அய்யாமுல் ஜாஹிலிய்யா

in 2021 ஜுலை

அய்யாமுல் ஜாஹிலிய்யா

அறியாமைக் காலத்து மடமைத்தனம்…

– ABA

மனித சமுதாயத்தை சீர்திருத்தும் உயர்ந்த எண்ணங்களோடு இலட்சியங்களோடு, இன்றைய உலகிலே பல்வேறு இயக்கங்கள் பாடுபடுவதாக கூறுகின்றன. அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். இதிலே பகுத்தறிவு வாதம் பேசுவோர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். உலக மக்கள் அனைவரும் “ஒரே கடவுள்’ என்ற கொள்கையின் கீழ் வருவது பகுத்தறிவா? அல்லது அவரவர், மொழி ரீதியாக, இன ரீதியாக தத்தமது இஷ்டத்திற்கு வாழ்வை அமைத்துக் கொள்வது பகுத்தறிவா? என்ற இரண்டு கேள்விகளை மக்கள் முன் வைக்கிறோம்.

சிந்திப்பவர்களே! சிந்தியுங்கள். கண்ட கண்ட கற்சிலைகளை எல்லாம் உதறிவிட்டோம்! மனித சமுதாயத்திற்கு பாடுபட்ட மரியாதைக்குரிய பெரியவர்களை வணங் காமல் அவர்களையும் படைத்தது ஒரே இறைவனே! என்ற கொள்கையின் கீழ் வந்துவிட்ட முஸ்லிம்களே! இனி நாம் சிந்திப்போம்.

ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைக் கூட பின்பற்றக் கூடாது என்று (அல்குர்ஆன் 24:21ல்) இறைவன் கட்டளையிடுகிறானே! அதைப் படித்து சிந்தித்தோமா?

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, கற்சிலைகள் செவியேற்குமா? பார்க்குமா? என்ற சமுதாய மக்களை சிந்திக்க வைத்த இப்ராஹீம் நபியின் வழி வந்த சமுதாயத்தில் இருக்கும் இஸ்லாமிய சமுதாய மக்களே! சகோதர சகோதரிகளே! நாமெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சிந்தித்தோமா?

நபி(ஸல்) அவர்களின் இஸ்லாமிய பணியின் முக்கிய காலகட்டத்திலே, மது வகைகளை மக்கள் அருந்திமிருகத்திலும் கேவலமாக வாழ்ந்தபோது அந்த போதை வகைகளை எதிர்த்து போர் புரிந்து வெற்றி யீட்டியவர் நபி(ஸல்) அவர்கள், அந்த நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்றுள்ள பணிகளை நாம் செய்ய வேண்டும் என்று கூறும் மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகளே! அதே ஜாஹிலியத் இன்று தெருவுக்கு தெரு தலைவிரித்து ஆடுகிறதே! ஜாஹிலியத்துக்கு எதிராக போர் புரிகின்ற பாரம்பரியத்துக்கு சொந்தக்காரர்கள் நாம் என்று நாம் கூற நமக்கு தகுதி இருக்கிறதா?

மக்களை சுரண்டிப் பிழைக்கும் சூதாட்டம் எல்லா ஊர்களில் வீதிக்கு வீதி “லாட்டரி’ என்ற பெயரிலே நடத்தப்பட்டு வருகிறதே! இந்த ஜாஹிலியத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது நமது தலையாயப் பணி என்பதை நாம் ஏன் மறந்தோம்?

பச்சை விபச்சார காட்சிகளும், குழந்தைகளையும் கெடுக்கும் ஆபாச காட்சிகளும் ஜாஹிலியத்தின் புதிய காப்பிகள் இல்லையா? இந்த ஜாஹிலியத்தை வீட்டுக்கு வீடு கேபிள் டி.வி. என்ற பெயரால் கண்டுகளிக்கும் இஸ்லாமிய சமுதாயமே! நாமெல்லாம் ஏன் இப்படி கெட்டு சீரழிகின்றோம்?

நமக்கு பகுத்தறிவு இல்லையா? சிந்திப்போம். இஸ்லாமிய அழைப்புப் பணி புரிவதாக கூறும் சகோதர சகோதரிகளே! கைகளை (தொழும்போது) மேலே கட்டு வது, விரலை நீட்டுவது இவைகள் எல்லாம் தஃவா பணியில் ஒரு அம்சம் மட்டுமே என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

இதோ, இறைவனின் இறைநெறிநூல் அல்குர்ஆன்! இதோ, நபி(ஸல்) அவர்கள் சொல், செயல், அங்கீகாரம் என்று கூறும் போது, இல்லை! இல்லை! எங்கள் தாய் தந்தை, பாட்டன், முப்பாட்டனெல்லாம் செய்ததை மாற்றுவதற்கு எங்களுக்கு மனமில்லை என்று முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் கூறுகிறார்களே, இதுவும் அதே ஜாஹிலியத்தான்.

அன்று பெற்றெடுத்த பெண் பிள்ளைகளை கொன்றார்கள்! இன்று குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள். அன்றாவது பிள்ளையை சாகடித்த பிறகு கதை முடிந் தது என்று இருந்திருப்பார்கள்! இன்று குப்பைத் தொட்டியில் அனாதையாக போடப்பட்ட பெண் பிள்ளை கொஞ்சம் கொஞ்சமாக எப்படி சாகிறதோ என்று நினைக்காமல் இருக்கும் மன நிலை வந்துவிட்டதே! இது ஜாஹிலியத்தின் உச்சகட்டமல்லவா?

ஜனநாயகம் என்ற பெயரால் மக்களது வரிப்பணத்தையயல்லாம் கொள்ளை யடித்து கும்மாளமிடும் அரசியல்வாதிகளைத் தானே நாட்டை ஆள மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இங்கே தலைவர்களும், அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் சேர்ந்தல்லவா ஜாஹிலியத்தில் இருக்கிறார்கள். இந்த ஜாஹிலியத்திற்கு எதிராக போர்க்குரல் எழுப்புவது நமது கடமை யில்லையா?

இதோ இறைவன் அளித்த நெறிநூல் இருக்கிறது. உங்களுக்கு என்ன மொழி தெரியும்? அந்த மொழியில் அல்குர்ஆனை உங்களுக்கு தருகிறோம். படியுங்கள், சிந்தியுங்கள் என்று கூறும்போது பெரியார்கள், உலமாக்கள், இவர்கள் உருவாக்கி வழங்கி யிருக்கும் தஃலீம் தொகுப்பு என்ற நூலை மட்டும் உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்லும் இஸ்லாமிய சகோதரர்களே! ஏன் ஜாஹிலியத்திற்குள் உங்களையும் அறியாமல் மாட்டிக்கொண்டு விட்டீர்கள்? ஜாஹிலியத்தின் பிடியிலிருந்து வெளியே வாருங்கள்! ஜாஹிலியத்தை யயல்லாம் ஒழித்து வெற்றி கண்ட வரலாற்று நாயகர் மாமனிதர் நபி(ஸல்) அவர்களின் உம்மத்துகள் நாம்.

சாதாரண குடிமகன் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும்போது, பெற்றெடுத்த பெண் பிள்ளையை மணமுடித்துக் கொடுக்க கஷ்டப்படும் போது, அரசியல் என்ற பெயரால், கோடிகள் வீதிகளில் இறைக்கப்படுவது அதே ஜாஹிலியத்தானே?

இப்பொழுது அல்குர்ஆனிற்கு செல்வோம். 5:55,56ஐ படிப்போம்.

எவர்கள், அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், விசுவாசங் கொண்டவர்களையும் (தங்களுக்கு) தோழர்களாக எடுத்துக் கொள்கின்றார்களோ, அப்பொழுது (அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர் ஆவார்கள்) நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர், அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

இறைவன் நமக்களிக்கும் உறுதி மொழியையை படித்தீர்களா? இறைவனுடைய வாக்கு பொய்யாகாது. இறைவன் வழங்கிய திருகுர்ஆனை நம்புகின்ற முஸ்லிம் சமுதாயமே! அய்யாமுல் ஜாஹிலியா காலம் என்றோ முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். இன்று பல்வேறு பெயர்களில் நமக்கு மத்தியில் தலைவிரித் தாடுகிறது. பொய் பேசுதல், வாக்கு மீறுதல் இவைகளும் ஜாஹிலியத்துகள்தானே! சோம்பேறித்தனமும் ஜாஹிலியத்தின் ஒரு வகை தானே!

இஸ்லாம் ஒவ்வொரு சாதாரண மனிதனும் பின்பற்ற எளிதான மார்க்கம்! இப்படிப்பட்ட எளிதான மார்க்கத்தை கஷ்டப்படுத்தி தங்களது சுயவிளக்கத்தின் அடிப்படையில் தரீக்காக்களை உருவாக்கி மக்களை வழிகெடுப்பது ஜாஹிலியத் இல்லையா? “உஸ்வத்துல் ஹஸனா” (அழகிய முன்மாதிரியான) நபி(ஸல்) அவர்கள் காண்பித்த தரீக்காவின் (வழி) பக்கம் மக்களை அழைப்பது தான் உண்மையான தஃவா பணியாகும்.

வாதப் பிரதிவாதங்களின் மூலம் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் குர்ஆன், ஹதீஃத் பேசும் சகோதர சகோதரிகள் நற்பணிகளும், நற்செயல்களும் “உம்மத்தன் வாஹிதா’வாகிய நமது கடமை என்பதை இனி நாம் உணர்வோம்.

அந்த அய்யாமுல் ஜாஹிலியாவின் அதே பாதிப்புகள், வேறு பெயரில் இன்று உலகை ஆட்டுவிக்கின்றன. இந்த அய்யாமுல் ஜாஹிலியாவிற்கு எதிராக “இஸ்லாமிய வாழ்வு’ எனும் ஆயுதத்தை கையிலேந்தியவர்களாக இறைநினைவுடன் பணிகளில் ஈடுபடுவோம். இறைவன் வெற்றியை வழங்குவான்! அதற்கு நம்மை அர்ப்பணிக்க நாம் தயாராகுவோம்.

Previous post:

Next post: