ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : ஒருவர் தமது மனைவியை “தலாக்’ என்றோ, “முத்தலாக்’ என்றோ கூறிய பின்னர் மீண்டும் அவள் அவருடைய வீட்டிற்கு வந்தால் சேர்த்துக் கொள்வது கூடுமா? ஹைதர் அலீ
தெளிவு : ஒரே நேரத்தில் எத்தனை “தலாக்’ சொன்னாலும் அவற்றை ஒரு தலாக் என்பதாகவே கணிக்கப்படும், இவ்வாறு தலாக் கூறப்பட்ட பெண் அவருடைய 3 துஹ்ரு (மாதவிடாய் நீங்கி சுத்தமாயிருக்கும் காலம்) முடியும் வரை எவ்வித நிபந்தனையுமின்றி மீட்டிக் கொள்வது ஆகும். மேற்கூறப்பட்டுள்ள தவணை கழிந்துவிட்டால் திருமண உறவை-நிக்காஹ்வைப் புதுப்பித்திக் கொள்ள வேண்டும். ஒரு நபிதோழர் தமது மனைவியை நோக்கி, “நான் உன்னை நிரந்தரமாக “தலாக்’ கூறி விடமாட்டேன் என்றார். அதற்கு அவர் மனைவி அவ்வாறு எப்படி உங்களால் செய்ய முடியும்’ என்று கேட்க, அதற்கு அவர், உன்னை நான் “தலாக்’ சொல்லிவிட்டு உனது தவணை முடியும் தருவாயில் மீட்டிக் கொள்வேன் என் றார். உடனே அப்பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தை எடுத்துக் கூறியபோதுதான், பின்வரும் வசனம் அருளப்பட்டது.
“(மீட்டிக் கொள்வதற்கான) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம். பின் (தவணைக்குள்) முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம் அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்” அல்குர்ஆன் 2:229
“மீட்ட முடியாதவாறு (அதாவது இரண்டு தடவை “தலாக்’ சொன்ன பின்னர் மூன்றாம்) “தலாக்’ சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து, அவனும் அவளைத் “தலாக்’ சொல்லிவிட்டால், அதன் பின்னர் (முதற்) கணவன், மனைவி சேர்ந்து வாழ நாடினால் அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால் அவர்கள் இரு வருமே (மறுமணம் செய்து கொண்டு மண வாழ்வில்) மீளுவது குற்றமில்லை”. அல்குர்ஆன் 2:230
நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் யாதொரு நபிதோழரும், தமது மனைவியை நோக்கி ஒரே நேரத்தில் மூன்று தலாக் கூறி அதனை நபி(ஸல்) அவர்கள் மூன்றாக கணித்தார்கள் என்பதற்கான ஆதாரம் ஏற்கத்தக்க வகையிலுள்ள எந்த ஹதீதிலும் கிடையாது என்பது தெளிவு. இதற்கு மாற்றமாகக் கூறப்படும் ஹதீத்கள் அனைத்துமே ஹதீத் கலாவல்லுநர்களின் ஏகோபித்த முடிவின்படி பலகீனமானவையாகவும், ஏன் இட்டுக்கட்டப்பட்டவையாகவுமே உள்ளன.
