இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

in 2021 ஆகஸ்ட்

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

தொடர்-12

அபூ அப்தில்லாஹ்

அகில உலக அனைத்து மக்களின் ஒரே இறைவனான ஏகன் அல்லாஹ்வின் இறுதி வழிகாட்டி நூலான அல்குர்ஆன் இரவையும், பகலைப் போல் வெள்ளை வெளேர் என்று அனைத்து மக்களுக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் புரோகித மவ்லவிகள் அல்குர்ஆன் உங்களுக்கு விளங்காது; ஆய கலை 64ம் கரைத்துக் குடித்தவர்களுக்கே விளங்கும் என புருடா விடுகிறார்கள். அல்குர்ஆனின் நேரடிக் கருத்துக்களைத் திரித்து, வளைத்து, மறைத்து நேர்வழியை கோணல் வழியாக ஆக்கி அவர்கள் சுய ஆதாயம் அடைவதே அவர்களின் மாறாத லட்சியமாகும்.

எனவே அல்குர்ஆன் வசனங்களை எப்படி எல்லாம் திரித்து, வளைத்து, மறைத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை இத்தொடரில் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த இதழில் அல்பகரா 2:191ல் உள்ள “…ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும்…” என்ற பகுதியை எப்படித் திரித்து, வளைத்து, மறைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

இன்று நான்கு மத்ஹபுகளின் அடிப் படையில் முஸ்லிம்கள் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து வருவது போலும், எம்மைப் போன்றோர் அந்த மத்ஹபு போதனைகளை வழிகேடு என்று கூறி மக்களிடையே குழப்பங்களையும், கலகங்களையும் விளைவித்து வருவதாகவும், இச்செயல் கொலை செய்வதை விடக் கொடிய குற்றமாகும் என்று தங்கள் பிடியிலுள்ள மக்களிடம் கூறி எங்கள் மீது நீங்கா கோபமும், ஆத்திரமும் முஸ்லிம் சமுதாயம் கொள்ளச் செய்யும் கைங்கரியத்தை இந்தப் புரோகித மவ்லவிகள் செய்து வருகின்றனர். அதில் குளிர் காய்கின்றனர்.

ஆனால் அல்குர்ஆன் அல்பகரா 2:191 முதல் 193 வரையுள்ள இறைவாக்குகளை நேரடியாக தன் நம்பிக்கையுடன் சுய சிந்தனையுடன் படித்துப் பார்ப்பவர்கள் இந்தப் புரோகித மவ்லவிகளின் கயவாளித்தனத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

அன்றைய அரபு நாட்டு மக்கள் அவர்கள் பின்பற்ற வேண்டிய இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல்(அலை) அவர்களின் தூய வாழ்க்கை நெறிப்போதனைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு அவர்களிடையே இருந்த புரோகிதர்களின் போதனைப்படி முன்னோர்களின், மூதாதையர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின் பற்றி நடந்து வந்தனர். இந்த நிலையில் இறைவனின் இறுதித் தூதர் அந்த மக்களிடையே இறைவனால் இறக்கியருளப்பட்ட இறுதி வழிகாட்டி நூலான அல்குர்ஆன் போதனைகளை எடுத்து வைத்தார்கள்.

தங்களை வழிநடத்திச் சென்ற புரோகிதர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத் திருந்த குறைஷ்கள், அவர்களின் வழிகேட்டுப் போதனைகளையே வேதவாக்காகக் கொண்டு நபி(ஸல்) அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அவர்களிடையே சத்தியத்தை-நேர்வழியை ஏற்றுக் கொண்டவர்களுக்கும், நேர்வழியை நிராகரித்து புரோகிதர்களின் கோணல் வழியிலேயே சென்று கொண்டிருந்தவர்களுக்குமிடையே கடும் மோதல் உருவானது. தகப்பனுக்கும், மகனுக்கும், அண்ணனுக்கும், தம்பிக்கும், கணவனுக்கும், மனைவிக்கும் இப்படி நெருங்கிய உறவினர்களுக்கிடையே கூட பெரும் மோதல் வெடித்தது. கணவன், மனைவியர்களுக்கிடையே மணமுறிவு கூட ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் இரண்டு மகள்களை திருமண முடித்திருந்த அபூலஹ பின் இரண்டு மகன்கள் அவர்களை மண முறிவு செய்து நபி(ஸல்) அவர்களிடமே அனுப்பி வைத்து விட்டார்கள். இப்படி பெரும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது உண்மைதான். அதனால் நபி(ஸல்) அவர்கள் தங்கள் சமூகத்தில் பெரும் குழப்பம் விளைவிப்பதாகவே குற்றம் சாட்டினர். செய்தி பரப்பினர் குறைஷ்கள்.

ஆனால் அல்லாஹ்வோ, இறைவனின் இறுதி வழிகாட்டி நூலான அல்குர்ஆன் போதனைக்கு முரணாக முன்னோர்கள், மூதாதையர்களின் பெயரால் கோணல் வழி செல்கிறவர்களையே குழப்பவாதிகள் என்கிறான். இதை “பித்னா (குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போராடுங்கள்” (அல்குர்ஆன் 2:193) இறைவாக்கு நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் உறுதிப்படுத்துகிறது.

அல்குர்ஆனிலுள்ள இறைவனின் கட்டளைகளை அமுல்படுத்த முற்படும்போது, அதாவது அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பதை உறுதியாக்கம் செய்யப்படும் முயற்சிகளால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுவது போல் தோன்றினாலும் அது அல்குர்ஆன் 2:191 கூறும் கொலையை விட கொடிய குற்றமல்ல; மாறாக அல்லாஹ் வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை முன்னோர்கள், மூதாதையர்கள், இமாம் கள், அவுலியாக்கள் பெயரால் இந்தப் புரோகித மவ்லவிகள் கட்டவிழ்த்து விடும் கோணல் வழிகளை மக்களுக்குத் துணிந்து அடையாளம் காட்டியே தீர வேண்டும் போராடியே தீர வேண்டும்; என்பதையே அல்குர்ஆன் 2:193 இறைக் கட்டளை உறுதிப் படுத்துகிறது.

இந்தப் புரோகித மவ்லவிகளோ தங்களின் சுயநலனுக்காக, தொண்டை, தொழிலாக்குவதற்காக இறைவனின் இறுதி வழிகாட்டி நூலான அல்குர் ஆனின் நேரடிப் போதனைகளைத் திரித்து வளைத்து மறைத்து இமாம்களின் பெயரால், அவுலியாக்களின் பெயரால், முன்னோர்களின் பெயரால், மூதாதையர்களின் பெயரால், நேர்வழியை பல கோணல் வழிகளாக்கி மக்களை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளுவதை நன்கு அறிந்த நிலையில், அதைப் பார்த்துக் கொண்டு மெளனம் சாதிக்க வேண்டும். அவர்களை எதிர்த்துப் போராடக் கூடாது; அது சமுதாயத்தில் குழப்பமும், கலகமும் விளைவிக்கும் ஃபித்னாவாகும் என்று நாக் கூசாமல் அவதூறு பரப்பித் திரிகிறார்களே, கைகூசாமல் தங்கள் இதழ்களில் எழுதுகிறார்களே இது சரியா?!

அல்லாஹ்வின் அச்சம் அவர்களின் உள்ளங்களில் கடுகளவாவது இருக்குமேயானால், அல்குர்ஆன் போதனைக்கு முரணாகப் பேசுவார்களா? எழுதுவார்களா? அல்குர்ஆன் 36:21, 5:13 இறைவாக்குகள்படி அவர்கள் நேர்வழியை இழந்து, உள்ளங்கள் ஹராமில் வளர்ந்து இறுகி விட்டதால், இறையச்சம் துளியும் இல்லாத நிலையில் தான் இப்படி இறைவனின் இறுதி வழிகாட்டி நூல் கூறாத ஒரு கருத்தை அது கூறுவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வழி கெடுக்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்….

Previous post:

Next post: