சாட்சியாளர்கள்

in 2021 பிப்ரவரி

சாட்சியாளர்கள் ….

அப்துல்லாஹ் இப்னு அருணாச்சலம், திருச்சி.

நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் சாட்சியாளர்களே….

இந்த பூமியிலே மனித உருவம் பெற்று வருவதற்கு முன்னரே நாம், சாட்சியம் அளித்திருக்கிறோம். (இறைநூல் : 7:172)

மேலும் கலிமாவை (ஷஹாதத்) மொழிந்து இஸ்லாத்தை தன் வாழ்வியலாக மாற்றிக்கொள்ளும் ஒவ்வொருவரும் சாட்சி கூறியவர்களெ…

முஸ்லிம்களாகிய அனைவரும் தினந்தோறும் சாட்சி சொல்லக்கூடியவர்களாகவும், சொல்லக்கூடியவர்களுக்கு சாட்சிகளாகவும் இருக்கிறோம்.

நம்மைச் சுற்றி இருப்பவைகளுக்கு நாமும். நமக்கு அவைகளும் சாட்சிகளாக இருக்கின்றன.

இறைநெறிநூலில் தூதர்கள் சமூகத்திற்கு சாட்சியாகவும் அவருக்கு அவரது சமூகத்தினர் சாட்சிகளாக இருப்பதாகவும், இறை நம்பிக்கையாளர்களுக்கு மறுப்பாளர்களை நோக்கி எங்களுக்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள் எனக் கூறுமாறும் வசனங்கள் (2:143, 3:52,53,64, 4:41,135, 5:8, 7:172, 22:78, 33:65) இடம் பெறுவதிலிருந்து ஒவ்வொரு மனிதனும் சாட்சியாளனே என்பது தெளிவாகிறது.

மேலும் இந்த சாட்சிகள் அனைத்தும் விசாரணைக்குக் கொண்டுவரப்படும் என்றும் படைத்தவனே கூறுகிறான். (இறைநூல் : 39:69)

நம்மில் பெரும்பாலான மனிதர்கள் பிறரைப் பற்றி சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் சாட்சியளிக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.

நாம் எப்படிப்பட்ட சாட்சியாளர்களாக இருக்கிறோம் என்பதற்கு பின்வரும் நபிமொழியை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒருமுறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப்  பற்றிப் புகழந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், உறுதியாகிவிட்டது என்றார்கள். மற்றொரு முறை வேறொரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் “உறுதியாகிவிட்டது” எனக் கூறினார்கள். உமர்(ரழி) “எது உறுதியாகிவிட்டது” எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், “இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. இது சமுதாயத்தின் சாட்சியமாகும். ஆக நீங்களே (இறை நம்பிக்கையாளர்களே1) பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்” எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர் அனஸ்(ரழி), புகாரி : 1367, 2642)

அபுல் அஸ்வத் அறிவிக்கும் நபிமொழி, நான் மதீனாவில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது, மதீனாவுக்கு வந்து உமர்(ரழி) உடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. மக்கள் இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது உமர்(ரழி) அவர்கள், “உறுதியாகிவிட்டது” என்றார். பிறகு இன்னொரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போதும் மக்கள் அவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். உடனே உமர்(ரழி) அவர்கள், “உறுதியாகிவிட்டது” என்றார். பிறகு மூன்றாவது ஜனாஸா கடந்து சென்றது. மக்கள் அவரின் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் உமர்(ரழி) அவர்கள் “உறுதியாகிவிட்டது” எனக் கூறினார். நான் இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே, “எது உறுதியாகிவிட்டது?” எனக் கேட்டதும் அவர் “எந்த முஸ்லிமுக்காவது அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சி கூறினார், அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் மூவர் சாட்சியாயிருந்தால் என்று கேட்டோம். அதற்கவர்கள் மூன்று பேர் சாட்சி கூறினாலும் தான் என்றார். மீண்டும் இருவர் சாட்சியாக இருந்தால் என நாங்கள் கேட்டதற்கு இரண்டு பேர் சாட்சி கூறினாலும் தான் என்றார்கள். பிறகு நாங்கள் ஒரு நபர் பற்றிக் கேட்கவில்லை. எனவே நபி(ஸல்) அவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே நான் இவ்வாறு கூறினேன்” என உமர்(ரழி) கூறினார். (புகாரி: 1368)

நம்மில் நமக்கு நெருக்கமானவர்கள் மரணித்து பிறகு அவர்களுக்கு நாம் எப்படிப்பட்ட சாட்சிகளாக இருந்திருக்கிறோம் என்பதையும், நமக்கு பிறகு நமது செயல்களால் பிறர் நம்மீது எப்படிப்பட்ட சாட்சியம் அளிப்பார்கள் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

பெற்றோர் பிள்ளைகளைப் பற்றியும், பிள்ளைகள் பெற்றவர்களைப் பற்றியும், கணவன் மனைவியைப் பற்றியும், மனைவி கணவனைப் பற்றியும், அதிகாரத்திலுள்ளவர்கள் அவர்கள் கீழுள்ளவர்கள் பற்றியும், அவர்கள் தங்கள் மேலுள்ளவர்கள் பற்றியும், நமக்கு நெருக்கமானவர்கள் நம்மைப் பற்றியும், நாம் அவர்களைப் பற்றியும் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறோம்?

நமக்கு நெருக்கமானவர்கள் மீது நாம் கோபமோ, வெறுப்போ கொண்ட நிலையில் அவர்கள் மரணித்தால், அவர்களுக்கு நாம் எப்படி சாட்சியளிப்போம்? நிச்சயமாக நாமும் ஒருநாள் மரணித்துவிடுவோம். அந்நேரத்தில் நம்மைப் பற்றி சாட்சி கூறுவோர் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நமக்கு நெருக்கமானவர்கள் நரகத்தில் நுழைவதற்கு நாம் காரணமாக இருக்கவேண்டுமா? நமது அண்டையிலுள்ளவர்கள் இறைவனைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் அறிவிக்கப்படாமல் மரணித்தால், நாளை மறுமையில் இறைவன் நம்மை சாட்சியாக நிர்ணயித்தால் நமது நிலை என்ன?

நபிகள் நாயகம்(ஸல்) எங்கள் முன்மாதிரி என்று கூறிக்கொண்டே, அவர் தடுத்த பேச்சுக்களையும் செயல்களையும் செய்து கொண்டே வாழ்ந்து மரணிக்கும் பெரும்பாலான முஸ்லிம்களின் சாட்சிகளின் நிலை என்ன?

சிந்தித்துப் பார்ப்போம்…. சீர்திருத்திக் கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.

அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள். மேலும், அவர்கள் வீணான காரியத்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவர்களாக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள். (இறைநூல் : 25:72)

Previous post:

Next post: