ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : 1. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயலுக்கு (தானே) பொறுப்பாளியாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 52:21)
- அணுவளவு நன்மை செய்தோர் அதன் பலனைக் கண்டுகொள்வார். அணுவளவு தீமை செய்தோர் அதன் கேட்டையும் கண்டுகொள்வார் (99:7,8) உங்களுக்கு அவனை (அல்லாஹ்வை) அன்றி உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாருமில்லை நீங்கள் (இதனை) சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் : 32:4)
- எச்சுமையானாலும் (தனது சுமையை அன்றி) மற்றெவரின் சுமையையும் சுமந்து கொள்ளமாட்டான். (53:33)
இக்கருத்து குர்ஆனின் பல வசனங்களில் இடம் பெற்றுள்ளது. விஷயம் இவ்வாறிருக்க, ஒருவர் மற்றொருவரின் பலவ மன்னிப்புக்காக அல்லது அவர் உயர் பதவி அடைய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்வதில் என்ன அர்த்தமிருக்கிறது? இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு, அவர் செய்த பாவத்திற்கு இவர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தால், அவர் தாம் செய்த பாவத்திற்குரிய தண்டனையை அவர் எப்படி அனுபவிப்பது? தக்க ஆதாரத்துடன் இச்சந்தேகத்தைத் தெளிவுபடுத்துக. பாரூக், சென்னை.
தெளிவு : 1. பின்னர் “அவர்கள் எங்கள் ரட்சகனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களை எங்களின் சகோதரர்களுக்கும் நீ மன்னிப்பருள்வாயாக அன்றி ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்கள் உள்ளங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! நீயோ மிக்க இரக்கமுள்ளவனும், கிருபை மிக்கவனுமாவாய்” என்று கூறுவார்கள். அல்குர்ஆன் : 59:10
- நபியே நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை என்று உறுதியாக நம்புவீராக1 மேலும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகிய ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (எம்மிடம்) பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்குர்ஆன் : 47:19
- அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சூழ்ந்துள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதி செய்கிறார்கள். அவனை விசுவாசிக்கிறார்கள். ஈமான் கொண்டோரின் பாவங்களை மன்னிக்கும்படியும் கோருகிறார்கள். எங்கள் ரட்சகனே! நீ (உன) ஞானத்தாலும் கருணையாலும், யாவையும் சூழ்ந்திருக்கிறாய். எனவே பாவமன்னிப்புத் தேடி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னித்தருள்வாயாக! அல்குர்ஆன் : 40:7
- எனது ரட்சகனே! நான் சிறு பிள்ளையாயிருக்கும்போது என் பெற்றோர் என்னைக் கிருபையாய் வளர்த்தது போன்று. அவ்விருவருக்கும் நீ கிருபை செய்தருள்வாயாக. (அல்குர்ஆன் : 17:24)
தாங்கள் குறிப்பிட்டுள்ள திருவசனங்களில் காணப்படுவதுபோல் ஒவ்வொரு நபரும் தாம் செய்த நன்மை, தீமையின் இலாப, நஷ்டங்களை அனுபவித்தே தீரவேண்டும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை. ஏனெனில், அது அல்லாஹ்வின் எச்சரிக்கை, வல்ல அல்லாஹ் பாவிகளுக்கு அவ்வாறு எச்சரிக்கை விடுத்ததன் பின்னர் அவர்கள் மீது கருணை கூர்ந்து அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான பரிகாரங்களையும் அல்குர்ஆனில் பல இடங்களில் கூறியிருப்பதால் அவற்றையும் கவனித்தே நாம் ஓர் முடிவுக்கு வரமுடியும்.
அல்லாஹ் பாவிகளைத் தண்டிப்பதாகக் கூறிவிட்டால் அவர்களை அவன் தண்டித்தே தீரவேண்டும் என்பதல்ல. அவன் அவர்களை மன்னிக்கவும் செய்யலாம். ஏனெனில், அவன் செய்வது பற்றி கேட்பதற்கு எவருக்கும் அதிகாரமில்லை. அவனோ அனைவரைப் பற்றியும் கேட்கும் அதிகாரமுள்ளவனாகவும் இருக்கிறான்.
அவன் தான் நாடியவரை மன்னிப்பான். தான் நாடியவரைத் தண்டிப்பான். அல்லாஹ எல்லாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாகும். (அல்குர்ஆன் : 2:284)
ஆகவே மேற்காணும் அல்குர்ஆன் வசனங்களின் மூலம் ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம் சகோதரர்களுக்கு பாவமன்னிப்புத் தேடலாம் என்பது மட்டுமின்றி பாவமன்னிப்புத் தேடவேண்டும் என்பதையும் உணர்கிறோம்.
அல்லாஹ் குறிப்பாக தனது நபி(ஸல்) அவர்களுக்கு உமது தவறுக்கு நீர் பாவமன்னிப்புத் தெரிவதுடன், உம்மைப் பின்பற்றிய முஃமினாகிய ஆண், பெண் அனைவருக்காகவும் பாவமன்னிப்புத் தேடுவீராக! என்று உபதேசிப்பதன் மூலம் பொதுவாக அனைத்து முஃமின்களும் பிற முஃமின்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவது அவசியம் என்பதை உணர்த்துகிறான்.
கிருபையுள்ள ரஹ்மான் பாவியாகி விட்ட தனது அடியார் மீது கொண்டுள்ள அளவிலாக் கருணையினால், மீண்டும் அவர்களை நல்லவர்களாக, தனக்கு உவந்தவர்களாக ஆக்கும் பொருட்டே ஒரு முஃமினைப் பிற முஃமினுக்கும், நபியைத் தனது உம்மத்துக்கும் பாவமன்னிப்புத் தேடும்படி பணித்துள்ளான்.
அது மட்டுமிழன்றி, தனது மலாயிகத்துமார்களையும் கூட முஃமின்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதற்கும், நல்ல துஆ செய்வதற்கும் நியமித்துள்ளான் என்பதை அல்குர்ஆன் : 40:7 வசனத்தில் பார்க்கிறோம்.
இம்மகத்தான சலுகைகள் அனைத்தும் இறை விசுவாசிகளான முஃமின்களுக்கு மட்டுமே இறை அருளால் அருளப்பட்டிருக்கின்றன. “முஷ்ரிக்குகள் (இணை வைத்து வணங்குபவர்) தமது நெருங்கிய உறவினர்களாயிருப்பினும் நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள் என்பது தெளிவானதன் பின்னர் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் முறையல்ல”. (அல்குர்ஆன் : 9:113)
இவ்வசனத்தின் மூலம் முஃமினாகியவர் இணை வைத்து வணங்குபவர்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் பாவமன்னிப்புத் தேடுவது (ஹராம்) கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஐயம் : வியாதி குணமாக, குழந்தைகள் பாதுகாப்போடு இருக்க ஏதேனும் துஆக்களை ஓதி நோயாளி, குழந்தை ஆகியோரின் மீது ஊதுவதற்கு ஸஹீஹான ஹதீத்களில் ஆதாரமுண்டா? நத்தர் உசேன், அறந்தாங்கி.
தெளிவு : நபி(ஸல்) அவர்கள் (தமது பேரார்களான) ஹஸன்(ரழி) ஹுஸைன்(ரழி) இருவருக்கும் பின்வருமாறு பாதுகாப்பு துஆச் செய்து கொண்டிருந்தார்கள்.
உயீDதுக்குமா Bபி Kகலிமாத்தில்லாஹித்தாம்மத்தி மின் Kகுல்லி ஷைத்தானின் வ ஹாம்மத்தின் வ மின் K குல்லி ஐனின் லாம்மத்தின்.
பொருள் : பரிபூரணமான அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு எல்லா ஷைத்தான்களையும், விஷ ஜந்துக்களையும் தீண்டக்கூடிய எல்லா கண்களையும் விட்டும் உங்கள் இருவருக்காக பாதுகாப்புத் தேடுகிறேன்.
இவ்வாறு அவர்கள் ஓதிவிட்டு அவ்விருவரையும் நோக்கி நிச்சயமாக உங்களடைய தந்தை(யாம் இப்ராஹிம்) அவர்கள் (தமது மக்களாகிய) இஸ்மாயில், இஸ்ஹாக் ஆகியோருக்கு இவ்வாறு பாதுகாப்பு துஆ செய்து கொண்டிருந்தார்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி). நூல் : புகாரி.
(மேற்காணும் துஆவில் இருவருக்கும் சேர்ந்து பாதுகாப்புத் தேடியிருப்பதால் “உயீதுக்குமா” என்று கூறப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு மட்டும் மேற்காணும் துஆவை ஓதும்போது “உயீதுக்க” (உனக்காகப் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று ஓதவேண்டும்)
துஆவை ஓதி சம்பந்தப்பட்டவர் மீது ஊதுவது, “நபி(ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரில் எவருக்கேனும் வியாதி ஏற்பட்டுவிடடால், குல்ஹுவல்லாஹு அஹத், குல் அஊது பி ரப்பில் ஃபலக், குல் அஊது பி ரப்பின்னாஸ்” ஆகிய சூராக்களை ஓதி அவர்கள் மீது ஊதுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி), நூல் : முஸ்லிம்.
தாமே ஓதி தம்மீது ஓதிக் கொள்வதும், தமது கையில் ஊதி தம்மீது தடவிக் கொள்வதும்ட, “நபி(ஸல்) அவர்களுக்கு உடல் நலம் குன்றிவிட்டால் குலஹுவல்லாஹு அஹத், ரூல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி தம்மீது ஊதிக் கொள்வார்கள். தமது கைகளால் அவ்வாறு ஓதியதை (ஊதி) தடவிக் கொள்வார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி), நூல் : முஸ்லிம்.
தமக்கு இயலாத போது பிறர் ஓதி கையில் ஊதி தடவி விடுதல் : நபி(ஸல்) அவர்கள் மரண தருவாயில் ஏற்பட்ட வியாதியின் போது நான் குல் ஹுவல்லாஹு அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி அவர்கள் மீது ஊதி (எனது கையைக் கொண்டு நான் அவர்களைத் தடவி விடாமல்) அவர்களுடைய கையைக் கொண்டே அவர்களைத் தடவி விட்டேன். ஏனெனில் எனது கையை விட அவர்களுடைய கை “பரக்கத்” வாய்ந்ததாகும். புகாரியில் மற்றொரு அறிவிப்பில் இவ்வாறு ஓதி ஊதி தடவி விடும்படி நபி (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள் என்றும் உள்ளது. அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
பொதுவாக உடல் நலமுடன் இருக்கையில் தினசரி படுக்கையின் போது 3 சூராக்களை ஓதி கையில் ஊதி உடலில் தடவிக் கொள்வது. நபி(ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் செல்லும்போது, குல்ஹுவல்லாஹு அஹத், குல் அஊது பி ரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி தமது கையில் ஊதி அதைத் தமது முகத்திலும் தமது கைகள் மட்டும் அளவு தமது உடலிலும் தடவிக் கொள்வார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி), நூல் :புகாரி:
(உகைல்(ரழி) அவர்களின் மூலம் முஃபல்லுலு பின் ஃபுலாலா என்பவரின் வாயிலாக அறிவிக்கப்படும். மற்றொரு அறிவிப்பில் “தமது கைகள் எட்டும் அளவு தமது தலைமீது துவங்கி, தமது முகம், உடலில் முற்பகுதி முதலியவற்றில் தடவிக் கொள்வார்கள் என்று இடம் பெற்றிருப்பதுடன் இவ்வாறு மும்முறை செய்து கொள்வார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.
