சிந்திப்பவர்களுக்காக…
அப்துல்லாஹ் இப்னு அருணாச்சலம்
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், … வானத்திலிருந்து அவன் (ஏக இறைவன்) தண்ணீரை இறக்கி, அதன் மூலமாக பூமி இறந்தபின் அதை உயிர்ப்பிப்பதிலும்… சிந்திக்கக்கூடிய மக்களுக்கு (இறைவனது வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (இறைநூல்:2:164)
மனிதன் தான் வாழும் பூமியில் தன்னை உள்ளடக்கிய மனிதக் கூட்டம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறது? என்பதை சிந்திக்க வேண்டிய காலம் இது.
நீங்கள் உங்களுக்கு வெளியில் தினமும் நடப்பதைப் பாருங்கள். செய்தித்தாள்களைப் புரட்டிப் பாருங்கள். என்ன இருக்கிறது?
பொய், வதந்தி, கொலை, திருட்டு, விபச்சாரம், மோசடி உள்ளிட்ட எல்லா குழப்பங் களையும்தான் அதிகமாகக் காண்பீர்கள்.
ஒரு மனிதன், சக மனிதனுக்குச் செய்யும் காரியங்கள் என்ன? வலியவர்களும், செல் வந்தர்களும் உலகின் சிறு பகுதியில் இருந்து கொண்டு, எளியவர்களையும், வறியவர்களையும் நசுக்கும் சம்பவங்கள் தான் தினம் தினம் அரங்கேறுகிறது. இப்படிப்பட்ட நிலையி லேயே அநேக மனிதர்கள் தங்கள் இறுதி நிலையை அடைகிறார்கள்.
நம்மில் வாழும்போதும் அவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை, மரணித்தால் எல்லாம் முடிந்துவிடும் என்றே நினைத்து வாழ்கிறார்கள். இதில் நீதி எங்கே இருக்கிறது. அநீதம் இழைக்கப்பட்டவனுக்கும் இழைத்தவனுக்குமிடையே நீதி எப்போது செலுத்தப்படுவது?
பூமியில் நீங்கள் கண்டு காணாதவற்றையும், உணர்ந்து உணராதவற்றையும் படைத்த அந்த ஒரே இறைவன் கேட்கிறான், “தான் வெறு மனே விட்டுவிடப்படுவான் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா?’ என்று, (75:36)
ஆம்! நிச்சயமாக முதலாவது மனிதன் ஆதம் (அலை) முதல் பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனும் எழுப்பப்படுவான்.
விசாரணைக்காக! நீதியான தீர்ப்புக்காக!
விசாரிப்பவன் யார்? நீங்கள் பார்க்கும் நீதிபதிகளல்ல, அவர்களையே படைத்தவன், ஏகன், அவனே தீர்ப்பு நாளின் அதிபதி. (1:3)
தீர்ப்பளிப்பவர்களிலெல்லாம் அவன் அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா? (95:8)
மரணத்திற்குப் பின் நாம் மீள மாட்டோம் என நினைப்பவர்களுக்கு இறைவனது பதில்.
நாம் அவனது எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று மனிதன் எண்ணுகிறானா? ஏனில்லை, நாம் அவனது விரலின் நுனியைக் கூட சரிப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள் ளோம். ஆயினும் மனிதன் தனக்கு முன்னால் இருப்பதை நிராகரிக்கவே விரும்புகிறான். (75:3-5)
மனிதர்களே! நீர் நிலைகளில் நீங்கள் பார்த்த மீன், தவளை உள்ளிட்ட உயிரினங் கள், கோடையில் நீர் வற்றி காய்ந்து போன பின் எங்கே போனது? மீண்டும் மழை பொழிந்தால், ஒரேநாளில் அவைகள் எப்படி உயிர்ப் பெறுகின்றன? சற்று சிந்தியுங்கள்! இதோ அத்தாட்சி!
மனிதன் இறந்து போனபின் அவனது முதுகந்தண்டின் வேர்ப்பகுதியில் இருக்கும் உள்வால் எலும்பு தவிர மற்ற எல்லா உறுப்புகளும் அழிந்துவிடும். இது இன்றைய 21ம் நூற்றாண்டின் அறிவியல் கண்டுபிடிப்பு. இதை ஒரு மனிதர் 1421 வருடங்களுக்கு முன்பே சொல்லிச் சென்று விட்டார்.
“மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண் ணுக்குள்) மக்கிப் போய்விடும். ஆனால் அவனுடைய (முதுகந்தண்டின் வேர்ப்பகுதியிலிருக் கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர! அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) புகாரி : 4814)
நிச்சயமான மனிதன் உயிர்த்தெழும்பப்படுவான். தனது மறுவாழ்க்கையை (மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை என்னும் நிரந்தர வாழ்க்கையை) நம்பாத மனிதர்களைப் பற்றி இறைவன் கூறுகிறான். ஆனாலும் மறுமைநாள் எப்போது வரும்? என்று அவன் (ஏளனமாகக்) கேட்கிறான். (75:6)
அந்தக் கேள்விக்கான பதிலையும் அவனே கூறுகிறான்.
மனிதர்களுக்கு விசாரணைக்கான நேரம் நெருங்கிவிட்டது. ஆயினும் அவர்கள் கவனமற்றுப் புறக்கணித்தவர்களாக இருக்கிறார்கள். (இறைநூல் : 21:01)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்….)