நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்…

in 2021 மே

நரகம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் ஒன்றாகும்…

எஸ்.எம். அமீர், நிந்தாவூர், இலங்கை

ஏப்ரல் மாத தொடர்ச்சி….

உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தில் நுழையாமல் இருக்க முடியாது:

உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தில் நுழையாமல் இருக்கமுடியாது. (இது) உம்முடைய இறைவனால் தீர்மானிக்கப்பட்டு விட்ட உறுதியான முடிவாகும். (19:71) என்பதாக இறைவன் குறிப்பிடுகின்றான். இதில் நல்லோர் தீயோர் யாராக இருந்தாலும் நாளை மறுமையில் நரகத்தில் நுழைந்து அதைப் பார்க்காமல் இருக்கமாட்டார்கள் என்பது தெளிவு. (நபியே!) இவை உம்முடைய இறைவன் நெறிநூலின் அறிவிப்பின் வாயிலாக உமக்கு அருளிய ஞானத்தின் ஒரு பகுதியாகும். நீர் அல்லாஹ்வுடன் சேர்த்து வேறு இறைவனைக் கற்பிக்காதீர். அவ்வாறாயின் நீர் தூற்றப்பட்டவராகவும் (அல்லாஹ்வின் அருளிலிருந்து) விரட்டப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர். (17:39) என்பதாகவும், அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னிடம் மறுமையில் எப்படி நடந்து கொள்ளப்படும் என்பது அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கே தெரியாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் சொல்லி யுள்ளார்கள். (உம்முல் அலா(ரழி) ஸைத் பின் ஸாபித்(ரழி), புகாரி:3, பக்கம்:526, பாடம் 77, 1243, 2687, 2787, 3929)

(19:71ஆவது) வசனத்தில் இடம் பெற்றுள்ள “நரகத்தில் நுழைதல்” அல்வுரூத் என்பதன் உண்மையான பொருள் என்ன என்பது தொடர்பாக நாங்கள் கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர் “இறை நம்பிக்கையாளர்கள் நரகத்தில் நுழையவே மாட்டார்கள்” என்றும் வேறுசிலர் “அனைவரும் நரகத்தில் நுழைவார்கள். பின்னர் இறையச்சம் உடையவர்களை அல்லாஹ் காப்பாற்றி விடுவான்” (19:72) என்றும் கூறினர். இந்நிலையில் நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரழி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் “நுழையுதல்” எனும் சொல்லுக்குப் பொருள் கொள்வதில் எங்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது என்று கூறினேன். அதற்கு ஜாபிர்(ரழி) அவர்கள் “அனைவரும் நரகத்திற்கு வருவார்கள்” என்று கூறிவிட்டுத் தமது விரல்களால் இரு காதுகளையும் தொட்டார்கள் பிறகு கூறி னார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன்.

நன்மை செய்தவர் பாவம் செய்தவர் என ஒருவர் விடாமல் அனைவரும் நரகத் தில் நுழைவார்கள் இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு நெருப்பானது குளுமையாகவும், சாந்தியாகவும் மாறியதைப் போன்று அந்த நரகம் மாறிவிடும். அந்தக் குளிர்ச்சியின் காரணமாக நரகத்திற்கு ஒரு நடுக்கம் ஏற்படும். பின்னர் தன்னை அஞ்சி நடந்தோரை அல்லாஹ் காப்பாற்றுவான். அநீதியாளர்களை முழந்தாளிட்டவர்களாக அதிலேயே அல்லாஹ் விட்டுவிடுவான் (19:72) என்று கூறினார்கள். அதைத் தொடர்ந்து “இதை நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டது உண்மையில்லையயன்றால் இந்தக் காதுகள் செவிடாகப் போகட்டும்” என்று ஜாபிர்பின் அப்தில்லாஹ்(ரழி) அவர்கள் கூறினார் கள். (முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் 5:635, 636) மேலும்,

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் நாஃபிஉ பின் அல்அஸ்ரக்(ரஹ்) அவர்களும், (19:71) குறித்து விவாதம் செய்துகொண்டார்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் இவ்வசனத்தில் “நுழையுதல்” என்பதைக் குறிக்கும் “வாரித்” எனும் சொல்லுக்கு “நுழைவது” என்றே பொருள் கூறினார்கள். நாஃபிஉ(ரஹ்) அவர்களோ “அப்படியல்ல” என்றார்கள் உடனே இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் “நீங்கள் அதனுள் செல்லக்கூடியவர்களே” (21:98) என்ற வசனத்தை ஓதிவிட்டு “அவர்கள் நரகத்திற்குச் செல்வார்களா, இல்லையா?” என்று கேட்டார்கள். மேலும் “மறுமை நாளில் அவன் தனது சமூகத்தாருக்கு முன்னால் வருவான் அவர்களை நரகத்திற்கு அழைத்துச் செல்வான்” (11:98) என்ற வசனத்தை ஓதிவிட்டு “அவர்களை அவன் நரகத்திற்குள் கொண்டு செல் வானா இல்லையா?” என்று கேட்டார்கள்.

அதைத் தொடர்ந்து நாஃபிஉ(ரஹ்) அவர்களை நோக்கி “அறிந்து கொள்வீராக! நானும் நீங்களும் நிச்சயமாக நரகத்தில் நுழைவோம். அதிலிருந்து நாம் வெளியேறுவோமா இல்லையா என்பதைப் பற்றிச் சிந்திப்பீராக! நீங்கள் அதை மறுப்பதன் காரணத்தால் உங்களை அல்லாஹ் நரகத்திலிருந்து வெளியேற்றிவிடுவான் என நான் கருதவில்லை” என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். (அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) தஃப்சீர் தபரீ, இப்னு கஸீர் 5:637,638)

“உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தில் நுழையாமல் இருக்கமுடியாது’ என்ற (19:71) வசனத்திற்கு, மக்கள் அனைவரும் நரகத்திற்கு வருவார்கள். பின்னர் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப அதிலிருந்து வெளியேறுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி) திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)

மேலும் “உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தில் நுழையாமல் இருக்க முடியாது” என்ற வசனம் குறித்து இப்னு மஸ்ஊத்(ரழி) அவர் கள், “வாளின் முனையை விடக் கூர்மையா னதாகவும் முடியைவிட மிகவும் மெல்லியதாகவும் “நரகத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள “ஸிராத்’ எனும் பாலம் கால்கள் வழுக்குமிடமாகும். அதில் முள்மரத்தின் முட்களைப் போன்று பருமனுள்ள முட்கள் நிறைந்திருக்கும். அதன் இரு புறங்களிலும் வானவர்கள் நின்று கொண்டிருப்பார்கள். அவர்களிடம் நரக நெருப்பாலான கொக்கிகள் இருக்கும். மக்கள் அனைவரும் அந்த நரகத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள “ஸிராத்’ எனும் பாலத்திற்கு வருவார்கள். அவர்களில் சிலர் மின்னலைப் போன்றும், வேறுசிலர் காற்றைப் போன்றும், இன்னும் சிலர் பறவை பறப்பதைப் போன்றும், மற்றும் சிலர் பந்தயக் குதிரைகள் போன்றும், வேறு சிலர் பந்தய ஒட்டகங்களைப் போன்றும் விரைவாகக் கடந்து செல்வார்கள்.

அவர்களில் சில மனிதர்கள் நடக்கும் வேகத்தில் கடந்து செல்வார்கள். அவர்களில் இறுதியாக வருபவர்களின் பெருவிரல் பகுதியில் மட்டுமே இருக்கும் சிறிதளவு வெளிச்சத்தைக் கொண்டு தட்டுத் தடுமாறி அப்பாலத்தைக் கடந்துவிடுவார்கள். ஏழை கள் செல்வந்தர்களைவிட ஐநூறு வருடங்கள் முந்தியே பாலத்தைக் கடந்து சென்று விடுவர். இன்னும் சிலர் தவழ்ந்து தவழ்ந்து காலதாமதமாகிக் காயங்களுடன் கடந்து விடுவர். பிறகு மற்றவர்கள் கடப்பார்கள். அப்போதெல்லாம் வானவர்கள் இறைவா! காப்பாற்று! காப்பாற்று! என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சிலர் தடுமாற்றத்தினாலும், சிலரை வானவர்கள் இரும்புக் கொக்கிகளால் பிடித்து இழுப்பதனாலும் அதிகமான ஆண்களும் பெண்களும் நரக நெருப்பில் விழுவார்கள் என்று கூறினார்கள். (அபூசயீத் அல்குத்ரி(ரழி) அபூ ஹுரைரா(ரழி) புகாரி பாகம் 7, பக்கம் 110, பாடம் 52இன் சிறு குறிப்பு 146, 6573, 7439, 4581, முஸ்லிம் 4552, திர்மிதி 2353, ரியாதுஸ் ஸாலிஹுன் 488, தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் 5:638, 639)

ஒரு முஸ்லிமுடைய பிள்ளைகளில் மூவர் பருவ வயதுக்கு முன்பே இறந்து போனால் அந்த மனிதரை நரகம் தீண்டாது. ஆனாலும் “உங்களில் யாரும் நரகத்தில் நுழையாமல் இருக்க முடியாது என்று அல்லாஹ் செய்துள்ள சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக நரகத்தின் மேலே போடப்பட்டுள்ள “ஸிர்த்’ பாலத்தின் மேலே அவர் சொல்வதைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 1251, 6656, முஸ்லிம் 5128, தஃப்சீர் இப்னு கஸீர் 5:640). ஆக நல்லோர் தீயோர் யாராக இருந்தாலும் நாளை மறுமை நாளில் அந்த நரகத்தில் நுழைந்து அதைப் பார்க்காமல் இருக்கமுடியாது (19:71), நிச்சயமாக அது நிலையாகத் தங்குமிடத்தாலும் சிறிது நேரம் தங்குமிடத்தாலும் மிகக்கெட்டது (25:86), அல்லாஹ் நம் அனைவரையும் அந்தப் பயங்கரமான நரக வேதனையை விட்டும் பாதுகாப்பானாக.

குறிப்பு : இது உண்மையிலேயே மிகப் பெரிய தலைப்பாகும். ஆனாலும் விரிவை அஞ்சி முடியும் வரை தவிர்த்து மிக அவசிய மானவற்றை மாத்திரம் எடுத்துள்ளேன்.

(நிறைவுற்றது)

Previous post:

Next post: