ஆட்சியை அளிப்பவன் அல்லாஹ்வே!
இறைப்பிரியன்
இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும் நேரம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, யார் ஆட்சியை கைப்பற்றுவது என்று தெரிந்து விடும் இன்ஷா அல்லாஹ்.
அதற்கு முன்னதாகவே பல்வேறு விதமான கருத்து கணிப்புகள் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய ஊடக பேரங்கள் வாயிலாகவும், மத்திய அரசின் எடுபிடி யாக செயல்படும் தேர்தல் கமினின் இதுவரை நம் தமிழக அரசியல் சரித்திரத் தில் நடைபெறாத சில அதிரடி செயல் பாடுகளினாலும் ஆட்சிக்கு வரவேண்டியவர்களுக்கு கிலி ஏற்படுத்தியதை நாம் யாவரும் அறிந்ததே.
(நபியே!) நீர் கூறுவீராக, “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதி பதியே! நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய், இன்னும், நீ நாடிய வரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடு கிறாய், நீ நாடியோரை கண்ணியப் படுத்துகிறாய், நீ நாடியோரை இழிவுபடுத்துகிறாய், நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன, அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய். (குர்ஆன் 3:26)
“நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய், நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய், நீயே உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளியாக்குகின்றாய், மேலும் நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.” (குர்ஆன் 3:27)
நம்மையும், நம்மை ஆள்கின்றவர்களையும் படைத்து பரிபாலிப்பது எல்லாம் வல்ல படைத்தவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. இதனை ஒவ்வொரு குடிமக்களாக இருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் அரசியல்வாதிகளும் மறந்துவிடக்கூடாது.
நம் யாவரையும் முன்மாதிரியின்றி படைத்து, நாம் நல்வழி பெற்றுக்கொள்வதற்காக சீரிய வழிகாட்டியான படிக்க வேண்டிய குர்ஆனைத் தந்ததும் அவன்தான். நமக்கு மிஞ்சிய பரம் பொருளாக திகழ்கின்ற அந்த மாபெரும் சக்தியையே அவன் தன் திருமறையான குர்ஆனில் தன்னை அரபி மொழியில் அல்லாஹ் என்று குறிப்பிடுகிறான். மற்றபடி நம் யாவருக்கும் “ஒன்றே குலம். ஒருவனே தேவன்’. இது மறைந்த நம் முன்னால் முதல்வர் அண்ணாதுரை அவர்கள் சொல்லியிருந்தாலும் இதனை இந்த குர்ஆன் அன்றே சொல்லிவிட்டது. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத் தினராகவே இருந்தனர். தம்மிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாக பிரிந்தார்கள் (2:213 வசனத்தின் சுருக்கம்)’
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற கோட்பாட்டிற்கிணங்கி வரும் ஆட்சி நல்லாட்சியாக அமைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா சூழ்நிலைகளிலும் அவன் அஞ்சவேண் டிய முறைப்படி அஞ்சி வாழக்கூடிய நன்மக்களாக நம் யாவரையும் ஆக்கி வைப்பானாக
அடுத்து அமையவிருக்கின்ற ஆட்சி, மத்திய அரசின் ஏகபோக பாஸிசத்தனத்திற்கு அடிபணியாமல், நம் மாநில உரிமைகளை அடுத்தவர்களுக்கு தாரை வார்க்காமல், சமூக ஒற்றுமையை நல்லி ணக்கத்தை தொடர்ந்து பேணவேண்டும். சட்டம் ஒழுங்கை காத்திடவேண் டும். பெண்கள் பாதுகாப்புக்கு குறிப்பாக சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு பாழாவதை தடுக்க இரும்புக் கரம் கொண்டு தவறை யார் செய்தாலும் தட்டிக் கேட்கும் நல் அரசாக அமைய நாமும் வாழ்த்துவோம். நமது பங்களிப்பையும் தருவோம்!
“மனித சமூகத்திற்கு சவாலாக இருக்கக் கூடிய குப்பை – கழிவுகளை சுத்தம் செய்யக்கூடிய பணியாளர்களை நிரந்தரமாக வேலை பார்க்கச் செய்வதால், அதன்மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முயற்சியை மேற்கொள்வதோடு, கொள்ளை நோயினால் ஏற்பட்டு வரும் அல்லல் பாடுகளிலிருந்தும் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நீட் தேர்வுக்கு அனுமதி மறுக்கின்ற நாம், பள்ளி, கல்லூரி படிப்பை ஒரு தலைமுறையையே பாதிப்படையச் செய்யும் அளவுக்கு மூடி வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம், அமையக்கூடிய அரசு, கொரானா தொற்றின் போது செயல்படுகின்ற மற்ற அலுவல்கள் போல் கண்டிப்பாக பள்ளிக் கூடங்களை திறப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆக பொறாமையால் பிரிந்த சமுதாயமாக, மொழியால், மதத்தால், இனத்தால், ஜாதியால் இனியும் நாம் பிரியாமல் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நமது தமிழ் மண்ணை வளமாக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு போக நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம்.