ஆனால் ஸஹீஹ் முஸ்லிமிலும் மற்றும் ஸுனன்கள், முஸ்னதுகள் ஆகியவற்றில் ஆதார மாகக் கொள்ளப்படும் வகையில் கீழ்காணும் ஸஹீஹான ஹதீத் ஒன்று இடம் பெற்றிருப்பதை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அதாவது இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியுள்ளதாக “தாவூஸ்’ அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
“தலாக்’ என்பதானது நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்கர்(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்திலும், உமர்(ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் இரண்டு ஆண்டுகளிலும் ஒரே சந்தர்ப்பத்தில் கூறப்படும் மூன்று தலாக்கள் ஒன்றாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளன. பின்னர் மக்கள் நிதானமாக நடக்கவேண்டிய விஷயத்தில் (நிதானமிழந்து) அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதை (அவர்கள் அவசரப்பட்டு ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவதை) நாம் செல்லுபடியாக்கினோமானால் அவர்கள்மீது அது செல்லுபடியாகிவிடும் என்று உமர்(ரழி) அவர்கள் (முறைகேடாக தலாக் சொல்பவர்களை எச்சரிக்கும் வகையில்)” கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்:முஸ்லிம்
ஒருமுறை “ரகானத்து பின் அப்துல் யஜீத்’ எனும் நபிதோழர் தமது மனைவியை ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறிவிட்டு பின்னர் அதற்காக கடுமையான கவலை அடைந்தார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் “நீர் அப்பெண்ணை எவ்வாறு தலாக் கூறினீர் என்று கேட்க, அதற்கு அவர் அப்பெண்ணை மூன்று முறை தலாக் கூறிவிட்டேன் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி, “ஒரே சந்தர்ப்பத்திலா?” என்று கேட்டதற்கு அவர் “ஆம்’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவ்வாரெனில் அதுவெல்லாம் (சேர்த்து) ஒரு தலாக்தான்; உமக்கு விருப்பமிருப்பின் அப் பெண்ணை நீர் மீட்டிக் கொள்வீராக! என்றார்கள். (அதன்படி அப்பெண்ணை மீட்டிக் கொண்டார்). அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ் (ரழி), நூல்கள்: முஸ்னத், அஹ்மத்.
முஸ்லிமில் காணப்படும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்படும் மற்றொரு ரிவாயத்தில் “அபுஸ் ஸஹ்பாஸ்'(ரழி) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களை நோக்கி,
நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலும், அபூபக்கர்(ரழி) அவர்களின் காலத்திலும், உமர் (ரழி) அவர்களின் மூன்றாண்டிலும் மூன்று தலாக் என்பதை ஒன்றுதான் என்று கணிக்கப்பட்டு வந்தது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்க, அதற்கு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் “ஆம்’ அதை நான் நன்கு அறிவேன். அது அவ்வாறு தான் இருந்தது என்றார்கள். ஆனால் உமர்(ரழி) அவர்களின் காலத்தில் மக்களிடையே முறைகேடாக ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக்குகள் கூறும் நிலை அதிகரிப்பதைக் கண்ட அவர்கள் (மக்களை அந்த முறைகேட்டிலிருந்து தடுக்கும் நோக்கத்தோடு? ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறினால் அது மூன்று தலாக்காகவே ஆகிவிடும் என்பதாக உமர்(ரழி) அவர்கள் அக்காலத்தவர் மீது செல்லுபடியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), தாவூஸ்(ரழி), நூல்:முஸ்லிம்.
மேற்காணும் அறிவிப்புகளில் நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், அபூபக்கர்(ரழி) அவர்கள் காலத்திலும், ஏன் உமர்(ரழி) அவர்களின் இரண்டு, மூன்று ஆண்டுகளிலும் ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக்குகள் கூறப்பட்டால் அவற்றை ஒரே தலாக்காக கணக்கிடப்பட்டு வந்திருக்கும் போது, ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறினால் அது மூன்று தலாக்காகவே ஆகிவிடும் என்று மக்களின் தவறான போக்கைத் தடுக்கும் வகையில் உமர்(ரழி) சுயமாகக் கூறிவிட்டதைக் காண்கிறோம்.
ஆனால் உமர்(ரழி) அவர்களின் இச் செயலை மேலுள்ள ஹதீதில் காணப்படும் அபுஸ் ஸஹ்பாஸ்(ரழி) அவர்கள் உள்பட அநேக நபிதோழர்களும் மற்றும் தாபியீன் களும்ஆட்சேபித்துள்ளார்கள். சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை உமர்(ரழி) அவர்கள் செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது என்று கண்டனம் செய்துள்ளார்கள். அல்லாஹ் கூறுகிறான்:
“நம்பிக்கை கொண்டவர்களே1 அல்லாஹ் வுக்கு கீழ்ப்படியுங்கள், மேலும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங் கள். உங்களிடையே ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாயிருக்கும்”. அல்குர்ஆன் 4:59
“மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்”. அல்குர்ஆன் 33:36
மேற்காணும் வசனத்தில் நம்மிடையே மார்க்க விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டு விட்டால் உடனே அதை அல்லாஹ்விடமும் அவ னது தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறியிருப்பதானது, உடனே குர்ஆனிலிருந் தும், ஹதீதிலிருந்தும் எந்த விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டுள்ளதோ அந்தப் பிரச்சனைக்கு என்ன முடிவு என்பதைத் தெரிந்து, அதற்கேற்ப செயல் படுங்கள் என்ற கருத்தில் கூறப்பட்டதாகும்.
ஆகவே ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறிவிட்டால், அது ஒரு தலாக்காகவே கணிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதற்கு “ரகானத்து பின் அப்து யஜீத்’ எனும் நபிதோழருடைய சம்பவம் முஸ்னத் அஹ்மதில் இடம் பெற்றிருப்பதோடு, நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலும், அபூ பக்கர்(ரழி) அவர்களின் காலத்திலும், ஏன் உமர் (ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் முதல் இரண்டு, மூன்று வருடங்களிலும் இவ்வாறே ஒரே சந்தர்ப்பத்தில் கூறப்பட்ட மூன்று தலாக் ஒரு தலாக்காகவே கணிக்கப்பட்டு வந்திருக்கும் போது, அதன் பின்னர் ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறினால் அது மூன்று தலாக்காக ஆகிவிடும் என்று கூறுவதற்கு யாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மார்க்க வியமாக சட்டம் இயற்றுவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. அல்லாஹ்வின் தூதரும் அல்லாஹ் கூறிய சட்டத்தை மக்களுக்கு எடுத்துக்கூறத்தான் அதிகாரம் பெற்றுள்ளார்களே தவிர சுயமே, தன்னிச்சையாக யாதொரு சட்டத்தையும் கொண்டு வருவதற்கு அதிகாரம் உள்ளவர்கள் அல்லர்.
ஐயம்: குர்ஆனை வைத்து சத்தியம் செய்ய லாமா? இப்போது நடைமுறையில் கோர்ட்டில் குர்ஆனை வைத்து சத்தியம் வாங்கப்படுகிறது? செய்யலாமா? நமது மார்க்கம் அனுமதிக்கிறதா? குர்ஆன், ஹதீத்படி விளக்கவும். இப்ராஹிம் ஷா
தெளிவு : குர்ஆனை மட்டுமல்ல, அல்லாஹுவைத் தவிர வேறு எதனைக் கொண்டும் சத்தியம் செய்தல் குர்ஆன் ஹதீத்படி ஆகாது.
ஏனெனில், “அப்படியல்ல’ என் ரப்பி(இரட்க்ஷகனி)ன் மீது சத்தியமாக! நிச்சயமாக அது (நியாயத் தீர்ப்பு நாள்) உங்களிடம் வந்தே தீரும் என (நபியே) கூறுவீராக. அல்குர்ஆன் 34:3
அப்படியல்ல, என் ரப்பி(இரட்சகனி)ன் மீது சத்தியமாக! நீங்கள் நிச்சயமாக (தீர்ப்பு நாளில்) எழுப்பப்படுவீர்கள் என்று (நபியே!) கூறுவீராக. அல்குர்ஆன் 64:7 என்ற இறை வசனங்கள் மூலம் இறைவன் மீது மட்டும் சத்தியம் செய்ய அல்லாஹு நபி (ஸல்) அவர்களுக்கு கற்றுக்கொடுத்தான். அவ்விதமே சத்தியம் செய்ததை குர்ஆனில் பதிவு செய்து கடைசி நாள் வரை பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எவன் இறைவனைத் தவிர ஏனையவற்றைக் கொண்டு சத்தியம் செய்கிறானோ அவன் நிச்சயமாக இறைவனுக்கு இணை கற்பித்தவனே ஆவான். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்கள்: திர்மிதி, அஹமது, ஹாகிம்.
யாருக்காவது சத்தியம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், அவர் அல்லாஹுவைக் கொண்டே சத்தியம் செய்யட்டும். இல்லையா னால் மெளனமாக இருந்து விடட்டும். அறிவிப்பாளர்: உமர்(ரழி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத். திர்மிதி, நஸயீ, அஹமது.