நாவால் துஆவை ஓதிக்கொண்டு, வலது கையால் நோயாளியைத் தடவுதல்: நபி(ஸல்) அவர்கள் தமது குடும்பத்தாரில் ஒருவரைத் தமது வலக்கரத்தால் தடவிக் கொண்டே, பின்வரும் பாதுகாப்பு துஆ ஓதிக் கொண்டிருந்தார்கள்.
அல்லாஹும்ம ரப்Bபனாஸி அத்ஹிBபில் Bபஃஸ வஷ்ஃபிFஅன்tதஷ்ஷாஃFபி லாஷிஃபாFஅ இல்லா ஷிஃபாFஉக்க ஷிஃபாFஅன் லாயுகாDதிரு ஸகமா.
பொருள் : அல்லாஹ்வே! மக்களின் ரட்சகனே! தீங்குகளை அகற்றி பூரண சுகத்தை அளிப்பவன். உனது பூரண சுகமின்றி வேறு பூரண சுகம் என்பதேயில்லை. எந்த நோயையும் விட்டு வைக்காது பரிபூரண சுகத்தைத் தந்தருள்வாயாக! அறி. ஆயிஷா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
வலிள்ள இடத்தில் கையை வைத்துக் கொண்டு ஓதுவது ஒருமுறை உஸ்மான் பின் அபில் ஆஸ்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் தமது உடலில் ஏற்பட்டிருந்ததோர் வலியைப் பற்றி எடுத்துக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி உமது உடலில் வலியுள்ள இடத்தில் உமது கையை வைத்துக் கொண்டு “பிஸ்மில்லாஹி” என்று மும்முறை ஓதுவீராக! அடுத்து,
“அஊதுபில்லாஹி வகுDத்ரத்திஹீ மின் ஷர்ரி மாஅஜிDது வ உஹாDதிரு” என்று 7 முறை ஓதுவீராக என்றார்கள்.
பொருள் : அல்லாஹ்வுடைய மகத்துவத்தையும் அவனுடைய வல்லமையையும் கொண்டு எனக்கு ஏற்பட்டுள்ள தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். பின்பு அவர்கள் நான் இவ்வாறு செய்தேன். அல்லாஹ் எனக்கு அந்த வலியை அகற்றிவிட்டான் என்றார்கள். அறி.ஜுபைரு பின் முத்யீம்(ரழி), நூல் முஸ்லிம்.
கண் திருஷ்டி உண்டா?
கண் திருஷ்டி என்பது உண்மைதான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி.
நான் கண் திருஷ்டியிலிருந்து தப்புவதற்காக பாதுகாப்பு துஆவை ஓதிக் கொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். அறி.ஆயிஷா(ரழி), நூல் : பகாரி.
கண் திருஷ்டியில் அறிகுறி : ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரழி)அவர்கள் வீட்டில் ஒரு சிறுமியைக் கண்டார்கள். அச்சிறுமியின் முகத் தோற்றம் மாறியிருந்தது. மஞ்சள் நிறமாயிருந்தது. உடனே இச்சிறுமிக்கு பாதுகாப்பு துஆ ஓதுங்கள். ஏனெனில் இப்பெண்ணுக்கு கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்றார்கள். அறி. உம்மு ஸலமா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
உடல் மெலிவுக்கு கண் திருஷ்டியும் காரணமாயிருக்கலாம். ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் அஷ்மா பின்து உமைஸ்(ரழி) அவர்களை நோக்கி என்ன? எனது சகோதரரின் மக்கள் மெலிந்து காணப்படுகின்றரே? இவர்களுக்கு வறுமை ஏற்பட்டு விட்டதா? என்றார்கள். அதற்கு அவர்கள் “இல்லை இவர்களுக்கு துரிதமாக கண் திருஷ்டி ஏற்படுகிறது” என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்படியானால் இவர்களுக்கு பாதுகாப்பு துஆ ஓதுங்கள் என்றார்கள். அப்போது நான் பாதுகாப்பு துஆ ஒன்றை அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அதற்கு அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அதற்கு அவர்கள் (சரி இதை) அவர்களுக்காக ஓதிக்கொள்வீராக என்றார்கள். அறி. ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி), நூல் : முஸ்லிம்.
