தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

in 2021 ஜுன்

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

அமல்களின் சிறப்புகள்….

ஒரு திறனாய்வு!

  1. அப்துல் ஹமீத்

தொடர் : 70

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.

சென்ற மே மாத இதழில் ….!

ஒருவர் செய்கின்ற திக்ர் அவருடைய உணவை அவருக்கு இழுத்துக்கொண்டு வருகிறது என்று அசி புத்தகத்தில் எழுதி இருப்பதை 30.6.2021 வியாழக்கிழமை அன்று காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணிக்குள் அந்நஜாத் அலுவலகத்தில் நிரூபிக்குமாறு சென்ற மே 2021 இதழில் தப்லீக் ஜமாத் மார்கஸின் தலைமைக்கு சவால் (CHALLANGE) விடுத்திருந்தோம். அதற்கான நிபந்தனைகளையும் அதில் தெரிவித்திருந்தோம். இதைத் தவிர ஓர் அறிமுக கடிதம் ஒன்றையும் அத்துடன் அந்நஜாத் மே 2021 இதழையும் இணைத்து கூகுளில் பெற்ற தப்லீக் ஜமாஅத் மர்கஸ் தலைமையின் முக வரிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். வாசகர்களின் பார்வைக்காக அக்கடிதத்தின் நகல் கீழே தரப்பட்டிருக்கிறது.

BY REGISTERED POST WITH A/D
TO
THE HEAD / THABLEEQ JAMAATH MARKAS
(JANAB MUHAMMAD SAAD KANDHALAWI)
HAZRAT NIZAMUDDIN ROAD,
NIZAMUDDIN, NIZAMUDDIN WEST,
NEW DELHI-110 003.

மரியாதைக்குரிய தப்லீக் ஜமாஅத் தலைவர் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இறை நெறிநூல் குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் போதனைகள் அடங்கிய ஹதீதுகள் ஆகிய இரண்டின் அடிப்படையில் மட்டும் அமைக்கப் பட்டுள்ள இஸ்லாம் மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் நல்லெண்ணத்தில், “அந்நஜாத்’ என்ற பெயரில் இஸ்லாமிய மாத இதழ் ஒன்றை தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் இந்த லெட்டர் ஹெட்டில்’ குறிப்பிட்டுள்ள முககவரியில் நாம் நடத்தி வருகின்றோம் என்பதே எமது அறிமுகம்.

இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆன் ஹதீதுகளுக்கு மாற்றமான கருத்துக்களை தப்லீக் ஜமாத்தின் “அமல்களின் சிறப்புகள்’ புத்தகம் முஸ்லிம்களிடையே பரப்பிக் கொண்டிருப்பதை அறிந்தோம். எனவே, மூன்று நபர்கள் அடங்கிய எமது குழு ஒன்று, அப்புத்தகத்தை எழுதிய மர்ஹூம் ஜகரிய்யா ஸாஹிப் அவர்களை தப்லீக் மர்கஸின் வழமையான சந்திப்பான முஸாபா செய்வதற்காக நின்று கொண்டிருக்கும் நீண்ட மக்கள் வரிசையில் நின்று சந்தித்தது.

அந்த சந்திப்பில் அவரிடம், “அமல்களின் சிறப்புகள்’ புத்தகம் குர்ஆன், ஹதீதுகளுக்கு மாற்றமான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறதென்றும், தப்லீக் ஜமாஅத்தின் தினசரி தஃலீம்களில் “அமல்களின் சிறப்புகள்’ புத்தகத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக அல்லாஹ் இறக்கி அருளிய குர்ஆனை படிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். எமது கோரிக்கையை அந்த இடத்திலேயே நிராகரித்துவிட்டு, “அமல்களின் சிறப்புகள்’ புத்தகம் படிப்பதில் “பரக்கத் இருக்கிறது’ என்று ஜகரிய்யா ஸாஹிப் அவர்கள் கூறினார்கள். வரிசை நகர்த்தப்பட்டுக் கொண்டே இருந்ததால் எமது குழுவினரும் துரிதமாக அங்கிருந்து நகர்த்தப்பட்டனர். எனவே, எமது கருத்தை மேற்கொண்டு வலியுறுத்த முடியாமல் போய்விட்டது.

குர்ஆன், ஹதீஃதுகளுக்கேற்ப செயல்பட்டால் பரக்கத் இருக்காதென்று நினைக்கிறாரா? அல்லது பரக்கத் என்பதற்கு வேறேதும் அர்த்தம் கொண்டிருப்பாரா என்ற நினைப்புடன் பெரும் கவலையுடன் எமது குழு திரும்பிவிட்டது.

இந்தக் கவலையின் தொடர்ச்சியாக, “அமல்களின் சிறப்புகள்’ புத்தகத்திலுள்ள, குர்ஆன், ஹதீஃதுகளுக்கு மாற்றமான செய்திகளை ஆய்வு செய்து முஸ்லிம்களுக்கு எமது அந்நஜாத் மாத இதழ் மூலமாக நேரடியாகத் தெரிவிப்போம் என்ற நல்லெண்ணத்தில், அவ்வாறான செய்திகளை எமது அந்நஜாத் மாத இதழில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து தெரிவித்து வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்! நடப்பு மே மாத அந்நஜாத் இதழுடன், எமது ஆய்வு 69வது தொடரைத் தொட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒருவர் செய்கின்ற திக்ர் அவருடைய உணவை அவருக்கு இழுத்துக்கொண்டுவருவதாக “அமல்களின் சிறப்புகள்’ புத்தகம் தமது கருத்தை தெரிவித்திருக்கிறது. இந்த கருத்தை எமது இந்த 69வது தொடரில் ஆய்வு செய்யும்பொழுது, திக்ர் செய்பவரின் திக்ர், அவரது உணவை இழுத்துக்கொண்டு வருகிறது என்பது சாத்தியமற்றது என்பதாகக் கருதுகிறோம். சாத்தியமற்ற விஷயத்தை இஸ்லாம் ஒருபோதும் கூறுவதில்லை. எனவே, சாத்தியமற்ற விஷயத்தை இஸ்லாத்தின் பெயரால் எழுதி இருப்பதை தப்லீக் மர்கஸ் நிரூபிக்க கடமைப்பட்டிருக்கிறது. எனவே, திக்ர் உணவை இழுத்துக்கொண்டு வருகிறது என்பதை தயவு செய்து நிரூபிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். எமது இந்த கோரிக்கையை சவாலாக (CHALLANGE) தங்கள் முன் வைக்கிறோம்.

69வது தொடர் இடம் பெற்றுள்ள எமது மே மாத அந்நஜாத் இதழை இந்தக் கடிதத்துடன் இணைத்துள்ளோம். அதில் எமது சவால் பற்றிய விவரங்கள் நிபந்தனைகளுடன்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

அன்றைய காலகட்டத்தில் இந்தக் கருத்தை தெரிவித்த தப்லீக் ஜமாஅத்தின் அப்போதைய தலைவர் மரணித்து விட்டார். அதன் பிறகு தற்சமயம் சில ஆண்டுகளாகத் தலைமைப் பொறுப்பை தாங்கள் வகித்து வருகிறீர்கள். தாங்கள் பொறுப்பேற்றதிலிருந்தும் இதுநாள்வரை அந்த சாத்தியமற்ற செயலை அமல்களின் சிறப்புகள் புத்தகத்திலிருந்து தாங்கள் நீக்கவும் இல்லை. குறைந்தபட்சம் இன்றுவரை அதற்காக வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. எனவே தெரிவிக்கப்பட்ட கருத்தை உண்மை என நிரூபிக்க வேண்டியது, தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தங்களின் மீதான தார்மீக பொறுப்பாகும். எனவே எமது சவாலை ஏற்றுக்கொண்டு, தங்களின் கருத்தை உண்மை என்பதை நிரூபிக்க முன்வருமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

எமது தரப்பில் இருவரும், தப்லீக் ஜமாஅத்தின் தரப்பில் இருவரும் இரண்டு சாட்சிகளுடன் 30.6.2021 தேதியன்று திருச்சியில் சந்திப்பதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறோம். தங்கள் ஜமாஅத்தின் சார்பாக தாங்களோ அல்லது தாங்கள் நியமிக்கும் நபர்களின் உணவு, இருப்பிடம் மற்றும் பயணத்திற்கான இரண்டாம் ஏசி ரயில் கட்டணம் ஆகியவற்றிற்கான செலவுகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இத்துடன், தமிழ்மொழி எமக்குத் தாய் மொழியாக இருப்பதாலும் உருது மொழி தங்களுக்குத் தாய்மொழியாக இருப்பதாலும், இந்த இரு மொழிகளும் அறிந்த ஒரு நபரை மொழிபெயர்ப்பாளராக நியமித்துக் கொள்வோம். அந்த மொழி பெயர்ப்பாளரை நாமே ஏற்பாடு செய்து நிகழ்ச்சிக்கு அழைத்து வருகிறோம்.

தயவு செய்து, எமது சவாலை ஏற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களின் கருத்தை நிரூபிக்குமாறு அழைக்கிறோம். தங்கள் வருகையின் ஒப்புதல் கடிதத்தை 25.5.2021 தேதிக்குள் எமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன், உண்மையுள்ள,
(அப்துர் ரஹ்மான்)
அந்நஜாத்
இணைப்பு: அந்நஜாத் மே 2021 இதழ்.

இந்த எமது கடிதத்தை தபாலில் அனுப்பியதற்கான சான்றாக, தபால்துறை அலுவலகம் வழங்கிய ரசீதின் நகல் வாசகர்களின் பார்வைக்காகக் கீழே தரப்பட்டிருக்கிறது.

தப்லீக் ஜமாஅத் மர்கஸின் தலைமை, அவர்களது கூற்றை நிரூபிக்க முன்வர விரும்பினால், அதற்குரிய ஒப்புதல் கடிதத்தை 25.5.2021க்குள் அந்நஜாத் ஆசிரியருக்கு பதிவுத் தபால் (RPAD) மூலமாக அனுப்பி வைக்கவேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தோம். அல்லவா? 25.5.2021 தேதியை கடந்த பின்பும் இன்றுவரை தப்லீக் ஜமாஅத் மர்கஸின் தலைமையிடமிருந்து ஒப்புதல் கடிதம் எமது அலுவலகத்திற்கு வந்துசேரவில்லை என்பதை வாசகர்களுக்கு இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். அதுமட்டுமில்லாமல் எமது கடிதம் அவர்களது மர்கஸில் பட்டுவாடா (DELIVERY) செய்யப்பட்டதற்கான ஒப்புதலும் (ACKNOWLEDGEMENT) இதுவரை தபால் துறையிடமிருந்தும் எமக்கு வந்து சேரவுமில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டின் மிகப் பெரிய சவாலாக, சர்வ தேச பரவலாக (PANDEMIC) கோவிட் 19 இருந்து வரும் இக்கட்டான இந்த சூழலில், எமது கடிதம் மர்கஸுக்கு இன்னும் பட்டுவாடா செய்யப்படாமல் இருந்து, அதனால் மர்கஸிடமிருந்து ஒப்புதல் கடிதமும் எமக்கு இன்னும் வராமல் இருப்பதாலும், அல்லது குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி தேதி தப்லீக் ஜமாஅத் மர்கஸின் தலைமைக்கு தோதாக இல்லை என்றாலும் இருசாராரும் கலந்து ஆலோசித்து அதற்கேற்ப நிகழ்ச்சி தேதியை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கூகுளில் பெற்ற தப்லீக் ஜமாஅத்தின் முகவரி ஒருக்கால் இன்றைய தேதிக்கு சரியானதாக இருக்காதோ என்ற அச்சமும் எம்மில் ஒரு சிலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. எனவே, வாசகர்களில், எவரேனும் தப்லீக் ஜமாஅத் மர்கஸின் சரியான முகவரியை அறிந்திருந்தாலோ அல்லது தெரிந்தவர்களை அணுகி பெறமுடியுமேயானால், முயற்சி செய்து உடனடியாக பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Previous post:

Next post: