விமர்சனமும்! விளக்கமும்!!
– ABA
விமர்சனம் : அந்நஜாத் ஜூன் 21 இதழ். பக்கம் 13ல் தப்லீக் மர்கஸிற்கு விவாதத்திற்கு வர அழைப்பு விடுத்து அனுப்பிய கடிதம் கண்டேன். அந்நஜாத்திற்கு தப்லீக் மீது இவ்வளவு வன்மம் ஏன் என்பது எனக்கு புரியவில்லை.
1985க்கு முன் ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் அவர்களும் அந்த பணியை செய்தவர்கள்தான் அதன்பிறகு தப்லீக் ஜமாஅத்திற்கு மட்டுமல்ல, முக்கியமான அனைத்து மதரஸாக்களுக்கும் கடிதம் எழுதினார்கள். எந்த பயனும் இல்லை என்று தெரிந்த பின் அதனை மக்கள் மன்றத்தில் தான் வைத்தார்கள். அதன்மூலம் சுய சிந்தனையாளர்களை உருவாக்கியும் காட்டினார்கள்.
மர்கஸுக்கு அனுப்பிய கடிதத்தை அவர்கள் கண்டுகொள்ளவுமாட்டார்கள். அதற்கு பதிலளிக்கவுமாட்டார்கள். இது தெரிந்தும் இந்த வீண் முயற்சியில் அந்நஜாத் ஏன் இறங்குகிறது என்பது எனக்குப் புரியவில்லை.
தங்கள் தொண்டர்களை தக்க வைக்க எதற்கெடுத்தாலும் விவாதத்திற்கு அறை கூவல் விடும் நவீன இயக்கங்கள் கடந்த காலங்களில் விவாதம் நடத்தி சாதித்தது என்ன? இயக்கங்களின் பாதையில் அந்நஜாத் பயனிக்கிறதோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது.
விவாதத்திற்கு அப்பாவி தப்லீக்கிற்கு அழைப்பு அனுப்புவதை விட்டுவிட்டு தங்கள் ஊரில் ஷிர்க்கின் உச்சத்திலிருக்கும் நத்தர்ஷா தர்ஹாவிற்கு கடிதம் எழுதி அவர்களுடன் விவாதித்திருக்கலாம். பயனுள்ளதாக இருக்கும். M.A.நாசர், நாகர்கோவில்.
விளக்கம் : அந்நஜாத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருபவர் தாங்கள். இயக்கங்களின் பாதையில் அந்நஜாத் பயணிக்கிறதோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது என்று அக்கறையுடன் எழுதியிருக்கிறீர்கள். அதிலிருந்து அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக. அந்நஜாத் மீது தாங்கள் கொண்டுள்ள அக்கறை தங்களுக்கு நம்மை நன்றி செலுத்த வைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி தருவானாக.
தங்கள் விமர்சனத்தில் மர்கஸுக்கு அனுப்பிய கடிதத்தை அவர்கள் கண்டு கொள்ளவுமாட்டார்கள். அதற்கு பதிலளிக்கவுமாட்டார்கள். இது தெரிந்தும் இந்த வீண் முயற்சியில் அந்நஜாத் ஏன் இறங்குகிறது என்பது எனக்குப் புரியவில்லை என்று கூறி இருக்கிறீர்கள். தாங்கள் கூறியிருக்கும் அத்தனையும் உண்மை. இதில் மாபெரும் உண்மை யாதெனில் எமக்கு “இது தெரிந்தும்’ என்று எழுதியிருப்பதே! அல்லாஹ் தங்களுக்கு கொடுத்த அறிவு இது.
அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் முன் மாதிரியில் நாம் அறிந்தவரை அவர்கள் எவருடனும் விவாதம் புரிந்ததில்லை. எனவே, நாம் எவரையும் இன்று வரை விவாதத்திற்கு அழைத்ததில்லை. இன்ஷா அல்லாஹ். இனியும் அவ்வாறே!
தவ்ராத் வேதத்தின் பிரதி ஒன்றை உமர் (ரழி) அவர்கள் படித்தபோது, (கண்கள் சிவக்க கோபத்துடன் தவ்ராத் வேதம் யார் மீது அருளப்பட்டதோ) அந்த மூசா இப்போது இருந்தாலும், அவருக்கு என்னை பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதை படித்த பிறகு தெரிந்து கொள்வதற்காக பிற வேதங்களைப் படித்துக் கொண்டிருந்த நாம் இன்று வரை பிற வேதங்களை படித்துப் பார்க்க நினைத்தது கூட இல்லை.
ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நாம் எவரையும் வாதத்திற்கு அழைத்ததில்லை. டெல்லி மர்கஸைக் கூட விவாதிக்க வருமாறு நாம் அழைக்கவே இல்லை. மாறாக உணவை இழுத்துக்கொண்டு வருவதை நேரில் செய்து காண்பிக்குமாறு மட்டுமே கோரியிருந்தோம். எமது கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள், தெரியவரும்.
“தப்லீக் மீது இவ்வளவு வன்மம் ஏன் என்பது எனக்கு புரியவில்லை” என்று தாங்கள் வினவி இருப்பது தங்களின் கூற்றுதானா இது என்று எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. தப்லீக் ஜமாத்தின் அமல்களின் சிறப்புகளின் ஆய்வை கடந்த 71 மாதங்களாக மக்கள் மன்றத்தில் வைத்துக் கொண்டு இருக்கிறோம். தப்லீக் ஜமாத்தின் அமல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஃதுகளுக்கு எதிராக இருப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறோம். கோடிக்கணக்கான அறியா மக்களை இஸ்லாம் அல்லாத ஒரு பாதையில் சிக்க வைத்து நாசம் செய்தவர்கள் மீது நாம் ஏன் கோபம் கொள்ளக்கூடாது? மாதிரிக்கு ஒன்று. அக்டோபர் 2020 அந்நஜாத் இதழில் வெளியாகிய அமல்களின் சிறப்புகள் ஆய்வை படித்துப் பாருங்கள். அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும், முஃமின்களின் தாய் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களையும் பொய்யர்களாக காண்பிக்கிறார் அசி ஆசிரியர். படித்துப் பாருங்கள், புரியவில்லை எனக் கூறும் நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்.
இஸ்லாத்தை நேசிக்கும் எவருமே இதைப் படித்தால் அவர்களை கொஞ்சிக் கொண்டு இருக்கமாட்டார்கள். கோபம் கொள்ளத்தான் செய்வர். வன்மம் என்ற வார்த்தைக்கு தீராப்பகை என்று பொருள் உண்டு. நாம் அவர்கள் மீது கொண்டிருப்பது கோபம் அவரவர் விதைத்ததை அவரவர் அறுவடை செய்துதான் ஆகவேண்டும்.
அவர்கள் மீது எமக்கு தீராப்பகை (வன்மம்) இல்லை என்பதையும் ஏற்கனவே நிரூபித்திருக்கிறோம். முஸ்லிம்கள் மீது வஞ்சம் கொண்டுள்ள பி.ஜே.பி. அரசு, அப்பாவி தப்லீக் மர்கஸ் மீது கொரோனா கால கட்டத்தில் அவதூறுகளை அள்ளி வீசியபோது, மர்கஸினருக்கு ஆதரவாக தலையங்கத்தில் எமது குரலை முதன் முதலில் பதிவு செய்தோம். அது தலையங்கமாக இல்லாமல் ஒரு கட்டுரையாக இருக்கும் அளவுக்கு எழுதும்படி ஆகிவிட்டது.
இறுதியாக, நாம் கூறுவது யாதெனில், மர்கஸுக்கு நாம் எழுதிய கடிதத்தில் நிச்சயமாக நாம் அவர்களை விவாதம் நடத்த அழைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியதை காட்சிப்படுத்திக் காட்டுமாறு மட்டுமே கோரியிருந்தோம் எனக் கூறிக் கொண்டு தங்களின் அறிவுரைக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.