நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்….
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
(1) ‘ஜஹன்னம்’ (2) ‘லனா’ (3) ‘அல்ஹுத்தமா’ (4) ‘அஸ்ஸஈர்’ (5) ‘ஸகர்’ (6) ஜுரைஜ்(ரஹ்) தஃப்சீர் தபரீ, தப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் : 4:1032,1033) என்றெல்லாம் பல பெயர்களைக் கொண்டு அழைக்கக்கூடியதும், ஒதுங்கும் இடங்களிலேயே மிக மிகக் கெட்ட இருப்பிடமானது (2:126,206, 3:12,151, 162,197, 4:97,115, 8:16, 9:73, 11:98, 13:18, 14:29, 16:29, 18:29, 19:75, 22:72, 24:57, 25:34, 38:55,56,60, 39:72, 40:76, 57:15, 58:8, 64:10, 66:9, 67:6) என்றும் பல வசனங்களில் ஏக இறைவனே குறிப்பிட்டுக் கூறக்கூடிய “நாரன்” ‘நரகம்’ என்றாலே அது நெருப்பாகும்.
ஆயிரம் ஆண்டுகள் நரகத்திற்கு நெருப்பு மூட்டப்பட்டு அது எரிக்கப்பட்டது. அதனால் நரகம் சிவப்பு நிறமாக ஆனது. பின்னர் மேலும் ஆயிரம் ஆண்டுகள் நெருப்பு மூட்டப்பட்டு அது எரிக்கப்பட்டது. அதனால் அந்த நரகம் வெள்ளை நிறமாக ஆனது. பின்னர் மேலும் ஆயிரம் ஆண்டுகள் நெருப்பு மூட்டப்பட்டு அது எரிக்கப்பட்டது. அதனால் அந்த நரகம் காரிருள் போல் நிறம் மாறிக் கருத்த நிறமாக ஆனது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதி, 2717, 2718 & 76:4 இப்னுமாஜா, தஃப்சீர் இப்னு மர்தவைஹி, இப்னு கஸீர் 4:355) ஆக மூவாயிரம் ஆண்டுகள் அல்லாஹ்வினால் மிகக் கடுமையாக எரிக்கப்பட்டது.
கொழுந்துவிட்டெரியும் அந்த நரக நெருப்பின் வீரியமும் வேகமும் தணியும் போதும் அடங்கும்போதும், அணையும் போதுமெல்லாம் உடனே அதன் தீப்பிழம்பை, தீக்கங்கை, தீச்சுவாலையை, நாம் மேலும் அதிகமாக்குவோம். (17:97, 81:12, 44:47, 4:55) என்பதாக எல்லாம் வல்ல அல்லாஹ் சொல்கின்றான். இப்னு அப்பாஸ்(ரழி), முஜாஹித்(ரஹ்) தஃப்சீர் இப்னு கஸீர் 5:349 – 351) அன்றைய நாளில் அதற்கு,
மேலும் அது கொழுந்துவிட்டு வீரியத்துடன் எரிவதற்கான துணைச்சாதனம் எனும் எரிபொருள் மனிதர்களும், கற்களும், உலக நெருப்பைக் கொழுந்துவிட்டு எரிப்பதற்கான துணைச் சாதனங்களாகவுள்ள விறகு, உமி வைக்கோல், சமையல் எரி வாயு, பெற்றோல், டீசல், மண்ணெண்ணை போன்றவைகளைப் போன்று நரக நெருப்பு மேலும் சுடர் விட்டுப் பிரகாசமாக எரிவதற்கான துணைச்சாதனமான எரிபொருள் மனிதர்களும், “கற்களுமாகும்” என்று பரிசுத்த அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.
மனிர்களும், “கற்களும்” எரிபொருளாக உள்ள நரக நெருப்புக்கு நீங்கள் அஞ்சுங்கள்! (2:24) என்றும்,
(ஏக இறைவனை) நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய பொருட் செல்வங்களோ மக்கட் செல்வங்களோ அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து எதையும் நிச்சயமாகத் தடுக்கமாட்டாது இன்னும் அவர்கள்தான் நரக நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர். (3:10) என்றும்,
இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் “கற்களுமாகும்” (6:6) என்றும்,
நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கி வழிபடுகின்ற (கற்களினாலான” சிலைகளான) வைகளும் நரகத்தின் எரிபொருளான விறகுக் கட்டைகள் ஆவீர்கள். (21:98) என்றும்,
“அக்கிரமக்காரர்களோ நரக நெருப்பின் எரிபொருளான விறகுகளாக ஆகிவிட்டனர். (72:15) என்றெல்லாம் ஏக இறைவன் மனிதர்களையும் “கற்களையும்” நரகின் எரிபொருட்களாக குறிப்பிடுகின்றான். இங்கே “கற்கள்” என்பது தொடர்பாகக் கருத்துக் கூறுகையில் “பிணத்தை விட அதிக துர்நாற்றமுள்ளதும், இறுகிய கரிய நிறமுடையதும், எரிக்கப்படும்போது தீப்பிழம்பின் கொடூரத் தன்மையையும். கனவின் கடுமையான வெப்பத்தையும் கக்கக்கூடியதும், நரக நெருப்பைச் சிவக்க வைத்து, அதன் ஜுவாலையை மேலும் அதிகப்படுத்துவதற்காக, எரிக்கப் பயன்படும். நரகத்தில் கிடக்கும், கறுப்பு நிறக் கந்தகக் கல்தான் அது. நரக நெருப்போடு சேர்ந்து இந்தக் கொடிய கல்லாலும் நரகவாசிகள் மேலும் வேதனை செய்யப்படுவார்கள் என்பதாக இப்னு மஸ்ஊத்(ரழி) கத்தீ(ரஹ்) முஜாஹித்(ரஹ்) குர்துபி(ரஹ்) ராஸி(ரஹ்) ஆகியோர் கூறியுள்ளனர். அதற்ாகன ஆதாரமாக 27:97, 21:98 போன்ற வசனங்களைக் காட்டுகின்றனர். (தஃப்சீர் இப்னு கஸீர் : 1:118-129)
ஏக இறைவனை மறுத்தவர்களான நரக நெருப்பின் எரிபொருட்களான அவர்களை நூறாண்டு காலப் பயணத் தொலைவான மஃஷர் பெருவெளியில் காணும்போதே அந்த நரக நெருப்பானது அதன் கொதிப்பையும் கொந்தளிப்பையும் உறுமலையும் பேரீரைச்சலையும் ஏற்படுத்தும் அவர்கள் மீது கொண்ட கடும் கோபத்தினாலும் சினத்தின் காரணத்தாலும் அவை வெடித்துச் சிதறிவிட முனையும். அதனால் ஏற்படும் அதி பயங்கரமான கொதிப்பையும் பேரீரைச்சலையும் நரகவாசிகளான அவர்கள் தூரத்திலிருந்தே செவியுறுவார்கள். (25:12, 67:7,8, சுத்தீ(ரஹ்) தஃப்சீர் இப்னு கஸீர் : 6:448-453)
இன்னும் எவர்கள் தங்களது இறைவனை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு. அது மிகக் கெட்ட மீளுமிடமாகும். அதில் அவர்கள் போடப்படுவார்களாயின் அதில் கொதிக்கும் உலை (போன்ற கழுதையின் பெருங் குரலைப் போன்று) அருவருப்பான பெரும் சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள். (67:7,8)
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். ஒரு மனிதர் நரகத்திற்கு இழுத்து வரப்படுவார் அவரை நோக்கி நரக நெருப்பு பசுமையான கோதுமைப் பயரை நோக்கிப் பசியுள்ள கோவேறு கழுதை வேகமாகப் பாய்வதைப் போன்று பொருமிக் கொண்டே பாயும். அப்போது நரகம் வெளியிடும் பெருமூச்சின் ஓசையைக் கேட்கும் யாரும் பயப்படாமல் இருக்க மாட்டார்கள். (தஃப்சீர் தபரீ, இப்னு கஸீர் : 6:453,454)
“அதன் கொதிப்பையும் பேரீரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள்” 25:12 எனும் தொடருக்கு விளக்கமளிக்கையில் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நரகம் ஒரு நீண்ட பெருமூச்சுவிடும். அப்போது அனைத்து வானவர்களும் இறைத்தூதர்களும் முகம் குப்புற வீழ்வார்கள். அவர்களின் மார்புத் தசைகள் துடிக்கும் அப்போது இப்ராஹீம்(அலை) அவர்கள் முழந்தாலிட்டவர்களாக இறைவா! இன்று எனக்காகத் தவிர வேறு யாருக்காகவும் உன்னிடம் நான் உதவிகோரமாட்டேன் என்று கூறுவார்கள். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் : 6:454) இதனையே நரகத்தில் அல்லாஹ்விடமுள்ள தண்டனையை ஒரு இறை நம்பிக்கையாளர் அறிந்தால் அவர் அல்லாஹ்விடமுள்ள சொர்க்கத்தை ஆசைப்படமாட்டார். அந்த நரகத் தண்டனையிலிருந்து தப்பினாலே போதும் என்றே எண்ணுவார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம் : 2755, ரி.ஸா.443)
அபூவாயில்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களுடன் சென்றுகொண்டிருந்தோம். எங்களுடன் ரபீஉ பின் சைஸம்(ரஹ்) அவர்களும் இருந்தார்கள். கொல்லன் பட்டறை ஒன்றைக் கடந்து சென்றபோது இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் அந்த நெருப்பில் சுடப்பட்ட பழுத்த இரும்பு ஒன்றைக் கவனித்தவாறு நின்றார்கள் ரபிஉ(ரஹ்) அவர்களும், அதனைக் கவனித்தார்கள் அப்போது ரபீஉ(ரஹ்) அவர்கள் மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் யூப்ரடீஸ் நதிக்கரையில் எரிந்து கொண்டிருந்த ஓர் அடுப்பைக் கடந்து சென்றார்கள். அப்போது அதைக் கூர்ந்து பார்த்தார்கள். அதன் மத்தியில் சுவாலை விட்டு நெருப்பு எரிந்து கொண்டிருந்ததைக் கண்டபோது “நரகம் அவர்களைத் தொலைவான இடத்திலிருந்து காணும்போது அதன் கொதிப்பையும், இரைச்சலையும், அவர்கள் செவியுறுவார்கள்” (25:12) என்ற வசனத்தை ஓதினார்கள்.
அதனைக் கேட்ட ரபீஉ(ரஹ்) அவர்கள் மயங்கி விழுந்தார்கள். மக்கள் அவர்களை வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள். இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் அவரை விட்டுப் பிரியாமல் ளுஹர் வரை தங்கியிருந்தார்கள். அப்போதும் ரபீஉ(ரஹ்) அவர்களுக்கு மயக்கம் தெரியவில்லை. (தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் 6:452,453) மேலும்,
நரக நெருப்பு உலக நெருப்பைவிட அறுபத்தொன்பது மடங்கு அதிக வீரியமுடையது :
உங்களின் உலக நெருப்பானது நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நபித் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே இந்த உலக நெருப்பே பாவிகளை எரித்து வேதனைப்படுத்திவிடப் போதுமானதாயிற்றே? என்று கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் அப்படியல்ல உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பதுரு மடங்கு அதிகமாக வீரியம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும் என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 3265, முஸ்லிம்: 5465, திர்மிதி: 2715-2717, முஸ்னத் அஹ்மத், முவத்தா மாலிக்)
அதனையே நரக நெருப்பு இந்த உலக நெருப்பை விட அதிக வெப்பமானது என்று அல்குர்ஆன் கூறுகின்றது (9:81) ஆக உலகத்திலுள்ள மொத்த நெருப்பும் நரக நெருப்பின் எழுபது பங்கில் ஒரு பங்குதான்ட இன்னும், இந்த ஒரு பங்கு கூட நேரடியாக நமக்குக் கொடுக்கப்படவில்லை. அதனைக் கடனில் இரண்டு முறை மூழ்கடிக்கப்பட்டு அதனுடைய சக்தியைக் குறைத்தே உலகிற்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஹதீஃத் இவ்வாறு சொல்கிறது.
