அமல்களின் சிறப்புகள்….
தொடர் : 72
- அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்)
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.
தமிழாக்கமும், வெளியிட்டோரும் :
பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையி லிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது பதிப்பு என்பது குறிப்பிடப்படவில்லை.
சென்ற இதழில் …!
அசி புத்தகம் பக்கம் 407ல் 8ஆம் எண்ணில் குறிப்பிட்டிருந்த தப்லிக் ஜமாத்தினர் செய்யும் திக்ரின் சிறப்புகள்
செய்தியில், “திக்ர்’ செய்பவரைப் பற்றி ஒருவித அச்சத்தையும், இன்பத்தையும் ஏற்படுத்துகிறது, அதாவது அவர் பார்வையில் பயம் பிரதிபலிக்கும். அவரைப் பார்ப்பதில் ஒருவித இன்பமும் உண்டாகும்” என்று எழுதியிருப்பது தவறான கருத்து என்பதை விளக்கி இருந்தோம்.
இந்த இதழில் …!
அசி புத்தக பக்கம் 410ல் எண் 27ல் குறிப்பிடப்பட்டிருப்பதாவது; திக்ரின் காரணமாக திக்ர் செய்பவர்களும், அவர்களுக்கு அருகில் இருப்பவர்களும் நற்பாக்கியவான்களாகி விடுகின்றனர். திக்ரை மறந்து வீண் பேச்சுகளில் ஈடுபட்டிருப்பவர்கள் துர்பாக்கியவான்களாக இருப்பதுடன், அவர்களுக்கு அருகில் இருப்பவர்களும் துர்பாக் கியவான்களாகி விடுகின்றனர்.
எமது ஆய்வு :
அருகில் இருப்பவரை ஈர்த்து, திக்ர் செய்பவருக்குக் கிடைத்த சக்தி, ஈர்க்கப்பட்டவருக்கும் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளுக்கு இருப்பதாக தெரிவித்ததில்லை. மாறாக, இதே ஆய்வில் இடம் பெற்றுள்ள ஒரு நீண்ட ஹதீதிலிருந்து அறிந்துகொள்ள முடிவது என்னவென்றால், “அவர்களுடன் வந்தமர்ந்த ஒருவன் அவர்களால் பாக்கியமற்றவனாக மாட்டான்’ என்று அறியமுடிகிறது. அப்படியானால், “அவர்களால் பாக்கியமுள்ளவனாகுவான் என்று பொருள் கொள்ள முடியுமா?’ அது வும் முடியாது; ஏனெனில், வந்தமர்ந்தவருக்கு பாக்கியம் கிடைப்பதும், கிடைக்காததும் அல்லாஹ்வின் நாட்டத்திலுள்ள வியமாகுமே. எனவே, திக்ர் செய்பவர் களால், வந்தமர்ந்தவருக்கு பாக்கியம் கிடைக்கவோ அல்லது கிடைக்காமல் இருக்கவோ செய்யமுடியாது என்பதை இந்த ஹதீத் தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கிறது.
உண்மை இவ்வாறாக இருக்கும்போது, இவர்கள் கற்றுத் தந்த திக்ருகளை செய்வதால் இவர்களுக்கு ஏதோ சக்தி (POWER) கிடைத்து விடுவது போலவும், அந்த சக்தியால் அருகில் இருப்பவர்கள் ஈர்க்கப்பட்டு விடுவதாக நினைத்துக் கொண்டு, “திக்ரின் காரணமாக திக்ர் செய்பவர்களும், அவர்களுக்கு அருகில் இருப்பவர்களும் நற்பாக்கியவான்களாகி விடுகின்றனர். திக்ரை மறந்து வீண் பேச்சுகளில் ஈடுபட்டிருப்பவர்கள் துர்பாக்கியவான்களாக இருப்பதுடன், அவர்களுக்கு அருகில் இருப்பவர்களும் துர்பாக்கியவான்களாகி விடுகின்றனர்’ என்று கதை அளக்கிறார்கள்.
இந்த கதையை எப்படி தயார் செய்தார்கள் தெரியுமா? ஓர் ஹதீதை திருப்பிப் போட்டு (உல்ட்டா வேலை செய்து), அந்த ஹதீதின் கருத்தில் தமது சொந்த கருத்தை சொருகி இருக்கிறது அசி புத்தகம்! அந்த ஹதீதை பாருங்கள்!
இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள், அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர் கள் கண்டால், “உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்’ என்று அவர்கள் ஒரு வரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்று கிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர்.
அப்போது அவ்வானவர்களிடம் அவர் களின் இறைவன், “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?’ என்று கேட்கிறான். அவ் வானவர்களை விட அவனே தன் அடியார் களை நன்கறிந்தவனாவான் என்று கூறி துதிக்கின்றனர். “உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னை புகழ்ந்து கொண் டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக் கின்றனர்’ என்று வானவர்கள் கூறுகின்ற னர். அதற்கு இறைவன், “அவர்கள் என் னைப் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட் பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னைப் பார்த்து இருந்தால் எப்படி இருப்பார்கள்?’ என்று கேட்பான். “உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன் னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றி புகழ்ந்து துதிப்பார்கள்’ என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.
அதற்கு இறைவன், “என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்? என்று கேட்பான். “உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்’ என்பார்கள் வானவர்கள். அதற்கு இறைவன், “அவர்கள் அதைப் பார்த்தது உண்டா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன்மீது ஆணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்தது இல்லை’ என்பர். அதற்கு இறை வன், “அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால், அவர்கள் நிலை எப்படி இருக்கும்?’ என்று கேட்பான். “சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால், இன்னும் அதிகமாக அதன் மீது ஆசை கொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்’ என்று பதிலளிப்பார்கள்.
“அவர்கள் எதிலிருந்து பாதுகாப்பு தேடுகின்றனர்?’ என்று இறைவன் வினவுவான். “நரகத்திலிருந்து’ என்று வானவர்கள் பதிலளிப்பார்கள். “அதனை அவர்கள் பார்த்து இருக்கிறார்களா?’ என்று இறைவன் கேட்பான். “இல்லை; உன்மீது ஆணையாக அதனை அவர்கள் பார்த்ததில்லை’ என்பர் வானவர்கள். அதற்கு இறைவன், “அவ்வாறாயின், அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக் கும்?’ என்று கேட்பான். “நரகத்தை அவர் கள் பார்த்திருந்தால், நிச்சயம் அவர்கள் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும், அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்’ என்பர். அப்போது இறைவன், “எனவே, அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்’ என்று கூறுவான்.
அந்த வானவர்களிடையே உள்ள ஒருவானவர், “இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்’ என்பர். அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்தமர்ந்த ஒருவன் அவர்களால் பாக்கியமற்றவனாக மாட்டான்’ என்று கூறுவான். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரழி), புகாரீ எண்: 6408)
அல்லாஹ்வும், அவனது தூதர்(ஸல்) அவர்களும் காட்டித்தந்த திக்ருகளுக்குள்ள சிறப்பு அந்தஸ்தை இந்த ஹதீத் தெளிவாக காட்டி இருக்கிறது. இந்த ஹதீதை அசி புத்தகம் காண்பித்து, அல்லாஹ்வும், அவனது தூதர்(ஸல்) அவர்களும் காட்டித் தராத தப்லீக் ஜமாத்தினர் செய்யும் திக்ருகளுக்கு இப்படிப்பட்ட சிறப்புகள் இருப்பதாக எடுத்து வைத்திருந்ததை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம்.
