வரதட்சணை யாசகமா? ஹராமா?
S.H. அப்துர் ரஹ்மான்
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். திருமணம் என்பது உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், தவறுகள் செய்யாமல் இருக்கவும், வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடு ஆகும்.
இன்னும் நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும், கிருபையையும் உண்டாக்கி இருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்திக்கக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (இறைநூல் 30:21) என்று இறைநூலில் இறைவன் கூறுகின்றான்.
திருமணம் என் வழிமுறை என் வழிமுறையை புறக்கணிக்கிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என நபி(ஸல்) கூறுகிறார். (இப்னு மாஜா) நீங்கள் (மணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மணக் கொடையை மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மணமுவந்து அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (இறைநூல் 4:4)
இறைவன் பெண்களுக்கு மணக்கொடை கொடுத்து திருமணம் செய்ய சொல்கின்றான். ஆனால் இன்றைய முஸ்லிம் வரதட்சனை வாங்கி திருமணம் செய்கின்றான். இறைவனுக்கு அஞ்சக்கூடியவர்கள் இதை செய்யமாட்டார்கள். சிந்தனை உள்ளவர்களும் இதை செய்யமாட்டார்கள்.
வரதட்சணை :
வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டு பெரும் பணம் நகை, அல்லது சொத்து போன்றவற்றை குறிக்கும். வரன்+தட்சணை=வரதட்சணை திருமண வரனுக்கு அளிக்கப்படும் தட்சணை (பிச்சை) தான் அது மானமுள்ள ஒரு இளைஞனால் தனக்கு பிச்சை தரப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சீதனம் :
சீதனம் என்ற தமிழ் சொல்லுக்கு கொடை, அன்பளிப்பு என்ற பொருள் வரும் பெண்ணுக்கு பெண் தரப்பார் அவர்களாக வழங்கும் அன்பளிப்பை சீதனம் என்பர். வரதட்சனை, சீதனம் இரண்டுமே வேறு வேறு. ஒன்று பிச்சை, அடுத்தது அன்பளிப்பு. அன்பளிப்பு என்பது தானாக நிகழ்வது, “உங்க பெண்ணுக்கு போடுவதை போடுங்கள். அதில் நாங்கள் தலையிடமாட்டோம் என்பது கெளரவ பிச்சையே. இதை அன்பளிப்பில் சேர்க்க முடியாது. மறைமுகமாக ஏதாவது போடவேண்டும் என்று குறிப்பால் உணர்த்துவது பிச்சையே. பெண்ணை பெற்று திருமணம் செய்து கொடுத்து சிரமப்பட்ட வர்களுக்கு தான் தெரியும், அது தெளிவான பிச்சை என்பது.
பிச்சை ஹராமா?
வரதட்சணை வாங்குவது பிச்சை எடுப்பது போல என்றால் அது எப்படி ஹராம் ஆகும் என்று கேட்கலாம். தன்னிடம் இருக்கும் நிலையில் பிச்சை எடுப்பது ஹராமே. (தூதரே!) தங்களைத் தாங்களே “பரிசுத்தவான்கள்’ என்று கூறிக் கொள்பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவது போல்) அல்ல! ஏக இறைவன் தான் நடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான்; (இது விஷயத்தில்) அவர்கள் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யமாட்டார்கள். (இறைநூல்: 4:29)
இறைவன் பிறர் பொருள்களை தவறான முறையில் உண்பதை தடை செய்கிறான்.
கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ(ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் மற்றொருவர் செலுத்த வேண்டிய ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, ஏக இறைவனின் தூதர்(ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது ஏக இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள், “தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும்வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்’ என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்.
கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்றவரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் “வாழ்க்கையின் அடிப்படையை’ அல்லது “வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைந்து கொள்ளும்வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன்வந்து, “இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்’ என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் “வாழ்க்கையின் அடிப்படையை’ அல்லது “வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைகின்றவரை யாசிப்பது அவருக்குச் செல்லும். கபீஸா! “இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்’ அவர் தடை செய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார். இந்த ஹதீத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள் ளது. முஸ்லிம்: 1887, அத்தியாயம் 12. ஜகாத்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்புக் கங்கையே யாசிக்கிறான்.” அவன் குறைவாக யாசிக்கட்டும், அல்லது அதிகமாக யாசிக்கட்டும்.
இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம்: 1883, அத்தியாயம் 12. ஜகாத்.
அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்அஈ(ரழி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒன்பது பேர், அல்லது எட்டு பேர், அல்லது ஏழு பேர் ஏக இறைவனின் தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப் போது அவர்கள் “நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக்கூடாதா?” என்று கேட்டார்கள். அது நாங்கள் உறுதி மொழி அளித்திருந்த புதிதாகும். எனவே, “ஏக இறைவனின் தூதரே! நாங்கள் முன்பே உறுதிமொழி அளித்துவிட்டோம்’ என்று நாங்கள் (திரும்பவும்) கூறினோம். பின்னர் அவர்கள் (மூன்றாவது முறையாக) “நீங்கள் ஏக இறைவனின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா?” என்று கேட்டபோது, நாங்கள் எங்கள் கைகளை நீட்டி “ஏக இறைவனின் தூதரே! தங்களிடம் நாங்கள் உறுதிமொழி அளிக்கிறோம். எந்த விஷயமாக நாங்கள் தங்களிடம் உறுதிமொழி அளிக்க வேண்டும்?” என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், “ஏக இறைவன் ஒருவனையே நீங்கள் வழிபட வேண்டும். அவனுக்கு எதை யும் இணையாக்கக் கூடாது, ஐவேளைத் தொழுகைகளைத் தொழ வேண்டும். எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் (என்று உறுதிமொழி அளியுங்கள்)”என்று கூறி விட்டு, (அடுத்த) ஒரு வார்த்தையை மெது வாகச் சொன்னார்கள். “மக்களிடம் எதையும் (கை நீட்டி) யாசிக்கக் கூடாது” என்றும் உறுதிமொழி கேட்டார்கள். (அவ்வாறே நாங்க ளும் உறுதிமொழி அளித்தோம்) பிறகு அ(வ்வாறு உறுதியளித்த)வர்களில் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவரது சாட்டை (வாகனத்தின் மேலிருந்து விழுந்தால்கூட அதை யாரிடமும் எடுத்துத் தருமாறு அவர்கள் கேட்டதில்லை.
இதன் அறிவிப்பாளரான அபூமுஸ்லிம் அல்கவ்லானீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீதை நம்பிக்கைக்குரிய நேசர் ஒருவர் எனக்கு அறிவித்தார். அவர் எனது நேசத்திற்கு உரியவர், அவர் என்னிடம் நம்பிக்கைக்குரியவர். (அவர்தாம்) அவ்ஃப் பின் மாலிக் அல் அஷ்அஈ(ரழி).
இந்த ஹதீத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம்: 1886, அத்தியாயம் 12. ஜகாத்.
“ஒருவன் தனக்குப் போதுமான அளவு வசதி இருந்தும் யாசகம் கேட்டால் அவன் நரகத்தின் கங்குகளையே அதிகப்படுத்திக் கொள்கிறான்” என்று ஏக இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யாசகம் கேட்காத அளவுக்கு போதுமான வசதி என்றால் என்ன? எனத் தோழர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், “ஒரு பகல், ஓர் இரவு உண்பதற்குப் போதுமான அளவு” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹன்ழலா(ரழி), நூல்: அபூதாவூத்.
முஸ்லிம் 1887 ஹதீதும், “அவர் தடை செய்யப்பட்டதையே சாப்பிடுகிறார்’ என்று எச்சரிப்பதன் மூலம், செல்வம் இருப்பவர் யாசிப்பது ஹராமானது என்று புரிந்துகொள்ள முடிகிறது. இறைவனிடம் கேட்க வேண்டியதை மனிதர்களிடம் கேட்பது தவறு என்பதும் புரிந்து கொள்ள முடிகிறது.
மனிதர்களிடம் கையேந்துபவன் நிலை:
நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன், வணக்கத்திற்குரியவன் ஏக இறை வனைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு நிகரானோர் எவருமில்லை, ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன் என்று கூறுவார்கள்.
மேலும், நபி(ஸல்) அவர்கள், “இவ்வாறு சொல்லப்பட்டது, (இவ்வாறு அவர் சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றை, அல்லது தேவைக்கதிகமாகப் பேசுவது, அதிகமாக கேள்வி அல்லது “யாசகம் கேட்பது’ செல்வத்தை வீணாக்குவது (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கோருவது, அன்னை யரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றுக்குத் தடை விதித்துவந்தார்கள். புகாரி : 6473
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) அறிவித்தார்:
அன்சாரிகளில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் யாசித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் யாசித்தார்கள். அப்போது அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி(ஸல்) அவர்கள் மீண்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்து போன பின் “என்னிடமுள்ள செல்வத்தை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவே மாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை ஏக இறைவன் சுயமரியாதையோடு வாழச் செய்வான். யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ இறைவன் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை ஏக இறைவன் பொறுமையாளனாக ஆக்குவான். மேலும், பொறுமையை விடச் சிறந்த விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படு வதில்லை என்றார்கள். புகாரி : 1469
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான். புகாரி: 1474
முஸ்லிம்களே! இளைஞர்களே!! யார் உங்கள் சுயமரியாதையை பேணிக் கொள்கிறீர்களோ உங்களை இறைவன் சுய மரியாதையுடன் வாழ செய்வான். யார் மனிதர்களிடம் தேவையற்றவனாக இருக்கின்றானோ, ஏக இறைவன் அவனை மனிதர்களிடம் தேவையற்றவனாக ஆக்குகின்றான். வரம்பு மீறி மனிதர்களிடம் கையேந்துகின்றவனை ஏக இறைவன், அப்படியே கையேந்தும் நிலையிலேயே விட்டுவிடுவான் என்று இதன் மூலம் தெரிந்து கொள்கின்றோம்.
முஸ்லிம்களே இளைஞர்களே இறைவனிடம் ஏந்திய கைகளை பெண் வீட்டாரிடம் ஏந்த விடலாமா? இறைவன் உங்களை வாழ் நாள் முழுவதும் பெண் வீட்டாரிடம் கையேந்தியபடியே விட்டுவிடுவான் என்ற அச்சம் உங்களுக்கு இல்லையா?
மனிதர்களிடம் கையேந்துவதை விட்டு இறைவனிடம் மட்டும் கையேந்தும் நல்லடியார்களாக நம்மை இறைவன் ஆக்குவானாக.