இறைவாக்கு உண்மையாகும்….
ஷரஹ் அலி, உடன்குடி
மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள முயலவில்லையே! (இறைநூல் : 4:78)
நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது ஆகும். உலக அழிவு நாள் விஷயத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று உங்களிடம் சொல்லப்பட்டபோது உலக அழிவு நாள் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாதே நாங்கள் அதை ஒரு வெற்று ஊகமாகவே கருதுகிறோம். நாங்கள் அதை ஏற்பவர்கள் அல்லர் என்று கூறுபவர்கள் உள்ளனர். (இறைநூல் : 45:32)
யுக முடிவு நாள் முன் நிகழும் நிகழ்வு பற்றிய முன்னறிவிப்பு :
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், உலக அழிவு நாள் நெருங்கும்போது காலம் சுருங்கிவிடும். செயல்பாடு, அமல் குறைந்து போய்விடும்.
மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும், “ஹர்ஜ்” பெருகி விடும் என்று சொன்னார்கள்.
அப்போது, மக்கள் அல்லாஹ்வின் தூதரே! “ஹர்ஜ்” என்றால் என்ன? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) “கொலை கொலை” என்று விளக்கம் அளித்தார்கள். நபிமொழி, ஆய்வாளர் : புகாரி: தமிழாக்கம், நபிமொழி எண். 7061-7067.
ஒருகாலம் வரும் அப்போது மக்கள் மார்க்க செயல்பாடுகளில் குர்ஆன், நபிமொழி கட்டளைகளை கைவிட்டுவிட்டு முற்றிலும் தன் மனோ இச்சையைப் பின்பற்றுவார்கள்.
பொறுமையை கையாளவது மக்களிடையே காணவியலாததாக இருக்கும் அத்தகைய காலகட்டத்தை நீங்கள் அடையும்போது,
இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை நீங்கள் (அத்தகைய நிலையில் இருந்து) காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்ற (அல்குர்ஆன் : 5:105) இறைவசனத்தை மக்களிடம் சுட்டிகாட்டி கூறிவிட்டு, பொது மக்களை விட்டுவிடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நபிமொழி ஆய்வாளர்கள் : அபூதாவுத் தமிழாக்கம், நபிமொழி எண் : 3778, திர்மிதி தமிழாக்கம், நபிமொழி எண். 2984, இப்னு மாஜா தமிழாக்கம், நபிமொழி எண். 4004.
எச்சரிக்ககை செய்யவேண்டும் என்பதே காரணம்!
எந்த சமுதாயம் அலட்சியமாக இருக்கிறதோ அந்த சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்யவேண்டும் என்பதற்காக, அவர்களில் பெரும்பாலோர் தண்டனைக்குரிய தீர்ப்புக்கு ஆளாகிவிட்டனர். எனவே அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
நாம் அவர்களின் கழுத்துகளில் விலங்குகளைப் பூட்டியுள்ளோம். அவை அவர்களின் முகவாய்க் கட்டைகள் வரை நெருக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.
மேலும் நாம் அவர்களுக்கு முன் ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னால் ஒரு தடுப்பையும் எழுப்பி அவர்களை மூடி விட்டிருக்கின்றோம். இனி அவரவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லை. குர்ஆன் : 36:6-9
இந்த குர்ஆன் மூலம் உங்களையும், இது யாரையெல்லாம் எட்டுகிறதோ அவர்களையும் நான் எச்சரிப்பதற்காகவே இது எனக்கு இறை செய்தி மூலம் அருளப்பெற்றது என்று (நபியே) நீர் கூறும். (இறைநூல் : 6:19)
(நபியே!) நீர் கூறும் : உங்களுக்கு மேலிருந்தோ. உங்களின் கால்களுக்கு கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள் மீது இறக்கவும் அல்லது உங்களை பல்வேறு கூட்டங்களாகப் பிரித்து, உங்களில் ஒரு கூட்டத்தார் கொடுக்கும் துன்பத்தை மற்றொரு கூட்டத்தார் சுவைக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றல் உள்ளவன்.
பாருங்கள்! அவர்கள் உண்மையை உணரும் பொருட்டு நம் சான்றுகளை எவ்வாறெல்லாம் மீண்டும் மீண்டும் அவர்கள் முன் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.
(நபியே!) உம்முடைய சமுதாயத்தினர் இதனைப் பொய்யென்று வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் இதுதான் உண்மை!
நான் உங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்படவில்லை என்பதை அவர்களிடம் நீர் கூறிவிடும்.
ஒவ்வொரு செய்திக்கும் அது வெளிப்படுவதற்கென குறிப்பிட்ட காலம் இருக்கிறது. இறுதி முடிவு என்னவென்று விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும். (இறைநூல் : 6:65-67)
காரியங்கள் எளிதாக நபிகளார் காட்டித் தந்த பிரார்த்தனை!
என் இறைவா! நீ எளிதாக்கிய காரியத்தை தவிர வேறெதுவும் எளிதானது அல்ல! மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை எளிதாக்கி விடுகிறாய் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள். நபிமொழி. ஆய்வாளர்: இப்னு ஹிப்பான், நபிமொழி எண். 2427.
மாறாக நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே முதன்மைப்படுத்துகிறீர்கள். ஆனால் மறுமையோ சிறந்ததும் நிலைத்ததும் ஆகும். (அல்குர்ஆன்:87:16,17)
மனிதர்களிலேயே அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக எப்போதும் சச்சரவு செய்து கொண்டிருப்பவனே ஆவான் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். (நபிமொழி ஆய்வாளர்: புகாரி, தமிழாக்கம், நபிமொழி எண். 2457)
தூய்மை வாதம் பேசாதீர்கள்!
உங்களை நீங்களே தூயவர்கள் எனக் கூறிக் கொள்ளாதீர்கள். இறையச்சம் கொண்டவரை அவன் நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் : 53:32)
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி தனது மனதை, மனவிருப்பங்களை விட்டு விலக்கி கொண்டாலோ, நிச்சயமாக அவனுக்கு சுவர்க்கம்தான் தங்குமிடம். (அல்குர்ஆன் : 79:40)