உங்களுடைய இந்த நெருப்பு நகர நெருப்பின் எழுபதில் ஒரு பகுதியாகும். அது இரண்டு முறை ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டு எடுத்து அடிக்கப்பட்டது. அப்படிச் செய்யப்படவில்லையானால், இந்த நெருப்பின் மூலம் ஒருவருக்கும் பயன் இல்லாது அல்லாஹ் ஆக்கியிருப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) அஹ்மத்) ஆனாலும் இந்த உலக நெருப்பினாலும் உயிரினங்களை எரிக்க நமக்குத் தடை உள்ளது.
எங்களை ஒரு குழுவில் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அப்போது குறைஷிகளைச் சேர்ந்த ஹபார், மற்றும் நாஃபிஉ ஆகிய இன்னாரையும், இன்னாரையும் நீங்கள் கண்டால் அவர்கள் இருவரையும் நெருப்பால் எரித்து விடுங்கள் என்று உத்தவிட்டார்கள். பிறகு நாங்கள் புறப்படத் தயாரானபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இன்னாரையும் இன்னாரையும் எரித்து விடுங்கள் என்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் நெருப்பினால் உயிர்களை வேதனை செய்யக்கூடாது என்று தடையுள்ளது. ஆகவே அவ்விருவரையும் நீங்கள் கண்டால் அவர்களை வேறுவிதமாகக் கொன்றுவிடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி : 2954,3016,3017,3019,3021,2326,4031,4032,4884,6972) மேலும்,
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு பயணத்தின்போது ஒரு மரத்தின் கீழே தங்கினார். அப்போது அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் அந்த மரத்திற்குக் கீழேயிருந்த தமது மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார். அவ்வாறே அவை அப்புறப்படுத்தப்பட்டதும் அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. இதனைக் கண்ட அல்லாஹ். ஓர் எறும்பு உங்களைக் கடித்து விட்ட காரணத்திற்காக ஓர் எறும்புக் கூட்டத்தையே நெருப்பிலிட்டு எரித்துவிட்டீர்களே! என்று அவரைக் கண்டிக்கும் விதத்தில் அவருக்கு வஹீ அறிவித்தான். (அபூஹுரைரா(ரழி), புகாரி, 3019,3319, முஸ்லிம் : 4511, 4512,4513)
நரகம் மற்றதொரு நரகத்தையே தின்னுகின்ற பயங்கரம் :
நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் தின்று தகர்த்துக் கொண்டிருந்ததை நான் கண்டேன் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா(ரழி), புகாரி: 4624)
நரகமே மற்றதொரு நரக ஓடையிலிருந்தும் தப்பிக்க வேண்டி ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் நானூறு தடவைகள் பாதுகாப்புக் கோருகின்ற கொடூரம்.
‘ஜுப்புல் ஹுஸ்ன்” என்பதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே “ஜுப்புல் ஹுஸ்ன்” என்றால் என்ன? என்று தோழர்கள் கேட்டார்கள் அது நரகத்தின் ஒரு ஓடையாகும். நரகம் ஒவ்வொரு நாளும் “நாநூறு” தடவைகள் அந்த ஓடையை விட்டும் பாதுகாப்புத்தேடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதீ, இப்னு மாஜா, மிஸ்காத்துல் மஸாஃபீஹ்:275)
அந்த நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும். (இன்ஷா அல்லாஹ்)