ஆனால், இங்கே இந்த ஹதீதைக் கொண்டு வேறு வேலையையும் அசி புத்தகம் செய்வதைப் பாருங்கள்! இந்த ஹதீதில் கூறப்பட்டுள்ள, “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்தமர்ந்த ஒருவன் அவர்களால் பாக்கிய மற்றவனாக மாட்டான்’ என்ற செய்தியை அடிப்படையாக வைத்துக்கொண்டு, “திக்ரின் காரணமாக திக்ர் செய்பவர் களும், அவர்களுக்கு அருகில் இருப்பவர்களும் நற்பாக்கியவான்களாகி விடுகின்றனர். திக்ரை மறந்து வீண் பேச்சுகளில் ஈடுபட்டிருப்பவர்கள் துர்பாக்கியவான்களாக இருப்பதுடன், அவர்களுக்கு அருகில் இருப்பவர்களும் துர்பாக்கியவான்களாகி விடுகின்றனர்’ என்று தமது சொந்த கருத்தை எழுதித் தள்ளி இருக்கின்றனர். பாக்கியம் கிடைப்பதும், துர்பாக்கியம் கிடைப்பதும் அல்லாஹ்வின் நாட்டத்தில் அமையும் விஷயம் என்பதை மறந்தவர்களாய், நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீது என்பதை இங்கு காண்பிக்காமல், ஹதீதுகளை தமக்குத் தோன்றும் எண்ணங்களுக் கேற்ப வளைத்து, திரித்து வேறு பொருளில் மாற்றி தங்களின் சொந்த கருத்தை ஹதீது போலவே எழுதி இருக்கின்றனர். ஒரு ஹதீதை எடுத்துக் கொண்டு அந்த ஹதீதுக்கு எதிராக வெவ்வேறு கதைகளைத் தெரிவிப்பது இவர்களது வாடிக்கையாகிவிட்டது.
அதாவது திக்ர் காரணமாக பாக்கியவானாக ஆவதாகவும், திக்ரை மறந்து விட்டால் துர்பாக்கியவானாக ஆவதாகவும் எழுதி இருக்கிறது அசி புத்தகம்! இதன் அர்த்தம் என்னவென்றால், தப்லீக் ஜமாஅத் தினர் கூறும் “மஃரிபத்’ எனும் அவர்களின் நடைமுறையில் உள்ள தொழுகை போன்ற அமல்கள் செய்யாமல், அவர்களின் திக்ர் சபையில் போய் உட்கார்ந்து விட்டாலே பாக்கியம் கிடைத்து விடும் என்று சூஃபியாக்கள் பின்பற்றும் கொள்கைதான் இந்த மஃரிபத் ஆகும்.
மறுமையின் விசாரணையில் தொழாதவனுக்கு நரகம் தான் கூலி என்றும், தொழுகையைப் பற்றிதான் முதன்முதலாக கேள்வி கேட்கப்படும் என்றும், அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் அச்சமூட்டியதெல்லாம் இவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை இவர்களின் கூற்றிலிருந்து தெளிவாக அறியமுடிகிறது.
இறுதியாக! அல்லாஹ்வின் தூதரிடம் முன்மாதிரி இருக்கிறதென்று அல்லாஹு தஆலா அறிவுறுத்திய பின்பும் (அல்குர்ஆன் 33:21), இந்த இறைக்கட்டளையை அலட்சி யம் செய்துவிட்டு, தூதரின் அறிவுரைகளுக்கு எதிராக கண்டதை எழுதிக் கொண்டிருக்கும் அசி புத்தகத்தை தஃலீம் செய்வதற்கு பதிலாக, அல்லாஹ் அகில உலகத்தாருக்கும் நேர்வழி காட்ட இறக்கி அருள் புரிந்துள்ள பரிசுத்த குர்ஆனை தினமும் அவரவர் வீடுகளில் தஃலீம் செய்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அசி புத்தகம் அடுத்து தெரிவித்திருப்பதாவது:
அசி புத்தகம் பக்கம் 410ல் எண். 30ல் தெரிவித்திருக்கும் செய்தியாவது: “திக்ர் செய்வதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு துஆச் செய்பவர்களுக்கு கிடைக்கப்பெறும் பாக்கியங்களை விட அதிகமானவை கிடைக்கும். என்னுடைய திக்ரு, துஆச் செய்வதை விட்டு யாரைத் தடுத்து விட்டதோ, துஆ கேட்பவர்களுக்குக் கொடுப்பதை விட சிறந்ததை நான் அவருக்கு வழங்குவேன்’ என்று அல்லாஹு தஆலா கூறியதாக ஒரு ஹதீஃதில் அறிவிக்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்டிருக்கிறது. இன்ஷா அல்லாஹ்! அடுத்த இதழில் இதனை ஆய்வு செய்வோம்.