உடலில் வலி, காயம், கொப்பறமுள்ள இடத்தில் உமிழ் நீரால் சிறிது மண்ணைத் தொட்டு அவ்விடத்தில் வைத்துக்கொண்டு பின்வரும் துஆவை ஓதுவது :
ஒருவருக்கு வலியொ, கொப்பளமோ, காயமோ ஏற்பட்டு விட்டால் நபி(ஸல்) அவர்கள தமது விரலால் இவ்வாறு செய்வார்கள். அதாவது சிறிது உமிழ் நீரையுடைய தமது ஆள்காட்டி விரலை பூமியில் வைத்து அதை நோயுள்ள இடத்தில் வைத்துக்கொண்டு,
பிஸ்மில்லாஹி tதுர்பத்து அர்ழினா பி ரீக்கத்தி Bபஃழினா யுஷ்ஃபா ஸகீமுனா Bபி இDத்னி ரப்Bபினா என்று ஓதுவார்கள்.
பொருள் : அல்லாஹ்வின் பெயரால் எங்கள் பூமியின் மண்ணானது எங்கள் ரட்சகனின் உத்திரவினால் எங்களில் ஒருவருடைய உமிழ்நீரைக் கொண்டு எங்கள் நோயாளிக்கு குணமளிக்கும். அறி.ஆயிஷா(ரழி), நூல்கள் : முஸ்லிம், திர்மிதீ.
விஷக்கடிகளுக்கு ஓதி பாதுகாப்புத் தேடுவது, நான் ஆயிஷா(ரழி) அவர்களிடம் ஓதி பாதுகாப்புத் தேடிக் கொள்வது பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்கள் எல்லா விஷக்கடிகளுக்கும் ஓதி பாதுகாப்புத் தேடிக் கொள்ள அனுமதித்துள்ளார்கள். என்றார்கள். அறி. : அப்துர் ரஹ்மானுப்னுல் அஸ்வத்(ரழி), நு=ல் : புகாரி.
நபி(ஸல்) அவர்கள் கண்திருஷ்டி, விஷகடி, விலாவில் ஏற்படும் கட்டி ஆகியவற்றிற்கு ஓதி பாதுகாப்புத் தேடுவதை அனுமதித்துள்ளார்கள். அறி.அனஷ்(ரழி), நூல் முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்களின் எதிரில் ஒருவர் மற்றவருக்கு ஓதிப் பார்த்தல், ஒருமுறை நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருக்கும்போது ஒருவருக்குத் தேள் கொட்டி விட்டது. அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே நான் இவருக்கு ஓதிப் பார்க்கிறேன் என்றார். உங்களில் ஒருவர் தமது சகோதரருக்கு உதவி செய்ய இயலுமானால் அவர் செய்து கொள்வாராக என்றார்கள். அறி. ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி), நூல் : முஸ்லிம்.
விஷக்கடியிலிருந்து பாதுகாப்பு : ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் வந்து இவ்விரவு நமக்கு தேள் கொட்டி, தாம் தூங்கவில்லை என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி நீர் மாலை நேரம் வந்தவுடன்,
அஊOது Bபி Kகலிமாத்தில்லாஹித் tதாம் மாத்திழ மின் ஷர்ரி மாKகலக்க.
பொருள் : பரிபூரணமான அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு அவன் படைத்தவற்றில் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நீர் ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் உமக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று கூறினார்கள். அறி.ஸுஹைது பின் அபீஸலீஹ்(ரழி), நூல் : அபூதாவூத்.
நபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) ஓதிய பாதுகாப்பு துஆ : ஒருமுறை ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து முஹம்மத் அவர்களே! நீங்கள் சுகக் குறைவாயிருக்கிறீர்களா? என்றார்கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள். அப்போது அவர்கள் பின்வருமாறு அவர்களுக்காகப் பாதுகாப்பு துஆ ஓதினார்கள்.
Bபிஸ்மில்லாஹி அர்Kகீக்க மின் குல்லிஷையின் யூDதீக்க மின் ஷர்ரி குல்லி நBப்ஸின் அவ்ஜனிஹாஸிதின் அல்லாஹு யஷ்ஃFபிக்க Bபிஸ்மில்லாஹு அர்Kகீக்க.
பொருள் : அல்லாஹ்வின் பெயரால் உமக்குத் தொந்தரவளிக்கும் எல்லாவற்றை விட்டும், எல்லா மனிதர்களின் தீங்கையும், பொறாமைக்காரனின் கண்ணை விட்டுமு், நான் உமக்காகப் பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ் உமக்கு பரிபூரண சுகத்தை நல்குவானாக! அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நான் உமக்காக பாதுகாப்புத் தேடுகிறேன். அறி.அபூஸயீத்(ரழி), நூல் : முஸ்லிம்.
ஷிர்க் இல்லாத எல்லா வாசகத்தைக் கொண்டும்ட பாதுகாப்பு துஆ ஓதவது ஆகும். நாங்கள் அறியாமைக் காலத்தில் சில வாசகங்களைக் கூறி பாதுகாப்புத் தேடுவோம். அல்லாஹ்வின் தூதரே! அதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்றோம். அதற்கு அவர்கள் உங்கள் பாதுகாப்பு வாசகத்தை என்னிடம் எடுத்துக் கூறுங்கள் என்றார்கள். (அவ்வாறு எடுத்துக்காட்டப்பட்டது) அதற்கு அவர்கள் ஷிர்க் இல்லாத வகையில் உள்ள பாதுகாப்பு வாசகத்தை ஓதுவதால் குற்றமில்லை என்றார்கள். அறி.அவ்ஃபு பின் மாலிக்(ரழி), நூல் : முஸ்லிம்.
மந்திரம், சகுனம் முதலியவற்றிற்குத் தடை: என்னுடைய உம்மத்தில் 70,000 நபர்கள் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் பிரவேசிப்பார்கள். மந்திரித்துக் கொள்ளமாட்டார்கள். தமது ரப்பிடத்திலேயே தமது காரியங்களை ஒப்படைத்து விடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறி.அப்பாஸ்(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
மேற்காணும் ஹதீஃதில் ஷிர்க்கை உண்டுபண்ணும் வாசகங்களையும், அர்த்தமற்ற வாசகங்களையும் சொல்லி மந்திரிப்பதும், சகுணம் பார்ப்பதும், தடை செய்யப்பட்டிருப்பதோடு, அனைத்துக் காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டு மன அமைதியோடு இருப்பதை வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
நூல் கயிற்றை மந்திரித்து கட்டுவதும் கூடாது. ஒருமுறை (எனது கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் எனது கழுத்தில் கருப்பு நூல் கயிறு ஒன்றைக் கண்டு இது என்ன” என்று கேட்டார்கள். அதற்கு நான் இது எனக்காக மந்திரிக்கப்பட்ட கயிறு என்றேன். உடனே அவர்கள் அதைப் பிடித்து அறுத்துவிட்டு, நீங்களோ (நபி தோழராகிய)அப்துல்லாஹ்வின் குடும்பத்தார், ஷிர்க்கை விட்டும் மிக அதிகமாக ஒதுங்கியவர்கள். நான் பின்வருமாறு நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன். அதாவது “நிச்சயமாக மந்திரித்தல், கஷ்டநிவர்த்திக்காக கழுத்தில் மணியைக் கோர்த்துக் கட்டுதல், கணவன் மனைவிக்கு மத்தியில் நட்பு நீடிப்பதற்காக மந்திர வேலை செய்தல் ஆகியவை ஷிர்க்கின்பால் சேர்க்கக் கூடியவையாகும்.
