ஐயம் : “மார்க்கத்தை மறைப்பவர்களை சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்” என்று குர்ஆன் கூறுகிறதே. அவ்வாறு சபிப்பவர்கள் யார்? ஆதாரத்துடன் தெரிவிக்கவும். தாவூது இப்ராஹீம், மதுரை.
தெளிவு : குர்ஆன் கூறும் அந்த வசனத்தை முதலில் காண்போம்.
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும், அதன் நாம் நெறிநூலில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும், யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான், சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்”. அல்குர்ஆன் : 2:159
சபிப்பவர்கள் யார் என்பது தங்களுக்கேற்பட்டுள்ள ஐயம்.
தமது குடும்பத்திலுள்ள தாய். தந்தை, மனைவி, மக்கள், சகோதர, சகோதரிகள் மீது ஒருவர் நேசம் கொள்வது இயல்பு அப்படி நேசம் கொண்டுள்ளவர்கள் மீது இல்லாத அவதூறுகளைக் கூறி ஒருவன் வசைபாடினால், அவனை அவர் வாழ்த்துவாவா? சபிப்பாரா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
அதேபோல, குர்ஆனிலும், ஹதீஃதும் போதிப்பதை மறைத்து குர்ஆன், ஹதீஃதில் இல்லாத மத்ஹபுகள்தான் இஸ்லாம் எனக் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரபி மதரஸாக்களின் ஆசிரியர்களையும், பள்ளி இமாம்களையும் குர்ஆன், ஹதீதை நேசிக்கும் மக்கள் வாழ்த்துவார்களா? அல்லது சபிப்பார்களா? சபிக்கத்தானே செய்வார்கள். எந்த அளவுக்கு சபிப்பார்கள்? குர்ஆனும், ஹதீஃதும் மக்களை சென்றடையாமலிருக்க எந்த அளவுக்கு தடுக்கின்றனரோ, அந்த அளவுக்கு சபிப்பார்கள். மக்கள் மட்டுமா சபிப்பார்கள்? குர்ஆன், ஹதீஃதை நேசிக்கும் மலக்குகளும் சபிப்பார்கள்.
“அவர்கள் சாபத்திற்குரியவர்கள்” என்ற தனது விருப்பத்தை அல்லாஹு(ஜல்) மேலே காட்டியுள்ள 2:159 இறைவசனத்தில் தெரிவித்துள்ளதால், குர்ஆன், ஹதீதை நேசிக்கும் மலக்குகளும், மனிதர்களும் அவர்களை சபிக்கத்தான் வேண்டும். சபிக்காமல் விட்டுவிடக்கூடாது.
அவர்களின் கூற்றை நம்பி ஏமாந்து போய் அவர்களை இவ்வுலகில் பின்பற்றுவார்கள். மறுமையில் நரக நெருப்பிலிடப்படும் போது தான் தமது தவறை உணர்ந்து, நாம் பின்பற்றியவர்களை சபிப்பார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் தெளிவுபடுத்தியிருப்பதைப் பாருங்கள்.
“நெருப்பில் அவர்களடைய மூலங்கள் புரட்டப்படும் அந்நாளில், ஆ கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே, இத்தூதருக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே” என்று கதறுவார்கள். அல்குர்ஆன் : 33:66
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். அல்குர்ஆன் : 33:67
“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக, அவர்களைப் பெரும் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக”. (என்றும் சபிப்பார்கள்) குர்ஆன் : 33:68
எனவே மலக்குகளும், மக்களுமே சபிப்பவர்கள் என்பது தெளிவாகிறதல்லவா? இக்கருத்து எமது சுயசிந்தனையின் வெளிப்பாடல்ல, அல்லாஹ்வே இதனை வெளிப்படுத்தியிருக்கிறான். தாங்கள் மேற்கோள்காட்டிய 2:159 வசனத்தின் கீழுள்ள ஒரு வசனத்தில் இதனை அல்லாஹ்வே வெளிப்படுத்திறிருப்பதைப் பாருங்கள்.
“யார் (இந்நெறிநூல் உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் நிராகரிப்பவர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள்மீது அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்களுடையவும் சாபம் உண்டாகும்”. (அல்குர்ஆன் : 2:161)
மத்ஹபுகளையும், தக்லீது – கண்மூடி பின்பற்றலையும் ஆதரிக்கும் மவ்லவழி புரோகிதர்கள். இறைவன் 2:159ல் ”நேர்வழியை மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் யார் மறைக்கிறார்களோ” என்று கூறியுள்ளபடி எப்படி நேர்வழியை மறைக்கிறார்கள் என்பதற்கு இந்த 33:66-68 இறைவாக்குகளே போதிய சான்றாக இருக்கின்றன. நரகில் கிடந்து வெந்துகொண்டு வேதனை தாங்க இயலாமல் கதறுகிறவர்கள். “நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டும். அவனது தூதருக்கு வழிபட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக எங்கள் தலைவர்களுக்கும் (சாதாத்துகள்), பெரியவர்களுக்கும் (அகாபிரீன்) வழிப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து நரகில் தள்ளிவிட்டார்கள். எனவே அவர்களுக்கு இருமடங்கு வேதனையைக் கொடு, பெரும் சாபத்தைக் கொண்டு சபீ” என்று சபிப்பதாக நேரடியாக தெளிவாகவே கூறியிருக்கிறான் அல்லாஹ்.
எடுத்து நடப்பதற்கு – வழிபடுவதள்கு இறைநெறிநூல் அல்குர்ஆன், நபி போதனை, ஹதீஃத் இரண்டைத் தவிர வேறு மூன்றாவது ஒன்றில்லை என்று குன்றிலிட்ட தீபம் போல் விளக்குகின்றன இந்த இறைவாக்குகள்.
