ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : குர்பானி துல்ஹஜ் 10ஆம் நாள் மட்டுமா? இல்லை 10,11,12,13 நான்கு நாட்களா? ஆய்வு என்ற பெயரில் நவீன இயக்க வாதிகள் புதுப்புது கருத்துக்கள் வெளியிடுகிறார்களே! இது பற்றிய அந்நஜாத்தின் பார்வை என்ன?
வார்னர் நதீர், நாகர்கோவில்.
தெளிவு : இதுபற்றி தாங்கள் அந்நஜாத்தின் பார்வையை கேட்டிருப்பதின் பேரில், குர்ஆன் மற்றும் ஹதீதின் அடிப்படையில் எமது பார்வையை பதிவிடுகிறோம். கீழே கொடுத்துள்ள 22:28 இறைவசனத்தைப் பாருங்கள்.
“தங்களுக்குரிய பலன்களை அவர்கள் அடைவதற்காகவும், அவன் அவர்களுக்கு வழங்கியுள்ள கால்நடைகள் மீது அறியப்பட்ட நாட்களில் (ஃபீ அய்யாமிம் மஃலூ மாத்தி), அல்லாஹ்வின் பெயரைக் கூறி (அறுத்தி)டுவதற்காகவும் (அங்கு வருவார்கள்). எனவே அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படுபவர்களுக்கும், ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்”.
இந்த இறைவசனம் போதிப்பது என்னவென்பதைப் பார்த்தாலே, தங்களின் ஜயத்திற்கு தெளிவு கிடைத்துவிடும். ஹஜ் பயணத்திற்காக வருபவர்கள் பல பலன்களை பெறுகிறார்கள். அவைகள் மறுமைக்கான நன்மைகளாகவும், உலக வாழ்விற்கான நன்மைகளாகவும் அமைந்து இருக்கின்றன.
அடுத்து அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி குர்பானி கொடுத்து வருகிறார்கள். அதையும், எல்லோருக்கும் நன்கு தெரியப்பட்ட நாட்களில் அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். எல்லோருக்கும் நன்கு தெரியப்பட்ட நாட்கள் எவை என்பதை சிந்தித்துப் பார்ப்போம்! ஹஜ்ஜின் அமல்கள் பிறை 10லிருந்து பிறை 13 வரை உள்ள நான்கு நாட்களில் நடந்து கொண்டிருப்பதை எல்லோரும் அறிந்து வைத்து அமல்கள் செய்து வருவதால், அல்லாஹ் கூறும் “ஃபீ அய்யா மிம் மஃலூமாத்தி” “அறியப்பட்ட நாட்களில்” என்று அல்லாஹ் கூறும் நாட்கள் இவைகள்தான் என்பதை நன்றாக எளிதா கத் தெரிந்து கொண்டோம். அந்த நாள் துல்ஹஜ் பிறை பத்தில் மட்டும் இல்லை என்பதை “அறியப்பட்ட நாள்’ என்று ஒருமை யில் சொல்லாமல், “அறியப்பட்ட நாட்கள்’ என்று அல்லாஹ் பன்மையில் கூறியிருப்பதால், இவைகள் (துல்ஹஜ் 10லிருந்து 13 வரை உள்ள நான்கு நாட்கள்) தான் அந்த நாட்கள் என்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடிகிறது.
கீழே கொடுத்துள்ள ஹதீஃதையும் இணைத்துப் பாருங்கள்.
“(துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் எந்த நல்லறமும், (உண்பதற்கும், பருகுவதற்கும், இறைவனை நினைவு கூர்வதற்கும் உரிய துல்ஹஜ் பெருநாளுக்கு அடுத்த 3 நாட்களான) அய்யாமுத் தஷ்ரிக் நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்த தல்ல” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ, ஹதீத் எண். 969)
எனவே, இந்த நாட்களில் குர்பானி கொடுக்க ஹதீதும் அனுமதிக்கிறது.
எனவே, இந்த இறைவசனத்திலிருந்தும் மற்றும் 108:2 இறைவசனத்தில் கூறியவாறு, உம் இறைவனை தொழுது (பெருநாள் தொழுகை) பிறகு, அன்றிலிருந்து பதிமூன்றாம் நாள் வரை ஆக நான்கு நாட்களில் நமக்குத் தோதான ஏதேனும் ஒரு நாளில் குர்பானி கொடுக்கலாம் என்று அறிந்து கொள்ள முடிகிறது.