அப்போது நான் “நீங்கள் என்ன இவ்வாறு கூறுகிறீர்கள்” எனது கண்ணில் வலி ஏற்பட்டு தண்ணீர் வடித்து கொண்டிருந்தது. நான் ஒரு யூதரிடம் சென்று அதற்காக அவர் மந்திரித்தபோது நீர் வடிதல் நின்று விட்டதே! என்றேன். அதற்கு அவர்கள் இது எல்லாம் ஷைத்தானுடைய வேலையாகும். அவன் தனது கையால் கண்களை இடித்துக் கொண்டிருக்கிறான் மந்திரிக்கும்போது அகன்று கொள்கிறான். நீர் இதற்காக நபி(ஸல்) அவர்கள் ஓதியது போல் ஓதினாலே உமக்கும் போதும் அதாவது:
இதன் தமிழ் வாசகமும் அதன் பொருளும் மேற்காணும் ஆயிஷா(ரழி), அவர்களின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
ஒருவர் காலையிலும், மாலையிலும் ஒவ்வொரு இரவிலும் தினசரி,
பிஸ்மில்லாஹில்லதீ லாயழுர்ரு மஅஸ்மிஹீ ஷைஉன் ஃபில் அர்ழி, வலா பி்ஸ்ஸமாயி வஹு வஸ்ஸமீ உல் அலிம்”
என்று மும்முறை ஓதி வருவாரானால் அவருக்கு எத்தீங்கும் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று அப்பானு பின் உஸ்மான் என்பவர் தமது தந்தை கூறி தாம் கேட்டதாக அறிவித்துள்ளார்.
பொருள் : பூமியிலும், வானத்திலுமுள்ள எப்பொருளும் அவன் நாமத்துடன் எவ்வித இடரும் செய்ய முடியாத அத்தகைய அல்லாஹ்வின் திருநாமத்தால் அவன் (அனைத்தையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கிறான்.
(இதன் அறிவிப்பாளராகிய) அப்பான் அவர்களுக்கு இவ்வறிவிப்பை எடுத்துக் கூறும்போது பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. அதுசமயம் அவரிடம் இவ்வறிவிப்பைக் கேட்டுக் கொண்டிருந்தவர் அப்பான் அவர்களின் நிலையைக் கூர்ந்து கவனித்தார். அதற்கு அவர்கள் நிச்சயமாக நபி(ஸல்) அவர்களின் (மேற்காணும்) ஹதீஃதானது நான் உமக்கு எடுத்துக் கூறியவாறு உண்மையான பலன் உடையதுதான். எனினும் நானோ அல்லாஹ்வின் அமைப்புப்படி எனக்கு பக்கவாதம் ஏற்பட்ட தினத்தன்று அதை ஓதாமல் இருந்துவிட்டேன் என்றார்கள். அறிவிப்பாளர் : அப்பானு பின் உஸ்மான் (ரழி), நூல்கள் : திர்மிதி, அபூதாவூத், இப்னு மாஜ்ஜா.
அபூதாவுடைய அறிவிப்பில் (மேல் அதிகமாக) மேற்காணும் அந்த பிஸ்மில்லாஹில்லதீ எனும் வாசகத்தை மாலையில் ஓதினால் காலை வரை, காலையில் ஓதினால் மாலை வரை எவ்விதமான திடீர் ஆபத்துக்களும் ஏற்படாது என்று பதிவாகியுள்ளது.
ஆகவே மேற்கண்டவாறு ஸஹீஹான ஹதீத்களில் இடம் பெற்றிருப்பவற்றை எடுத்து அமல் செய்வதில் பிரச்சனை எதுவுமில்லை. ஆனால் ஏதேனும் ஓதி தண்ணீரில் ஊதி அதைக் குடிப்பதற்கோ, அத்தண்ணீரால் முகம் கை, கால்களைக் கழுவினால் வியாதி குணம் அடையும் என்பதற்கோ அல்லது ஏதேனும் துஆ முதலியவற்றை எழுதி அதைக் கழுவி குடிப்பதற்கோ, ஹதீஃத்களில் ஆதாரமில்லை.
இவ்வாறே கறுப்பு நூல் அல்லது கம்பளிக் கயிறு முதலியவற்றில் துஆவை ஓதி ஊதி அவற்றில் முடித்துப்போட்டோ அல்லது போடாமலோ கழுத்திலோ, கையிலோ, காலிலோ, இடுப்பிலோ அவற்றைக் கட்டிக் கொள்வதற்கும் ஆதாரமில்லை.
இவ்வாறே கறுப்பு நூல் அல்லது கம்பளிக் கயிறு முதலியவற்றில் துஆவை ஓதி ஊதி அவற்றில் முடிச்சுப் போட்டோ அல்லது போடாமலோ, கழுத்திலோ, கையிலோ, காலிலோ, இடுப்பிலோ அவற்றைக் கட்டிக் கொள்வதற்கும் ஆதாரமில்லை.
சிலர் அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) அவர்கள் தமது சிறு குழந்தைகளின் கழுத்தில் “அஊது பி கலிமாத் தில்லாஹித், தாம்பாத்தி” என்று துவங்கும் ஒரு துஆவை எழுதி காட்டியுள்ளார்கள் என்று அம்ரு பின் ஷுஜபு அவர்களின் வாயிலாக திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கும் ஓர் அறிவிப்பை ஆதாரமாகக் கொண்டு துஆ முதலியவற்றை எழுதி காட்டுவது ஆகும் என்கிறார்கள்.
ஆனால் இவ்வறிவிப்பின் நிலையோ படுமோசமாகவிருக்கிறது. காரணம் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள “முஹம்மது பின் இஷ்ஹாக்” என்பவர் பற்றி ஹதீஃத் கலாவல்லுநர்கள் பல்வேறு அபிப்பிராயம் கொண்டவர்களாக உள்ளனர் என்றும், இவர் ஏற்புக்குரியவர் அல்லர் என்று தாருகுத்னீ அவர்களும், இவர் பலகீனமானவர் என்று இப்னு முயீன் அவர்களும் இவர் பொய்யர் என்பதாக சுலைமானுத் தையீ, மஹ்யா பின் கத்தான் ஆகியோரும் விமர்சித்துள்ளார்கள்.
ஆகவே துஆ முதலியவற்றை எழுதிக் கட்டுவதற்கான இந்த அறிவிப்பு “லயீஃப்” பலகீனமானது என்பதை அறிகிறோம். இவ்வாறு துஆ போன்றவற்றை எழுதிக் கட்டுவதால் பூரணமாக அல்லாஹ்வை நம்பி செயல்படவேண்டிய ஒருவர், தாம் எழுதிக் கட்டியிருக்கும் அந்த பொருளின் பக்கம் தமது நம்பிக்கையைச் செலுத்தி, தமது ஈமானில் பாதிப்பை உண்டுபண்ணிக் கொள்கிறார். இதைப் பின்வரும் ஹதீஃத் தெளிவுபடுத்துகிறது.
அதாவது : “மன்தt அல்லக்க ஷை அன்வுகில இலைஹி” ஒருவர் தமது உடலில் யாதேனும் ஒன்றைக் கட்டிக் கொள்வாராயின் அவர் நம்பிக்கை அதன் பக்கமே திரும்பிவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அறி. அப்துல்லா ஹிப்னு உகைம்(ரழி), நூல் : திர்மிதி.
ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செய்கையும் தன்னிச்சையாக இல்லாமல் ஹதீஃதை முன் வைத்து அதன் வரம்புக்கு உட்பட்டு நடந்து கொள்வோமாக.