இப்போது இந்த வசனங்களை முகல்லிது மவ்லவிகள் எப்படி மறைக்கிறார்கள் என்று பாருங்கள்.
“இந்த வசனங்கள், காஃபிர்களுக்காக இறங்கியவை. முஸ்லிம்களுக்குரியவை அல்ல” என்று கூறி அப்பாவி மக்களிடமிருந்து அல்லாஹ் விளக்கியதை மறைக்கிறார்கள்.
காஃபிர்கள் அல்லாஹ்வைப் பற்றியும் அவனது தூதரைப் பற்றியும் சொல்லியிருப்பார்களா? காஃபிர்களுடைய வழக்கத்தில் அவர்கள் பின்பற்றுகிறவர்களை ஸாதாத்துகள், அகாபிரீன்கள் என்று சொல்லி இருக்கிறார்களா? அப்படி காஃபிர்கள் ஸதாத்துகள் அகாபிரீன்கள் என்று இரண்டு பதங்களை பயன்படுத்தியுள்ள ஒரு வசனமாவது அல்குர்ஆனில் உள்ளதா? என்றெல்லாம் அவர்கள் சிந்திப்பதில்லை. மேலும் அவர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும், அல்லாஹ் காஃபிர்களை அவர்களின் சாதாத்துக்களையும், அகாபிரீன்களையும் பின்பற்றுவதைத் தடுத்துள்ள நிலையில், முஸ்லிம்கள் மட்டும் ஸதாத்துகளையும் அகாபிரின்களையும் தக்லீது – கண்மூடி பின்பற்ற முடியுமா? என்றும் சிந்திப்பதில்லை.
எனவே அல்லாஹ் மனிதர்களுக்காக விளக்கியதை மறைத்து. இறைவனது, மலக்குகளது, மனிதர்களது சாபத்தைப் பெறுகிறார்கள்.
தவ்ஹீது மவ்லவிகளும், இந்த 2:159 இறைவாக்குப்படி அல்லாஹ் மனிதர்களுக்காக அல்குர்ஆன் வசனங்களை நேரடியாக, தெளிவாக விளக்கிய பின்னரும், மேலும் விளக்கம் கூறும் பேர்வழிகள் என்று புதிதாகக் கிளம்பி தங்கள் சுய கற்பனைகளையும், யூகங்களையும் கூறி, இன உணர்வுக்கு அடிமையாகும் துடிப்புள்ள இளைஞர்களை வழிகெடுத்து நரகில் தள்ளுவதால், அவர்களும் இறைவனது, மலக்குகளது, மனிதர்களது மகத்தான சாபத்திற்குரியவர்களே.
(அடுத்துள்ள வினாவிற்கு தரப்பட்ட ஹதீஃதின் இறுதி வாசகங்களையும் பார்வையிடுங்கள்)
ஐயம் : “மற்றவர்களுக்குத் தெரியாமல் முஃமின்களை திரைமறைவில் வைத்துக்கொண்டு அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்” என்று சொல்கிறார்களே அது உண்மையா? அப்படியானால் அதை விளக்கமாகத் தெரிவிக்கவும். முஹம்மது யாகூப், நாகை.
தெளிவு : தாங்கள் கேட்டிருப்பது உண்மையே! விளக்கத்தைக் கீழ்க்காணும் ஹதீஃதில் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு மனிதர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்களுடன் கஃபாவை தவாஃப் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த மனிதர் அவர்களை இடைமறித்து, “உமருடைய மகனே! அல்லாஹ் தன் அடியார்களுடன் நடத்தும் ரகசியமான பேச்சு பற்றி நீங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேள்விப்பட்டது என்ன? என்ற கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள், “கியாமத் நாளில் முஃமின் தனது இறைவனுக்கு அருகில் கொண்டு வரப்படுவார். மற்றவர்கள் பார்க்க முடியாதவாதவாறு, திரை ஒன்றை இறைவன் அவருக்காக ஏற்படுத்துவான். பின்பு அவர் செய்த பாவங்கள் ஒவ்வொன்றையும் ஒப்புக்கொள்ளச் செய்வான். “”(இன்னின்ன பாவங்களை செய்தாயே?)” உனக்குத் தெரியுமா? என்று இறைவன் கேட்பான். (எனது ரப்பே) நான் அறிவேன் என்று அவன் கூறுவான். இப்படியாக, கேட்க வேண்டியதை (பாவங்களை) எல்லாம் இறைவன் கேட்பான். இறுதியில் “உலக வாழ்வில் இந்த பாவங்களை நீ செய்தபோது, மற்வர்களுக்கு (வெளிப்படுத்தாது அவற்றை) மறைத்தேன். இன்று அவற்றை நான் மன்னித்தும் விட்டேன் என்று இறைவன் கூறுவான். பின்பு அவரது நன்மை ஏடு வலது கையில் வழங்கப்படும்.
இறை மறுப்பாளனாக, இரட்டை வேடம் போட்டவனாக இருந்தால், மக்கள் மத்தியில் வைத்து இவர்கள்தான் தங்கள் இறைவனின் பெயரால் பொய் கூறியவர்கள். இந்த அக்கிரமக்காரர்கள் மீது இறைவனின் லஃனத்(சாபம்) ஏற்படட்டும் (என்ற 11:18 இறை வசனத்தை) என்று பிரகடனப்படுத்துவார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தெரிவித்தார்கள். அறி. இப்னு உமர்(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம், இப்னு மாஜா.