வேற்றுமையில் ஒற்றுமை காணமுடியுமா?
அஹமது இப்ராஹீம், புளியங்குடி
ஜனநாயக இந்தியாவில் சமயம், மொழி, இனம் என்ற பிரிவுகளில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். எல்லோரும் ஒத்துக்கொள்வது மாதிரி அரசியல் அமைப்பு சட்டத்தை நிறுவி மக்கள் ஜனநாயக சமயசார்பற்ற இந்தியா என்று அழைக்கப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையின் மூலம் இந்திய மக்கள் ஒன்றுபட்டுள்ளார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியர்களின் தாரகமந்திரமாக ஒலிக்கலாம். ஆனால் இந்தியாவில் வசிக்கக்கூடிய முஸ்லிம்கள் பல பிரிவுகளை அமைத்துக்கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் ஒன்று சேர்ப்பதற்கு முயற்சி செய்து அறைகூவல் விடுகிறார்கள். இது நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்பதுதான் நம்முடைய கேள்வி?
ஒரே இறைவன், ஒரே நபி, ஒரே வேதம், ஒரே மார்க்கம் என்றிருக்கும்போது பல பிரிவுகள் ஏன் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்? எல்லாம் அவரவர்களின் சுயநலப் போக்குகளால் உருவாக்கப்பட்டதுதான் அமைப்பு, இயக்கம், மன்றம், லீக், கழகம், பேரவை, சங்கம் போன்றவை எல்லாம். ஏதாவது ஒரு அமைப்பின் கீழ் – மூலம் உலகத்தில் உள்ள முஸ்லிம்களை ஒன்றிணைக்க முடியுமா? இதுதான் நம்முடைய கேள்வி? சரி, அது ஒரு பக்கம் தனியாக இருக்கட்டும். எடுத்துக்காட்டிற்கு ஒரு சிற்றூர் குக்கிராமத்தில் உள்ள எல்லா முஸ்லிம்களையும் ஒரு அமைப்பின் கீழ் ஒன்று திரட்டியிருக்கிறார்களா? இல்லை என்று தான் சொல்லமுடியும். நிலைமை அப்படி இருக்கும்போது உலகத்தில் உள்ள முஸ்லிம்களை ஒன்றுதிரட்ட முடியாது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
இயக்கவாதிகள் அடுத்து ஒரு வாதத்தை எடுத்து வைத்து சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். அதாவது இந்தியாவில் இந்து, முஸ்லிம் கலவரம் வரும்போது இந்துக்கள் முஸ்லிம்களை எந்த அமைப்பு என்று அடையாளம் கண்டுபிடித்து அடிக்கமாட்டார்கள். அவர்களின் கையில் தேவைப்படுவது முஸ்லிம்கள்தான். அவர்கள் தரம்பிரித்து அடிக்காமல் மொத்தமாக முஸ்லிம் என்று பார்த்தவுடன் அடிக்கும்போது, அந்த நேரத்தில் நாம் ஏன் எல்லா அமைப்புகளும் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடக்கூடாது கலவரக்காரர்களை எதிர்ப்பதற்கு என்று என்னமோ ஒரு புரட்சிகரமான திட்டம் போல் பேசி கொக்கரிக்கிறார்கள். இந்த வாக்கியங்களை எல்லா இயக்கவாதிகளும் மேடையிலோ அல்லது நூல்களிலோ அல்லது அவர்களின் பத்திரிக்கைகளில் சப்பைக் கட்டும் காரணங்களை பார்க்கிறோம். இந்த இடத்தில் நாம் அவர்களின் ஒற்றுமைக்கு சப்பைக்கட்டும் காரணத்தை ஆழ்ந்து உற்றுநோக்கும்போது முஸ்லிம் அல்லாதவர்களின் அறிவுக்கு உட்பட்ட விஷயம் கூட இந்த முஸ்லிம் இயக்கவாதிகளின் மூளையின் அறிவுக்கு எட்டவில்லை என்பதை பார்க்கும்போது நமக்கு கவலையுடன் கூடிய வேதனையாக இருக்கிறது.
“லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரஸூலுல்லாஹ்” என்ற கலிமாவை சொல் லக்கூடியவர்கள் முஸ்லிம்கள், அவர்கள் எந்த அமைப்பினராக இருந்தாலும் நமக்கு தேவையில்லை. அவர்கள் எந்த மூலையில் இருந்தாலும் அடித்தே தீரவேண்டும் என்று கலகக்காரர்கள் கங்கணம் கட்டிக் களம் இறங்கும்போது, கலிமா சொன்ன முஸ்லிம் இயக்கவாதிகள் ஏன் அவரவர்களின் இயக்கத்தை களைத்து குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு கலிமா சொன்ன முஸ்லிம்கள் என்ற ஒரு தலைமையின்கீழ் களத்தில் இறங்க வேண்டியதுதானே. மாற்றார்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் அறிவுபூர்வமாக செயல்படும்போது நீ முட்டாளாகத்தான் செயல்பட வேண்டுமா? சப்பை கட்டும் காரணங்கள் கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்குமே தவிர அவை ஒற்றுமை என்ற நடைமுறைக்கு ஒத்துவராது சகோதரர்களே.
அவரவர்கள் அவரவர்களின் இயக்கத்தில் இருந்துகொள்ளுங்கள். ஆனால் பிரச்சனை என்று வரும்போது ஒன்று சேர்ந்துக் கொள்ளுங்கள் என்று மேடையில் காட்டு கத்தாக கத்துகிறார்கள். அதாவது வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்ற ஜனநாயக இந்தியாவின் தாரகமந்திரம் கொள்கையின் மூலம் செயல்படுவது போல் அமைத்துக் கொள்கிறார்கள். இல்லை இல்லை காட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் எதைச் சொல்ல வருகிறார்கள் என்றால், இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் பல மாநிலகமாக பிரிந்திருக்கும்போது, இந்தியா, சீனா, இந்தியா பாகிஸ்தான் என்ற போர்கள் நடக்கும்போது நாம் எல்லா மாநிலத்தார்களும் இந்தியர் என்று ஒன்று சேரவில்லையா? நிலைமை அவ்வாறு இருக்கும் போது முஸ்லிம்கள் என்று சொல்லக்கூடிய நம்மிடத்தில் ஏகப்பட்ட எண்ணிக்கையற்ற பிரிவுகள் இருக்கும்போது முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரம் வரும்போது எல்லா இயக்கத்தார்களும் முஸ்லிம் என்ற இனம் ஒன்று சேரக்கூடாதா? என்ற அடிப்படையை வைத்து வாதிடுகிறார்கள்.
நாம் கேட்கிறோம், முஸ்லிம்களே ஒன்றுபடுவீர்கள் என்று சொல்கிறீர்களே எப்படி ஒன்றுபடுவது? பல இயக்கங்களை வைத்து செயல்படும்போது அங்கே முஸ்லிம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போகிறது. எந்த ஒரு இயக்கத்தின் மூலமும் உலக முஸ்லிம்களை ஒன்று திரட்டியதாக உலக சரித்திரம் கிடையாது. அது கியாம நாள் வரையிலும் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று எம்மால் அடித்துச் சொல்லமுடியும். காரணம் அந்தந்த இயக்கவாதிகள் மதம் பிடித்து வெறியாக செயல்படும்போது எப்படி அவரவர்கள் இயக்கத்தை கலைப்பதற்கு முன்வருவார்கள்? நிச்சயமாக ஒருபோதும் முன்வரமாட்டார்கள் என்று நம்மால் அறுதியிட்டு உறுதியாக சொல்ல முடியும்.
ஐக்கியம், ஜமாஅத் போன்ற பொதுவான பெயரில் எல்லாம் பல இயக்கங்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவது ஒரு கானல் நீர்மாயத் தோற்றம் தான். இவை அரசிய லுக்காக தோற்றுவிக்கப்பட்ட மாயாஜால வித்தைகள்தான். எல்லாம் எதற்காக உருவாக்கப்படுகிறது என்றால் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்காக.
இயக்கவாதிகள் அடுத்து இன்னொரு வாதமும் எடுத்து வைக்கிறார்கள். அதாவது அவரவர்கள் இயக்கங்கள் அணுகுமுறை பிரகாரம் அவர்கள் மனோ இச்சைப்படி இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யட்டும், மேலும் பொது சேவை அடிப்படை பிரகாரம் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். இதனால் சமுதாயம் மேலும் பிளவுபடுவதை தவிர்க்கப் பாடுபடுவோம் என்றெல்லாம் என்னன்னமோ சொல்லி உளறிக் கொட்டி கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
இதன் மூலம் ஒன்று மட்டும் நமக்கு தெளிவாக புரிகிறது. அதாவது அவர்கள் இயக்கங்கள் என்பது ஒரு சமுதாய பிரிவு தான் என்பது உள் மனதில் ஒத்துக் கொள்கிறார்கள். அதனுடைய எதிரொலிப்புதான் பொது சேவையில், பொது விஷயங்களில் ஒன்றுபடுவோம் என்று சொல்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
நம்மைப் பொறுத்தமட்டில் என்ன சொல்கிறோம் என்றால் அவரவர்கள் இயக்கங்களை வைத்துக்கொண்டு தான் பொது விஷயங்கள், பொது சேவைகள், பொது கருத்துக்கள், பொது அணுகுமுறைகள் போன்றவை மூலம் ஒன்றுசேர வேண்டுமா? ஏன் இயக்கங்களை கலைத்துவிட்டு இஸ்லாமிய கொள்கையை பார்த்து ஒன்றுபடக் கூடாதா?
இன்னும் இது சம்பந்தமாக நல்ல விளக்கமாக கூறவேண்டும் என்றால், அதாவது எல்லா இயக்கவாதிகளும் ஒரு பொதுவான இடத்தில் அமர்ந்து முதலில் இஸ்லாமிய கொள்கையில் ஒத்துவருகிற விஷயங்களில் ஒன்றுபடுங்கள். பிறகு கருத்து வேறுபாடு வருகிற விஷயங்களில் பல நாட்கள் அல்லது பலமாதங்கள் என்றாலும் பரவாயில்லை அமர்ந்து கலந்துரையாடல் மூலம் ஒரு சுமூகமான முறையில் தெளிவான வழியில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு ஒன்று சேர்ந்து செயல்படலாம் அல்லவா? அல்குர்ஆன் 4:59 இதைத்தானே வலியுறுத்துகிறது.
தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! நிச்சயமாக அல்லாஹ் தன்மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கிறான். அல்குர்ஆன்: 3:159
ஆக இஸ்லாமிய பிரிவுகளை எல்லாம் தூர எறிந்துவிட்டு முஸ்லிம் சமுதாய ஒற்றுமை வளர்ச்சியின் நலனை முன்னிட்டு சகோதரன், சகோதரி என்ற முறையில் முஸ்லிம் என்ற பெயரில் மட்டும் செயல்படு வதற்கு வித்திடலாம் அல்லவா? ஏன் செய்யக்கூடாது? இது சம்பந்தமாக உலகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்து செயல்படுவதற்கு கடமைப்பட்டுள்ளார்கள். அதை விட்டுவிட்டு இயக்கங்கள் புதிது புதிதாக ஆரம்பித்துக் கொண்டும் அல்லது இயங்கிக் கொண்டிருக்கிற இயக்கங்கள் எல்லாம் வழிகேடுதான் என்பதை அறிந்து கொண்டு, அதை கலைத்தால் கவுரவ குறைச்சல் ஏற்படும் என்பதால் வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று சொல்லிக் கொண்டு, எல்லா இயக்கங்களையும் ஒரு பொதுவான பெயரில் ஒன்று சேர்ப்பதற்கு பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருப்ப தெல்லாம் வீண் அர்த்தமற்ற செயலாகும்.
இன்னொரு வியத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்ரால், அதாவது இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்ற தாரக மந்திரம் கூட ஏட்டளவில் அல்லது சொல்லளவில் இருக்கிறதுதானே தவிர அது நடைமுறையில் முழுமையான முறையில் ஒத்துவரவில்லை என்பதைக் கூட நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா?
ஆக சமயசார்பற்ற ஜனநாயக இந்தியாவுக்கே வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்ற தாரக மந்திரம் கூட ஒத்துவரவில்லை என்கிறபோது முஸ்லிம் இயக்கங்கள் எப்படி வேற்றுமையில் ஒற்றுமை காணப் போகிறார்கள்? எல்லாமே ஒரு தவறான சித்தாந்தம்தான்.
அடுத்து இன்னொரு கருத்துக்கூட இயக்கவாதிகள் எடுத்து வைக்கிறார்கள். அதாவது இந்தியாவில் அரசியல் சூழ்நிலைகள் சரியில்லை. இதனால் கலவரங்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் சமாளிப்பதற்கு எல்லா முஸ்லிம்களும் முன்வருவதில்லை. அதனால் ஒருசில குறிப்பிட்ட முஸ்லிம்களை வைத்துக்கொண்டு செயல்படுவதற்கு இயக்கம் தேவைப்படுகிறது என்றும் கூட சப்பைக் கட்டு கட்டுகிறார்கள் இயக்கவாதிகள்.
இங்கே நம்முடைய கேள்வி ஒன்று எழு கிறது. அதாவது ஒருசில குறைந்தபட்சம் முஸ்லிம்களை வைத்துக்கொண்டு பல இயக்கங்களாக செயல்பட வேண்டுமா? அவர்களின் வழிமுறை பிரகாரம் பார்த்தால் கூட அந்த இடத்தில் ஒரு இயக்கம்தானே தேவைப்படுகிறது. ஆனால் அவர்களின் சுய நலப் போக்குகளாலும், பணம், பதவி, பட்டம், உல்லாசம், சுகபோக வாழ்க்கை என்ற நோக்கத்தில் பல இயக்கங்களாக ஆரம்பித் துக் கொள்கிறார்கள். நாம் இந்த இடத்தில் சிறிது சிந்திப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். அதாவது எல்லா முஸ்லிம்களையும் ஒரு தலமையின் கீழ் ஒன்று திரட்டுவதை விட்டுவிட்டு வெவ்வேறு இயக்கங்களின் மூலம்தான் ஒன்று திரட்ட வேண்டுமா? என்றால் முஸ்லிம் சமுதாயத்தை மேலும் மேலும் உடைத்து கொண்டிருக்கிறார்கள் இயக்கவாதிகள். இதை எந்தக் கோணத்தில் அணுகுகிறார்கள் என்றால் இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகள் எவ்வாறெல்லாம் உடைக்கப்பட்டு பல பிரிவுகளாக சிதறடித்துக் கொண்டிருக்கிறார்களோ அதேப் போலத்தான்.
நாம் கேட்கிறோம் 100க்கு 100 சதவிகி தம் எண்ணிக்கையில் முஸ்லிம்களை வைத் துக்கொண்டு இஸ்லாமிய ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற அரபு நாடுகளில் மட்டும் அரசியல் சூழ்நிலைகள் அமைதியான முறையில் நடைபெறுகிறதா? இல்லை என்றுதான் நம்மால் சொல்லமுடியும். எப்படி அங்கேயும் கலவரங்கள், குண்டு வெடிப்புகள், ஷிர்க், பித்அத், அனாச்சாரம், மது, மாது, சூது இன்னும் இவை போன்ற எல்லா வழிகேடுகளும், குற்றங்களும் தலைவிரித்துத் தான் ஆடுகின்றன. ஏகாதிபத்திய நாட்டின் தலைவர்களுக்கு அடிவருடியாக இருந்து கொண்டு மேற்கத்திய கலாச்சாரத்தை திறந்து விட்டிருக்கிறார்கள். இவைகளுக் கும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு அங்கேயும் பல எண்ணிக்கையற்ற இயக்கங்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியாவில் உள்ள இயக்கங்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்றால், அரபு நாடுகளில் உள்ள இயக்கங்கள் எந்த முறையில் ஒற்றுமை காணப்போகிறார்கள். ஆக இதற்கு என்னதான் தீர்வு? வேற்றுமையிலும் ஒற்றுமை காணமுடியாது, அதேபோல் ஒற்றுமையிலும் வேற்றுமைகளை காண வேண்டியதில்லை. எல்லா இயக்கங் களையும் கலைத்து விட்டு இஸ்லாமிய கொள்கையை பற்றிப் பிடித்து முஸ்லிம் ஜமாஅத் என்ற பெயரில் மட்டும் ஆன்மீகத்திலும், அரசியலிலும், பொதுப்பணி சேவையிலும் ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கு எல்லா முஸ்லிம்களும் புரட்சிகரமான வாழ்க்கையை தொடங்குவதற்கு ஒரு உறுதிமொழி எடுத்து வீரநடை போடுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்!