

மார்க்கத்தில்தான் இந்த மதரஸாக்களில் உருவானவர்கள் அறைகுறையென்றால், அரபு மொழியில் பூஜ்யங்களாய் இருக்கிறார்கள்!

நம்பிக்கை பொய்த்தது :

தமிழகத்தின் பழம் பெரும் மதரஸா ஒன்றில் – சான்றிதழ் (ஸனது) வாங்கி நாட்டில் பிரபல்யமாகியிருந்த ஒரு மவ்லவி மக்களால் கெட்டிக்காரர் என்று பாராட்டு பெற்றிருந்தவர்! துபை வந்து வேலை தேடினார், பல பெரிய அரபு ­ ஷெய்குகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டார். அரபு மொழியில் அந்த ஷெய்கு கேட்ட கேள்விகளுக்கு இவரால் பதில் அளிக்க முடியவில்லை.

அரபு பேச வாய்ப்பில்லாத தமிழகத்திலிருந்து வந்தவர், பேசத்தான் முடியவில்லை, எழுத, படிக்க அறிந்திருப்பார் என்று நம்பி, அல் இத்திஹாத், அல் பயான் போன்ற அரபு நாளிதழ்களை வாங்கிக் கொடுத்து, “உங்கள் தகுதிக்கேற்ற வேலைகளுக்கு ஆட்கள் கோரப்பட்டிருந்தால் விண்ணப்பம் செய்யுங்கள்” என்று அவரை துபைக்கு அழைத்த அன்பர் சொன்னார். மறுப்பின்றி அந்த மவ்லவி நாளிதழ்களை வாங்கிக் கொண்டார். வேலைகளுக்கு விண்ணப்பித்திருப்பார் என்று அந்த நண்பர் நம்பினார். அந்த நம்பிக்கை பொய்த்து, ஏமாற்றமே மிஞ்சியது.

அதிர்ச்சி!

சில நாட்கள் கழித்து -“உங்கள் தகுதிக்கேற்ற வேலை இந்தந்த நாட்களில், இந்தந்த நாளிதழ்களில் வந்துள்ளதே! விண்ணப்பித் தீர்களா என்று நண்பர் கேட்டார். மவ்லவி “இல்லை’ என்றார். “ஏன் விண்ணப்பிக்கவில்லை?’ என்று நண்பர் கேட்டார். “இந்த நாளிதழ்களில் வந்துள்ள விளம்பரங்களை வாசிக்க முடியவில்லை’ அப்படியே கஷ்டப்பட்டு வாசித்தாலும் அர்த்தம் புரியவில்லை! அன்று மவ்லவி பேந்த பேந்த விழித்தார், நண்பர் அதிர்ச்சியடைந்தார். நாம் பல முறை எடுத்துக்காட்டியும், மதரஸா கல்வியின் மேல் பிடிவாதமாய் நண்பர் கொண்டிருந்த நல்ல அபிமானம் சுக்கல் நூறாகியது.

அலுவலக வேலைகளில் மிகவும் இடை நிலை வேலையாகிய ஆஃபிஸ் பாய் வேலை பெறக்கூட தகுதியற்றவனாகி விட்டோமே என்று தன்னை இந்த இழிநிலைக்கு தள்ளிய மதரஸா கல்வியின் மேல் அந்த மவ்லவிக்கு அப்போதுதான் முதன் முறையாக வெறுப் பேற்பட்டது. அதன்பின் ஃப்ரூட் மார்க்கெட்டிற்குப் பழங்கள், காய்கறிகள் ஏற்று, இறக்கம் செய்யும் பணிக்கு தற்காலிகப் பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த வேலையும் அவரால் செய்ய முடியவில்லை. இவர் ஒருவர்தான் இப்படி, மற்ற மவ்லவிகள் மாறுபட்டிருப்பார்கள் என்றால்… தமிழகத்திலிருந்து வந்துள்ள மிகப் பெரும்பான்மையான மவ்லவிகள் அவல நிலையும் இதுதான். இதிலிருந்து விரல் விட்டெண்ணும் அளவே விடுபட்டிருப்பர்.

தரமேயில்லாத மதரஸா கல்வி?

இப்போது சிந்தித்துப் பாருங்கள். குறிப்பாக மதரஸா ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் கண்டிப்பாக ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். அரபுக் கல்லூரிகளில் சான்றிதழ் பெற்றவர்களால் – அரபு நாடுகளிலிருந்து வெளிவரும் தினசரிகளை வாசித்துப் பொருள் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால்… இந்த மதரஸா கல்வியின் தரம் எத்தகையது? தரமேயில்லாத இந்த மதரஸா கல்விக்கு தர நிர்ணயம் எப்படி செய்ய முடியும்? அந்நஜாத் ஏன் மதரஸா கல்வியைக் கடுமையாக கண்டித்து விமர்சித்து வருகிறது? என்பது நடுநிலையோடு சிந்திக்கும் வாசக நேயர்களுக்குத் தெளிவாக புரிந்திருக்கும் என்று பெரிதும் நம்புகிறோம்.

புரோகிதர் உற்பத்தி சாலைகள்! ஷ

அரபு மொழியும் சரியாக தெரியாது. மார்க்கமும் அறைகுறை. அப்படியே தெரிந்திருப்பினும் அது இஸ்லாத்தினுள் செய்யப்பட்ட கலப்படம். இதற்காக பெரும் பொருட் செல்வத்தையும் பலரின் முயற்சியையும், உழைப்பையும் 7,5,3 ஆண்டு காலத்தையும் வீண் விரயமாக்கி வெளிவருவோர்-எந்த வேலைக்கும் தகுதியற்றோர். இதனால் தான் மதரஸாவில் இருந்து வெளிவருவோர் – பக்கா புரோகிதர்களாய் மாறிவிடுகிறார்கள். அசல் மார்க்கத்தில் இம்மதரஸா கல்வி செய்த கலப்படம்-புரோகிதத்தைச் செழித்தோங்கச் செய்கிறது. உண்மை இஸ்லாத்திற்கு சமாதி கட்டி வருகின்றன. இன்றைய அரபு மதரஸாக்கள் புரோகிதர்களைத் தயாரிக்கும் கேந்திரங்களாய் திகழ்வதும் வியப்பிற்குரியதன்று.

ஒரு குடம் பாலை துளி விஷம்-விஷமாக்கி விடுகிறது என்றால் குடம் விஷயத்தில் சில சொட்டுகள் பால் எப்படி விஷத்தை முறிக்க முடியும்? அதனால் அந்த சில சொட்டுகள் பாலும் விஷத்துடன் கலந்து விஷமாகி விடுவதைப் போல் – மதரஸா கல்வியால் விளைந்த ஒரு சில நன்மைகளும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. மாறாக மாபாதகத்தையே ஏற்படுத்தியுள்ளது.

செல்வந்தர்கள் விரும்பாதது ஏழைகள் மீது திணிக்கப்படுவது ஏன்?

மதரஸா நிர்வாகிகள், செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தீண்டத்தகாத தாயிருக்கும் இம்மதரஸா கல்வி, ஏழை மக்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? முன்னரே பொருளாதாரத்தில் நலிந்துள்ள ஏழைகளை – கைதூக்கிவிடும் பொறுப்பும் கடமையும் மிக்க செல்வந்தர்கள் – மதரஸா கல்வியின் மூலம் இந்த ஏழைகள் மேலும் பொருளாதார நலிவடைய பெரும் பொருள் செலவிடு வதும் ஏன்?

பொருளாதார ரீதியில் நலிவடைந்த ஒரு பிரிவார் நிரந்தரமாய் முஸ்லிம்களில் எப்போதும் இருந்து கொண்டேயிருக்க வேண்டுமா? ஆம்! செல்வந்தர்கள் செய்யும் தவறுகளை மறைக்கவும், தேவைப்பட்டால் அந்த தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்குச் சாதகமாய் ஃபத்வா – மார்க்கத் தீர்ப்புகள் வழங்கவும் இந்த மதரஸாக்களும், மவ்லவிகளும் தேவைப்படுகிறார்கள்.

மவ்லிது ஓதியும், ஃபாத்திஹா ஓதியும், பள்ளிகளில் இமாமத் செய்தும், மதரஸாக்களில் முதர்ரிஸா (ஆசிரியர்) இருந்தும், இன்ன பிற புரோகித வழிகளில் பொருளீட்டுவதை வெறுக்கும் செல்வந்தர்களே! அப்படி ஒரு புரோகித வர்க்கம் உருவாக உங்கள் பொருள், உழைப்பு, முயற்சிகள் விரயமாகிக் கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாமல் வாளாவிருப்பதேன்? காலம் மிகவும் கடந்துவிட்டது, சிந்தித்து துரிதமாய் நல்லதொரு முடிவுக்கு வாருங்கள்.

இஸ்லாமிய  கல்வி பொதுவுடமையாக்கப்பட  வேண்டும்!

அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவுடமையாக வேண்டிய இஸ்லாமிய கல்வி (புரோகித) மதரஸா கல்வி என்று தனியுடமையாகியதால் – முஸ்லிம் பொது மக்கள் இந்த மதரஸா கல்வியை கண்டு விரண்டோடுகிறார்கள். மதரஸா கல்வி பயின்றவர்கள் – மென்மேலும் பொருளாதார – ரீதியில் நலிவடைந்து கொண்டிருப்பதால் – இந்த மதரஸா கல்வியைக் கண்டு பொதுமக்கள் வெளிப்படையாக பயந்து ஒதுங்கிக் கொள்கிறார்கள். இதன் மறு பிரதிபலிப்புத்தான், பொதுமக்களை மார்க்கத்தை விட்டு விலகி நிற்கிறார்கள். சிலர் நாத்திகர்களாய், சிலர் கம்யூனிஸ்ட்களாய், சிலர் இந்து சமய அத்துவைதத்தில் சங்கமமாகி விட்டனர்.

அடுத்து மதரஸா கல்வியின் அவலட்சணம் பற்றிப் பார்ப்போம்.   இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: