ஒரே சமுதாயம்!
Dr. A. முஹம்மது ஃபாரூக், இலங்கை
ரசூல்(ஸல்) அவர்கள் இந்த உம்மத்தை எந்த ஒரு ஜமாஅத்தில், எந்த ஒரு இயக்கத்தில் விட்டு விட்டுப் போனார்கள் என்பதற்கு குர்ஆன் ஹதீஃதை தவிர, வேறு ஏதேனும் நடைமுறைச் சான்றுகள் (Practical Evidence) இன்று ஏதேனும் காணப்படுகிறதா? என்று பார்ப்போமேயானால் ஏராள மான சான்றுகளைப் பார்க்கலாம். நாம் அவைகளைப் பார்ப்பதுமில்லை, அவைகளை பார்த்தும் உணர்வு பெறுவதுமில்லை.
நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்தித் தந்த ஒரு ஜமாஅத்திற்கு இன்றுள்ள எஞ்சியிருக்கும் அடையாளங்கள் எவை என்பதை பார்ப்போம்.
உதாரணத்திற்கு கூறுகிறேன், உங்களில் ஒருவர் ஜப்பான் தலைநகரான டோக்கியோவிற்கு செல்கிறீர்கள். உங்கள் தாய் மொழி தமிழ், உங்களுக்கு ஜப்பான் மொழி தெரியாது. உங்களையும் அவர்களுக்குத் தெரியாது, அவர்களையும் உங்களுக்குத் தெரியாது. அவர்கள் முக அமைப்புகளை பார்த்தவுடனே உங்களுக்குத் தெரியும், இவர்கள் நம்மவர்கள் அல்ல என்று. உங்களைப் பார்த்தவுடனேயே அவர்களுக்குத் தெரியும் நீங்கள் ஜப்பானியர்கள் அல்ல என்று; ஏனெனில் இறைவனின் படைப்பிலேயே உள்ள வேறுபாடு. ஆனால் இஸ்லாம் உங்களை ஒன்றுபடுத்தி ஓரணியில் வைத்திருப்பதையே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ரசூல்(ஸல்) அவர்கள் உங்களை ஒன்றாக வைத்து விட்டுப் போனதில் சிற்சில மிஞ்சியிருக்கின்ற அடையாளங்களை நான் உங்களுக்கு நினைவூட்டுகின்றேன்.
டோக்கியோ வீதிகளில் நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள். இந்நேரத்தில் உங்கள் காதுகளில் “அல்லாஹு அக்பர்” என்று பாங்கோசை கேட்கிறது. உடனே உங்கள் கைகடிகாரத்தை பார்க்கிறீர்கள். லுஹர் தொழுகையின் நேரம் வந்துவிட்டதை உணர்கிறீர்கள். உங்களுக்கு இந்த லுஹருடைய நேரத்தை உணர்த்தியது எது? வேறு நாட்டில், அன்னிய மனிதர்கள் வசிக்கும் இடத்தில் லுஹரை உங்களுக்கு உணர்த்தியவர்கள் யார்? இந்த பாங்கோசை கேட்ட திசையில் செல்கிறீர்கள். ஒளு செய்து பள்ளிக்குள் சென்று ஜமாஅத் ஆக தொழுகிறீர்கள். அங்கு தொழ வைக்கும் இமாம் நான்கு ரகாஅத் முடிந்த பின்பும் ஐந்தாவது ரகாஅத் தொழுகைக்காக மறதியாக எழும்புகிறார். உடனே நீங்கள் “சுபஹானல்லாஹ்’ என்று சப்தம் கொடுக்கிறீர்கள். உடனே எழுந்த இமாம் அப்படியே அமர்ந்து தொழு கையை நிறைவு செய்கிறார்.
தொழுகை முடிந்தவுடன் அவர் உங்களோடு சண்டை செய்வதில்லை. நீ யார்? வேற்று நாட்டவன் இங்கு வந்து ஏன் சப்தமிட்டாய்? என்று கண்டிக்கவில்லை. மாறாக, ஸலாம் சொல்லி நன்றி கூறுகிறார்கள். மொழி தெரியாத நாட்டில், இரு வேறு நாடுகளைச் சேர்ந்த அன்னிய மனிதர்கள் ஒன்றுபடுவதற்கு, ஐக்கியப்படுவதற்கு கற்றுத் தந்தது யார்? இந்த ஒற்றுமையை உண் டாக்கியது யார்? அறிமுகமில்லாத ஊரில் உங்களை அவர்களோடு சேர்த்து வைத்தது என்ன?
இதுதான் இஸ்லாமிய அமைப்பு, இஸ்லாமிய இயக்கம், இஸ்லாமிய கட்டுக் கோப்பு, இதை முஸ்லிம் ஜமாஅத் என்று சொல்லாமல் வேறெந்த பெயரில் சொல்ல முடியும்? இதைத்தான் நாங்கள் சொல்லு கின்றோம். நபி(ஸல்) அவர்கள் விட்டு விட்டுப் போனார்களே அந்த ஒரே ஜமாஅத்தில் மிஞ்சியிருக்கக் கூடிய அடையாளங்களில் இதுவும் ஒன்று. இதை நாங்கள் உணராமலிருக்கின்றோம். இது போன்ற சம்பவங்களை அனுதினமும் பார்த்தும் உணர்வு பெறாமல் இருக்கின்றோம்.
வ்வால் மாதம் முடிந்து ரமழான் மாதம் வருகின்றது. பிறை கண்டவுடன் அமெரிக்காவில் உள்ள முஸ்லிமும் நோன்பு வைக்கின்றான். ஆப்பிரிக்காவில் உள்ள முஸ்லிமும் நோன்பு வைக்கின்றான். இதை உண்டாக்கியது யார்? ரசூல்(ஸல்) அவர்கள் இந்த உம்மத்தை ஒரு அமைப்பில், ஒரு ஜமாஅத்தில் விட்டுவிட்டுப் போனார்கள். அந்த ஜமாஅத்தில் மிஞ்சியிருக்கின்ற அடையாளங்களில் இதுவும் ஒன்று.
நீங்கள் ஹஜ்ஜுற்குச் செல்கிறீர்கள். அங்கு அனைவரும் ஒரே உடை, இஹ்ரா மில் இருக்கின்றனர். இதைப் பார்த்து யாரும் ஆச்சரியப்படுவதில்லை. அங்கு வந்துள்ள பல நாட்டு மனிதர்களை உங்களுக் குத் தெரியாது. ஆனால் அனைவரும் ஒன்றுபட்டு ஐக்கியமாக “லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்’ என்று குரல் கொடுக்கிறார்கள். இப்படி முன்பின் அறியாத மனிதர்களை ஓரணியில், ஓர் உடையில், ஒரே மொழியில், ஜமாஅத்தாக அமைத்தது யார்? இதுதான் நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிக் காட்டிய உலகளாவிய முஸ்லிம் ஜமாஅத், இன்று எஞ் சியிருக்கும் அடையாளங்களில் இதுவும் ஒன்று. எனவே,
சகோதரர்களே! பெரியோர்களே!
இவ்வளவு சிறப்பான உம்மத்தைப் பார்த்து, முஸ்லிம்களே ஒன்றுபடுங்கள் என்று சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய அடையாளம், இவ்வளவு பெரிய சிறப்பு உலகத்தில் வேறு எங்கும் நீங்கள் பார்க்க முடியாது.
ஒரு கிருஸ்தவன் வேறொரு நாட்டிற்கு சென்றால், அங்குள்ள அவனது மத வணக்க வழிபாடுகளை அவனால் புரிந்துக் கொள்ள முடிவதில்லை. காரணம் அந்த மொழி அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெளத் தன் இலங்கையிலிருந்து வேறொரு பெளத்த நாட்டிற்கு சென்றால், அங்குள்ள வழிபாடு முறைகளை அவனால் அறிந்து கொள்ள முடியாது. காரணம் மொழி தெரியாது. ஒரு இந்து ஒரு மாநிலம் விட்டு வேறொரு மாநிலம் சென்றாலோ அங்குள்ள வணக்கத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் மொழி வேறு.
ஆனால் நீங்கள் ஒரு முஸ்லிம், அன்னிய நாட்டில் ஐந்தாவது ரகாஅத்திற்கு எழும்பியவரை “சுபுஹானல்லாஹ்’ சொல்லி அவரை அமர்த்தியது எது? அவருக்கு அதை சொல்லிக் கொடுத்தது யார்? உங்கள் இருவரையும் ஒற்றுமைப்படுத்திய மொழி ரசூல்(ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்ட மொழி.
ரசூல்(ஸல்) அவர்கள் ஒற்றுமைப்படுத்தி விட்டுப்போன ஒரு சமுதாயத்தைப் பார்த்து, “முஸ்லிம்களே ஒன்றுபடுங்கள்’ என்று சொல்லுவதற்கு நாம் வெட்கப்பட வேண்டாமா? இந்த சிறப்பான சமுதாயத்தைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான். “இன்னவல் மூமினுன இக்வான்’ இந்த சகோதரத்துவத்தை நாம் புரிந்து கொள்ளவில்லை.
இந்த முஸ்லிம் சமுதாயம் 1400 வருடங்களாக உறங்கிக் கிடந்தது. திடீரென்று இன்று விழித்துப் பார்க்கிறார்கள். முஸ்லிம்களிடம் உணவு இல்லை, உடை இல்லை, கல்வி இல்லை, பொருளாதாரம் இல்லை, ஆட்சி அதிகாரம் இல்லை, வெறும் நிர்வாணமாக இச்சமுதாயம் நின்று கொண்டிருக்கிறது. இதை நீக்க என்ன வழி என்று தங்கள் சிந்தனைகளையும், மாற்று மார்க்க சித்தாந்தங்களையும் ஒன்று கலந்து புதிய இயக்கம், ஜமாஅத்துகளை உருவாக்குகின்றார்கள். ஒவ்வொருவரும் ஆளுக்கொரு கொடிகளை தூக்கிக் கொண்டு முஸ்லிம்களே இங்கு வாருங்கள் என்று கூவி அழைத்து இஸ்லாமிய பெயரில் இயக்கம் வளர்க்கிறார்கள். ஆளுக்கொரு ஜமாஅத் என்றும் இயக்கம் என்றும் கழகம் என்றும் தனிப் பெயரிட்டு முஸ்லிம்களை கூறு போட்டு விட்டார்கள்.
முஸ்லிம் ஜமாஅத்தில் நான் ஒரு அங்கம். நான் தனியாக சிந்தித்து செயல்பட்டு தனி ஜமாஅத் அமைக்க உரிமையில்லை என்பதை ஒருவரும் உணரவில்லை. இதுதான் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தை பிடித்திருக்கும் மாபெரும் முஸீபத் (துன்பம்) மனித அறிவில் உருவாகும் இந்த இயக்கங்களை முற்றாகத் துறந்து, நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய ஒரே ஜமாஅத்தில் ஒன்றுபடாத வரை இச்சமுதாயம் வெற்றி பெற முடியாது. அல்லாஹ் ரஹ்மத் செய் வானாக! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)