தலையங்கம்!
மின்சார வாகனம் வருகிறது!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பிரச்சினையால் நம் நாட்டின் தலைநகர் டெல்லி திணறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே டெல்லிதான் இப்பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு பிரச்சினையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர புதிய புதிய வழிமுறைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசிய அல்லது அவசர சூழலில் மத்திய, மாநில அரசு கவனம் செலுத்தி வந்ததன் பயனாக, மின்சார வாகனங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துவதன் மூலம் மாசுபாடு பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே, மின்சார வாகன பயன்பாட்டிற்காக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாத காரணத்தால், பெட்ரோல், டீசல் வாகனங்களை உபயோகிப்போர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருவதால், சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகமாக ஏற்படுத்த எல்லா முயற்சிகளையும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்து வருகிறார்.
எண்ணற்ற சலுகைகளைத் தருவதற்கும் அரசு முன்வந்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கு பதிவு கட்டணத்தில் விலக்கு, சாலை வரியிலும் விலக்கு என சலுகைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எல்லா ஷாப்பிங் மால்களிலும், அலுவலகங்களிலும், மருத்துவமனைகளிலும், திரையரங்குகளிலும், ஹோட்டல்களிலும், மின்சார வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக 5 சதவீத இடவசதி செய்து தரவேண்டும் என்று மாநில மின்சாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். நூறும், நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களை நிறுத்தப் போதுமான அளவு இட வசதியுள்ள எல்லா கட்டிடங்களும் இந்த உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அத்துடன் வாகனங்களுக்கு எலெக்ட்ரிக் சார்ஜிங் பாயிண்ட் பொருத்தும் வசதியையும் செய்து தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் செய்து முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படப் போவதாக கூறப்படுகிறது. டெல்லி மாநில அரசின் வாகனத் திட்டத்தின்படி ஒவ்வொரு சார்ஜிங் பாயிண்ட்டுக்கும் ரூபாய் 6,000/- மானியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பதால், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த இன்னும் தேவையான எல்லா முயற்சிகளும் செய்து தரப்படும் என்றும் நம்பப்படுகிறது.
இதன் பயனாக, மும்பையிலுள்ள ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் நிறுவனம் கார் வடிவிலான 3 சக்கரங்கள் கொண்ட யூ3 எனப்படும் மின்சார வாகனத்தை, 3 மணி நேர முழு சார்ஜைக் கொண்டு 200கிமீ. வரை பயணம் செய்ய, 4டி லட்சம் விலையில், இரண்டு இருக்கை மற்றும் பல சிறப்பு வசதிகளுடன், டெல்லி மற்றும் மும்பையில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. பத்தாயிரம் ரூபாய் முன் தொகை கோரி பதிவு செய்ய ஆரம்பித்த நான்கு தினங்களில் டெல்லி, மும்பையிலிருந்து மட்டும் 7டி லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்கள் பெற்றிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
எதிர்காலத்தில் எல்லா மாநிலங்களை யும் உள்ளடக்கிய நாடு முழுவதற்குமான திட்டமாக இது விரிவுபடுத்தப்படும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். மின்சார ஸ்கூட்டர்கள், மொபட்டுகள் அறிமுக மாகிறது. மணிக்கு 25கி.மீ.க்கு குறைவான வேகத்தில் ஓடும் இந்தவகை வாகனங்களுக்கு இன்சூரன்ஸ், மாசு உமிழ்வு தரசான்று ரிஜிஸ்ட்ரேஷன், டிரைவிங் லைசன்ஸ் தேவை இல்லை. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை இதன் மூலம் குறைக்கப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பும் மக்களிடம் இருந்து வருகிறது.