நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்…
எஸ்.எம். அமீர், நிந்தாவூர், இலங்கை
மார்ச் மாத தொடர்ச்சி….
நரகவாசிகளின் இரு காதுகளின் தூர அளவு :
நரகத்தில் நரகவாசிகள் மிகவும் கோரத் தோற்றமுடையவர்களாகக் காட்சியளிப்பார்கள் அவர்களது காதின் சோனைக்கும் தோளுக்குமிடையே எழுபது ஆண்டுகால நடைப்பயண தூரம் அளவிற்கு இடைவெளி இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு உமர்(ரழி), முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 2:284)
நரகவாசியின் இரு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம் :
இறை மறுப்பாளனின் இரு தோள்புஜங்களுக்கிடையில் உள்ள தூரம் அதிவேகமாகப் பயணிப்பவர் “மூன்று நாட்கள் நடந்து செல்லும் அளவு நீண்ட தூரமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 6551) மேலும்,
நரகவாதியின் தொடை அளவு :
அங்கே நரகவாதியின் தொடை அளவு “பைலா” என்னும் (அரபு தேசத்து) மலையளவு போன்றதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதி 2703)
நரகவாசியின் பித்தட்டு இடையே உள்ள தொலைவு :
நரகவாசியின் பின்பகுதியின் இடையே உள்ள தொலைவு “மதீனாவுக்கும் ரபாதாவுக்கும் இடையே உள்ள தொலைவு போன்ற மூன்று நாள் பயணத் தொலைவு அகலமாகவும் அமைந்திருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதி 2703, முஸ்னத் அஹ்மத்)
நரகவாசி உட்காரும் இடத்தின் அளவு :
நரகத்தில் அவன் உட்காரும் இடம் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடைப்பட்ட (சுமார் 475கி.மீ) தூரமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) திர்மிதி 270, முஸ்னத் அஹ்மத், ஹாகிம், இப்னு ஹிப்பான்)
நரகவாசியின் ராட்சத உடலளவு :
இதுவரை நாம் பார்த்த வகையில் நரகத்தில் நரகவாசியின் பல்லின் அளவு: நாக்கின் நீறம், இரு உதடுகளின் பெருக்கம், அதற்கேற்றவாறு வாயின் அளவு. காதின் பெருக்கம், இவைகள் அனைத்தையும் கொண்ட தலையின் கொள்ளளவின் பெருக்கம், அதனைக் கொண்ட பித்தட்டுகளின் பருமன், அவன் உட்காரும் இடத்தின் அளவு என ராட்சத உடலுடைய, “அந்த நரகவாசியைப் பிடியுங்கள் பிறகு அவனுக்கு அறிகண்டமும் விலங்கும் மாட்டுங்கள், பின்னர் அவனை நரகத்தில் தள்ளுங்கள், பின்னர் எழுபது முழு நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” என்று உத்தரவிடப்படும். (69:30-32) மேலும் தமது இறை மறுப்பாலும் குழப்பத்தாலும் குற்றம் புரிந்தவர்களில் ஒத்தவர்கள் ஒவ்வொரு பிரிவினரும் சிலர் வேறு சிலருடன் நரக விலங்குகளினால் பிணைக்கபட்டிருப்பார்கள்.
அன்று குற்றவாளிகள் விலங்குகளினால் பிணைக்கப்பட்டிருப்பதை (நபியே) நீர் காண்பீர் (14:49) அநீதியிழைத்தவர்களையும் அவர்களின் கூட்டாளிகளையும் ஒன்றுதிரட்டுங்கள் (37:22) அவர்கள் தமது கூட்டாளிகளுடன் சேர்த்துப் பிணைத்துக் கட்டப்பட்டு நரகத்தில் நெருக்கடியானதொரு பகுதியில் தூக்கியெறியப்படும்போது அங்கே அவர்கள் அழிவை அழைப்பார்கள் (25:13) உயிர்கள் அனைத்தும் அவற்றின் கூட்டாளிகளோடு சேர்க்கப்படும்போது (81:7) என்றும் பாவிகளை நரகத்திற்குக் கொண்டுசெல்லப்படும். அந்த நாளில் அவனுக்கு எழுபதாயிரம் கடிவாளங்கள் மாட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் வானவர்கள் இழுத்துச்செல்வார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி), முஷ்லிம்: 5464)
மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக வெளியாகி நரகத்தில் வந்து விழும் கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவரது குடலை அவர் சுற்றி வருவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (உஸாமா பின் ஸைத்(ரழி) புகாரி : 3267,7098, முஸ்லிம் 2989, ரி.ஸா.198) மேலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “அம்ர் பின் ஆமிர் அல்குஸாஈ” என்பவன் நரகத்தில் தனது குடலை இழுத்தபடி சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். அவன்தான் முதன் முதலாக “ஸாயிபத்” எனும் ஒட்டகங்களைச் சிலைகளுக்காக நேர்ச்சை செய்து திரியவிட்டவன் என்று (ஆயிஷா(ரழி), புகாரி: 4624,4623,1212)
அங்கே இருந்து வெளியேற முடியாது :
எவர்கள் பாவம் செய்தார்களோ அவர்கள் தங்கும் இடம் அனல் காற்றையும் கொதிக்கும் நீரையும் கரும்புகையின் நிழுலுமுள்ள நரக நெருப்புத்தான். அவர்கள் அதை விட்டும் வெளியேற முயற்சிக்கும்போதெல்லாம் அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த நரக நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும். (32:20) அவர்கள் வேதனைகளின் கவலையால் அங்கிருந்து வெளியேற முனையும்போதெல்லாம் அதற்குள்ளேயே திருப்பி அனுப்பப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் என்று அவர்கிளடம் கூறப்படும். (22:22) அவர்கள் நரகத்திலிருந்து வெளியேற விரும்புவார்கள். ஆனால் அவர்களால் அதிலிருந்து வெளியேறவே முடியாது நிலையான வேதனை அவர்களுக்கு உண்டு. (5:37)
நரகத்தின் இரும்புச் சம்மட்டி:
நரகத்தின் கடுமையான வேதனைகளை அனுபவிக்கும் அவர்கள். அதிலிருந்து எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்று விரும்பிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அதற்கு வழியே கிடையாது கொழுந்து விட்டெரியும் தீ நாக்குகள் அவர்களை நரகத்தின் மேற்குபகுதிக்குக் கொண்டுவரும்போதெல்லாம் வானவர்கள் அவர்களை இரும்புத் தடிகளாலும், சம்மட்டிகளாலும், தாக்கி மீண்டும் நரகத்தின் ஆழுத்தில் தள்ளிவிடுவார்கள். நரகத்திலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது. நிரந்தரமாக வேதனை செய்யப்படுவார்கள். அதிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது. அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் (அங்கு) உண்டு. (22:21) மேலும்,
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் இந்த (22:21) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இரும்புச் சம்மட்டிகளால் அவர்கள் அடிக்கப்படுவார்கள். அப்போது ஒவ்வொரு உறுப்பும் கழன்று அவரவர் எதிரே வந்துவிடும் அவர்கள் அந்தோ நாசமே! என அழைப்பார்கள் என்று குறிப்பிட்டார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் 6:43)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் நரகத்திலுள்ள இரும்புச் சம்மட்டி ஒன்றை பூமியில் வைக்கப்பட்டால் அதை மனித இனமும் ஜின் இனமும் சேர்ந்து தூக்கினாலும் அவர்களால் அதைத் தூக்க இயலாது. அந்த அளவுக்குப் பளுவாக இருக்கும். (அபூசயீத் அல்குத்ரி(ரழி) முஸ்னத் அஹ்மத், இப்னு கஸீர் : 6:42,43) மேலும்,
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நரகத்தில் இருக்கும் சம்மட்டி ஒன்றால் மலையை அடித்தால் அந்த மலை தகர்ந்துவிடும். பின்னர் அது முன்னர் இருந்ததைப் போன்று மாறிவிடும். (அபூ சயீத் அல்குத்ரீ(ரழி) முஸ்னத் அஹ்மத்)
நரகத்தில் உள்ள நெருப்பு மலையின் உயரம் :
(ஸவூதில் அவனை ஏற்றுவேன் என்ற இறை வசனத்தில் கூறப்படும்) ஸவூத் என்பது நரகில் உள்ள மலையாகும் அல்லாஹ்வை மறுத்தவன் அதில் எழுபது ஆண்டுகள் ஏறுவான் (அவ்வளவு உயரமான மலையில்) இவ்வாறே எழுபது ஆண்டுகள் இறங்குவான் இது தொடர்ந்து என்றென்றும் நடைபெறும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஸயீத்(ரழி), திர்மிதீ : 2702)
நரகத்தில் கடுமையான கொடூர மனம் படைத்த வானவர்கள் :
நரகத்திற்குப் பத்தொன்பது வானவர்கள் “காவலர்களாக” நியமிக்கப்பட்டுள்ளார்கள் (74:30) நரகத்தில் மிகக் கடுமையான கொடூர மனம் படைத்த சிறிதளவேனும் இரக்க சிந்தையே இல்லாத மிகப் பலசாலிகளான வானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ் ஏவிய எதிலும் மாறுபாடுகள் செய்யமாட்டார்கள். தங்களைப் பணிக்கப்பட்டபடியே செய்து வருவார்கள். (66:6, 74:31)
அவர்களுக்கு மேலேயும் நெருப்பாலான குடைகள் :
அவர்களுக்கு மேலேயும் நெருப்பாலான நிழல்கள் இருக்கும் (39:16) அவர்களுக்கு மேலே நெருப்பாலான போர்வைகளும் இருக்கும் (7:41) அவர்களுக்கு மேலிருக்கும் நெருப்பாலான வேதனை அவர்களை மூடிக்கொள்ளும் (29:55) என்றும்,
அவர்களுக்குக் கீழேயும் நெருப்பாலான தட்டுகள் :
அவர்களுக்குக் கீழேயும் நெருப்பாலான தட்டுகள் இருக்கும் (39:16) அவர்களுக்குக் கீழே நரக நெருப்பாலான விரிப்புகளும் இருக்கும் (7:41) இதில் “விரிப்புகள்” என்பதைக் குறிக்க “பிஹாத்” எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது தரைரயில் விரிக்கப்படும் விரிப்புகளைக் குறிக்கும். (இப்னு கஸீர்(ரஹ்) 3:758) மேலும் அவர்களின் கால்களுக்குக் கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக்கொள்ளும் (29:55) ஆக நரக நெருப்பானது அவர்களை நாலாபுறங்களிலிருந்தும் சூழ்ந்துகொள்ளும் புலன் சார்ந்த வேதனைகளில் இதுவே உச்சக்கட்ட வேதனையாகும். மேலும்,
நரகத்தில் தாரால் ஆன ஆடை அணிவிக்கப்படும் :
“அவர்களின் ஆடைகள் நரகின் தாரால் ஆனவையாகும்” (14:50) அதாவது அவர்கள் அணியும் ஆடைகள் நரகின் தாரால் தயாரிக்கப்பட்டவைகளாகும். இங்கு “தார்” என்பதைக் குறிக்க மூலத்தில் “கத்திரான்” எனும் சொல் இடப்பெற்றுள்ளது. ஒட்டகங்களுக்குப் பூசப்படுகின்ற ஒருவகை எண்ணையை இச்சொல் குறிக்கும். அது எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடியதொரு பொருளாகும் என்று கத்தாதா(ரஹ்) அவர்களும், “கத்திரான்” என்பது உருக்கப்பட்ட செம்பைக் குறிக்கும் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் விளக்கம் கூறியுள்ளார்கள். இவ்வாறே முஜாஹித்(ரஹ்), இக்ரிமா(ரஹ்), சயீத் பின் ஜுபைர்(ரஹ்), ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்) கத்தாதா(ரஹ்), ஆகியோரும் கூறியுள்ளார்கள் (தஃப்சீர் இப்னு கஸீர் 4:1006) அதாவது, அவர்களின் ஆடைகள் நன்கு சூடேறிய செம்பாலானவைகளாக இருக்கும்.
நரக நெருப்பாலான ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன :
ஏக இறைவனை மறுத்தவர்களுக்காக நரக நெருப்பாலான ஆடைகள் அவர்களுக்கு வெட்டி வைக்கப்பட்டுத் தயார்படுத்தப்பட்டு இருக்கின்றன. (22:19) அதாவது நரகத்தில் அவர்களுக்கென தனி இடங்கள் ஓதுக்கப்படும். மேலும், “நெருப்பாடைகள்” என்பதற்கு, செம்பாலான ஆடைகள் என்றும் சூடேற்றப்பட்டால் செம்புதான் கடின வெப்பமுடையதாக இருக்கும் என்றும் சயீத் பின் ஜுபைர்(ரஹ்) அவர்கள் விளக்கமளித்தார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் : 6:41)
அவர்களுக்கு நரக நெருப்பாலான போர்வைகள் இருக்கும் :
“அவர்களுக்கு மேலே நெருப்பாலான போர்வைகள் இருக்கும்” (7:41) என்று அல்லாஹ் கூறுகின்றான். இதில் “போர்வைகள்” என்பதைக் குறிக்க “ஹவாஷ்” எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இது மேனியின் மீது போர்த்தப்படும் துணிகளைக் குறிக்கும் என்று லஹ்ஹாக் பின் முஸாஹிம்(ரஹ்) சுத்தீ(ரஹ்) ஆகியோர் விளக்கம் கூறியுள்ளனர். (தஃப்சீர் இப்னு கஸீர் 3:758)
நரக நெருப்புக்கு முன்னால் உலக சுகபோகங்கள் அனைத்தும் மறந்துவிடும் :
உலக வசதி வாய்ப்புகள் சுகபோகங்கள் அனைத்தையும் முழுவதுமாக அனுபவித்த ஒருவர் மறுமையில் நரகவாசிகளில் ஒருவராகக் கொண்டுவரப்பட்டு நரகத்தில் ஒரே ஒரு தடவை மாத்திரம் முக்கி மூழ்கடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்படுவார். பின்னர் ஆதமின் மகனே உனது வாழ்வில் நீ நல்லது எதையேனும் பார்த்ததுண்டா? உம்மிடம் ஏதாவது சுகமான வாழ்வு வந்ததுண்டா? என்று அவரிடம் கேட்கப்படும். நரகைக் கண்ட வேதனையில் அவர் உலகில் ஆண்டு அனுபவித்த சுகபோகங்களை அடியோடு மறந்து “இல்லை இறைவா” எதையுமே நான் அனுபவிக்கவில்லை என்பார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ்(ரழி) முஸ்லிம் : 2807, ரியாதுஸ் ஸாலிஹீன் 462)
நரகத்தில் ஆகக் குறைந்த தண்டனையையே அங்கு மிகக் கடுமையான தண்டனையாக எண்ணுவான் :
மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசான வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார் அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். அதனால் அடுப்பில் வைத்துச் சூடாக்கப்படும் செம்புப் பாதிரம் அல்லது வேறு உலோகத்தினாலான பன்னீர்ப்பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவனது மூளை கொதிக்கும். அப்போது அவன் இந்த நரகத்திலேயே நான்தான் மிகக் கடுமையான வேதனை செய்யப்படுகின்றேன் என்று எண்ணுவான். ஆனால் அவன்தான் நரகில் மிகக் குறைந்த வேதனை செய்யப்படுகின்றவனாவான் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நுஃமான் இப்னு பஷீர்(ரழி) புகாரி 3883,3885,6208,6561,6562,6564,6572, முஸ்லிம் 213, திர்மிதி 2731)
நரகவாசிகளிலேயே மிகவும் இலேசான வேதனை கொடுக்கப்படும் ஒருவரிடம் “பூமியிலிருக்கும் பொருட்கள் எல்லாம் உனக்கே சொந்தம். அல்லது உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தது என்றிலிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத்தொகையாகத் தருவதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெற நீ முன்வருவாயா? என்டற அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் ஆம் தந்துவிடுவேன் என்று பதிலளிப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ்(ரழி), அனஸ் பின் மாலிக்(ரழி), புகாரி: 3334,6557,6538)
இதனையே பின்வரும் இறை வசனத்தில், எவர்கள் நிராகரித்து நிராகரிக்கும் அதே நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ அவர்களில் எவருக்கேனும் பூமி நிறைய தங்கம் இருந்து எவரேனும் அந்தத் தங்கத்தைத் தமது மீட்சிக்கு ஈடாகக் கொடுத்தாலும் அதனை அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (3:91) என்றும், “எனது பெரும் செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே எனது ஆட்சி அதிகாரமும் என்னைவிட்டும் அழித்துவிட்டதே” என்று கதறுவான். (69:28,29) என்பதாக ஏக இறைவன் குறிப்பிடுகின்றான்.
அந்நாளில் வேதனைக்கு ஈடாகத் தனது மக்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனையும், தன்னை அரவணைத்துக் கட்டிக்காத்த உற்றார் உறவினர்களையும், இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் பணயம் வைத்துவிட்டேனும் பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான் அவ்வாறில்லை அது பெரும் நெருப்பாகும் அது தோலை உரிக்கும். (70:11-16) (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)