ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : இஸ்லாமிய திருமணங்களில் நிக்காஹ் ஒப்பந்தம் முடிந்தவுடன் தாலி என்று கருகமணியில் கட்டுகிறார்கள். காலில் மெட்டியும் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு வாரம் கழித்த பின் நீராட்டுகிறார்கள். இது கிட்டத்தட்ட அந்நியர்கள் (காஃபிர்கள்) செய்வதைப் போன்று தெரிகிறது. உண்மையான நிலையை உங்கள் சொந்த கருத்தின்றி ஹதீதில் அடிப்படையில் சொல்லவும். M. ஜாபர் அலி
தெளிவு : இஸ்லாத்துக்கும், தாலிக்கும் சம்பந் தமில்லை. “பாத்திமா நாயகி தாலி கட்டி னார்கள்’ என்று ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டு நம்மவர்கள் அதை மார்க்கமாக எண்ணிக் கொண்டுள்ளனர்.
தாலி என்று சொல்லாமல் “கருகமணி’ என்று பெயரை மட்டும் மாற்றிக் கொண்டு ஏராளமான மெளட்டீகங்களும் நடைமுறையில் இருந்து வருகின்றன. கருகமணி அறுந்துவிட்டால், அறுந்துவிட்டது என்று கூட சொல்லக் கூடாதாம். பெருகி விட்டது என்று சொல்ல வேண்டுமாம். ஆம்! பித்அத் பெருகிவிட்டது. இப்படி பெருகிவிட்ட(?) பின் புதிய நூலில் கோர்த்து கட்டுவதற்கு ஒரு ஃபாத்திஹாவும் வேண்டுமாம்! இவைகளெல்லாம் அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குச் சொல்லித் தராதவை களாகும். பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது? அப்படியே அவசியமேற்பட்டால் ஊரில் விசாரித்தால் சொல்லப் போகிறார்கள்.
திருமணத்தின் போது பெண்ணுடைய கழுத்தில் தாலி கட்டுவதென்பது அவசியமற்றதோர் செயலேயாகும். இதற்கு இஸ்லாத்தில் இம்மியளவும் ஆதாரம் கிடையாது. இத்தகைய அர்த்தமற்ற பழக்கங்கள் நம்மிடையே பழக்க தோஷத்தினால் ஏற்பட்டவையாகும்.
அன்னை பாத்திமா(ரழி) அவர்கள் கூட தமது கழுத்தில் தாலிச் சங்கிலி போட்டிருந்தார்கள் என்று நமது தாய்மார்கள் பேசிக் கொள்வார்கள். அதற்கெல்லாம் ஹதீத் களில் அறவே ஆதாரமில்லை. திருமண சபையில் அன்னை பாத்திமா(ரழி) அவர்களோடு அலீ(ரழி) அவர்களின் பெயரைச் சேர்த்து “கமா அல்லஃப்த்த பைன அலிய் யின் வ பாத்திமத்திஜ் ஜஹ்ரா” என்று யாரோ சுயமாக தயாரித்த அந்த துஆவில் இந்த வாசகத்தை ஓதும்போது ஹூம்… ஹூம்… தாலி கட்டுங்கள் என்று சபையிலுள்ளோர் கூறுவார்கள். அப்பொழுது தான் தாலி கட்டப்படும். இப்பழக்கம் அநேக இடங்களில் உண்டு! நமது சமுதாயத்திலும் வேறூன்றிப் போய் கிடக்கின்றன. அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத்துச் செய்வானாக. மெட்டியும் அந்நியர் கலாச்சாரமே.
ஐயம் : அப்பாவுடைய உடன் பிறந்த அண்ணன் (பெரிய அப்பா) மகளை எனக்குத் திருமணம் முடிக்க முடியுமா? திர்மிதி 1156வது ஹதீத் அறிவிப்பு அலீ(ரழி) இரத்த உறவு உடையவர்கள் மணம் முடிப்பது ஹராம் என்ற ஹதீத்படி யார் எல்லாம் ஹராம் என்பதை விளக்கவும். உபைதுல்லாஹ்
தெளிவு : தாராளமாகச் செய்யலாம். குர்ஆன் (அன்னிஸா அத்தியாயத்தில்) 4:23ல் யார் யாரை மண முடிக்கக் கூடாது என்று அல்லாஹ் வரையறுத்து விட்டான். அந்த உறவுகளில் நீங்கள் குறிப்பட்டது இல்லை.
ஹதீத்களிலும் தடையில்லை. இது போன்ற திருமணங்கள் சர்வசாதாரணமாக நபி தோழர்கள் வாழ்வில் நடந்துள்ளன.