தலையங்கம்!
எதை வேண்டுமானாலும் அழிக்கலாம்!?
நூலகம் சென்று வாசிப்பு எனும் நல்ல பழக்கத்தை மைசூருவில் ஏற்படுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலான வாசகர்கள், சையது ஈஷாக் என்பவரை பத்து ஆண்டுகளாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர். மட்டுமில்லாமல், அவருடன் தினசரி தொடர்பிலும் இருந்து வருகின்றனர். அடுத்து, இந்த வாசகர்கள் அனைவரும் முஸாஃபத் ஆஜாத் என்பவரை சமீப காலமாக தெரிந்து வருகின்றனர். மேலும், இந்த இருவரின் மீதும் அரசு பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் பார்வை கண்ணிய மாகவே இருந்து வருவதாகத் தெரிகின்றன.
யார் இந்த இருவரும்? அப்படி என்ன செய்துவிட்டார்கள்? கொத்தடிமையாக இருந்து கூலி தொழிலாளியாக மாறிய சையது ஈ,ஷாக், பினனாட்களில் துப்புரவு ஊழியராக 20 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். பிறகு டீக்கடை ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்திருக்கிறார். எழுதப் படிக்கத் தெரியாத இவருக்கு இந்த சமயத்தில் வாடிக்கையாளர்களில் சிலர் வாசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். கொத்தடிமைகளாக இருந்த தாம் வாசிக்கக் கற்றுக் கொண்டதை எண்ணி மகிழ்ந்து மன திருப்தியுடன் எப்போதும் வாழ்ந்து வருகிறார். இதற்குக் காரணமான வாடிக்கையாளர்களை இவர் நெஞ்சார்ந்த நன்றியுடன் இன்றும் நினைவு கூர்கிறார்.
இதன் தொடர்ச்சியாக, பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2011ல், தமது தொடர் முயற்சியால், சிறிய நூலகம் ஒன்றை புறம்போக்கு நிலத்தில் தொடங்கி நடத்தி வருகிறார். கன்னடம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் பல இலக்கிய நூல்களும், மதசார்பின்றி இந்து, முஸ்லிம், கிருஸ்துவ மதத்தினரின் நூல்களும், ஏறக்குறைய பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இவரால் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன.
தற்போது 63 வயது நிரம்பிய இவரை, துவேஷம் செய்ய இந்த சிறப்புகள் போதாதா? இவரின் இந்த நூலகத்தைக் கண்டு சில கன்னட அமைப்பினர் வெகுண்டெழுந்ததாகக் கூறப்படுகிறது. எதற்கு வெகுண்டெழுந்தனர்? இவரது நூலகத்தில் கன்னட மொழி நூல்கள் குறைவாக இருந்தனவாம்! உருதுமொழி நூல்கள் அதிகமாக இருந்தனவாம். வம்பிழுக்க இது போதாதா? வம்பிழுத்திருந்தாலும் பரவாயில்லை, வெகுண்டெழுந்ததன் விளைவு என்ன வாயிற்று? எதை வேண்டுமானாலும் அழிக்கலாம் என்ற மனநிலை அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், யாரோ சில மர்ம நபர்கள் இரவோடு இரவாக நூலகத்திற்கு தீ வைத்துவிட்டனர். ஆயிரக்கணக்கான நூல்கள் எரிந்து நெருப்புக்கு இரையாகிவிட்டது. எண்ணற்ற வாசகர்களும், பொதுமக்களும் கவலையில் ஆழ்ந்தனர். மைசூரு போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியறிந்து கலங்கி நிற்காமல், களத்தில் குதித்தார் மைசூர் பல்கலை கழகத்தின் அரசியல், அறிவியல் துறையின் தலைவர், பேராசிரியர் முஸாஃபத் ஆஜாத். எரிந்த நூலகத்தை புணரமைப்பு செய்ய தமது தலைமையில் “ஈஷா நூலக புதிப்பிப்பு குழு” ஒன்றை அமைத்தார். செயல்பட வேண்டிய பணிகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டார். நன்கொடைகள் வசூலிக்கப்பட்டன. கேரளா, மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சார்ந்தவர்களும், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, துபாய் உள்ளிட்ட வெளிநாட்டினரும் எட்டாயிரத்துக்கும் அதிகமான நூல்களையும், முப்பத்தி ஐந்து லட்ச ரூபாய் பணமாகவும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
உலகின் பல நாடுகளிலிருந்து புத்தகங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. வைப்பதற்கு இடமின்றி பல்கலை கழகத்திலுள்ள தமது அறையில் மட்டும் இதுவரை 5000 நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமது அறை நிரம்புதற்குள், சையது ஈஸாவிற்கு புதிய நூலகத்தை அரசு கட்டி தரவேண்டும் என்றும், அப்படிக் கட்டித் தந்தால்,இதுவரை வசூலிக்கப்பட்ட 35 லட்ச ரூபாய் நன்கொடையை அதைக் கொடுத்தவர்களுக்கு நன்றியுடன் திருப்பி அளிக்கப்படும் என்கிறார் பேராசிரியர் முஸாஃபத் ஆஜாத்.
தற்போது தெருவில் நூல்களை வைத்து வாசகர்களுக்கு தமது சேவையை தொடர்ந்து செய்து வருவதாக பத்திரிக்கையாளர்களிடம் கூறும் சையது ஈஷாக். மேலும் தெரிவித்ததாவது தேசிய நூலக தினமான ஆகஸ்ட் 12ஆம் தேதி புதிய நூல கத்துக்கு அடிக்கல் நாட்டுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்ததாகவும், வெகு தூரத்திலிருக்கும் மக்கள் தம்மீது நம்பிக்கை வைத்து ஏராளமான புத்தகங்களையம், பணத்தை யும் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர் என்றும், அரசாங்கம் நூலகம் கட்டித் தராவிட்டால், நாங்கள் கட்டித் தருகிறோம் என்று ஆறுதலாகவும் பேசுகின்றனர் என்றும் கூறுகிறார்.
“மைசூரு மாநகராட்சியும், நூலகத் துறையும் சமமாகப் பங்களிப்பு செய்து சையது ஈஸாவுக்கு நூலகம் கட்டித்தர முடிவெடுத்திருப்பதாகவும், மாநகராட்சி, இடத்தை வழங்கியவுடன், நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மைசூருவிலுள்ள டெபுடி டைரக்டர், டிபார்ட்மென்ட் ஆஃப் பப்ளிக் லைப்ரரி தெரிவித்துள்ளார்.
அதிவிரைவில் உதவிகள் கிடைப்பது உலகத்தில் சுலபமாக இருக்கின்றன. அதே போல, சுலபமாக எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் அழித்து விடலாம் என்ற மனநிலை கொண்டவர்களை சுலபமாக அடையாளம் கண்டு அடக்க முடியாமல் போய்க்கொண்டிருப்பதும், திருத்த முடியாமல் போய்க்கொண் டிருப்பதும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்று எண்ணி வருந்த வேண்டியிருக்கிறது.
நல்லதை நினைப்போம்! நல்லதையை செய்வோம்! நல்லதே நடக்கும்! இன்ஷா அல்லாஹ்.