மிஸ்வாக் (பல் துலக்குதல்)
- சையித் முபாரக், நாகை
நாம் மறந்த சுன்னாவில் ஒன்றுதான் மிஸ்வாக் செய்வது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தினமும் பலமுறை மிஸ்வாக் செய்பவர்களாக இருந்தார்கள்; அதை வலியுறுத்தியும் இருக்கிறார்கள். “பல் துலக்குவது பற்றி நான் மிகவும் அதிகமாக வலியுறுத்தியுள்ளேன்” என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
மரண வேளையில் :
நபியவர்கள், தமது மரணத் தருவாயில் இருந்தபோது கூட பல் துலக்க நாடினார்கள் என்பதிலிருந்து மிஸ்வாக்கின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
(நபியவர்கள் மரண வேளையில் இருந்தபோது எனது சகோதரர்) அப்திர் ரஹ்மான் பின் அபீபக்ர்(ரழி) அவர்கள் வந்தார்கள். அவரிடம் பல் துலக்கும் குச்சி ஒன்றும் இருந்தது. அதனை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். (அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட நான்) “அப்துர் ரஹ்மானே! அந்தக் குச்சியைக் கொடுங்கள்” என்றேன். அவர் கொடுத்ததும் அதை வெட்டிமென்று நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள்” என்று ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரி)
இயற்கையானச் செயல் :
“பத்து வியங்கள் இயற்கையான செயல்களாகும். 1. மீசையைக் கத்தரித்தல், 2. தாடியை வளரவிடுதல், 3. பல் துலக்குதல், 4. தண்ணீரால் மூக்கைச் சுத்தம் செய்தல், 5. நகம் வெட்டுதல், 6. விரல்களின் இடுக்குகளைக் கழுவுதல், 7. அக்குள் முடியை நீக்குதல், 8.மறைவுறுப்பு முடியை எடுத்தல், 9.மலம், ஜலம் கழித்தபின் தண்ணீரால் சுத்தம் செய்தல்” என நபி(ஸல்) கூறினார்கள். “பத்தாவது செய்தியை நான் மறந்துவிட்டேன். ஆனாலும் அது வாய்க் கொப்பளிப்பதே” என இதனை அறிவிப்பவர் கூறுகிறார். (முஸ்லிம்)
மிஸ்வாக் செய்யும் நேரங்கள் :
“என் சமுதாய மக்களுக்குச் சிரமமாக இருக்கும் என நான் பயப்படவில்லையானால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்கும்படி அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
“என் சமுதாயத்தவருக்குக் கஷ்டம் ஏற்படுவதை நான் பயப்படவில்லையானால் அவர்கள் உளூச் செய்வது போன்று ஒவ்வொரு தொழுகையின்போதும் பல் துலக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டிருப்பேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்) “ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும், கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்” என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி)
“நபி(ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கும் குச்சியால் பல் துலக்குவார்கள்” (புகாரி, முஸ்லிம்)
“நபி(ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்ததும் முதலில் என்ன செய்வார்கள்? எனக் கேட்டபோது, ஆயிஷா (ரழி) கூறிய பதில்: “பல் துலக்குவார்கள்” (முஸ்லிம்)
“நபி(ஸல்) அவர்கள் தன் வீட்டிலிருந்து தொழுகைக்காக வெளியேறும்போது பல் துலக்குவார்கள்”. (தப்ரானி)
“நபி(ஸல்) அவர்கள் இரண்டு இரண்டு ரக்அத்களாக இரவில் தொழும்போது, தொழுததும் பல் துலக்குவார்கள்”. (இப்னு மாஜா, நஸயீ)
நபி(ஸல்) அவர்களுக்காக, அவர்கள் பல் துலக்கவும், உளூ செய்யவும் நாங்கள் தண்ணீரை தயாராக எடுத்து வைத்திருப்போம். இரவில் அவர்களை எழுப்பி வணக்கம் புரிய, தான் நாடியபடி அல்லாஹ் அவர்களை எழுப்புவான். (எழுந்தவுடன்) நபியவர்கள் பல் துலக்குவார்கள், உளூ செய்வார்கள், தொழுவார்கள். (முஸ்லிம்)
