நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்….
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
ஜனவரி மாத தொடர்ச்சி …
நரகத்தில் கொடிய விஷமுள்ள பாம்புகள் :
நரகத்தில் கடுமையான விஷமுள்ள மிகப் பெரிய பாம்பகள், தேள்கள் இருக்கும். அது ஒருமுறை கொட்டினால் நாற்பது வருடங்கள் வரை அதனுடைய வேதனை இருக்கும். மேலும் நரகத்தில் “புக்த்” என்ற உயர் ரகமான பெரிய ஒட்டகத்தின் அளவு பாம்புகள் இருக்கும். அவற்றில் ஒன்று தீண்டினால் அதனுடைய கடுமையான வேதனை நாற்பது ஆண்டுகள் வரை இருக்கம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் இப்னு ஹாரிஸ்(ரழி), முஸ்னத் அஹ்மத்)
நரகம் கண்ணெதிரே கொண்டுவரப்படும் :
அன்று பார்ப்பவர்களுக்குக் காணும் வகையில் நரகம் அவர்களுக்குச் சமீபமாகக் கொண்டு வரப்படும் (79:36), அந்நாளில் நரகம் அவர்கள் முன்பு சமீபமாகக் கொண்டுவரப்படும். (89:23), வழிதவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டுவரப்படும். (26:91) மேலும்,
எழுபதினாயிரம் கடிவாளங்கள் போடப்பட்டு ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதினாயிரம் வானவர்கள் பிடித்து இழுத்து வர அன்றைய தினம் நரகம் கொண்டு வரப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரழி) திர்மிதி: 2696,2698,2699) அதாவது நரகம் வெளியே கொண்டுவரப்பட்டுத் திறந்து காட்டப்படும்ட. அதிலிருந்து ஒரு கழுத்து நீளும் அது பெருமூச்சு விடும். அதன் காரணமாக இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்துக் கொள்ளும் நரகவாசிகளைக் கண்டித்து நகைக்கும் விதமாக அவர்களிடம்ட “அல்லாஹ்வையன்றி நீங்கள் வழிபட்டு வந்தவைகள் எங்கே? அவர்கள் இன்று உங்களுக்கு உதவுவார்களா? அல்லது தமக்குத்தாமே உதவத்தான் அவர்களால் முடியுமா? என்றும் கேட்கும்” இதனையே (அல்குர்ஆன் : 26:92,93)ஆவது வசனங்கள் குறிப்பிடுகின்றன. (தஃப்சீர் இப்னு கஸீர் : 6:574-578) மற்றுமோர் அறிவிப்பில்.
பார்க்கும் இரண்டு கண்களும், கேட்கும் இரண்டு காதுகளும், பேசும் நாவும் கொண்ட தீப்பிழம்பு ஒன்று, மறுமை நாளில் நரகத்திலிருந்து வெளிப்படும். அது படைப்பினங்களைப் பார்த்துத் தெளிவாக இவ்வாறு பேசும். பிடிவாத குணமுள்ள, அக்கிரமம் புரியும் ஆணவக்காரர்கள், அல்லாஹ்வுடன் வேறு கடவுளர்களைப் பிரார்த்தித்தவர்கள், உருவம் வரைந்தோர், ஆகிய மூன்று கூட்டத்தார் மீது நான் சாட்டப்பட்டுள்ளேன் என்று அது கூறும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹுரைரா(ரழி), திர்மிதி : 2700, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 4:946) அன்று,
நிச்சயமாக நரகமாகிய அது பெரிய மாளிகைகளைப் போன்ற (பிரமாண்டமான) நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டிருக்கும் (அல்குர்ஆன்: 77:32) நிராகரித்தவர்களுக்குச் சங்கிலிகளையும் அரிகண்டங்களையும் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன் : 76:4)
நரகம் விடும் பெருமூச்சி :
நரகம் தனது இறைவனிடம் எனது இறைவா என்னுடைய ஒரு பகுதிய மறு ஒரு பகுதியைத் தின்கிறதே என்று முறையிட்டது. ஆகவே அல்லாஹ் அதற்குச் சிறிது ஓய்வு தரும் வகையில் ஒரு மூச்சி குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சி கோடை காலத்திலுமாக இரு மூச்சுக்கள் விட்டுக் கொள்ள அனுமதிழயளித்தான். அவைதாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர்காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி : 537, 3258-3260, 4624, திர்மிதி : 2719) மேலும்,
“காய்ச்சல்” நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது :
“காய்ச்சல்” நரகத்தின் கடுமையான வெப்பத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. ஆகவே அதனைத் தண்ணீரினால் தணித்துக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி)இப்னு உமர்(ரழி), ராஃபிஉ பின் கதீஜ்(ரழி). ஆயிஷா(ரழி), புகாரி : 3261-3264, 5723-5726, முஸ்லிம் : 2210)
இறுதியான மரண வேளையில் நபி(ஸல்) அவர்களுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. காய்ச்சலினால் சூடு அதிகரித்து உடல் நெருப்பாய்க் கொதித்தது தலைக்கு மேல் கட்டியிருந்த துணிக்கு மேல் புறத்திலும் காய்ச்சலின் அனலை உடனிருந்தவர்களும் உணர்ந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் பல கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து வாய்ப்பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் துருத்திகளில் நிரப்பிய தண்ணீரை என்மீது ஊற்றுங்கள் அதனால் ஏற்படும் குளிர்ச்சியால் நான் மக்களுக்கு உபதேசம் செய்யக்கூடும் என்று கூறினார்கள். எனவே ஹப்ஸா(ரழி), அவர்களுக்குச் சொந்தமான பெரியதொரு பாத்திரத்தின்ட மீது நபியவர்களை அமரவைத்து அவர்கள் சொன்னது போலவே முழுமையான ஏழு தோல் பைகளிலிருந்து தண்ணீர் அவர்கள் மீது ஊற்றப்பட்டது. (ஆயிஷா(ரழி), புகாரி: 198, 665,667,2588,3099,4442,5714, ரஹீக் அல்மக்தும் : 566-568)
நரகத்தின் ஆழம் :
நரகம் ஏழு அடுக்குகளைக் கொண்டதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கும் ஒன்றைவிட ஒன்று மிகக்கடுமையான வேதனையும் கடுமையும் அதிகம் உள்ளதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கிலும்ட அவரவர் செயல்களைப் பொறுத்து அதற்குத் தகுதியானவர்கள் அதில் போடப்படுவார்கள். அதில் ஏழாவது அடித்தட்டு மிக மிகக் கடுமையான வேதனை கொண்டதாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக இவை ஏழு வாயில்களும் மனிதர்களின் வினைகளுக்கு ஏற்ப தங்குமிடங்களைக் குறிப்பதாகும் என்று கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் : 4:1033)
அதற்கு ஏழு வாயில்கள் உள்ளன ஒவ்வொரு வாயிலுக்கும் ஒதுக்கப்பட்டு பிரிவினர் அவர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் : 15:44) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நரகத்திற்கு ஏழு வாயில்கள் உள்ளன. அவற்றில் ஒரு வாயில் எனது சமுதாயத்தாருக்கு அல்லது முஹம்மதின் சமுதாயத்தாருக்கு எதிராக வாளை உருவியவருக்கு உரியதாகும். (இப்னு உமர்(ரழி), திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)
நரகத்தின் வாயில்கள் இப்படி ஒன்றன் மீது ஒன்றாக அமைந்த ஏழு வாயில்கள் உள்ளன. முதலில் ஒன்றாவது அடுத்து மூன்றாவது என அனைத்து வாயில்களின் வழியாகவும் நரகம் நிரம்பிவிடும் என்று அலி(ரழி) அவர்கள் கூறினார்கள். (தஃப்சீர் தபரீ, இப்னு கஸீர்: 4:1032)
ஏழு வாயில்கள் என்பது ஏழு அடுக்குகள் ஆகும் என்று இக்ரிமா(ரஹ்) அவர்களும், நரகத்திற்கு ஏழு வாயில்கள் உள்ளன. அவற்றில் முதலாவதற்கு “ஜஹன்னம்” என்பது பெயர் அடுத்து “லளா” “அல்ஹுத்தமா” “அஸ்ஸஈர்” “ஸகர்” “அல்ஜஹீம்” “அல்ஹாவியா” ஆகியவைகளாகும் என்று இப்னு ஜுனைஜ்(ரஹ்) அவர்களும் கூறினார்கள். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபிஹாத்திம், இப்னு கஸீர் : 4:1032, 1033)
சிறிய பாத்திரம் போன்றதொன்றை நபி(ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டி இந்த அளவுள்ள ஒரு ஈயக்கட்டியை பூமியிலிருந்து ஐநூறு ஆண்டுகள் தொலைவிலுள்ள வானத்திலிருந்து போடப்பட்டால் இரவாகும் முன்பே அது கீழே வந்துவிடும். ஆனால் அதை நரகவாசிகளுக்குப் போடப்பட்டுள்ள விலங்குகளின் உச்சியிலிருந்து போடப்பட்டால், அதன் அடிப்பாகத்தை அந்த ஈயக்கட்டி சென்று அடைவதற்குள் நாற்பது ஆண்டுகள் ஓடிவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ருப்னுல் ஆஸ்(ரழி), திர்மிதி : 2714, அஹ்மத், பைஹகீ)
நரகத்தின் மேல் விளிம்பிலிருந்து பெரும் பாறாங்கல் ஒன்று உருட்டி விடப்படும். அது எழுபது ஆண்டுகளாக இறங்கிக் கொண்டே இருக்கும். ஆனாலும் அதன் அடியில் அது போய்ச்சேராது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (உத்பா இப்னு அஸ்வான்(ரழி), முஸ்லிம் : 2967, திர்மிதி : 2701, ரியாதுஸ்ஸாலிஹீன் : 498)
நபி(ஸல்) அவர்களுடைய சமூகத்தில் நாங்கள் இருந்தோம். அப்போது ஒரு பெரும் சப்தத்தைக் கேட்டோம். இது என்ன சப்தம் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக அறிந்தவர்கள் என்று நாங்கள் கூறினோம். எழுபது வருடங்களுக்கு முன்னர் நரகத்தில் எறியப்பட்ட ஒரு கல்தான் அது இப்போதுதான் அது நரகத்தின் அடிப்பாகத்தைப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அந்த சப்தத்தைத்தான் இப்போது நீங்கள் கேட்டீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம் : 2844, முஸ்னத் அஹ்மத், ரியாளுஸ்ஸாலிஹீன் : 404)
நரகத்தின் அடிமட்டத்திலிருந்து முளைத்து வரும் “ஸக்கூம்” எனும் கொடிய கள்ளி மரம் :
நரக நெருப்பாலேயே படைக்கப்பட்டு நரக நெருப்பையே உணவாக ஊட்டப்பட்ட ‘ஸக்கூம்” என்னும் சப்பாத்திக் கள்ளி மரம் நரகத்தின் அடிமட்டத்திலிருந்து முளைத்து மேலே வெளிவரும் ஒரு மரமாகும். அதன் பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்று விகாரமானதாகவும் அருவருப்பானதாகவும் இருக்கும் நரகவாசிகள் இந்த முள் நிறைந்தும் அசிங்கமான அருவருப்பான தோற்றத்தையுடையதும், மிகக் கெட்ட வாடையுடையதும், வெறுப்பான சுவையுடையதுமான அல்லாஹ்வினால் “சபிக்கப்பட்ட” அந்த “ஸக்மின்” கெட்ட கள்ளிமரத்தையே உணவாக உண்பார்கள். (37:62-66, 44:43-46, 56:52-53, 88:6-7, புகாரி: பாகம்:7, பக்கம் 139, பாடம் 10, 6613, 4716, தப்ஸீர் இப்னு கஸீர் 7:740-745) என்பது குர்ஆனின் வாக்கு.
நரகத்தின் பிரமாண்டான சுற்றுச் சுவர்கள் :
நரகத்திற்கு நான்கு புறமும் சுற்றுச் சுவர்கள் இருக்கும். ஒவ்வொரு சுவரின் பருமன் நாற்பது ஆண்டுகள் பயணத் தொலைவாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஸயீத்(ரழி), திர்மிதி: 2707,2710, முஸ்னத் அஹ்மத்) அந்த ஆளமான நரகத்தை நோக்கி “நீ நிறைந்துவிட்டாயா? என்று நாம் கேட்டு அதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதேனும் இருக்கிறதா? என்று அது கேட்கும் அந்நாளை (நபியே1) நீர் நினைவுறுத்துவீராக. (அல்குர்ஆன் : 50:30) என்பதையே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், நரகவாசிகள் நரகத்தில் போடப்படுவார்கள் ஆனாலும் நரகமானது நிரம்பாத காரணத்தால் இன்னும் அதிகம் இருக்கிறதா? இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும் என்பதாகக் கூறினார்கள். (அனஸ்(ரழி), புகாரி : 4848,4849,4850,7449)
நரகவாசழிகளின் உணவு :
நரகத்தின் கடுமையான நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதால் அங்கு கடுமையான கரும்புகை கிளம்பும். அடர்ந்த இருள்களின் புகையிலும் அதன் நிழலிலும் இருப்பார்கள். (அல்குர்ஆன் : 56,43,44) இதன் மூலம் கண்கள் எரியும் உடல் வறட்சி ஏற்பட்டு நரகவாசிகளுக்குக் கடுமையான தாகமும் பசியும் ஏற்படுத்தப்படும் அந்தத் தாகமும் பசியும் நரக வேதனைக்குச் சரிநிகராக இருக்கும். அப்போது நரக நெருப்பாலேயே படைக்கப்பட்டு நரக நெருப்பையே உணவாக ஊட்டப்பட்டு, நரகிலேயே வளர்க்கப்பட்டு பார்வையில் இதைவிட அசிங்கமான வேறொன்றையோ, தோற்றத்தில் இதைவிட அருவருப்பான வேறொன்றையோ சுவையில் இதைவிடக் கெட்டதையோ குணத்தில் இதைவிட மோசமானதையோ கண்டிடிராதவாறு “சபிக்கப்பட்ட” “ஸக்கூமின்” மிகக்கெட்ட கள்ளி மரத்தின் முள்செடியே உணவாகக் கொடுக்கப்படும். (37:62-66, 88:6,7, தஃப்சீர் இப்னு கஸீர் : 7:740-745)
நிச்சயமாக “ஸக்கூம்” எனும் கள்ளி மரம் அதுவே பாவிகளுக்குரிய உணவு. அது உருக்கப்பட்ட செம்புபோல் இருக்கும். வெந்நீர் கொதிப்பதைப் போன்று வயிறுகளில் அது கொதிக்கும். (அல்குர்ஆன் : 44:43-46, இது தொடர்பாக இன்னும் ஏராளமான வசனங்கள் இருக்கின்றன)
நீங்கள் அல்லாஹ்வை அஞ்சவேண்டிய முறையில் அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நரகவாசிகளின் உணவுப் பொருளான “ஸக்கூமின்” ஒரே ஒரு துளி இவ்வுலகக் கடல்களில் விழுந்தால் பூமியில் வசிப்போரின் வாழ்வாதாரங்களையே அது சீர்குலைத்து விடும. அப்படியாயின் அந்த “ஸக்கூமே” உணவாக இருக்கும் நரகவாசிகளின் நிலை என்னவாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), ஜாமிஉத் திர்மிதி : 2510,2711, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், இப்னு ஹிப்பான், நஸயி, தஃப்சீர் இபனு கஸீர் : 7:743)
நரகவாசிகளின் தண்ணீர் :
“ஸக்கூமின்” கன்னி தொண்டையில் சிக்கி விக்கல் ஏற்படும். அப்போது தண்ணீர் கேட்பார்கள். கொதிநீர் கொடுக்கப்படும். அது முகத்தைக் கரிக்கும் வயிற்றுக்குள் நுழைந்ததும் வயிற்றில் உள்ளவற்றைத் துண்டு துண்டாக்கிவிடும். நரகவாசிகளுக்குப் புகட்டப்படும் சீழ் சலத்திலிருந்து ஒரு வாளி அளவு பூமியில் கொட்டப்பட்டால் உலகத்தார் அனைவருக்கும் கொடிய துர்நாற்றம் வீசும். (அபூசயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்னத் அஹ்மத், இப்னு கசீர் : 6:43)
கொதிக்கும் நீருள்ள பாத்திரத்தை இடுக்கிகளால் பிடித்துக்கொண்டு வானவர் ஒருவர் நரகவாசியிடம் வருவார். அதை நரகவாசியின் முகத்துக்கருகில் கொண்டு செல்லும்போது அதை அவர் மறுப்பார். உடனே வானவர் தமது வசமுள்ள சம்மட்டியைத் தூக்கி அவரது தலையில் ஓங்கி அடிப்பார். அவரது மூளை உருகி வழியும். பின்னர் கொதிநீரை அவரது மூளையில் ஊற்றுவார். அது மூளையிலிருந்து அவரது வயிறு வரை சென்றடையும். இதையே “அதனால் அவர்களின் வயிறுகளில் இருப்பவையும் சருமங்களும் உருவாக்கப்பட்டுவிடும். எனும் இந்த 22:20ஆவது வசனம் குறிக்கிறது. (தஃப்சீர் இப்னு அபீஹாத்திம்)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)