ஜமாஅத் அல்முஸ்லிமீன் ஏன்? எதற்கு?
- ஹளரத் அலீ, ஜித்தா
“எவர்கள் விரும்புகிறார்களோ அவர் களை மனிதர்களுக்கு அடிபணிவதிலிருந்து விடுவித்து அல்லாஹ்வுக்கே அடிபணியும் வாழ்க்கை முறைக்கு அழைத்து வரவேண்டும். இந்தக் குறுகிய உலக வட்டத்திலிருந்து விடுவித்து விசாலமான உலகின்பால் கொண்டுவரவேண்டும். அநீதமான வாழ்க்கை முறைகளின் கொடுமைகளிலிருந்து விடுவித்து இஸ்லாம் அளிக்கும் நீதியின் நிழலுக்குள் அவர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர்களை (மக்களை) இறைநெறியின் பால் அழைக்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய சத்திய நெறியை வழங்கி வல்ல இறைவன் எங்களை மக்களிடம் அனுப்பியுள்ளான். அறிவிப்பு : இப்னு ஹஜ்ரின் அல்மிதாயா வந்நிகாயா, பாகம் 7, பக்கம் 39.
இது, இவ்வுலகிற்கு இஸ்லாம் ஏன் அருளப்பட்டது? அதன் நோக்கம் என்ன? என்பதை இரத்தினச் சுருக்கமாக வைர வரிகளாக பாரசீக தளபதி ருஸ்துமிடம் நபி தோழர் ருப்ஈ பின் ஆமிர்(ரழி) அவர்கள் சமர்ப்பித்த கொள்கை பிரகடனமாகும்.
இன்றைய நவீன உலகில் மனிதர்களை மனிதர்கள் அடிமையாக்கும் அடிமைத் தொழில் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு படைப்பினங்களுக்கும் மற்றும் பல சித்தாந்த கொள்கைகளுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். இவர்களை இவ்வடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அல்லாஹ்வின் நீதியின் நிழலுக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பினை சுமந்த முஸ்லிம்களோ மூடமுல்லாக்களிடமும் இயக்க ஆலிம்களிடமும் கொத்தடிமைகளாகக் கட்டுண்டு கிடக்கின்றனர்.
பி(ஸல்) அவர்கள் மரணித்த பின், மக்களைக் கூட்டி உரையாற்றிய அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் “இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீதியை நிலைநாட்டுவோராய் திகழுங்கள்!” (அல்குர்ஆன் 4:135) என்ற இறை வசனத்தை மேற்கோள்காட்டி கூறினார்கள். அல்லாஹ் உங்களை நீதிமிக்க இஸ்லாமிய அமைப்பின் காவலர்களாக ஆக்கியுள்ளான். அதனைப் பாதுகாத்திருக்கும்படி உங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான். எனவே தூதருடைய மரணத்தின் துக்கத்தில் எல்லை மீறி மூழ்கி விடாதீர்கள், எழுந்திருங்கள், ஷைத்தானைத் தோல்வியுறச் செய்யுங்கள், உங்கள் தீனின் (இறைவனின் ஆட்சி) அமைப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை சிந்தியுங்கள்! என்று கூறினார்கள். அதன்படியே இறை ஆட்சியை நிலைநிறுத்தினார்கள்.
ஆனால் இன்றைய முஸ்லிம்களின் நிலை அந்தோ பரிதாபம்! இந்தக் கொள்கைகளை இந்த வாழ்க்கை அமைப்பை தாங்கி நிற்க வேண்டிய முஸ்லிம் சமூகம்
இதனைத் தொலைத்து விட்டு இருக்கிறது. மேலும் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் இந்த இழப்பை உணராமல் கூலி ஆலிம்களிடம் தீனை ஒப்படைத்து விட்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
கூட்டமைப்பும் அதன் தலைவரும் :
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “மூன்று நபர்கள் பயணத்திற்குப் புறப்பட்டால், அவர்கள் தங்களுள் எவரேனும் ஒருவரை (தலைவராக) அமீராக கொள்ளட்டும்” அறிவிப்பவர் :அபூ ஸயீத் அல் குத்ரீ(ரழி), நூல்: அபூதாவூத்
மூன்று முஸ்லிம் சேர்ந்துவிட்டார்களென்றால் அவர்கள் ஜமாஅத் ஆகிறார்கள். தலைவர் இல்லாமல் ஜமாஅத் இருக்க முடியாது. ஆகவே தான் நபி(ஸல்) அவர்கள் உங்களில் ஒருவரை அமீராக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கட்டளை இட்டுள்ளார்கள். ஜமாஅத்தும் அதன் அமீரும் நியமிக்கப்பட்ட பின் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் குர்ஆன், ஹதீஃதின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறது.
ஒன்றுபட்ட இஸ்லாத்தில் பல இயக்கங்களை ஏற்படுத்தி பிரிவினைக்கு வித்திட்டு ஒற்றுமைக்கு வேட்டு வைத்த “வெடி மருந்து TNTJ” ஜமாஅத் ஆலிம்கள் இந்த ஹதீஃதை மறுக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் இருந்தால் தான் அமீராக முடியும். இந்த போலி தவ்ஹீதுகளுக்கு ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் பதிலளிக்கிறார்கள்.
“பயணம் செய்து கொண்டிருக்கும் போது கூட்டமைப்பை (ஜமாஅத்) உருவாக்கிக் கொள்வது மக்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது என்றால் (நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய) ஜமாஅத் அமைப்பு சீர்குலைந்து விட்டிருக்கும் நேரத்தில் இறை நம்பிக்கை கொண்டவர்கள் ஒன்றிணைந்து அந்த ஜமாஅத்தை நிலைநிறுத்துவது அதை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். கூட்டமைப்பின்றி தனித்தனியாக வாழ முஸ்லிம்களுக்கு இஸ்லாம் அனுமதியளிக்கவில்லை”. நூல்: அல்முஸ்தகா
ஏகத்துவ இமாம்கள் :
இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள் மலிந்திருந்த அரபு நாட்டில் தவ்ஹீதை எடுத்துக்கூறி மக்களை ஒன்றுபடுத்தியவர் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் தத்தாரியர்கள் எனப்படும் மங்கோலியர்களின் கொடுமையான தாக்குதலினால் சிதறியோடிய முஸ்லிம்களை ஒன்றிணைத்து போராடி வெற்றி கண்டவர்கள் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள்.
அன்று இமாம் அவர்கள் தவ்ஹீது பெயரால் தனிப்பெயர் இயக்கம் தோற்றுவித்து மக்களை அழைத்திருப்பார்களேயானால், அவர் பின்னால் அனைவரும் ஒன்று திரண்டிருப்பார்கள். ஆனால் மார்க்க மேதை இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் மக்களை பிரிக்கவில்லை. மார்க்கத்தை பிரிக்கவில்லை, தவ்ஹீது பெயரால் தனி இயக்கம் காணவில்லை. தனிப்பள்ளி கட்டவில்லை, மாறாக நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்தியிருந்த “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்ற பேரியக்கத்திலிருந்து கொண்டே ஏகத்துவ புரட்சி செய்தார்கள்.
இந்த ஏகத்துவ முழக்கத்தை உலகளவில் உரத்துச் சொன்னவர் இமாம் முஹம்மது பின் அப்துல் வஹாப்(ரஹ்). இன்று தவ்ஹீது பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் தனி இயக்கவாதிகளுக்கும், தனிப்பள்ளி, தனி மத்ரஸா என கூலி ஆலிம்களை உருவாக்கும் இவர்களுக்கும் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹாப்(ரஹ்) அவர்கள் கூறிய தவ்ஹீதிற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
காட்டிலும் நாட்டிலும் அல் ஜமாஅத் :
ஒரு காட்டில் வாழ்கின்ற மூன்று மனிதர்களாயிருப்பினும் சரி, அவர்களும் தமக்குள் ஒருவரை அவசியம் தங்கள் அமீராக (தலைவராக)க் கொள்ள வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்ரு பின் ஆஸ்(ரழி) நூல்: அல்முன்தகா
“ஆடுகளுக்கு ஓநாய் எப்படி பகைவனாக உள்ளதோ, தம் மந்தையை விட்டு விலகித் தனியாக நிற்கும் ஆடுகளை எப்படி இலகுவாக ஓநாய் வேட்டையாடி இரையாக்கிக் கொள்கிறதோ, அதேபோன்று ஷைத்தான் மனிதனுக்கு ஓநாயாக இருக்கின்றான். மக்கள் ஒரு கூட்டமைப்பாக வாழாவிட்டால், அவன் அவர்களைத் தனித்தனியாக மிகவும் இலகுவாக வேட்டையாடி விடுகின்றான். எனவே மக்களே! குறுகலான பாதையில் நடக்காதீர்கள்! மாறாக நீங்கள் ஜமாஅத் அமைப்புடனும் முஸ்லிம் பொதுமக்களுடனும் (ஜமாஅத் அல்முஸ்லிமீன்) இணைந்து வாழுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: முஆது பின் ஜபல்(ரழி), நூல்கள்: முஸ்னத் அஹ்மத், மிஷ்காத்.
“ஜமாஅத்துடன் இணைந்து வாழுங்கள்” என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளை, எல்லா முஸ்லிம்களும் ஒன்றிணைந்த பேரமைப்பான “அல்ஜமாஅத்’தை குறிக்கிறது. அப்படிப்பட்ட பேரமைப்பு இல்லாதபோது என்ன செய்யவேண்டும்? இது ஒரு முக்கியமான கேள்வியாகும். இதற்கு எளிமையான-நேரான பதில் இதுதான். இயன்றவரை கூட்டாக-கட்டுக்கோப்பாக ஒரு அமீரின் தலைமையில் வாழவேண்டும். பிறகு பல்வேறு ஜமாஅத்துகள் இணைந்து “அல்ஜமாஅத்’ ஆக மலர வழிகோல வேண்டும். நபிமொழித் தொகுப்பு, பக்கம் 248, IFT வெளியீடு.
குறுக்கு வழி இயக்கங்கள் :
ஆக, இஸ்லாத்தின் பெயரால் தனித் தனிப் பெயர் வைத்து, தனி இயக்கம் காண எந்த ஒரு முஸ்லிமுக்கும் அனுமதியில்லை, அதிகாரமுமில்லை எவர்கள் தனிப்பெயர் வைத்து தனி இயக்கத்தில் சேருகிறார்களோ அவர்கள் நபி(ஸல்) எச்சரித்த குறுகலான பாதையில் நடப்பவர்கள். இந்த குறுகலான குறுக்குப் பாதைகளில் செல்வோரை வழிமறித்து வேட்டையாட ஷைத்தான் எனும் ஓநாய் தயாராக உள்ளான். இவனிடமிருந்து தப்பிக்க நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த பிரிவுகளற்ற “ஜமாஅத்அல் முஸ்லிமீன்’ என்ற விசாலமான நேரான இராஜபாட்டைக்கு வந்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இன்றைய போலி தவ்ஹீது தலைவர்கள் மக்களைச் சுரண்டி கொழுப்பவர்களாகவே உள்ளனர்.
“முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி (தலைவர்) அவர்களிடம் மோசடித்தனமாக நடந்து கொள்வானாயின் அவன் மீது அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : மஃகில் பின் யாஸர்(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
“முஸ்லிம்களின் விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ஓர் அதிகாரி தனக்கு நலம் நாடுவது போல் மற்ற முஸ்லிம்களுக்கு நலம் நாடவில்லை யென்றால் தன் நலனுக்காக உடலை வருத்தி உழைப்பது போல், மற்ற முஸ்லிம்களின் பணிகளை நிறைவேற்றுவதற்காக தன் உடலை வருத்தி உழைக்கவில்லை என்றால், அல்லாஹ் அவரை நரகில் தலைகுப்புற வீழ்த்திவிடுவான்” இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிப்பில், “தன்னையும், தன் வீட்டாரையும் பாதுகாப்பது போல், அவர்களை (மக்களை) பாதுகாத்திடவில்லையென்றால்” என்னும் சொற்றொடர் உள்ளது. அறிவிப்பவர்: இப்னு அபூ யூசுப்பின் கிதாபுல் கராஜ்.
இயக்க ஆலிம்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பி அதன்படி செயல்பட்டதன் விளைவு கோவை சிறையில் முஸ்லிம் இளைஞர்கள், குடும்பங்கள் வறுமையின் பிடியில். தனி இயக்கம் கண்ட தவ்ஹீது ஆலிம்களோ எப்பவும் போல் வாய்ச் சொல் வீரர்களாக வலம் வருகின்றனர்.
கடிதம் கூறும் பாடம் :
நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்தி விட்டுச் சென்ற இறை ஆட்சி அமைப்பும் (ஜமாஅத் அல்முஸ்லிமீன்) அதன் அமீரும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உரைகல்லாக விளங்கும் இரு கடிதங்கள்.
“அபூ உபைதா பின் ஜர்ராஹ், முஆது பின் ஜபல் ஆகியோரின் சார்பாக உமர்(ரழி) அவர்களுக்கு எழுதும் கடிதம் தங்கள்மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்வதற்கு முன் தங்களுடைய தனிப்பட்ட வாழ்வை சீர்படுத்திக் கொள்வதில் அக்கறையுள்ளவர்களாக இருந்தீர்கள் என்பதை அறிவோம். ஆனால் இப்பொழுதே தங்களின் தோள்களில் ஏராளச் சுமைகள்…! முழு சமுதாயத்திற்கும் பயிற்சி அளிக்கும், அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமீருல் முஃமினீன் அவர்களே! தங்களின் அவையில் உயர் அந்தஸ்து உடையோரும் வருவார்கள், சாதாரண பாமர மக்களும் வருவார்கள், பகைவர்களும் வருவார்கள், நண்பர்களும் வருவார்கள், எல்லோருக்கும் பாரபட்சமற்ற தீர்ப்பை, நீதி வழங்க வேண்டிய பொறுப்பு தங்களுக்குண்டு. ஆகவே, தங்களின் நடத்தை எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆழமாக யோசியுங்கள்!
மக்கள் அனைவரும் வல்ல இறைவனின் முன் நிற்கும் நாளை, இதயங்கள் அஞ்சி நடுங்கும் நாளை நினைத்துப் பாருங்கள்! இறையாணையைத் தவிர வேறு எந்த வாதமும் அங்கு துணைக்கு வராது. அந்நாளில் அந்த வல்ல இறைவனின் கருணையை எதிர்பார்த்த வண்ணமும், கிடைக்கப் போகும் அவனது தண்டனைக்கு அஞ்சிய வண்ணமும் மக்கள் இருப்பார்கள்.
“ஒரு காலம் வரும், அப்பொழுது மனிதர்கள் வெளித் தோற்றத்தில் நண்பர்களாய் இருப்பார்கள், உள்ளுக்குள் பகைவர்களாய் இருப்பார்கள்’ எனும் நபி மொழியைக் கேட்டுள்ளோம்.
இந்தக் கடிதம் முற்றிலும் தங்களின் நன்மையைக் கருதியே எழுதப்பட்டுள்ளது. ஆகவே இதனை சரியான கோணத்தில் பார்ப்பீர்கள், தவறாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.
இப்படிக்கு,
அபூஉபைதா, முஆது பின் ஜபல்
இக்கடிதத்திற்கு உமர்(ரழி) அவர்கள் பின்வருமாறு பதில் அளித்தார்கள்.
அன்புத் தோழர்களே! நீங்கள் இருவரும் கூட்டாக எழுதிய கடிதம் கிடைத்தது. நான் இதற்கு முன்பு என் தனிப்பட்ட வாழ்வை சீர்திருத்திக் கொள்வதில் அக்கறை உள்ளவனாக இருந்தேன் என்றும், இப்பொழுது சமுதாயப் பொறுப்புகள் என் தலையில் விழுந்துள்ளன என்றும், உயர் தகுதி கொண்டவர்கள், சாதாரண மக்கள், நண்பர்கள், பகைவர்கள் உட்பட என் அவைக்கு வரும் எல்லோரும் நீதியுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளீர்கள். மேலும் எப்படிப்பட்ட நிலையில் என் நடத்தை எப்படி இருக்கவேண்டும் என்று சிந்திக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளீர்கள்.
அருமைத் தோழர்களே! நான் இதற்கு என்ன பதில் சொல்வது? உமரிடம் எந்த வழியும் வலிமையும் இல்லையே! ஏதேனும் வலிமையோ, ஆற்றலோ கிடைக்குமெனில் அதை எனக்கு அந்த ஏக இறைவன் தான் அருள வேண்டும்.
இறுதி நாளைப் பற்றியும் எச்சரித்துள்ளீர்கள். முன்னோர்கள் எச்சரிக்கப்பட்டதைப் போல் உங்கள் பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறீர்கள். இரவும், பகலும் மாறி மாறி வருவதன் மூலம் அந்த இறுதி தீர்ப்பு நாள் வெகு விரைவாக வந்து கொண்டிருக்கிறது. அது தூரமாக இருந்தவற்றை நெருக்க மாக்குகிறது, நவீனமான ஒவ்வொன்றையும் பழையதாக்குகிறது, முன்னறிவிப்பு செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் அது கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. உலகம் முடிந்து மறுமை தோன்றும், அப்பொழுது ஒவ்வொருவரும் சுவனம் செல்வர், அல்லது நரகம் புகுவர்!
“ஒரு காலம் வரும், அப்பொழுது மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பர்களாய் பழகுவார்கள். உள்ளுக்குள் பகைவர்களாய் இருப்பார்கள்” என்ற முன்னறிவிப்பை சுட்டுக்காட்டியுள்ளீர்கள். அது உங்களைக் குறிக்கவில்லை என நம்புங்கள்! இந்தக் காலமும் அத்தகைய கயவர்கள் தோன்றும் காலமாக இல்லை. அந்தக் காலம் வரும்போது மக்கள் தங்கள் உலகியல் நலனுக்காக ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள், உலகியல் நலனை பாதுகாக்க பரஸ்பரம் அஞ்சுவார்கள், அப்படிப்பட்ட காலத்தில் தான் முன்னறிவிப்பில் சொல்லப்பட்ட நயவஞ்சகம் தோன்றும்.
இறுதியாக அந்தக் கடிதத்தைக் குறித்து நான் ஏதும் தவறாக நினைக்கக் கூடாது என்றும் எழுதியிருக்கிறீர்கள். தோழர்களே! நீங்கள் உண்மையானவர்கள், நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் எழுதியுள்ளீர்கள். இனியும் தொடர்ந்து எழுதுங்கள்! உங்களின் அறிவுரைகள் தேவைப்படாதவனாக நான் இல்லை. இப்படிக்கு, உமர் பின் கத்தாப். நபிவழித்தொகுப்பு: ப.257
நல்லவர் போலும் கள்வர் :
முஸ்லிம் சமுதாயத்திற்கு வழிகாட்டும் தலைவன், முதலில் தனது தனிப்பட்ட வாழ்வை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். இன்றைய போலி தவ்ஹீது இயக்க ஆலிம்களிடம் இது உள்ளதா? நிச்சயம் இல்லை என்பது அவர்களது பரஸ்பர ஊழல், அமானித மோசடி குற்றச்சாட்டுகளே சான்றாகும். மக்களிடம் வசூலித்த பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். மேலும் சிற்றின்ப பிரியர்களாக பெண்கள் விஷயத்தில் பலஹீனர்களாக இருப்பதை அவர்களது முன்னால் நண்பர்கள் மூலம் அறிய முடிகிறது.
நல்லவர் வேசம் போடும் இதுபோன்ற “நயவஞ்சகனை’ தலைவன் எனக் கூறாதீர்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
“நயவஞ்சகர்களை “தலைவன்’ எனக் கூறாதீர்கள்! ஏனெனில் நீங்கள் அப்படிக் கூறினால், உங்கள் அதிபதிக்குக் கோபமூட்டியவர்களாவீர்கள்”
நூல்: மிஷ்காத்
“உலகில் இரண்டு முகங்களைக் கொண்டிருந்த மனிதனை இறுதித் தீர்ப்பு நாளில் மிகத் தீய மனிதனாக நீங்கள் காண்பீர்கள். அவன் சிலரை ஒரு முகத்துடன் சந்திப்பான், வேறு சிலரை இன்னொரு முகத்துடன் சந்திப்பான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினர்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்.
“உலக வாழ்வில் இரட்டை வேடம் போட்டவனுக்கு மறுமை நாளில் நெருப்பாலான இரண்டு நாக்குகள் இருக்கும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்மார்(ரழி), நூல்: அபூதாவூத்.
உலகில் உள்ள ஏனைய மனிதர்களை, அவர்களின் அடிமைத் தனத்திலிருந்து விடுவித்து, சத்திய ஒளியை அவர்களின் நெஞ்சங்களில் ஏற்றி, ஏக இறைவனின் அடியார்களாக மாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நம் தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தப் பெரும் பொறுப்பில், சிறு துரும்பையாவது நம் பங்கிற்கு செய்யவில்லையானால், அல்லாஹ்வின் தர்பாரில் நாம் குற்றவாளிகளாக நிற்க நேரிடும்.
அன்புச் சகோதரர்களே!
நன்மைகளை நீங்கள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஒருக்காலும் தீமைக்கு துணை போகாதீர்கள். பிரிவுகளற்ற இஸ்லாத்தில் இருந்துகொண்டு பிரிவினை தனிப்பெயர் இயக்கங்களுக்கு துணை போகாதீர்கள். போலிப் பிரிவுகளில் இருந்து கொண்டு பிற மக்களையும் அதன் பால் அழைப்பது உங்களுக்கு எந்த நன்மையும் தராது. மாறாக அவர்களுக்கு தவறான வழிகாட்டியதன் மூலம் அவர்கள் பாவத்தையும் நீங்கள் சுமக்க நேரிடும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.
1442 ஆண்டுகளாக இஸ்லாம் வீறு கொண்டு விரைந்து வளர்கிறது. ஸஹாபா பெருமக்கள் காலத்திலிருந்து நன்மாராயம் கூறப்பட்ட மூன்று தலைமுறை வரை நபி தோழர்கள், தாபியீன்கள், தப உதாபியீன்கள், பின் வந்த இமாம்கள், புகாரீ, முஸ்லிம், அபுதாவூத், நஸயீ, திர்மிதி போன்ற மார்க்க அறிஞர்கள் எவரும் மக்களை ஒன்று கூட்டி தனி இயக்கம் கண்டதில்லை, தனிப் பெயரில் செயல்பட்டதில்லை. தனி தவ்ஹீது பள்ளி கட்டியதில்லை, முஸ்லிம்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தனி இயக்கம் ஆரம்பிக்கவில்லை.
இந்த நல்லடியார்கள் வாழ்ந்த காலங்களில்கூட முஸ்லிம்களுக்கு ஏராளமான தொல்லைகள், துன்பங்கள் தொடரவே செய்தது. இவற்றை நீக்குவதற்காக அல்லது அதை எதிர்த்து போராடுவதற்காகவோ எந்த இமாமும் தனி இயக்கம் காணவில்லை. தனி இயக்கங்களெல்லாம் வழிகேடு என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆகவே “இஸ்லாம்-முஸ்லிம்” இதற்கு மேல் புதிய பெயர் எதையும் ஏற்படுத்தி மக்களை அழைக்கவில்லை.
ஆகவே அன்புச் சகோதரர்களே!
இன்றைய பித்அத், ஃபித்னா போலி தவ்ஹீது இயக்க மாயையிலிருந்து விடுபட்டு, சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉ தாபியீன்கள், இமாம்கள் காட்டிய வழியில் “ஜமாஅத் அல்முஸ்லிமீன்’ எனும் நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்தித் தந்த பேரியக்கத்திலேயே இருந்து கொள்ளுங்கள். அதை விடுத்து தனிப் பெயர் குறுகலான பாதையில் சென்று ஓநாய் ஷைத்தானிடம் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று அன்போடு வேண்டுகிறோம்.
“நீர் நேசிப்பவர்களையயல்லாம் நிச்சயமாக நேர்வழியில் செலுத்திட உம்மால் முடியாது, ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்”. அல்குர்ஆன்:28:56