மிஸ்வாக்கின் சிறப்பு :
“ஒரு அடியான் பல் துலக்கிவிட்டு, தொழுகைக்காக எழுந்து நின்றால், அவரின் பின் வானவர் நின்று அவர் ஓதுவதைக் கேட்பார். பிறகு, அவரை வானவர் நெருங்கி, தன் வாயை அவரின் வாயோடு சேருமளவு நெருங்குவார். அவரின் நாவிலிருந்து வெளியாகும் குர்ஆன் வசனங்கள் வானவரின் குடலை அடையாதிருப்பதில்லை. (இவ்வாறு அவர் வானவரின் நேசத்திற்குரியவ ராகிறார்) எனவே, நீங்கள் குர்ஆன் (ஓதுவதற்)காக உங்கள் வாய்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். (மிஸ்வாக் செய்வதைப் பேணுதலாகக் கடைபிடித்து வாருங்கள்) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பஸ்ஸார்)
மிஸ்வாக்கின் பயன்கள் :
“பல் துலக்குவது வாயைச் சுத்தப்படுத்தும் ரப்பைத் திருப்திப்படுத்தும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாயீ, இப்னு குஸைமா)
- அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும், 2.நபி வழியைப் பின்பற்றிய நன்மையைப் பெற்றுத் தரும், 3. வானவர் நேசமும், துஆவும் கிடைக்கும், 4.வாயைச் சுத்தப்படுத்தும், 5. பற்கள் வெண்மையாகும், 6.பற்காறை, பற்சொத்தை ஏற்படாது பாதுகாக்கும், 7. பற்கள் நன்றாக இருப்பதால் உணவை நன்கு அரைத்து உண்ணமுடியும், அதனால் செரிமானம் எளிதாகும், 8. தலைவலி, சளி குணமாகும், 9. சீரான பார்வை மொழிவதை கிடைக்கும்.
நபியவர்கள் வலியுறுத்திய, தினசரி பலமுறைச் செய்த, பல பலன்களை நமக்குத் தருகின்ற பல் துலக்குதலை நாம் சரிவரப் பேணுகிறோமா? உளூச் செய்வதற்கு முன்பும், தொழுகைக்குச் செல்லும் போதும், வீட்டிற்கு வந்ததும், தூங்குவதற்கு முன், தூங்கி எழுந்ததும் நாம் பல் துலக்குகின்றோமா? நபியவர்கள் வலியுறுத்திக் கூறிய, தினமும் பலமுறை கடைபிடித்த பல் துலக்கும் செயலை நாம் அலட்சியமாக விட்டு விடுகிறோம்.
நாம் காலையில் எழுந்தவுடன் மட்டும் பல் துலக்குகிறோம். சிலர் படுக்கைக்குச் செல்லும் முன் பல் தேய்க்கிறார்கள். ஒரு சிலர் உளூ செய்யும்போது, வாய்க் கொப்ப ளிப்பதற்கு முன் பல்லை விரல்களால் தேய்த்துச் சுத்தம் செய்கிறார்கள். ஆனால் உளூச் செய்து கொண்டிருக்கும்போது (வாய்க் கொப்பளிக்கும் முன்) பல் தேய்ப்பது உளூவின் தொடர்ச்சியைப் பாதிக்கும் செயலாகும். ஆகவே, வாய்க் கொப்பளிக்கும்போது பல் தேய்ப்பதைத் தவிர்த்து விட்டு, உளூ செய்வதற்கு முன்பாக பல் துலக்குவோம். இதற்கு நாம் முன்னர் குறிப்பிட்டுள்ள முஸ்லிம் ஹதீஃதில் பல் துலக்குவார்கள். உளூ செய்வார்கள், தொழுவார்கள் என்பதையும், கீழ்க்காணும் அபூதாவூத் ஹதீஃதையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
“நபி(ஸல்) அவர்கள் இரவிலோ, பகலிலோ எப்போது விழித்தாலும் உளூ செய்வதற்கு முன் அவசியம் மிஸ்வாக் செய்வார்கள்” (அபூதாவூத்)
நறுமணம் கமழும் நபி(ஸல்) அவர்களே அடிக்கடி பல் துலக்கியிருக்கிறார்கள். ஆனால், வியர்வை நாற்றமும், வாய் துர் நாற்றமும் உடைய நாம் அடிக்கடி பல் துலக்குகிறோமா? இதில் மற்றொரு பலனும் இருக்கிறது. நாம் நம் வீட்டினுல் நுழைந்ததும் பல் துலக்கும்போது முகம், கை, கால்கள் கழுவும் பழக்கமும் ஏற்பட்டு விடும். இதனால் பூச்சிப் பற்கள் ஏற்படாது. ஆகவே, நாம் வீட்டிற்குள் நுழைந்ததும், உளூ செய்வதற்கு முன்பும், தொழுகைக்கு முன்பும், தூங்குவதற்கு முன்பும், தூங்கி எழுந்ததும் பல் துலக்கும் பழக்கத்தை விட்டுவிடாது கடைபிடிப்போமாக! அப்படிச் செய்ய அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக!.