நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
(இறைத் தூதராகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே கேள்வி கணக்கு கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (33:39)
ஆயினும் நம் வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறு) நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆதலால் அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத் தையே அடைந்தார்கள். (40:85)
நல்லது, பொருத்தமானது, சிறந்தது, சத்தியமானது, சாத்தியமானது, சமுதாயத்திற்குப் பிரயோசனமானது ஆகியவற்றை உண்மைப்படுத்துவதும், அதை எடுத்துச் சொல்வதும் அல்லாஹ்வின் ஓர் சிறந்த வழிமுறையாக, (ஸுன்னாவாக) மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.நல்லவைகள் உதாரணங்களுடன் விளக்கப் பட்டிருப்பதை காண்போம்.
“கொசுவை விடவும் அற்பமானதை உதாரண மாக கூறுவதற்கு அல்லாஹ் வெட்கப்பட மாட்டான்”
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிடவும் (சிறிய அற்பமானதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்பட மாட்டான் (2:26) அதாவது சத்தியம் என்று வந்துவிட்டால் அது எவ்வளவு சிறியதாக இருந் தாலும் பெரியதாக இருந்தாலும் அதனைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான் என்று அல்லாஹ் தனது பரிசுத்த குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
ஏக இறைவனான தூய அல்லாஹ் தன்னைப் பற்றி அவனே உதாரணமாகக் குர்ஆனில் குறிப்பிடும்போது, “அல்லாஹ்வின் ஒளிக்கு உவமையானது” அல்லாஹ், வானங்களுக்கும் மற்றும் பூமிக்கும் ஒளியாவான். அவனது ஒளிக்கு உவமையானது ஒரு மாடத்தைப் போன்றது அதில் ஒரு விளக்கு உள்ளது. அந்த விளக்கு ஒரு கண்ணாடி(க் குடுவைக்குள் இருக்கிறது. அந்தக் கண்ணாடி(க் குடுவை) ஒளி வீசும் நட்சத்திரம் போன்றுள்ளது. அ(ந்த விளக்கான)து பாக்கியம் பொருந்திய ஜைத்தூன்(எனும் ஒலிவ) மரத்திலிருந்து அது எரிக்கப்படுகிறது. அம்மரம் கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று, மேல் திசையைச் சேர்ந்ததுமன்று நெருப்பு படாவிட்டாலும் அதன் எண்ணெயும் ஒளி வீசுகிறது. (இப்படி) ஒளிக்கு மேல் ஒளியாகவுள்ளது. தான் நாடியோருக்கு அல்லாஹ் தனது ஒளியை நோக்கி வழிகாட்டுகிறான். மனிதர்களுக்காக உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (24:35)
இருள் படர்ந்த வீட்டில் ஒரு மாடம் அந்த மாடத்தில் ஒரு ஒளிரும் விளக்கு. முத்துத் தாரகை போன்று ஒளிரும் கண் ணாடிக் குடுவைக்குள் அவ்விளக்கு உள்ளது, விளக்கில் எரிக்கப்படும் எண்ணையோ நெருப்புத் தொடாமலேயே பிரகாசிக்கும் தூய்மையான ஆலிவ் எண்ணை, எனில் வெளிச்சத்திற்குக் கேட்கவா வேண்டும்? ஒளிக்கு மேல் ஒளி, இதுதான் இருண்ட இந்த உலகத்தில் இறைநெறிக்கு ஓர் உதாரணமாக எடுத்துக்காட்டு, அல்லது இருண்ட இதயத்தில் இறை நம்பிக்கை எனும் ஈமானின் ஒளிக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
நபி(ஸல்) அவர்கள் தாயிஃப் நகருக்கு அழைப்புப் பணிக்காகச் சென்றிருந்த போது அவ்வூர் மக்கள் நபியவர்களுக்கு இழைத்த சொல்லொன்னா கொடுமைகளினால் உள்ளம் வேதனை அடைந்தவர்களாக,.. “இறைவா! உனது திருமுகத்தின் ஒளியால் நான் பாதுகாப்புக் கோருகிறேன் அந்த ஒளியாலேயே இருள்கள் அனைத்தும் பிரகாசிக்கின்றன… என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (சீரத் இப்னு இஸ்ஹாக், இப்னு ஹிஷாம், “அர்ரஹுக் அல்மக்தூம்’ பக்கம் 166,167, தஃப்ஸீர் இப்னு கஸீர் 6:359)
“யாருடைய உள்ளத்தை இஸ்லாத் திற்காக அல்லாஹ் விரிவடையச் செய்து விட்டானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார் எவர்களுடைய இதயங்கள் அல்லாஹ்வின் நினைவை விட்டும் விலகி விட்டனவோ அவர்களுக்கு நாசம்தான். இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர். (39:22)
ஒரே “நேரவழிக்கும் பல வழிகேடுகளுக்கும் உதாரணமாகப் பல இருள்களையும் ஓர் ஒளியையும் உதாரணமாகக் கூறுவது”
நம்பிக்கை கொண்டு நல்லமல்கள் செய்வோரை(ப் பல) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு செல்வதற் காகவே தெளிவுபடுத்தும் அல்லாஹ்வின் வசனங்களை உங்களுக்கு(விளக்கி)க் கூறும் தூதரை அனுப்பினான் அல்லாஹ்வை நம்பி, நல்லறம் செய்வோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார் கள். அவருக்காக அல்லாஹ் உணவை அழகாக்கி வைத்துள்ளான். (65:11, 35:20, 39:22, 57:9) மேலும்,
(பல) இருள்களும் (ஒரேயயாரு) ஒளியும் (சமமாவது) இல்லை. (35:20) அவன் எத்தகையவன் என்றால் உங்களை(ப் பல பாவங்களின்) இருள்களிலிருந்து (ஒரே நேர் வழியாகிய) ஒளியின் பால் வெளிப்படுத்துவதற்காக அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி வைக்கின்றான். (57:9)
நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் உதவுபவன். (பல) இருள்களிலிருந்து (ஒரேஒரு) வெளிச்சத்திற்கு அவர்களைக் கொண்டு செல்கிறான். (ஏக இறைவனை) மறுப்போருக்கு (அதிகளவான) தீய சக்திகளே உதவியாளர்கள். (பேரொளியான ஒரு) வெளிச்சத்திலிருந்து (வழிகேடுகளான பல) இருள்களுக்கு அவர்களைக் கொண்டு செல்கின்றனர். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பர். (2:257, 5:16, 6:1,122,153, 13:16, 14:1,2, 24:35) ஆக சத்தியம் என்பது ஒன்றுதான். ஆனால் பாவங்கள், வழிகேடுகள், இறை மறுப்புகள், என்பது பல வகைகள் ஆகும். அவைகள் அனைத்துமே தவறானவை எனவேதான் வெளிச்சம் “அந்நூர்” என்பதை ஒருமையாகவும் இருள்கள் “அழ்ழுலுமாத்” என்பதைப் பன்மையாகவும் இறைவன் இங்கே குறிப்பிடுகின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர் 1:837,838) மேலும், ஓர் உதாரணமாக,
“பார்வையுள்ளவனையும், குருடனையும் போன்றது”
“அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூறமாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூறமாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை’ என்று (முஹம்மதே! நீர்) கூறுவீராக! “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? (நீங்கள்) சிந்திக்க மாட்டீர்களா?” என்று(ம்) கேட்பீராக! (6:50, 35:19, 40:58, 41:17) என்று உத்தரவிடுகின்றான். மேலும், உதாரணமாக;
“நிழலையும், வெயிலையும் போன்றது”
குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும், நிழலும், வெயிலும் சமமாகாது. (35:19,20,21)
“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் உதாரணமோ ஒளிரும் விளக்காகும்;”
நபியே! நிச்சயமாக உம்மை நாம் சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்வபராகவும் அனுப்பியுள்ளோம். அல்லாஹ்வின் ஆணையின் பேரில் அவன்பால் அழைப்பு விடுப்பவராகவும் ஒளிரும் விளக்காகவும் (சிராஜும் முனீ ராவாகவும் உம்மை நாம் அனுப்பியுள்ளோம்) 33:45, 46) என அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அதாவது நபியே! நீர் கொண்டு வந்த உண்மையான விஷயத்தில் உமது நிலை வெளிப்படையானது. அது ஒளிர்வதிலும் பிரகாசிப்பதிலும் சூரியன் போன்றது. பிடிவாதக்காரனைத் தவிர வேறு யாரும் அதனை மறுக்கமாட்டார் என்பதுடன், அவனது ஓரிறைக் கொள்கையைப் பறை சாற்றும் முதன்மை மிக்க சொல்லான,
“தூய்மையான வார்த்தைக்கு உதாரணமாக அல்லாஹ் வானளாவிய கிளைகளையுடைய மரத்தை குறிப்பிடுகின்றான்”
(நபியே!) தூய்மையான வார்த்தைக்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறியுள்ளான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? (அது) ஒரு தூய்மையான மரத்தைப் போன்றதாகும். அதன் வேர்(கள் நிலத்தினுள் ஆழமாகப்) பதிந்துள்ளது. அதன் கிளைகள் வானளாவ (உயர்ந்து) உள்ளன. அது தனது இறைவனின் ஆணைக்கேற்ப எந்நேரமும் தனது கனியை வழங்கிக் கொண்டிருக்கிறது. (இவ்வாறு) அல்லாஹ் (ஏக இறை நம்பிக்கையுடைய) மனிதர்களுக்கு(ப் பொருத்தமான) உவமைகளை எடுத்துரைக்கின்றான். (14:24,25) மேலும், இங்கே!
“தூய்மையான வார்த்தை” என்பது “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்னும் உறுதி மொழியைக் குறிக்கும் “தூய்மையான மரம்” என்பது (அந்த உறுதிமொழியை மனசார ஏற்றுக்கொண்ட) இறை நம்பிக் கையாளரைக் குறிக்கும். அதன் வேர் (நிலத்தினுள் ஆழமாகப்) பதிந்துள்ளது என்னும் தொடர் “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்னும் ஏக இறை உறுதிமொழி இறை நம்பிக்கையாளரின் உள்ளத்தில் (உறுதிபட) பதிந்திருப்பதையும், அதன் கிளைகள் வானளாவ (உயர்ந்து) உள்ளன எனும் தொடர் இறை நம்பிக்கையாளர்(கள்) ஆற்றுகின்ற நற்செயல்கள். அந்த உறுதிமொழியின் மூலமே வானுக்கு உயர்த்தப்படுகின்றன என்பதையும் குறிக்கும் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் விளக்கம் அளித் தார்கள். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர்: 4:962) அதே போன்று,
“நிராகரிப்பாளர்களின் தீய வார்த்தையின் நிலையானது பிடுங்கி எறியப்பட்ட ஒரு தீய மரத்தைப் போன்றதாகும்”
“கெட்ட கொள்கையும் கும்மட்டிச் செடியும்”. எந்தவிதமான அடிப்படையும் உறுதிப்பாடும் இல்லாத இறை மறுப்புக்குச் சொல்லப்பட்ட சிறந்த உவமையானது வயிற்றைக் குமட்டும் கசப்பான கும்மட்டிச் செடிக்கு ஒப்பானதாகும். (நிராகரிப்பாளர்களின்) தீய வார்த்தையின் நிலையானது பிடுங்கி எறியப்பட்ட ஒரு தீய மரத்தைப் போன்றதாகும் (14:26) என்றும் வசனத்தில் குறிப்பிடப்படும் தீய மரம் என்பது கும்மட்டிச் செடியைக் குறிக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் ஒரு ஹதீதில் விளக்கம் அளித்துள் ளார்கள். (அனஸ்பின் மாலிக்(ரழி) திர்மிதி, தஃப்சீர் இப்னு கஸீர் 4:964,965) “அது பூமியின் மேற்பரப்பிலிருந்து வேரோடு சாய்க்கப்பட்டுவிட்டது. அதற்கு உறுதி கிடையாது’ (14:26) அதாவது அந்த மரம் அடியோடு பிடுங்கப்பட்டு விட்டது. அதற்கு உறுதியான அஸ்திவாரமோ நிலையான தன்மையோ கிடையாது. அவ்வாறுதான் இறைமறுப்புக்கும் வேரும் கிடையாது, கிளையும் கிடையாது, இறை மறுப்பாளரின் எந்த நற்செயலும் அல்லாஹ்விடம் எடுபடாது. அவரிடமிருந்து எதுவும் ஏற்கப்படமாட்டாது. அதுபோன்றே!