நடைமுறையில் இப்போது கோர்ட்டில் குர்ஆன் மீது சத்தியம் வாங்குவது தவறாகும். அச்சத்தியத்தையும், முறையையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஐயம்: பித்அத்தாக இருந்தாலும் அது நல்லதாக இருந்தால் அதனைச் செய்யலாமா? பித்அத் கூடாது என்பதற்கு குர்ஆன், ஹதீத்படி விளக்கம் தரவும்.
ஷபீர் அஹமது
தெளிவு : ஈஸா(அலை) அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு மணமுடிக்காமல் வாழும் துற வித்தனத்தை அல்லாஹ் சட்டமாக விதிக்கவில்லை. ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் பிரியத்தை, பொருத்தத்தை நாடியே மார்க்கத்தில் இதனை நுழைத்தனர். இதன்மூலம் அல்லாஹ்வின் பிரியத்தை, பொருத்தத்தை பெறலாம் என நினைத்தனர். அது நல்லது என்றே நாடி கடைபிடித்தனர், கடைபிடிக்கின்றனர். இது தவறு என்பதையும், அவர்கள் பாவிகள் என்றும் அல்லாஹு எடுத்துரைப்பதைப் பாருங்கள்.
மர்யமுடைய மகனார் ஈசாவுக்கு நாம் இன்ஜீலை கொடுத்தோம். அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும், கிருபையையும் உண்டாக்கினோம். ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக (பித்அத்தாக) உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது (சட்டமாக) விதிக்கவில்லை. இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியே அன்றி (அதனை உண்டுபண்ணவில்லை). அவர்களின் பெரும்பாலோர் பாவிகளாகவே உள்ளனர். அல்குர்ஆன் 57:37
“பித்அத்’ என்பதே நன்மையை நாடி மார்க்கத்தில் நுழைக்கப்படும் நவீனமாகும். கெட்டதாக இருந்தால் அதனை பித்அத்தாக கொள்ள முடியாது. அதற்கு இந்த குர்ஆன் வசனம் ஆதாரமாக உள்ளது.
“அழகிய முன்மாதிரி அல்லாஹுடைய தூதரிடமே உள்ளது”. அல்குர்ஆன் 33:21
“தூதர் உங்களுக்கு கொடுத்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; அவர் உங்களுக்குத் தடுத்ததை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்”. அல்குர்ஆன் 59:7
ஐயம் : மறைவான “இஸ்முல் அஃளம்” என்று ஒன்று இருக்கின்றதா? மதீனா
தெளிவு : “இஸ்முல் அஃளம்’ என்றால் மகத்தான திருநாமம் என்று பெயர். பல்வேறு திருநாமங் களை நபி(ஸல்) அவர்கள் “இஸ்முல் அஃளம்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு மனிதர் “அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக பி அன்னக அன்தல்லாஹுஸ்ஸமதுல் லதீ லம்யலித், வலம்யூலத்வலம் யகுன்லஹு குஃபுவன் அஹத்’ என்று கூறி பிரார்த்தனை செய்ததை நபி(ஸல்) அவர்கள் செவியுற்றபோது “இவர் அல்லாஹ்வின் மகத்தான திருநாமத்தால் அல்லாஹ்விடம் கேட்டுள்ளார். அந்தத் திருநாமத்தால் கேட்கப்படும்போது அது ஏற்கப்படும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார். அறிவிப்பவர்: புரைதா(ரழி), நூல்:இப்னு மாஜா
இனி இன்னொரு ஹதீதைப் பார்ப்போம்:
இன்னொரு மனிதர் “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பிஅன்ன லகல் ஹம்து, லாயிலாஹ இல்லா அன்த வஹ்தக லாரீக லகல் மன்னான் பதீவுஸ்ஸமாவாத்தி வல் அர்ழி துல்ஜலாமி வல் இக்ராம்’ என்று கூறி துஆ செய்ததை நபி(ஸல்) அவர்கள் செவியுற்றபோது “அல்லாஹ்வின் மகத்தான திருநாமத்தால் இவர் கேட்டுள்ளார். இதன் மூலம் கேட்கும்போது கொடுக்கப்படும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரழி), நூல்: இப்னு மாஜா
இந்த இரண்டு மனிதர்களும் இரண்டு விதமாக அல்லாஹ்வைப் புகழ்ந்து தங்கள் தேவைகளைக் கேட்கின்றனர். முதல் மனிதர் கேட்ட துஆவில் பயன்படுத்திய வாசகத்தை இரண்டாவது மனிதர் தனது துஆவில் பயன்படுத்தவில்லை. இருவரும் வெவ்வேறு வித மான வார்த்தைகளைப் பயன்படுத்திய போதும் இரண்டையும் “மகத்தான திருநாமம்’ என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதிலிருந்து குறிப்பிட்ட எந்த ஒரு வார்த் தையும் “இஸ்முல் அஃளம்’ அல்ல என்றும், அல் லாஹ்வை உரிய முறைப்படி கண்ணியப்படுத்தும்போது அது மகத்தான திருநாமமாக ஆகிவிடுகின்றது என்றும் உணரலாம். ஒரு குறிப்பிட்ட வார்த்தைதான் “இஸ்முல் அஃளம்’ என்றால் இருவரது துஆவிலும் குறிப்பிட்ட ஒரு வார்த்தை இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இருவரது துஆவிலும் இடம் பெற்ற ஒவ்வொரு வார்த்தையும் வேறாக உள்ளன. இன்னும் பல சொற்றொடர்களில் “இஸ்முல் அஃளம்’ இருப்பதாகவும் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவற்றை எல்லாம் ஒன்றிணைத்து பார்க்கும்போது “இஸ்முல் அஃளம்’ என்று குறிப்பிட்ட ஒரு வார்த்தை இல்லை என்றுணரலாம். இறைவனை முறையாகக் கண்ணியப்படுத்தும் சொற்கள் மகத்தான திருநாமமாக ஆகிவிடுகின்றன என்பதையும் உணரலாம்.
அப்படியே ஒரு குறிப்பிட்ட வார்த்தை தான் “இஸ்முல் அஃளம்’ என்று வைத்துக் கொண்டால், அதை நபி(ஸல்) அவர்கள் எவருக் கும் கற்றுத்தராமல் மறைத்துவிட்டுச் சென்றார் கள் என்று ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டால் நபி(ஸ்ல) அவர்கள் எவருக்கும் கற்றுத்தராமல் மறைத்து விட்ட ஒரு வியத்தை, இந்த உம்மத் துகளிலே மிகச் சிறந்த சமுதாயமான சஹாபாக் களுக்கே சொல்லிக் கொடுக்காமல் மறைத்துவிட்ட ஒரு வியத்தை வேறு எவராலும் உணர முடியாது.
மலஜலம் கழிப்பதிலிருந்து வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளையும் சொல்லித் தந்த அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இறுதி ஹஜ்ஜின்போது அனைத்து ஸஹாபாக்கள் முன்னிலையில் “நான் அனைத்தையும் சொல்லி விட்டேனா?” என்று கேட்டு அல்லாஹ்வையே சாட்சியாக்கிய அல்லாஹ்வின் தூதர் அவர்கள், எவனொருவன் தனக்குத் தெரிந்ததை மறைக்கின்றானோ நெருப்பில் அவனுக்குக் கடிவாளமிடப்படும் என்று இந்த சமுதாயத்தை எச்சரித்த அல்லாஹ்வின் தூதர் அவர்கள், மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு செய்தியை மறைத்து விட்டனர் என்றால் அல்லாஹ்வின் தூதரின் திருப்பணியையே நாம் சந்தேகித்தவர்களாவோம்.
எனவே அல்லாஹ்வை உரிய முறைப்படி புகழும்போது அது “இஸ்முல் அஃளமாக’ மகத்தான திருநாமமாக ஆகின்றது. ஆனால் மறைவான “இஸ்முல் அஃளம்’ என்று ஒன்று இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.